மோதலுக்குப் பின்னர் அமைதி

மோதலுக்குப் பின்னர் அமைதி
Updated on
2 min read

மனிதக் குலத்தின் வளர்ச்சியையும் அவர்கள் நாகரிகமடைந்ததையும் புரிந்துகொள்ள அவர்கள் நடத்திய போர்களைப் பற்றித் தெரிந்துகொள்வதும் அவசியம். அந்தப் போர்களின் தாக்கம் நமது மரபணுவில் உள்ளதா? பிற குழுக்களுடன் போரிடுவதற்கான விருப்பத்தின் மூலம் பரிணாம ரீதியான வளர்ச்சியை நமது மூதாதையர்கள் அடைந்தார்களா? இவையெல்லாம் விஞ்ஞானிகளைத் துரத்திவரும் கேள்விகள்.

இன ரீதியாகவும், மத ரீதியாகவும் எத்தனையோ சண்டைகளும் குரோதங்களும் நாள்தோறும் முளைக்கும் நவீன உலகைப் புரிந்துகொள்வதற்கும் இந்தக் கேள்விகள் அவசியம். இதன் மூலம் மனிதகுலத்தின் கடந்தகாலத்தை மட்டுமல்ல, எதிர்காலம் அமைதியாக இருக்குமா என்பதையும் ஓரளவு தெரிந்துகொள்ள முடியும்.

ஆதிமனிதர்கள் எப்படி வாழ்ந்தார்கள்?

ஐரோப்பிய மறுமலர்ச்சி காலகட்டத் தத்துவவாதிகளான தாமஸ் ஹாப்ஸ், ரூசோ ஆகியோர் வரலாற்றுக்கு முந்தைய காலகட்ட மனிதர்களின் வாழ்க்கை குறித்து வேறு வேறு கருத்துகளைக் கொண்டிருந்தனர். ஆதிமனிதனின் அன்றாடம் அச்சத்தாலும், சண்டைகளாலும் நிரம்பியிருந்ததாக ஹாப்ஸ் கூறுகிறார். நாகரிகத்தின் தாக்கம் இல்லாத ஆதிமனிதர்கள் இயற்கையுடன் ஒன்றி அமைதியாக வாழ்ந்தார்கள் என்று ரூசோ இதற்கு நேர்மாறான ஒன்றைக் கூறுகிறார். இதுபோன்ற வாதங்கள் இன்னும் தொடரவே செய்கின்றன.

உண்மையாக ஆதிமனிதன் எப்படி வாழ்ந்தான் என்பதைத் துல்லியமாக அறிந்துகொள்ளக் கால எந்திரம் மட்டுமே நமக்கு உதவமுடியும்.

ஆனால் கால எந்திரத்தின் உதவியின்றி, வரலாற்று காலத்துக்கு முன்பு மனிதக் குழுக்களுக்கிடையே நடந்த மோதல்களையும் போர்களையும் அறியத் தொல்லியல், குரங்குகள் தொடர்பான ஆய்வுகள் மற்றும் மானுடவியல் ஆய்வுகளையே விஞ்ஞானிகள் நம்பியுள்ளனர்.

முதல் சாட்சியம்

இந்த ஆண்டின் தொடக்கத்தில் கென்யா நாட்டில் துர்கானா ஏரிக்கு அருகேயுள்ள நடருக் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட 27 எலும்புக்கூடுகளில், வரலாற்றுக்கு முந்தைய காலகட்டத்தில் நடந்த மோதல்களுக்கான தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. எலும்புகளில் சொருகப்பட்ட உலோகத் தகடுகள், காயப்பட்ட மண்டையோடுகள் மற்றும் பிற காயங்கள் ஆகியவற்றின் மூலம் அந்த மனிதர்கள், படுகொலை சம்பவமொன்றில் இறந்திருக்கலாம் என்பதை விளக்குவதாக உள்ளன. அந்தப் படுகொலை நடந்து 10 ஆயிரம் ஆண்டுகள் இருக்கலாம்.

