Published : 27 Jan 2022 12:44 PM
Last Updated : 27 Jan 2022 12:44 PM

அகத்தைத் தேடி - 78: பெரிய அவசரமும் படித்துறைப் பாயசமும்

கோயில் பிரசாதங்கள் பக்தியின் அடையாளமாக மட்டுமின்றி பாரம்பரியத்தின் தொடர்ச்சியாகவும் திகழ்கின்றன. ஸ்ரீரங்கம் ஸ்ரீ பண்டாரத்தில் (கோயில் மடப்பள்ளி) ஸ்ரீரங்கநாதருக்கு ரொட்டியும் வெண்ணெய்யும் நைவேத்யம் செய்து பிரசாதமாக வழங்கப்படும்.

ஒவ்வொரு நாளும் ரங்கநாதருக்கு புதுப்பானையில் தான் நைவேத்யம் தயாராகும். அன்று மாலை அந்தப் பானை உடைக்கப்படும். மறுநாள் குயவர் புதுப் பானையோடு வந்துவிடுவார். இங்கே ‘பெரிய அவசரம்’ என்ற பிரசாதம் தரப்படும். ஆனால், “தேவாமிர்தம்” என்பார்களே அந்த ரகம்.

வைத்தீஸ்வரன் கோயிலில் வழங்கப்படும் விபூதிப் பிரசாதத்தை அப்படியே வாயில் போட்டுக்கொள்ள வேண்டியது தான். தீராத நோய்களெல்லாம் தீர்த்து வைக்கும் ஆற்றல் அந்த விபூதி பிரசாதத்துக்கு உண்டு என்பது நம்பிக்கை. விபூதியுடன் சின்னதாக மருந்து உருண்டை ஒன்றும் தருவார்கள். அதை அப்படியே வாயில் போட்டு சாப்பிட்டுவிட வேண்டும். வைத்தீஸ்வரன் அல்லவா?

பெருமாள் கோயில்களில் ஒரு சிறிய உத்தரணியில் வழங்கப்படும் தீர்த்தத்தில் பச்சைக் கற்பூரம், ஏலக்காய், துளசி சேர்த்த மணம் ஒரு புறம் இருக்க வாயில் பட்டதுமே உடம்பெங்கும் ஒரு புத்துணர்ச்சி பெருகுவதை உணர முடியும்.

பிட்டுக்கு மண் சுமந்த பெருமானின் கதை நமக்கெல்லாம் தெரியும். மதுரையில் புட்டுத் திருவிழா பிரசித்தம் அங்கே பிட்டுதான் பிரசாதம்.

அந்தக் காலத்தில் மிளகாய் இல்லை

பிரசாதங்களில் பழமையான நமது ஆதிகாலத்து உணவுமுறை உயிர்த்திருக்கிறது. காஞ்சிபுரம் இட்லி, பொங்கல், அனுமாருக்கு சாத்தப்படும் வடைமாலை எல்லாவற்றிலும் மிளகின் ருசி தூக்கலாக இருக்கும். அந்தக் காலத்தில் நம் நாட்டில் மிளகாய் இல்லை. மிளகு தான். தக்காளி கிடையாது. கடலைப் பருப்பு, துவரம்பருப்பு எல்லாம் பிற்காலச் சேர்மானங்கள் தான். ஆதி காலத்தில் நாம் சாப்பிட்ட சத்தான உணவே தலைமுறைகளைத் தாண்டி நம் கையில் பிரசாதமாக வந்து சேர்கிறது.

எல்லோருக்கும் மதுரை அழகர் கோவில் தோசை தெரியும். அந்த தோசையை அறிந்தவர்கள் அது வார்க்கப்படும் தோசைக் கல்லை அறிந்திருக்க வாய்ப்பில்லை. பஞ்சலோகத்தால் ஆன ஒன்றரை அடி அகலமும் இரண்டடி கனமும் கொண்ட அந்த தோசைக்கல்லை தனி ஆளாகத் தூக்கிவிட முடியாது. தோசை கனமானது. அந்த தோசைக் கல்லும் கனமானது.

படித்துறை பாயசம்

தென்காசி அருகில் உள்ள ஆயக்குடி பால சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பாயசம் நைவேத்யம் செய்து ஆற்றை ஒட்டிய படித்துறையில் பிரசாதமாக ஊற்றப்படும். இதற்கு ‘படித்துறை பாயசம்’ என்று பெயர்.

ஆற்றில் குளிப்போர் படித்துறையை சுத்தம் செய்து வைப்பார்கள். பாயசத்தை அப்படியே கையால் வழித்து சாப்பிட வேண்டியதுதான்.

அஜ்மீர் தர்காவில் மிகப்பெரும் அண்டாவில் தயாராகும் பிரியாணி விசேஷமானது. மசூதிகளில் நோன்புத் திறப்பின்போது நோன்புக் கஞ்சி, பூண்டு வாசனையுடன் பசியாற்றும் மாதா கோவில்களில் அப்பமும் திராட்சை ரசமும் பிரசாதமாகக் கிடைக்கும். சென்னையில் இப்போது பாரிஸ் கார்னர் என்று அழைக்கப்படும் பகுதி ஒரு காலத்தில் வயல் வெளியாக இருந்தது. அங்கே வணிகக் குடியினர் காய்கறிகள் பயிரிட்டு விற்று வாழ்க்கை நடத்தி வந்தனர். திடீரென பஞ்சம் உண்டாகி வயல்வெளிகள் வறண்டன. எதைப் பயிரிட்டாலும் பயிர்கள் கருகிப் போயின. அப்பகுதியை விட்டுப் பலரும் வெளியேறினர். ஒரு குறிப்பிட்ட வகுப்பைச் சார்ந்தவர்கள் தங்களின் குலதெய்வமான கன்னிகா பரமேஸ்வரி ஆலயம் சென்று வழிபட்டு, தற்போது தாங்கள் கத்தரிக்காய் பயிரிடப் போவதாகவும் இதிலும் நட்டம் ஏற்பட்டால் உன்னை வணங்கோம், உன்னை விட்டு நீங்குவோம் என்று கூறி வணங்கினார்கள். அந்த ஆண்டு கத்தரிக்காய் அமோக விளைச்சல் கண்டது. இதற்கு நன்றி தெரிவித்து கத்தரிக்காய் பொரியல் செய்து கன்னிகா பரமேஸ்வரிக்கு நைவேத்யம் செய்து அதை வருவோர்க்கெல்லாம் பிரசாதமாக வழங்கலாயினர். இன்றுவரை இங்கே கத்தரிக்காய் பொரியல் பிரசாதம் வழங்கப்படுகிறது. கடவுள் அருள் கத்தரிக்காய் வடிவத்தில்!

(தேடல் தொடரும்)

தஞ்சாவூர்க்கவிராயர்

தொடர்புக்கு: thanjavurkavirayar@gmail.com

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x