Last Updated : 19 Feb, 2022 10:52 AM

 

Published : 19 Feb 2022 10:52 AM
Last Updated : 19 Feb 2022 10:52 AM

போலிகளைத் தடுக்க மருத்துவர்கள் எழுதவேண்டும்: டாக்டர் கு.கணேசன் நேர்காணல்

கரோனா பரவலுக்குப் பிறகு மருத்துவ அறிவியல் விழிப்புணர்வு எல்லோருக்கும் அவசியமாகியிருக்கிறது. கரோனா பரவலுக்கு முன்னதாகவே இதை சிறப்புறச் செய்து வருபவர் பிரபல மருத்துவரும் மருத்துவ எழுத்தாளருமான டாக்டர் கு. கணேசன். அறிவியல் தகவல்தொடர்புக்காக மத்திய அரசு வழங்கும் தேசிய விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ள இவர், கடந்த 30 ஆண்டுகளாகத் தன் எழுத்துவழியாக மருத்துவ விழிப்புணர்வை இடையறாது பரப்பிவருகிறார். சென்னை புத்தகக் காட்சியை ஒட்டி தமிழில் மருத்துவ எழுத்து தொடர்பாக அவரிடம் எடுக்கப்பட்ட நேர்காணல்:

கூகுளும் விக்கிப்பீடியாவும் கோலோச்சும் இன்றைய காலத்தில் மருத்துவ எழுத்தின் தேவை எந்தளவுக்கு இருக்கிறது? மருத்துவச் செய்திகளில் உண்மைநிலையை மக்கள் எப்படி அறிந்துகொள்வது?

கூகுளிலும் விக்கிப்பீடியாவிலும் மருத்துவக் கட்டுரைகள் கொட்டிக்கிடப்பது உண்மைதான். அவற்றில் உண்மை எது, நம்பக்கூடியது எது எனப் பிரித்து வாசிக்கச் சாதாரண வாசகரால் முடியாது. பிழைகள் நிறைந்து, அச்சமூட்டும் கட்டுரைகள் அங்கே அதிகம். அவற்றில் கூறப்படும் நோய் அறிகுறிகள், மருந்து அல்லது சிகிச்சையின் பக்க விளைவுகள் வாசிப்போருக்கும் இருப்ப தாகவே கருதப்படும். அதனால், கூகுளும் விக்கிப்பீடியாவும் வந்த பிறகு, ‘பிணிப் பதற்றச் சீர்குலைவு’ (Illness anxiety disorder) எனும் நோய் சமூகத்தில் பரவிவருகிறது. சுய பரிதோனைகளும் சுய மருத்து வமும் அதிகரித்துள்ளன. பாலியல் தொடர்பான நோய்களுக்குப் போலி மருத்துவர்களிடம் சிகிச்சை பெறுவதும் அதிகரித்துள்ளது. ஆக, நோய்களை ஆரம்பத்திலேயே சரியாகக் கணிப்பது தவறிப்போகிறது.

அவர்கள் காலம் கடந்து முறையான சிகிச்சை களுக்கு வரும்போது, நோய் பல கட்டங்களைக் கடந்துவிடுகிறது. அப்போது தீவிர சிகிச்சை தேவைப்படும். எப்போதுமே மருத்துவ அறிவு, திறன் ஆகியவற்றுடன், அனுபவம் சார்ந்த மருத்துவ ஆலோ சனைகள்தான் தேவைப்படுகின்றன. அவற்றைத் துறை சார்ந்த வல்லுநர்களும் அனுபவம் வாய்ந்த பொதுநல மருத்துவர்களால்தான் தர முடியும்.

பிற மொழிகளுடன் ஒப்பிடும்போது தமிழில் மருத்துவ எழுத்தின் வளர்ச்சி எப்படியிருக்கிறது?

ஆங்கிலத்தில் இருப்பது போன்ற பெருவளர்ச்சி தமிழ் உட்பட எந்த இந்திய மொழியிலும் இல்லை. ஆங்கில மொழி உலகளாவிய மொழியாக இருப்பதால், ஆங்கில மருத்துவ நூல்களின் விற்பனை அதிகம். புத்தம் புதிய மருத்துவ வளர்ச்சிகள் தொடர் பான நூல்கள் உடனுக் குடன் வெளிவந்துவிடுகின்றன. ஆனால், தமிழில் அப்படியில்லை. இங்கு எழுதுவோரும் குறைவு. வாசிப்போரும் குறைவு. எடுத்துக்காட்டாக, கடந்த 2 வருடங்களில் கரோனா குறித்த முழுமையான நூல்கள் எனக்குத் தெரிந்து ஆங்கிலத்தில் 20க்கும் மேல் வெளிவந்துவிட்டன. ஆனால், தமிழில் நான் எழுதிய ‘கரோனாவை வெற்றிகொள்வோம்!’ (இந்து தமிழ் திசை வெளியீடு) ஒன்றுதான் முழுமையான நூல்.