வரலாற்று காலகட்டத்துக்கு முன்னர் வேடர்களுக்கிடையே நடந்த மோதல்கள் பற்றிய முதல் சாட்சியம் என்று இந்தக் கண்டுபிடிப்பைச் சொல்லலாம். இதற்கு முன்பு சூடான் நாட்டில் கண்டறியப்பட்ட ஜெபல் சஹாபாவில் கண்டறியப்பட்ட 12 ஆயிரம் முதல் 14 ஆயிரம் ஆண்டு பழமையான கல்லறைகள்தான் புராதனமானது என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால் தற்போது அதன் காலம் குறித்துக் குழப்பம் நிகழ்கிறது. ஏனெனில் ஒரு இடத்தில் குடியேறி நிலைபெற்ற வாழ்க்கையை நடத்துபவர்களே கல்லறை கட்டுவார்கள். அதனால் அவர்கள் வேடர்களாக இருந்திருக்க வாய்ப்பில்லை.

தொல்லியல் பதிவுகளைப் பொறுத்தவரை, 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததாகக் கருதப்படும் வேளாண்மைப் புரட்சியின் தொடக்கத்தில்தான் போர்கள் நடந்ததற்கான தடயங்கள் கிடைத்துள்ளன. அப்போதுதான் மனிதர்கள், வேட்டையையும் உணவு தேடி அலைவதையும் விட்டுவிட்டு விவசாயக் குடியிருப்புகளை உருவாக்கினார்கள். அதற்கு முன்னரே மோதல்கள் இருந்திருக்கலாம். ஆனால் ஹோமோசேப்பியன்ஸின்(முழுமையாக பரிணாமமுற்ற மனிதன்) தொடக்க நாட்களில் அதற்கான தடயங்கள் இல்லை. அத்துடன் அவற்றின் எலும்புக்கூடுகளில் மரணத்துக்கான காரணங்களைக் கண்டறிவது தற்போது சிரமமாகவே உள்ளது.

வாலில்லா குரங்குகள் சண்டை போட்டனவா?

தான்சானியாவில் உள்ள வாலில்லா குரங்குகளின் குழுவொன்று தனது பகைக் குழுவினரின் பகுதியை ஆக்கிரமிப்பதற்கு முன்னர் அவற்றை அடித்துக் கொல்வதைக் குரங்குகள் ஆய்வாளர் ஜேன் கூடால் ஆராய்ந்து அவற்றிடையே போர்க்குணம் என்பது மரபணுவிலேயே இருக்கிறது என்பதைக் கண்டறிந்தார். மனிதர்களின் மரபணுவுடன் நெருங்கிய உறவு கொண்டவை, வாலில்லா குரங்கின் மரபணுக்கள்.

ஆனால், மனிதர்களின் மரபணுவின் பண்பையொத்த மரபணுக்களைக் கொண்டிருக்கும் இன்னொரு உயிரினமான போனோபோ குரங்குகளோ மிகவும் அமைதியானவை. இதற்குக் குரங்குகளின் சமூக அமைப்பும் காரணமாக உள்ளது. போனோபோ குரங்குகளைப் பொறுத்தவரை, பெண் குரங்குகள்தான் ஆதிக்கம் செலுத்துபவை. அதனால் ஆண் குரங்குகளால் அதிகம் வாலாட்ட முடியாத சூழல் இருக்கலாம். ஆனால், வாலில்லா குரங்குகள் சமூகத்தில் ஆண்கள் தான் ஆதிக்கம் செலுத்துபவை.

வேளாண்மை புரட்சிக்கு முன்னரே போர்களும் மோதல்களும் மனிதகுலத்தின் அன்றாட நடவடிக்கைகளாக இருந்துள்ளதாகவே விஞ்ஞானிகள் கருதுகின்றனர். பரிணாம உளவியலாளர் ஸ்டீபன் பிங்கர் போன்றவர்கள், அடுத்துவந்த நூற்றாண்டுகளில் வன்முறை மனிதகுலத்தில் வன்முறை குறைந்து வந்திருப்பதாகவே குறிப்பிடுகிறார்கள். இன்றைய தொலைக்காட்சிகளில் காண்பிக்கப்படும் கோரமான வன்முறைக் காட்சிகளைக் காணும்போது ஸ்டீபன் பிங்கர் போன்ற விஞ்ஞானிகள் சொல்வதில் நம்பிக்கையில்லாமல் இருக்கலாம். இருந்த போதும் நாளை நம் குழந்தைகள் வன்முறை குறைந்த சமூகத்தில் வாழலாம் என்ற நம்பிக்கையை மனிதகுல வரலாறு தரவே செய்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in