Published : 26 Jan 2022 11:36 AM
Last Updated : 26 Jan 2022 11:36 AM

இளம் சாதனையாளர் - வாகை சூடும் சைக்கிள் ராணி!

தேசிய டிராக் சாம்பியன்ஷிப் சைக்கிள் குழுப் போட்டியில் தங்கப் பதக்கம் பெற்று, தமிழ்நாட்டுக்குப் பெருமை தேடித் தந்திருக்கிறார் ஸ்ரீமதி. இந்த வெற்றி மூலம் டெல்லியில் நடைபெற உள்ள ஆசிய விளையாட்டுப் போட்டியில் கலந்துகொள்ளும் வாய்ப்பையும் பெற்றிருக்கிறார்.

தூத்துக்குடியில் உள்ள கீழமுடிமண் கிராமத்தைச் சேர்ந்த மதி, புதியம்புத்தூர் ஜான் தி பாப்திஸ்து மெட்ரிக். பள்ளியில் 12ஆம் வகுப்புப் படித்து வருகிறார். படிப்போடு விளையாட்டிலும் இவருக்கு ஆர்வம் அதிகம். கபடி, சைக்கிள் போட்டிகளில் கலந்துகொண்டு ஏராளமான பரிசுகளைப் பெற்றிருக்கிறார். சைக்கிள் ஓட்டுவதில் ஸ்ரீமதிக்கு இருந்த திறமையைப் பார்த்த இவருடைய ஆசிரியர், முறையான பயிற்சியைக் கொடுத்தால் தேசிய அளவில் சாதிப்பார் என்றார்.

சைக்கிள் பயிற்சி என்றால் பெருநகரங்களுக்குச் செல்ல வேண்டும். பொருளாதார வசதி இல்லாததால், ஸ்ரீமதியின் அப்பா யேசுதாசனே பயிற்சியாளராக மாறினார். 2018ஆம் ஆண்டு தூத்துக்குடியில் நடந்த அண்ணா பிறந்த நாள் சைக்கிள் போட்டியில் கலந்துகொண்டு முதல் பரிசை வென்றார் ஸ்ரீமதி. அதன் பின்னர் திண்டுக்கல்லில் நடந்த மாநில அளவிலான சைக்கிள் போட்டியில் 3வது இடத்தைப் பிடித்தார். சாதாரண சைக்கிளைக் கொண்டே இவ்வளவு சாதிக்க முடிந்த ஸ்ரீமதிக்கு, போட்டிக்குரிய சைக்கிள் இருந்தால் தேசிய அளவில் சாதிப்பார் என்று பயிற்சியாளர்கள் நினைத்தனர்.

வ.உ.சி. துறைமுகம் மூலம் ஸ்ரீமதிக்கு சைக்கிள் கிடைத்தது. 2019ஆம் ஆண்டு மகாராஷ்டிரத்தில் நடந்த 14 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான தேசிய சைக்கிள் போட்டியில் 3வது இடத்தைப் பிடித்தார்.

பின்னர் அரசாங்கம் மூலம் ரூ. 5.38 லட்சம் மதிப்பிலான சைக்கிள் ஸ்ரீமதிக்குக் வழங்கப்பட்டது. 2019ஆம் ஆண்டு ராஜஸ்தானில் நடந்த 17 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான சைக்கிள் போட்டியில் 4வது இடத்தைப் பிடித்தார். இவரின் திறமையைக் கண்ட நடுவர்கள் இந்திய விளையாட்டு ஆணையத்துக்குப் பரிந்துரைத்தனர்.

டெல்லியில் உள்ள இந்திய விளையாட்டு ஆணையத்தில் 2020ஆம் ஆண்டு முதல் தங்கி, பயிற்சி பெற்று வருகிறார் ஸ்ரீமதி. கடந்த டிசம்பரில் ஜெய்ப்பூரில் நடந்த தேசிய டிராக் சாம்பியன்ஷிப் சைக்கிள் குழுப்போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார். தனிநபர் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார். இதைத் தொடர்ந்து இந்த ஆண்டு டெல்லியில் நடைபெற உள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிக்குத் தேர்வாகி உள்ளார்.

“என் அப்பா கூலி வேலை செய்தாலும் எனக்கும் என் தங்கை நிறைமதிக்கும் தேவையானவற்றை வாங்கிக் கொடுத்துவிடுவார். ஆரம்பத்தில் பயிற்சிக் கட்டணம் செலுத்த வசதி இல்லாததால், அவரே பயிற்சியாளராகவும் இருந்திருக்கிறார். இப்போது அணில்குமாரிடம் பயிற்சி பெற்று வருகிறேன். இந்தியா சார்பில் ஒலிம்பிக்கில் பதக்கம் பெற வேண்டும் என்பதுதான் என் லட்சியம்” என்று நம்பிக்கையோடு சொல்கிறார் ஸ்ரீமதி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x