Published : 04 Feb 2022 11:31 AM
Last Updated : 04 Feb 2022 11:31 AM

எனது பாதை மாறாது!: விஷ்ணு விஷால்

‘வெண்ணிலா கபடிக் குழு' படத்தின் மூலம் அறிமுகமானவர் விஷ்ணு விஷால். தொடர் வெற்றிகளின் நாயகனாகத் தன்னைத் தக்கவைத்துக்கொண்டுள்ள அவர், புதுமுக இயக்குநர்களைத் தொடர்ந்து ஆதரிப்பவர். அவரது நடிப்பில் வெளியான ‘ராட்சசன்’, தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளிலும் வசூல் சாதனை படைத்தது. தற்போது ‘எஃப்.ஐ.ஆர்’ என்கிற படத்தைத் தயாரித்து, நடித்திருக்கிறார். விரைவில் திரையரங்குகளில் படம் வெளியாகவிருக்கும் நிலையில், இந்து தமிழ் திசைக்காக அவர் நம்முடன் உரையாடியதிலிருந்து ஒரு பகுதி..

சிறந்த நடிகருக்கான சைமா விருதுக்கு ‘நீர் பறவை’ படத்துக்காகப் பரிந்துரைக்கப்பட்டீர்கள். அந்தப் படம் வெளியாகி 10 ஆண்டுகள் ஆகிவிட்டதை கவனித்தீர்களா?

10 வருடம் ஓடியதே தெரியவில்லை. அது பற்றி, அந்தப் படத்தின் இயக்குநர் சீனு.ராமசாமி சார் எனக்கு மெசேஜ் அனுப்பியிருந்தார். எங்கள் இருவருக்குள்ளும் அந்த பாண்டிங் அப்படியே இருக்கிறது. கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்தவனை அழைத்துவந்து, கேமரா முன்னால் எப்படி நடிக்கவேண்டும் என்று சொல்லிக்கொடுத்தவர் சுசீந்திரன். அதேபோல், கேமராவின் முன்னால், எப்படி நிதானமாக இருப்பது, கேமரா இருப்பதை மறந்துவிட்டு கேரக்டராக எப்படி நடந்துகொள்வது என்பதை அந்தப் படத்தில் சீனு சார் எனக்குச் சொல்லிக்கொடுத்தார். ‘நீர் பறவை’ எப்போதுமே எனக்கு எமோஷனலான படம்.

புதுமுக இயக்குநர்களை நோக்கியே உங்கள் கவனம் குவிந்திருப்பது ஏன்?

ஒவ்வொரு படத்திலும் என்னை நான் ஒரு புதுமுகமாகவே எண்ணிக் கொள்கிறேன். இந்த மனோபாவம், நிறைய கற்றுக்கொள்ள வேண்டும் என்கிற எனர்ஜியைக் கொடுக்கிறது. புதுமுக இயக்குநர்களிடமும் இதே எனர்ஜியைப் பார்க்கிறேன். அவர்களுக்குள் நான் என்னைப் பார்க்கிறேன். அவர்கள் புதிய சிந்தனையோடு வருகிறார்கள். அது என் மீது தாக்கம்செலுத்துகிறது. அவர்களோடு தங்குதடையின்றி நிறைய என்னால் பேசமுடிகிறது. இதனால் நல்ல புரிதல் ஏற்படுகிறது. நாங்கள், கதாநாயகன் - இயக்குநர் என்கிற எல்லையைக் கடந்து நண்பர்கள் ஆகிவிடுகிறோம். யாருடைய இயக்கத்தில் நடிக்க விரும்புகிறீர்கள் என்று கேட்டால், அதற்கு என்னிடம் பதில் இல்லை. ஆனால், நாங்கள் மீண்டும் மீண்டும் இணைந்து வெற்றியைப் பெற்றுவிடுறோம். என்னுடன் பணியாற்றிய அத்தனை பேரும் இன்று முன்னணி இயக்குநர்களாக புகழ்பெற்றிருப்பதைப் பார்க்கும்போது நானே வெற்றிபெற்றதுபோல் உணர்கிறேன்.

கடந்த 12 ஆண்டுகளில், அடுத்தடுத்து கதை மதிப்பு கொண்ட படங்களில் நடித்து வந்திருக்கிறீர்கள். திடீரென, ‘வேலையின்னு வந்துட்டா வெள்ளக்காரன்’, ‘கதாநாயகன்’, ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’ என்று மசாலா படங்களுக்கு தாவியது ஏன்?