இன்னும் நிறைய மருத்துவர்கள் தமிழில் மருத்துவத்தை எழுத முன்வர வேண்டும். அப்போதுதான் சமூக ஊடகங்களில் உலவும் போலி அறிவியல் தகவல்களைத் தடுக்க முடியும். பலரும் வாசிக்க முன்வருவதற்கு எளிமையாக எழுத வேண்டியது மிக முக்கியம். தற்போது ஊடகங்களில் நவீன மருத்துவம் சார்ந்து எழுதி வருபவர்களில் மருத்துவர்கள் ஃபரூக் அப்துல்லா, வி.எஸ்.நடராஜன், சிவபாலன் இளங்கோவன், ஜி. ராமானுஜம், முத்துச்செல்லக்குமார், சசித்ரா தாமோதரன், ஜெய சர்மா, சபியுல்லா எம். சுலைமான், அமுதக் குமார், காமராஜ்-ஜெயராணி காமராஜ் ஆகியோர் நம்பிக்கை அளிக்கிறார்கள். தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ள ‘முத்தமிழ் அறிஞர் மொழிபெயர்ப்புத் திட்டத்தில்’ நான் உட்பட 20க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் நவீன மருத்துவப் பாடநூல்களைத் தமிழில் எழுதிக்கொண்டிருக்கிறோம். விரைவில் அவை வெளியாகும்.

மருத்துவ எழுத்தில் உங்க ளுடைய முன்மாதிரி அல்லது நீங்கள் பார்த்து வியக்கும் மருத்துவ எழுத்தாளர் யார்?

மறைந்த மருத்துவர்களில் சென்னையைச் சேர்ந்த மருத்துவர் அ. கதிரேசன் எனக்கு முன்மாதிரி. குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பாவின் வழிகாட்டுதலில் குழந்தைகளுக்குத்தான் முதலில் மருத்துவம் குறித்துத் தமிழில் எழுத ஆரம்பித்தேன். பெரியவர்களுக்கும் நான் எழுத வேண்டும் என்று கட்டளையிட்டவர் கதிரேசன். நான் பார்த்து வியப்பது தஞ்சாவூர் மருத்துவர் சு. நரேந்திரன். இவர் பொதுமக்களுக்கான மருத்துவ நூல்கள் மட்டுமல்லாமல், மருத்துவ மாணவர்களுக்கான மருத்துவ நூல்கள், தமிழ்ப் பல்கலைக்கழக நூல்கள், நவீன மருத்துவம் வளர்ந்த வரலாறு போன்ற அரிய நூல்களையும் எழுதியிருக்கிறார். மருத்துவர் ஐ. சிவசுப்பிரமணிய ஜெயசேகரின் மருத்துவ நூல் பங்களிப்பு, சித்த மருத்துவ எழுத்தாளர்களில் கு. சிவராமன், மருத்துவர் அல்லாதவர்களில் ‘மூளைக்குள் சுற்றுலா’ எழுதிய வெ. இறையன்பு ஆகியோர் வியப்படையவைத்தவர்கள்.

நீங்கள் எழுதும் கட்டுரைகளில் மருத்துவக் கலைச்சொற்களை அழகாகத் தமிழ்ப் படுத்துவது உங்களுடைய சிறப்பு. இந்த முயற்சிக்குப் பின்னணியில் உள்ள காரணங் கள், செயல்பாடுகளைப் பற்றிக் கூற முடியுமா?

40 ஆண்டுகளுக்கு முன்பு நான் மருத்துவக் கட்டுரைகளைத் தமிழில் எழுத ஆரம்பித்த புதிதில் என் நெருங்கிய வாசகர்களிடம் ஒரு கள ஆய்வு மேற்கொண்டேன். ‘வாசிக்க எளிமையாக இருக்க வேண்டும். அச்சுறுத்தக் கூடாது. ஆங்கிலச் சொற்கள் அதிகம் இருக்கக் கூடாது’ என்று மூன்று கட்டளைகளை இட்டார்கள். அதனால் என் எழுத்து எளிமையை இருப்பதை ஓர் உறுதியாகவே எடுத்துக்கொண்டேன்.

