Published : 27 Jan 2022 12:52 PM
Last Updated : 27 Jan 2022 12:52 PM

அஞ்சலி | திக் நியட் ஹான்: உணர்ச்சிகள் மேகங்கள் போன்றவை

வியட்நாமைச் சேர்ந்த பௌத்த துறவியும் இணக்கத்துக்காகவும் அமைதிக்காகவும் சமூகத்தில் இறங்கிப் பணியாற்றிய ஆன்மிக ஆசிரியருமான திக் நியட் ஹான் 96 வயதில் சமீபத்தில் காலமானார். செய்யும் எல்லாக் காரியங்களிலும் மனம் நிறைந்த கவனத்தைச் செலுத்துவதையே சிறந்த தியானம் என்று கூறிய அவர் ‘மனம்நிறை கவனம்’ என்ற பதத்தை உலகத்துக்கு அறிமுகப்படுத்தியவர். மடாலயங்களில் அமர்ந்து தியானம் செய்வது மட்டுமல்ல, துயரங்களிலும் வன்முறையிலும் சிக்கியுள்ள சமூகத்தில் இறங்கிப் பணியாற்றும் செயல்முறையை ‘கடப்பாடு கொண்ட பௌத்தம்’ என்று வரித்துக் கொண்டவர். அன்பின் அடிப்படையிலான அகிம்சையை செயல்வடிவமாக்கிய அரிய ஆன்மிகத் தலைவர்களில் ஒருவர் அவர். அவரது செய்திகளில் சில இங்கே தரப்பட்டுள்ளன.

இன்னொரு நபர் உங்களைத் துயரத்துக்குள்ளாக்கினால், அவர் உள்ளார்ந்து துயரத்தில் இருக்கிறார் என்று அர்த்தம். அந்தத் துயரம் தான் வெளியே சிந்திக் கொண்டிருக்கிறது. அவருக்குத் தண்டனை தேவையில்லை. அவருக்கு உங்களது உதவி தேவை. அவர் அந்தச் செய்தியைத்தான் உங்களுக்குச் சொல்கிறார்.

விடுவது நமக்கு சுதந்திரத்தைத் தருகிறது. மகிழ்ச்சிக்கு ஒரே நிபந்தனை சுதந்திரம்தான். நமது இதயத்தில் நாம் கோபத்தையோ, படபடப்பையோ, உடைமைகளையோ பற்றிப் பிடித்துக் கொண்டிருந்தால் நாம் சுதந்திரமாக இருக்கவே முடியாது.

தண்ணீரில் அல்லது காற்றில் நடப்பதை மக்கள் பொதுவாக அற்புதமென்று கருதுகின்றனர். நான் பூமியில் நடப்பதையே உண்மையான அற்புதம் என்று கருதுகிறேன். ஒவ்வொரு நாளும் நாம் ஒரு அற்புதத்துடன் தொடர்பு கொண்டிருப்பதை, நம்மால் அறியக்கூட இயலவில்லை. நீல வானம், வெள்ளை மேகங்கள், பச்சை இலைகள், கருப்புக் கோலி போன்று சுடரும் குழந்தையின் கண்கள், அவற்றைப் பார்க்க இயலும் நமது இரண்டு கண்கள், எல்லாமே அற்புதம்தான்.

உணர்ச்சிகள் புயலில் சிக்கிய மேகங்கள் போல வந்து வந்து போகும். கவனத்துடனான மூச்சே எனது நங்கூரமாகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x