

கிராமப் பேருந்து நிறுத்தத்திலிருந்து மூன்று கி.மீ. தூரத்தில் ஒரு குக்கிராமம். ஊர் எல்லை அய்யனாருக்குப் பக்கத்திலுள்ள ஆலமரத்தடியில்தான் வெளியூர்க்காரர்களுக்கு ‘டூரிஸ்ட் விசா’ வழங்கப்படும். “பால்பாண்டி வீட்டுக்கா..? கிழக்கால போய்..” என்று கிராமத்து கூகுள் பெரிசுகள் வழி சொல்லும். இரண்டு முக்கியத் தெருக்களிலிருந்து பிரியும் பத்து கிளைத் தெருக்கள். மொத்தத்தில் “2050-களில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தியே தீருவோம்” என்று அரசியல்வாதிகளைப் பேச வைக்கக்கூடிய கிராமம்.
இந்த ஊரைச் சேர்ந்த முத்துபேச்சியிடம் பேசியபோது, நாட்டிலுள்ள அத்தனை மகளிர் பத்திரிகைகளிலும் அந்த இளம் பெண்ணின் பேட்டி வரும் சாத்தியம் தெரிந்தது. “டிப்பார்ட்மெண்ட்டல் ஸ்டோர் வைக்கப்போறேன் சார். ட்ராலி, கம்ப்யூட்டர், கண்காணிப்பு கேமரா எல்லாம் வச்சி...”
“வெரிகுட். ஆமா, எந்த ஊர்லம்மா?”
“இந்த ஊர்லதான்!”
“ஏன், ஒரு கிராமத்துக்காரன் தன்னோட கிராமத்துல ஏஸி, எலிவேட்டர், அமெரிக்கன் ஸ்வீட்கார்ன் என்று வாழக் கூடாதா?” என்று கனவுக் கிராமங்களை ஆதரிப்பவர்கள் திட்டினாலும் பரவாயில்லை என்று “மிஞ்சிப்போனால், 500 வீடுகள் இருக்கற ஊர்ல..” என்று என் அவநம்பிக்கையுரையைத் துவக்கினேன்.
காரணம்...
கதை கேட்டவர் காரில் நான், என் சொந்தக்காரப் பையன்கள் எல்லாம் பேரூராட்சிகள், முனிசிபாலிட்டிகளில் வாழ்ந்தபோது கேசவன் அண்ணன் மாநகரம் ஒன்றில் வாழ்ந்தார். அவனது பேச்சை வாய் பிளந்து கேட்போம். “நீங்கள்லாம் டீக்கடை பெஞ்சுல உக்காந்து வாழ்க்கையையே முடிக்கற ஊர்கள்ல இருக்கறீங்க. நான் பாக்கறது எல்லாமே மெட்ரோ சேனல், ஃப்ளைட்... என்னால கார் இல்லாத வாழ்க்கையை நினைச்சுப்பாக்கவே முடியல” என்றெல்லாம் அவர் பேசும்போது எங்களது சிற்றூர் இதயங்கள் பிரமிக்கும் “சொந்தமா பிஸினஸ்... மாடர்ன் பங்களா...”
இருபது வருடங்கள் கழித்து வாழ்க்கையைப் பார்க்கும்போது கதை கேட்டவர்கள் இப்போது கார்களில் பறக்க, கேசவனிடம் சொந்தமாக ஒரு சைக்கிள்கூட இல்லை. அவர் இன்னும் “காளான் வளத்து” என்றுதான் இருக்கிறான்.
காரணம்...
தமிழ்நாட்டில் மட்டும்தான் டீன்ஏஜ் பையன்களை ‘சி.சா.செ.கி ’ நோய் தாக்குகிறதா, எல்லா மாநிலங்களிலும் இந்நோயின் கிருமிகளின் தாக்கம் உண்டா என்பது தெரியவில்லை. நிறைய பேரைப் பார்த்துவிட்டேன். சமீபத்தில் சுரேஷை.
திடீரென ஒருநாள் தணியாத தாகமுடன் சென்னைக்குக் கிளம்பும்போது ‘சினிமாவில் சாதிக்க சென்னைக்குக் கிளம்பும் நோய்’ இரண்டாம் கட்டத்துக்குத் தாவிவிட்டதை உணரலாம்.
கலைத்தாய், சித்தி, அத்தை ஆகியோர் செய்த புண்ணியமோ, என்னவோ சென்னையில் சில வெற்றிகரமான தோல்விகளுக்குப் பிறகு,சுரேஷின் நோய் குணமாயிற்று.
காரணம்...
தெரிந்ததைச் செய்வோம்
மூன்று காரணங்களுக்கும் பதில் ஒன்றுதான். இதை வங்கி மேலாளர் பாணியில் சொல்லலாம். வங்கியில் கடன் கேட்டு நிறைய பேர் வருகிறார்கள். அதில் ஒருவர் பலசரக்குக் கடை வைப்பதற்காகக் கடன் கேட்கிறார் என வைத்துக்கொள்வோம். உடனே அவரின் மனஉறுதியைச் சோதிப்பதற்காக “இந்தப் பகுதியில் ஏற்கெனவே நிறைய பலசரக்குக் கடைகள் இருக்கின்றன. நீங்கள் வைத்தால் ஓட வாய்ப்பில்லை” என்பேன். “ரெடிமேட் கடை வைத்தால், அதிக லாபம் என்று சொல்கிறார்களே?” என்று குழப்புவேன்.
