புத்தகம்: இன்றைய நிகழ்வு நாளைய வரலாறு

புத்தகம்: இன்றைய நிகழ்வு நாளைய வரலாறு
Updated on
1 min read

பயனுள்ள பல அரிய தகவல்கள் ‘உலக அதிசயங்கள் அன்றும் இன்றும்’ என்னும் புத்தகத்தில் விரவிக் கிடக்கின்றன. ‘நேற்றைய நிகழ்வுகள் இன்றைய வரலாறு. இன்றைய நிகழ்வுகள் நாளைய வரலாறு’ என்று வரலாற்றின் முக்கியத்துவத்தை அதன் ஆசிரியர் ஆர்.மணவாளன் குறிப்பிடுகிறார். இப்புத்தகத்தில் அவர் 48 உலக அதிசயங்களைத் தொகுத்துத் தந்துள்ளார்.

பல சந்தேகங்களுக்குப் பதில் அளிக்கக் கூடிய வகையில், எளிதில் விளங்கும் வார்த்தைகளால் தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. உலகப் புகழ்பெற்ற கட்டடங்கள், கோவில்கள், நினைவாலயங்கள், நகரங்களின் வரலாறு, ரஷ்யாவில் இருக்கும் உலகிலேயே மிகப்பெரிய மணி, துருக்கி நாட்டில் பல வருடங்களாகத் தேவாலயமாக இருந்த ‘ஹகியா சோபியா’ முஸ்லிம்களின் ஆட்சியால் மசூதியாக ஏற்றுக் கொள்ளப்பட்ட சரித்திரம், ஒலிம்பிக் வரலாறு போன்ற பல அரிய செய்திகள் இதில் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு அதிசயத்தையும் பற்றிய புகைப்படங்கள், தகவல்கள் ஆகியவை நூலை எளிதாகப் புரிந்து கொள்வதற்கு உதவுகின்றன.

ஷாஜகான் தன் மனைவி மும்தாஜின் நினைவாகக் கட்டிய காதல் சின்னம் தாஜ்மஹால் என்பது நமக்குத் தெரியும். ஏனெனில் அது உலகப்புகழ் பெற்றது. ஆனால் தன் கணவனுக்காக ஆர்ட்டிமிடீசியா என்ற பெண்மணி பாரசீக நாட்டில் ஒரு நினைவாலயம் கட்டியுள்ளார் என்ற செய்தியை இந்நூலில் படிக்கும்போது ஆச்சரியம் நம்மை அள்ளிக்கொள்கிறது. திருக்கோயிலூர் கபிலர் குன்று, அரிக்கன் மேடு போன்று இந்திய நாட்டைப் பற்றிய அதிசயங்களின் தொகுப்பால் நம் நாட்டின் வரலாற்று உண்மைகளை அறிந்துகொள்ள முடிகிறது. இது மட்டுமின்றி, உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சிறப்புச் செய்திகள் புத்தகத்தைப் படிப்போர்க்கு உலகையே ஒரு சுற்று சுற்றி வந்தது போன்ற அனுபவத்தைத் தருகின்றன. உலக அதிசயங்களைப் பற்றிய அடிப்படையான தகவல்களைத் தெரிந்துகொள்ள இந்தப் புத்தகம் ஒரு நல்ல அறிமுகமாக இருக்கும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in