

பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனை, அடுத்த ஜனாதிபதியாக்குவதற்கு பிரதமர் நரேந்திர மோடி முயற்சித்து வருவதாக வடநாட்டு ஊடகங்கள் பரபரப்பான செய்திகளை வெளியிட்டன. தற்போதைய ஜனாதிபதி ப்ரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் அடுத்த ஆண்டுடன் முடியவுள்ளது. சமாஜ்வாடி கட்சியின் முன்னாள் தலைவரும் அமிதாப்பின் நெருங்கிய நண்பருமான அமர் சிங்கும் இதுபோன்ற தகவலைத் தானும் கேள்விப்பட்டதாக தெரிவித்தார்.
நரேந்திர மோடி, குஜராத் முதலமைச்சராக இருந்தபோது அமிதாப்பை அவருக்கு அறிமுகப்படுத்தியது அமர்சிங் என்பது குறிப்பிடத்தக்கது. அமிதாப்-மோடி சந்திப்புக்குப் பின்னர்தான் அமிதாப் குஜராத்தின் விளம்பரத் தூதராக நியமிக்கப்பட்டார். பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்களில் ஒருவரும் முன்னாள் பாலிவுட் நடிகருமான சத்ருகன் சின்ஹாவும் அமிதாப் ஜனாதிபதியானால் நாட்டுக்கு நற்பெயர் கிடைக்கும் என்று கூறியிருந்தார். இந்திய சுற்றுலாத் துறையின் இன்க்ரெடிபிள் இந்தியா பிரசாரத்தின் முகமும் அமிதாப் என்பது குறிப்பிடத்தக்கது.
டொனால்ட் ட்ரம்புக்கு எதிராக பெண் வாக்காளர்கள்
அமெரிக்கப் பெண்கள் கருக்கலைப்பு செய்தால் தண்டனையை அனுபவிக்க வேண்டியிருக்கும் என்று குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசினார். பெண்கள் மற்றும் பெண்கள் உரிமைகள் தொடர்பாக டொனால்ட் ட்ரம்ப் ஏற்படுத்திவரும் சர்ச்சைகளும் அவரது பேச்சுகளும் அமெரிக்கப் பெண் வாக்காளர்களிடையே ட்ரம்புக்குக் கெட்டபெயரை ஏற்படுத்தியிருப்பதாக அமெரிக்க ஊடகங்கள் நடத்திய கருத்துக்கணிப்புகள் தெரிவித்துள்ளன.
அமெரிக்கப் பெண்களில் நான்கில் ஒருவருக்கும் குறைவாகவே டொனால்ட் ட்ரம்ப் மீது நல்லெண்ணம் கொண்டவர்களாக இருக்கிறார்கள் என்று நியூ வாஷிங்டன் போஸ்ட்- ஏபிசி நியூஸ் கூறியுள்ளது. அமெரிக்க உச்சநீதிமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டு நாற்பது ஆண்டுகள் கருக்கலைப்பு என்பது சட்டத்தால் அனுமதிக்கப்பட்டதாக இருந்தாலும் ஒவ்வொரு தேர்தலிலும் அரசியல் மற்றும் தார்மிகரீதியான முக்கியமான பிரச்சினையாகத் தொடர்ந்து கருக்கலைப்பு உரிமை இருந்துவருகிறது.
குதுப்மினாரில் நுழைய கூடுதல் கட்டணம்
இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 118 வரலாற்று நினைவிடங்களைச் சுற்றிப்பார்க்கும் நுழைவுக்கட்டணம் மூன்று மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. குதுப்மினார், அஜந்தா எல்லோரா, செங்கோட்டை போன்ற இடங்களில் உள்நாட்டுப் பயணிகள் சென்றுபார்க்க நுழைவுக்கட்டணம் 5 ரூபாயாக இருந்தது. தற்போது 15 ரூபாயாகியுள்ளது. வெளிநாட்டுப் பயணிகளுக்கான நுழைவுக்கட்டணம் நூறு ரூபாயிலிருந்து இருநூறு ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. உலகப் பாரம்பரியக் கட்டிடங்கள்(வேர்ல்ட் ஹெரிடேஜ் மானுமண்ட்ஸ்) என்று வரையறுக்கப்பட்ட 32 நினைவிடங்களுக்குள் செல்ல உள்நாட்டுப் பயணிகள், 30 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். முன்பிருந்த கட்டணம் 10 ரூபாய். வெளிநாட்டுப் பயணிகள் 500 ரூபாய் நுழைவுக்கட்டணம் செலுத்தவேண்டும்.
தேமுதிகவிலிருந்து வெளியேறும் பிரமுகர்கள்
மக்கள் நலக்கூட்டணியுடன் இணைந்து தேமுதிக மூன்றாவது அணியை அமைத்ததைத் தொடர்ந்து அக்கட்சியில் பரவலாக அதிருப்தி ஏற்பட்டுள்ளது. வடசென்னை மாவட்டச் செயலாளர் யுவராஜைத் தொடர்ந்து, கன்னியாகுமரி வடக்கு மாவட்டச் செயலாளர் எஸ்.தினேஷூம் திமுகவின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கட்சியில், ஏப்ரல் 1 அன்று இணைந்துள்ளார்.
ஆளும் அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கு ஆதரவாகவே மக்கள் நலக்கூட்டணியோடு விஜயகாந்த் சேர்ந்துள்ளதாகவும், அந்தக் கூட்டணியிலிருந்து தன்னால் பணியாற்ற முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். திமுகவின் தூண்டுதலால்தான் தேமுதிகவைச் சேர்ந்த பிரமுகர்கள் கட்சி மாறுவதாக தேமுதிக குற்றம்சாட்டியுள்ளது. தேமுதிகவின் தலைமை மீது ஏற்பட்ட அதிருப்தியால் அதன் தலைவர்கள் தாங்களாகவே திமுகவில் வந்து சேர்கிறார்கள் என்று திமுகவின் செய்தித்தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் அந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.
இந்தியா சந்தித்த தோல்வி
மார்ச் 31-ல் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில் மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக இந்தியா தோல்வியைச் சந்தித்து வெளியேறியது. இதற்கு பனிப்பொழிவும், அஸ்வின் மற்றும் ஹர்திக் பாண்டியா வீசிய இரண்டு நோபால்களுமே காரணம் என்று கேப்டன் தோனி கூறினார். டாஸில் தோற்றது முதல் பின்னடைவு என்றும் அவர் கூறினார். ஒரு காலத்தில் கிரிக்கெட்டின் பொற்காலத்தை அனுபவித்த மேற்கு இந்திய கிரிக்கெட் அணி சமீபகாலமாக சோபிக்கவில்லை.
கடந்த மூன்று ஆண்டுகளில் ஒரே ஒரு டெஸ்ட் கிரிக்கெட் தொடரை மட்டுமே வென்றுள்ளது. பொருளாதாரப் பிரச்சினைகளிலும் சிக்கியுள்ளது. இந்நிலையில் மேற்கிந்திய தீவுகளைச் சேர்ந்த அண்டர் 19 அணி சமீபத்தில் உலகக் கோப்பையை வென்றது. அவர்கள் கொடுத்த உந்துதலில்தான் இந்த வெற்றி சாத்தியமாகியுள்ளது என்று நெகிழ்ந்து கூறியுள்ளார் மேற்கிந்திய அணியின் தலைவரான டேரன் ஷம்மி.