சுவாரஸ்யமாகப் படிக்கலாமே!

சுவாரஸ்யமாகப் படிக்கலாமே!
Updated on
1 min read

கல்லூரி நாட்கள் என்றாலே சொன்னாலே எல்லோர் மனதுக்குள் பட்டாம்பூச்சி பறக்கும். இந்தியாவைப் பொறுத்தவரை பள்ளிச் சூழலைவிடக் கல்லூரிச் சூழல் சுதந்திரமானதுதான். ஆனால் கல்லூரிக்குச் செல்வதில் மட்டும் மகிழ்ச்சி கண்டால் போதுமா? கல்லூரியில் படிப்பதிலும் மகிழ்ச்சி காண வேண்டாமா? இதோ சுவாரஸ்யமான பல பட்டப் படிப்புகள் உங்களுடைய கல்லூரி நாட்களை அர்த்தமுள்ள கொண்டாட்டக் காலமாக மாற்றவிருக்கின்றன.

நீங்கள் தீராத விளையாட்டுப் பிள்ளையாக இருந்தால் டாய் டிசைன் அண்ட் கேம்ஸ் (Toy Design & Games), பப்பட்ரி (Puppetry) ஆகியவற்றைப் படிக்கலாம். அகமதாபாதில் இருக்கும் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டிசைன் நிறுவனமானது விளையாட்டு, கேம் தியரி, கதாபாத்திரங்கள் வடிவமைப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறது. இதைப் படித்தால் பொழுதுபோக்குத் துறை, கல்வி, கைவினைப் பொருள்கள் தயாரிப்புத் துறை உள்ளிடப் பல துறைகளில் நல்ல வேலைவாய்ப்பு உள்ளன. உலகின் பழமை வாய்ந்த பொழுதுபோக்கு வடிவத்தை நீங்கள் கற்றுக்கொள்ள விரும்பினால் மும்பை பல்கலைக்கழகம் அளிக்கும் 4 மாதப் பகுதி நேரப் பப்பட்ரி கோர்ஸ் படித்துச் சிறந்த ‘கதைசொல்லி’யாக ஜொலிக்கலாம். ஆக விளையாட்டாகவே படித்து, வேலை பார்க்கலாம்.

மாற்றம் தேவையா?

புவி வெப்பமாதலும் பருவநிலை மாற்றமும் நகர வாழ்க்கையை நரக வாழ்க்கையாக மாற்றிவருகின்றன எனச் சொல்லாதவர்களே இல்லை. “இதற்கு மாற்றே கிடையாதா! என்னால் எதுவுமே செய்ய முடியாதா?” என்கிற ஆதங்கமும் துடிப்பும் பல இளைஞர்களிடம் உள்ளது. ஆனால் “ஒழுங்கா படிச்சு வேலைக்குப் போயிட்டு நீ என்ன நினைக்கிறியோ அதெல்லாம் செய்” என இளைஞர்களின் சமூக அக்கறையைக் குடும்பமும் சமூகமும் முளையிலேயே கிள்ளி எறிந்துவிடுகின்றன.

நேற்று வரை அது பிள்ளைகளைக் கட்டுப்படுத்த பெற்றோருக்கு உதவும் ஆயுதம். ஆனால், இன்று சமூக அக்கறை கொண்ட மாணவர்கள் கையில் உள்ள அஸ்திரம். இன்று நிஜமாகவே நீங்கள் படித்துவிட்டு இதையெல்லாம் செய்யலாம். பாதுகாப்பான சுற்றுச்சூழலைக் கொண்ட இடமாக உங்களுடைய ஊரை மாற்ற டாட்டா இன்ஸ்டிடியூட் ஆஃப் சோஷியல் சயின்ஸஸ் அளிக்கிறது எம்.ஏ./எம்.எஸ்சி. ஹேபிடட் பாலிஸி அண்ட் பிராக்டீஸ் (M.A./M.Sc. Habitat Policy and Practise). வேலைக்கும் இதில் உத்தரவாதம் உள்ளது.

ஒருவேளை மாற்றத்தை விரும்பும் நீங்கள் கிராமப்புறச் சூழலில் மக்களோடு மக்களாக உளமார வேலை பார்க்க ஆசைப்பட்டால் விவசாயம் மட்டுமல்லாமல் பலவற்றைச் செய்ய வாய்ப்பிருக்கிறது. கால்நடை வளர்ப்பு, காட்டியல், பண்ணை மேலாண்மை, குழந்தை வளர்ப்பு, சுற்றுச்சூழல் மேலாண்மை, சமூக வளர்ச்சி ஆகியவற்றைக் கற்றுத்தருகிறது பி.எஸ்சி. ரூரல் ஸ்டடீஸ் (B.Sc.Rural Studies). தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் முதல் அரசு, தனியார் எனப் பல நிறுவனங்களில் உங்களுக்கு ஏற்ற வேலையும் கிடைக்கும்.

படித்த படிப்புக்கும் செய்யும் வேலைக்கும் சம்பந்தம் இல்லை என்ற நிலையை மாற்றுவோம். ஆனந்தமாகப் படியுங்கள்; ஆத்மார்த்தமாக வேலை செய்யுங்கள்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in