Published : 27 Apr 2016 12:40 PM
Last Updated : 27 Apr 2016 12:40 PM

சித்திரக்கதை: பேனா செய்த மாயம்!

ஒன்பதாம் வகுப்பு மாணவி செல்வராணி. இரக்க குணம் கொண்டவள். தன்னோடு படிக்கும் நண்பர்களுக்கு ஏதாவது உதவி தேவைப்பட்டால், தன்னால் முடிந்த உதவியைத் தயங்காமல் செய்வாள்.

புத்தகப் பையில் எப்போதும் ஒன்றிரண்டு பேனா, பென்சில் வைத்திருப்பாள். சக மாணவர்கள் யாராவது பேனா இல்லாமல் வந்தால், பையிலிருந்து பேனா ஒன்றை எடுத்துக் கொடுப்பாள்.

அதுபோல், அவளது அப்பா அவ்வப்போது கொடுக்கும் சில்லறையைச் செலவழிக்காமல் சேமித்து வைப்பாள். அந்தக் காசில் நோட்டுப் புத்தகங்கள் வாங்கி, இல்லாத மாணவர்களுக்குக் கொடுப்பாள்.

இதனால், செல்வராணியை நண்பர்கள் ‘உதவி ராணி’என்றே அழைத்தார்கள்.

ஒரு நாள் -

வீட்டின் மொட்டை மாடியில் நின்றுகொண்டிருந்தாள் செல்வராணி.

திடீரென்று வானம் பலமாக இடிஇடித்தது. மின்னல் வெட்டியது.

வானிலிருந்து ஒளிக் கீற்றொன்று மின்னியது. அந்த ஒளிக்கீற்று அப்படியே கீழிறங்கி, மொட்டை மாடிக்கு வந்தது. என்ன இது என்று கூர்ந்து பார்த்தாள் செல்வராணி.

அட… அழகிய பேனா!

“அய்..பேனா எவ்வளவு அழகாயிருக்கு!” என்று ஆச்சரியத்தோடு கையிலெடுத்தாள் செல்வராணி.

அப்போது, வானிலிருந்து குரலொன்று எதிரொலித்தது.

“மகளே... இது யாருக்கும் கிடைக்காத மாயப் பேனா. இதைக் கொண்டு காற்றில் நீ எதை வரைகிறாயோ, அது அப்படியே உயிர் பெற்று உண்மையான பொருளாக மாறிவிடும். இதை வைத்துக்கொண்டு பலருக்கும் நீ உதவி செய்யலாம். ஆனால், ஒரே ஒரு நிபந்தனை. இதை நீ எப்போதாவது உன் சுயநலனுக்காகப் பயன்படுத்தினால், அதற்குப் பிறகு இந்த மாயப் பேனா உன்னைவிட்டு மாயமாகிவிடும்” என்று அந்தக் குரல் சொன்னது.

செல்வராணிக்கு ஏக சந்தோஷமாகிவிட்டது.

மாயப் பேனா கிடைத்ததும் முன்னைவிட அதிகமாக அனைவருக்கும் உதவிகள் செய்ய ஆரம்பித்தாள்.

யாராவது பேனாவோ, நோட்டுப் புத்தகமோ வேண்டுமென்று கேட்டால், தனியே சென்று மாயப் பேனாவால் காற்றில் பேனா போன்று வரைவாள். அது அப்படியே அசல் பேனாவாக மாறிவிடும். கேட்டவர்களுக்கு அதைக் கொடுத்துவிடுவாள் செல்வராணி.

அன்று பள்ளியில் அழுதுகொண்டிருந்தான் ரவி.

காரணம் கேட்டதற்கு, “எங்கம்மாவுக்கு ஒடம்பு முடியலே. ஆஸ்பத்திரிக்குக் கூட்டிட்டுப் போக காசில்லை!” என்றான். ரவி சிறு குழந்தையாய் இருக்கும்போதே அவனது அப்பா இறந்துவிட்டார். அவர்களுக்கு உதவி செய்ய வேறு யாருமில்லை.

வகுப்பறைக்குள் சென்று, மாயப் பேனாவை எடுத்து, காற்றில் ரூபாய் நோட்டுக்களை வரைந்தாள் செல்வராணி. அவை அப்படியே உண்மையான ரூபாய் நோட்டுக்களாக மாறி விட்டன.

அந்தப் பணத்தை ரவியிடம் கொடுத்து, அம்மாவை ஆஸ்பத்திரிக்குக் கூட்டிட்டுப் போக சொன்னாள்.

பள்ளியில் செல்வராணிக்கு ஒரே போட்டியாளர் இந்திராதான். நன்றாகப் படிப்பாள். எப்போதும் வகுப்பில் முதல் மதிப்பெண் இந்திராதான். செல்வராணி மூன்றாவது, நான்காவது மதிப்பெண் எடுப்பாள்.

நீண்ட காலமாகவே செல்வராணிக்கு அதிக மதிப்பெண் எடுத்து, வகுப்பில் முதல் மாணவியாக வர வேண்டுமென்று ஆசை. ஆனால், ஒருமுறைகூட அவளால் எடுக்க முடிந்ததில்லை.

அன்றைக்கு பள்ளியில் அரையாண்டு அறிவியல் பரீட்சை.

எல்லா மாணவர்களும் பத்து மதிப்பெண் கேள்வியொன்றுக்கு பதில் தெரியாமல் முழித்துக் கொண்டிருந்தார்கள். இந்திராவுக்கும் பதில் தெரியவில்லை. தேர்வு அறையே இறுக்கமாக இருந்தது.

‘ஆகா, நான் மட்டும் சரியாக இந்தக் கேள்விக்குப் பதிலை எழுதிவிட்டால், சுளையாகப் பத்து மதிப்பெண் கூடுதலாகக் கிடைத்துவிடும். அரையாண்டுத் தேர்வில் வகுப்பில் முதல் மாணவியாக வரலாமே’ என்கிற ஆசை செல்வராணிக்கு வந்தது.

‘என்ன செய்யலாம்?’ எனச் சற்று நேரம் யோசித்தாள். அப்போது, திடீரென்று குறுக்கு யோசனையொன்று அவளுக்குத் தோன்றியது.

மாயப் பேனாவால் அறிவியல் பாடப்புத்தகமொன்றை வரைந்தால், அது உண்மையான புத்தகமாக மாறிவிடும். அந்தப் புத்தகத்திலிருந்து சரியான விடையைப் பார்த்து எழுதிவிட்டால், அவள்தான் வகுப்பில் முதல் மாணவி!

நினைக்கும்போதே அவளால் சந்தோஷத்தைத் தாங்க முடியவில்லை.

வேறெதையும் எண்ணாமல், யோசித்த அடுத்த கணமே, பைக்குள் மறைத்து வைத்திருந்த மாயப் பேனாவை எடுத்து, ஒன்பதாம் வகுப்பு அறிவியல் பாடப் புத்தகத்தைக் காற்றில் வரையத் தொடங்கினாள்.

‘பட்’டென்ற சத்தத்தோடு மறைந்தே போனது அந்த மாயப் பேனா.

ஓவியம்: ராஜே

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x