அப்போது தமிழ் மருத்துவ அகராதிகள் இல்லை. ஆங்கில மருத்துவக் கலைச்சொற்களை நானே தமிழில் மொழிபெயர்க்கத் தொடங்கினேன். பள்ளிக் கல்வியைத் தமிழ் வழியில் கற்றதும், தமிழின் இனிமை எனக்குப் பிடித்துப்போனதும் என் மொழிபெயர்ப்புக்கு உந்துகோல்களாக இருந்தன. சாதாரண வாசகருக்கு வாசிக்கச் சிரமம் தராத வகையிலும், வாசித்ததும் புரிந்துகொள்ளும் வகையிலும், மருத்துவ அறிவியலுக்குப் பொருத்தமாகவும் சொற்களை மொழிபெயர்க்க முயல்கிறேன். தமிழால் அது முடியும் என்று உறுதியாக நம்புகிறேன். நான் பயன்படுத்தும் கலைச்சொற்களை வியந்துநோக்கும் மருத்துவர்களே அதிகம்.

இப்போது தமிழில் மருத்துவ அகராதிகள் கிடைக்கின்றன. 2006-ல் மணவை முஸ்தபா தயாரித்த ‘மருத்துவக் களஞ்சியப் பேரகராதி’யிலும், ஆனந்த விகடனின் ‘பிரிட்டானிகா தகவல் களஞ்சிய’த்திலும் நான் பங்களித்தபோது கிடைத்த பயிற்சி புதிய சொல்லாக்கத்துக்கு உதவுகிறது. புதிய கலைச்சொல்லாக்கத்திற்கு மணவை முஸ்தபா நிறைய வழிகளைக் கூறியுள்ளார். அவை இன்றளவும் உதவுகின்றன.

அடிப்படையில் நீங்கள் ஒரு முழுநேர மருத்துவராகவும் இருப்பதால், வாசிப்பதற்கு எப்படி நேரம் கிடைக்கிறது?

நான் 1975-81-களில் மதுரை மருத்துவக் கல்லூரியில் படித்தபோது என் மருத்துவப் பேராசிரியர் சந்திரபோஸ் சொன்ன வைர வரிகள் இவை: ஆசிரியர்களும் மருத்துவர்களும் உயிர் வாழும்வரை வாசிக்க வேண்டும். தங்கள் திறன்களைத் தினமும் மேம்படுத்திக்கொள்ள வேண்டும். இந்த அறிவுரைகளை நான் இன்றளவும் பின்பற்றுகிறேன். சிறுவயதிலிருந்தே எனக்கு வாசிப்பில் ஆர்வமும் ஈடுபாடும் அதிகம். அதிகாலை 4 மணிக்கு விழிப்பேன், 6 மணி வரை வாசிப்பேன் அல்லது எழுதுவேன். ஒரு நாளை சிறப்பாகத் தொடங்க வாசிப்பு கைகொடுக்கிறது. வாரம் ஒருநாள் மருத்துவம் தவிர்த்த நூல்களையும் வாசிக்கிறேன்.

சிகிச்சை கொடுப்பது மட்டுமல்லாமல், மருத்துவ விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியதும் ஒரு மருத்துவரின் சமூகக் கடமை. வாசித்தவற்றில் மக்களுக்குத் தேவையானவற்றை உடனே எழுதிவிடுகிறேன். சிகிச்சையளிப்பது போலவே இரண்டு மடங்கு மனத் திருப்தியை அது தருகிறது.

நீங்கள் எழுதியிருக்கும் எண்ணற்ற மருத்துவப் படைப்புகளில், சிறப்பானது அல்லது மனத்துக்கு நெருக்கமானது என்று எதைக் கருதுகிறீர்கள்?

என் நூல்களில் ‘சர்க்கரை நோயுடன் வாழ்வது இனிது’ எனும் நூல் மனத்துக்கு நெருக்கமானது. அது விருது பெற்ற நூல் என்பது மட்டுமல்ல, ஆயிரக்கணக்கான சர்க்கரை நோயாளிகளின் வீட்டில் ‘தன்வந்திரி’யாக அது இருக்கிறது. பாளையங்கோட்டைச் சிறையில் தற்போது ஆயுள்கைதிகளாக இருக்கும் சகோதரர்கள் சேகர், குமார் இருவரும் இந்த நூலை வாசித்துப் பின்பற்றி, தங்கள் சர்க்கரை நோயைக் கட்டுக்குள் வைத்துக்கொள்வதாகக் கூறுகிறார்கள். அவர்கள் பரோலில் வரும்போதெல்லாம் என்னிடம் முழு உடல் பரிசோதனை செய்துகொண்டு தொடர் ஆலோசனையைப் பெற்றுச் செல்கிறார்கள். வீட்டுக்குச் செய்தித்தாள் விநியோகிக்கும் முதியவர், வீட்டுப் பணிப்பெண் என இன்னும் நிறையச் சாமானியர்களுக்கும் இந்த நூல் உதவுவது பெருமகிழ்ச்சி தருகிறது.

கட்டுரையாளர் தொடர்புக்கு: mohamed.hushain@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x