நிறைய பேர் இந்த இடத்தில் யோசிக்கத் துவங்கிவிடுவார்கள். “அப்படியா சார்? எதுக்கும் வீட்ல டிஸ்கஸ் பண்ணீட்டு வந்து சொல்றேன்” என்பார்கள். இவரை நம்பி எப்படிப் பணம் கொடுக்க முடியும்? சலன புத்தி உள்ள எந்தத் தொழிலும் தெரியாத இவர்களால் நாட்டிற்கு மளிகைக்காரரும் கிடைக்கப்போவதில்லை; ரெடிமேட் கடைக்காரரும் கிடைக்கப்போவதில்லை!
வாழ்வில் வெற்றி பெற நினைக்கும் ஒருவர் இந்த இடத்தில் என்ன சொல்வார் “ஆயிரம் தொழில்கள் இருக்கலாம். ஆனால், எனக்குத் தெரிந்ததைத்தானே நான் செய்ய முடியும்?” --- இந்த ரீதியில் சொல்லிவிட்டால், அவர் என் மதிப்பீட்டில் தேறுகிறார்.
நடந்தது என்னவென்றால், அவரது நண்பர்கள், தெரிந்தவர்கள் யாராவது பலசரக்குக் கடை வைத்தால் நல்ல லாபம் கிடைக்கும் என்று சொல்லியிருப்பார்கள். இவருக்கும் உடனே அதில் ஆசை வந்திருக்கும்; அதற்கான தகுதி தனக்கு இருக்கிறதா என்று தன்னைத்தானே கேட்டுக் கொள்ளவில்லை என்றார் வங்கியாளர்.
போராட்ட குணம் இருக்கா?
முத்துப்பேச்சிக்கு இருந்தது வியாபார ஆசை. கேசவனுக்கு இருந்தது பணக்காரனாக ஆசை. சுரேஷுக்கு சினிமா டைரக்டர் ஆசை.
எந்தச் செயலுக்கும் ஆசைதான் அடிப்படை. ஆனால், ஆசைப்படுவது மட்டுமே தகுதி ஆகிவிடாது. மேம்போக்காகப் பார்த்தால், ஆசைப்படுவதே தகுதி போலத்தான் தெரியும். ஆனால் யதார்த்தம் வெறி கொண்டு தாக்கும்.
டிப்பார்ட்மெண்டல் ஸ்டோர் வைக்க வேண்டுமென்றால், அதைப் பற்றி ஏதாவது தெரிய கொஞ்சமாவது உழைத்திருக்க வேண்டும். கேசவன் வெறுமனே “கார் வேண்டும், வீடு வேண்டும்” என்று பேசிக்கொண்டிருப்பதே தகுதியாகிவிடாது.
தமிழ்நாட்டில் எல்லோரிடமும் குறைந்தது ஐந்து திரைக்கதைகளாவது இருக்கும். வீட்டுக்கு ஒரு இயக்குநர் நிச்சயம். அவர்களின் சினிமா அறிவில் குறை சொல்ல எதுவும் இருக்காது என்பது வேறு விஷயம். ஆனால் “மணிரத்னம் எல்லாம் ஒரு டைரக்டரா..? ஸ்பீல்பெர்க் எல்லாம் சும்மா...” என்பதே தகுதியாகிவிடாது.
போராட்ட குணம், சொல்ல முடிந்த, சொல்ல முடியாத அவமானங்களை, வலிகளைத் தாங்கும் உறுதி, ஏமாற்றங்களை எளிதாக எடுத்துக்கொள்ளத் தெரியாவிட்டாலும், அந்த ஆற்றல் இருப்பது போல் நடிக்கும் குணம் - இது போன்ற தகுதிகளையும் உள்ளடக்கியதுதான் வெற்றி.
எல்லோரும் வெற்றி பெற்ற பிறகு கிடைக்கும் வெகுமதிகளை நினைத்து, அவற்றைப் பெறக் கைகளை நீட்டித் தயாராக வைத்திருப்பதே தகுதி என்று நினைத்துவிடுகிறார்கள். அந்த வெற்றி எங்கிருந்து கிடைக்கும் என்றால் விழிக்கிறார்கள்.
ஆசைகள் அறிவை மயக்கும். தகுதிகள் தடைகளை உடைக்கும்.
தகுதியே இல்லாத நேரத்திலும் ஆசைப்படலாம், தப்பில்லை. அதன் பிறகாவது தகுதியை வளர்த்துக்கொள்ள வேண்டும். வெறும் ஆசைகளுடன் இருந்தால் ஆசைகளின் எண்ணிக்கையும், பெருமூச்சுகளின் எண்ணிக்கையும்தான் அதிகரிக்குமே தவிர, வேறொரு அற்புதமும் நடக்காது. தகுதி உள்ளவர்களே திணறும்போது, ஆசைப்படுவதையே தகுதி என்பவர்கள் ஒரு கட்டத்தில் புலம்பத்தான் வேண்டியிருக்கும். ஆனால் உங்கள் மனம் உங்கள் முயற்சியின்மையை ஒப்புக்கொள்ளாமல் “பாங்க்ல லோன் கேட்டா, ஆள் பாத்துக் கொடுக்கறாங்க...”; “எங்க போனாலும் தொரத்திவிடறாங்க...”; “சினிமால எல்லாம் திறமைக்கு எங்க மதிப்பு இருக்குது?” என்றுதான் சமாளிக்கும்.
ஆசைகளை சொகுசாக ஏஸி காரில் உலா அனுப்பி வைத்தீர்கள் என்றால், அது வேலைக்கு ஆகாது. ஆசைகளைப் புழுதிபட, கட்டாந்தரையில், கொளுத்தும் வெயிலில் இறக்கி விட வேண்டும். அவற்றுக்குத் தகுதி இருந்தால், அவை தனக்கான காலணிகளையும் நிழலையும் தேடிக்கொள்ளும்.
தொடர்புக்கு: shankarbabuc@yahoo.com