வரிசையாக நல்ல படங்களில் நடித்து, அவை வெற்றி பெற்ற பிறகும் அடுத்த படம் கிடைக்க ஒரு வருடம் போராட வேண்டியிருந்தது. அப்போதுதான் தெரிந்தது, ஒரு கதாநாயக நடிகன், பக்கா கமர்ஷியல் படங்களும் செய்தால்தான் அவனுடைய ‘பிஸ்னஸ் வேல்யூ’ உயரும் என்று, இங்கே இண்டஸ்ட்ரியில் உள்ளவர்களின் மண்டையில் திணித்து வைத்திருக்கிறார்கள் என்பது. அதேசமயம், கமர்ஷியல் பொழுதுபோக்குப் படங்களையும் பொறுப்புடன் கொடுக்காவிட்டால் நம்ம சமையல் ருசிக்காது என்பதையும் கற்றுக்கொண்டேன். இந்த மூன்று படங்களுமே என்னை ஒரு எண்டர்டெயினராக மாஸ் ரசிகர்களிடம் கொண்டுபோய் சேர்த்ததை மறுக்கவில்லை. ஆனால், எனக்கு அடையாளம் கொடுத்த தரமான பொழுதுபோக்கு சினிமாவின் தடத்தை நான் மறந்து எங்கேயும் ஓடிவிட விரும்பவில்லை. அதனால்தான் ‘எஃப்.ஐ.ஆர்’ படத்தைத் தயாரித்து நடித்து, மனு ஆனந்தை இயக்குநராக அறிமுகப்படுத்துகிறேன்.

மனு ஆனந்தை எங்கே பிடித்தீர்கள்?

கௌதம் வாசுதேவ் மேனனிடம் 8 ஆண்டுகள் துணை இயக்குநராகப் பணிபுரிந்தவர் மனு ஆனந்த். அதைத் தாண்டி அவரிடம் நிர்வாகத் தயாரிப்பாளராகவும் பணிபுரிந்ததை நான் அறிவேன். உண்மையில் ‘ராட்சசன்’ படத்துக்குப் பிறகு நான் தேர்வு செய்த கதை இதுதான். ‘காடன்’ படத்தில் அவ்வளவு உழைப்பைக் கொட்டியிருந்தேன். ஆனால், நான் நடித்திருந்த காட்சிகளை, பட ரிலீஸுக்கு 5 நாட்களுக்கு முன்பாக 40 நிமிடத்துக்கு மனசாட்சியில்லாமல் வெட்டித் தள்ளிவிட்டார்கள். அதைக் கண்டு மனமுடைந்துபோனேன். அப்போதுதான், ஒரு நடிகனாக எனது முழுமையான திறனை, மெச்சூரிட்டியை வெளிப்படுத்தும் படமொன்றைத் தமிழ், தெலுங்கில் கொடுத்து, அது திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களின் கைதட்டல்களைப் பெற வேண்டும் என்று நினைத்தேன். அதற்கு ‘எஃப்.ஐ.ஆர்’ தகுதியான கதையாக இருந்தது. படத்தை உடனே தொடங்க என்னிடம் பணம் இல்லாமல்போனதால், நான் வாங்கி வைத்திருந்த ‘ராட்சசன்’ படத்தின் இந்தி ரீமேக் உரிமையை நல்ல விலைக்கு விற்று, அந்தப் பணத்தில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறேன். படத்தைப் பார்த்து பாராட்டிய உதயநிதி ஸ்டாலின் திரையரங்குகளில் வெளியிடுகிறார்.

‘எஃப்.ஐ.ஆர்’ படத்தின் கதை என்ன?

திருவல்லிக்கேணியில், ஒரு நடுத்தர இஸ்லாமியக் குடும்பத்தில் பிறந்து, வளர்ந்து, கெமிக்கல் இன்ஜினியரிங் படித்து முடித்து, சுயதொழில் முயற்சியை தொடங்குகிறான் நாயகன். அவன் மீது புனையப்படும் ஒரு வழக்கு, அவன் வாழ்க்கையை, கனவைப் புரட்டிப்போடுகிறது. எல்லா சாமானியர்களும் ஒரே மாதிரி ரியாக்ட் செய்யமாட்டர்கள் இல்லையா? இவன், தன் காயங்களுக்கு மருந்து போட்டுக்கொண்டிருக்காமல், எப்படித் திருப்பி அடித்தான் என்பதுதான் கதை. இதில் எந்த செய்தியும் நாங்கள் சொல்லவில்லை. முழுவதும் ஆக் ஷன் அதகளம் இந்தப் படம்.

சென்சாரில் என்ன நடந்தது, எவ்வளவு வெட்ட வேண்டியிருந்தது?

ஒரு சில வார்த்தைகளுக்கு ‘மியூட்’ கொடுத்தார்கள். அவ்வளவுதான்!

அடுத்து?

வரிசையாக நான்கு படங்களில் நடிக்க இருக்கிறேன். அவற்றில் ஒன்று மீண்டும் மனு ஆனந்துடன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x