Published : 05 Apr 2016 12:17 PM
Last Updated : 05 Apr 2016 12:17 PM

‘கேட்’-டில் நுழைவது எப்படி?

ஒவ்வொரு வருட்த்திலும் தமிழ்நாட்டிலிருந்து மட்டும் சுமார் 2 லட்சம் பேர் பொறியியல் பட்டதாரிகளாக, கல்லூரிகளிலிருந்து வெளியே வருகிறார்கள். இவர்களில் குறைந்தது 40% பேர் மேல் படிப்பிற்காக Graduate Aptitude Test in Engineering என்கிற ‘கேட்’ தேர்வை எழுதுகிறார்கள். ஆனால் தேர்வு சதவீதம் மிகக் குறைவாக, அதாவது வெறும் 4.5% ஆகவே இருக்கிறது. நாம் பின்தங்கிய மாநிலங்களாகக் கருதும் உத்தரப் பிரதேசம், பிஹார், ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்களில் தேர்வு சதவீதம் 20% என்பது ஆச்சரியமான உண்மை. இதற்குக் காரணம் நமது மாணவர்களுக்குத் திறன் போதாது என்பதல்ல. அவர்களுக்கு ‘கேட்’ தேர்வின் தன்மையும் நோக்கமும் புரியாததுதான் காரணம் என்று சொல்லலாம்.

இந்தத் தேர்வை நடத்துவது ஒரு தனிப்பட்ட நிறுவனம் அல்ல. பெங்களூரின் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயன்ஸ் கல்வி நிறுவனமும் இரண்டுக்கு மேற்பட்ட ஐஐடிக்களும் சேர்ந்து நடத்துகின்றன. தேர்வும் அது நடத்தப்படும் முறையும் தரமாகவும் கடினமாகவும் இருக்கின்றன. இந்தத் தேர்வை எழுதுவதற்கு வெறும் ஆசை இருந்தால் மட்டும் போதாது. மிகத் தீவிரமான தயாரிப்புக்கு நீங்கள் தயாரா என்று பலமுறை யோசித்துவிட்டு இறங்குவது நல்லது. ‘கேட்’ தேர்வைப் பொறுத்தவரை உங்களது பாடப் பிரிவில் அதன் அடிப்படைக் கருத்துக்களில் எந்த அளவுக்கு உங்களுக்குப் புரிதல் இருக்கிறது என்பதைப் பார்ப்பதுதான் தேர்வின் நோக்கமே. நீங்கள் மனப்பாடம் செய்து அதன் அடிப்படையில் பரீட்சை எழுதித் தேர்பவரா அல்லது உண்மையிலேயே பாடங்களைப் பற்றிய சரியான புரிதல் இருக்கிறதா என்பதைச் சோதிக்கும் தேர்வு இது.

தேர்வு எழுதும் முன்னர் பல முறை வலைதள உதவியுடனோ, பயிற்சி நூல்களின் துணையுடனோ மாதிரித் தேர்வுகள் எழுதிப்பார்ப்பது மிக மிக அவசியம். ஒவ்வொரு முறையும் எழுதி முடித்தவுடன் முந்தைய முறையைவிட எந்த விதத்தில் முன்னால் அல்லது பின்னால் சென்றுள்ளீர்கள் என்பதைச் சோதித்து அறிந்துகொள்ளுங்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x