Published : 28 Jan 2022 11:33 AM
Last Updated : 28 Jan 2022 11:33 AM

கவனம் ஈர்த்த படங்கள்!

எத்தனை சிறந்த படத்தையும் திரும்பத் திரும்பக் காணும்போது பிழைகளையும் குறைகளையும் கண்டறிய முடியும். ஆனால், பொதுவெளியில் ஒரு படம் உருவாக்கும் சலனம் நேர்மறையாக அமைந்துவிட்டால், அதன் குறைகள் மன்னிக்கப்பட்டு, கொண்டாடப்படுவதைப் பார்த்து வருகிறோம். இந்த அணுகுமுறையுடன் கடந்த ஆண்டு வெளியான 186 திரைப்படங்களில், முத்திரை பதித்த ‘டாப் -10’ படங்களை கடந்த வாரம் பட்டியலிட்டிருந்தோம். அந்தப் பட்டியலின் தொடர்ச்சியைப் பார்க்கலாம்.

6. விநோதய சித்தம்

தனது இருப்பின் மூலமே தனது குடும்பமும் தன்னைச் சார்ந்திருக்கும் உலகமும் அங்குள்ள மனிதர்களும் இயங்கமுடியும், தான் இல்லாவிட்டால் இங்கே ஓரணுவும் அசையாது என நம்பும் ஒரு மனிதர். அவருடையப் பெருமிதத்தை இயற்கை உடைத்து விளையாடும் கதை. சிறந்த உள்ளடக்கத்துக்காகக் கொண்டாடப்பட்ட நாடகங்களை, திரையுலகம் எடுத்தாண்டு வெற்றிகண்ட காலம் ஒன்று இருந்தது. அறுந்துபோன அந்தத் தொடர்பை இயக்குநர் சமுத்திரக்கனி இந்தப் படத்தின் மூலம் புதுப்பித்தார். ‘டம்மீஸ் ட்ராமா’ குழு, பல நூறு முறை மேடையேற்றி வெற்றிகண்ட நாடகத்தை அதே பெயரில் படமாக்கியதுடன், மேடையிலிருந்து திரைக்கு இடம்பெயரும்போது அதன் காட்சிமொழி சாத்தியங்களை சிறப்பாகக் கையாண்டிருந்தார் இயக்குநர். துருத்தலான உபரிக் காட்சிகள் ஒன்று கூட படத்தில் இல்லை.

7 தேன்

மலைத்தேன் எடுப்பதைத் தொழிலாகச் செய்யும் ஒரு மலையின் மகனுக்கும் தந்தையின் உயிரைக் காப்பாற்றத் துடிக்கும் ஒரு மலையின் மகளுக்கும் இடையில் எளிய காட்டுப் பூவாக மலர்கிறது காதல். அதன் தொடர்ச்சியாக வரும் இல்லற வாழ்க்கையின் நெருக்கடியால், மலையை விட்டு இறங்கி நிலப்பரப்புக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் நாயகனுக்கு. அவனைக் கதறவிடும் ‘சிஸ்டம்’, விளிம்புநிலை மக்களுக்கான உரிமையை வழங்க மறுத்து எத்தனை கசப்பாக அது அவர்களை நடத்துகிறது என்பதை எடுத்துக் காட்டியது ‘தேன்’.

8 கர்ணன்

தனக்கும் தனது மக்களுக்கும் மறுக்கப்பட்டதை பெற, இறுதிவரைப் போராடும் ஒரு எளிய கிராமத்து இளைஞனின் கதை. அவனது கோபத்தின் பின்னாலிருக்கும் சாதி அடக்குமுறை அரசியலை, வணிக சினிமாவுக்குரிய நாயக வழிபாட்டுச் சித்தரிப்புடன் படம் பேசியது. காலம் காலமாக ஒடுக்கப்பட்டவர்களின் கோபம் அணி திரளும்போது அது உக்கிரமான போராக மாறிவிடும் என்பதைச் சொன்ன படத்தில், இசையைக் கையாண்ட விதமும் குறியீடுகளை கையாண்ட விதமும் படத்தின் உக்கிரத்தைச் சமநிலைப்படுத்தியது.

9. வாழ்

சக மனிதர்களிடமும் இயற்கையிடமும் பெற்றுக்கொள்ளும் அனுபவங்கள், ஒரு இளைஞனின் வாழ்க்கையை சுய பரிசோதனைக் களமாக மாற்றிவிடுவதைச் சித்தரித்த படம். நாளைக்கான கவலையை மறந்துவிட்டு இன்றைக்கான வாழ்க்கையை, அதன் ஒவ்வொரு தருணங்களையும் வாழ்வதை போலித்தனமின்றி, காட்சிமொழியின் சாத்தியங்களுடன் சித்தரித்த படம். முதன்மைக் கதாபாத்திரங்களுக்கு வாழ்வின் எதிர்பாரா தருணங்கள் பயணத்தின் வழியே சாத்தியமாவதும் வாழ்க்கை ஒரு பயணம் என அர்த்தப்படுத்தும் படத்தில், குறைகளை மீறிய திரையனுபவத்தைச் சாத்தியப்படுத்தியிருந்தது.

10. கயமை கடக்க

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுபவர்களை தேடித் தேடி வேட்டையாடும் தீவிர மனப்பிறழ்வு கொண்ட ஓர் இளைஞனின் கதை. பாலியல் வன்கொடுமைக் குற்றங்கள் எவ்வாறு தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் சட்டமும் காவல்துறையும் வகுத்துள்ள நீதிகளுக்கு வெளியே நிற்கும் இந்தப் படம், பல போதாமைகளுடன் இருக்கிறது. ஆனால், திரைப்படம் எனும் காட்சிக் கலையை எவ்வாறு அணுகுவது என்பதில் 100 சதவீதம் முழுமையாக வெற்றிபெற்றிருக்கிறது. இயற்கை ஒளியில் படமாக்கம், ஒலி வடிவமைப்பு - ஒலிப்பதிவு, தனித்துவக் காட்சிச் சட்டகங்களின் வழியே காட்சியில் நிகழும் கள உணர்வைப் பார்வையாளர்களுக்கு கடத்துவது, படத்தொகுப்பில் அறுபடாத கோவையைச் சாத்தியமாக்கியது, அறிமுக நடிகர்களை பயன்படுத்திக்கொண்ட விதம் என, ஒரு சுயாதீன, கிரவுட் ஃபண்டிங் சினிமாவை சர்வதேசத் தரத்துக்குத் தரமுடியும் என்பதை நிரூபித்துவிட்டது ‘கயமை கடக்க’ படத்தின் குழு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x