Published : 24 Jan 2022 11:22 AM
Last Updated : 24 Jan 2022 11:22 AM

வருமான வரி ரத்து செய்யப்படுமா?

‘உங்கள் வரிப்பணம் வேலை செய்கிறது’. இந்த வாசகத்தை நான் சில ஆண்டுகளுக்கு முன் ஜெர்மனியில் பயணம் செய்தபோது ஒரு மேம்பால கட்டுமான இடத்தில் பார்த்தேன். மக்கள் செலுத்தும் வரிப்பணம் நாட்டின் பாதுகாப்பு, கல்வி, மருத்துவம், வளர்ச்சிக்கான திட்டங்களுக்கு சரியான முறையில் செலவாகும்போது வரி செலுத்துபவர்களின் மனம் நிறைவு பெறுகிறது. இது நேர்முக வரி என்னும் வருமான வரி மற்றும் மறைமுக வரிகளான ஜிஎஸ்டி, கலால் வரி போன்றவற்றுக்கும் பொருந்தும். இருந்தாலும், தாங்கள் சுயமாக சம்பாதித்த பணத்திற்கு வருமான வரி கட்டுவதில் இந்தியாவில் மட்டுமில்ல, மற்ற நாடுகளில் இருக்கும் வரிதாரர்களுக்கும் ஒரு சுணக்கம் இருப்பதை மறுக்க முடியாது.

‘வருமான வரி ரத்து செய்யப்பட வேண்டும்’ என்கிற ஆலோசனையை கடந்த சில ஆண்டுகளாக பொருளாதார நிபுணர் சுப்ரமணியன் சுவாமி உள்பட பலர் கூறி வருகிறார்கள். இந்த ஆலோசனை பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் காலகட்டங்களில் உச்சம் பெற்று பட்ஜெட் தாக்கல் செய்த பின் அமைதி பெற்றுவிடும். மத்திய பட்ஜெட் இன்னும் ஒரு வார கால அளவில் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் சில ஊடகங்களில் ‘செலவு வரி அறிமுகப்படுத்தப்பட்டு வருமான வரி நீக்கப்படலாம்’ என்ற யூகங்கள் வலம் வருகின்றன. இது குறித்து நிதி அமைச்சரோ அல்லது நிதி அமைச்சகமோ எந்த வித அதிகாரப்பூர்வமான செய்தியையும் வெளியிட வில்லை. இருந்தாலும், இது பேசுபொருளாக மாறி எதிர்பார்ப்புகளை அதிகப்படுத்திள்ளது. இந்தியா போன்ற நாட்டில் வருமான வரி ரத்து செய்வது இயலுமா என்பது பலரது கேள்வி.

ஆடிட்டர் ஜி.கார்த்திகேயன், கோவை

உலக நாடுகளில் வருமான வரிஉலகின் பெரும்பான்மை நாடுகளில் அதாவது வளர்ந்த நாடுகள், வளரும் நாடுகள் என்ற பாகுபாடின்றி 95% நாடுகளில் வருமான வரி நடைமுறைஅமலில் உள்ளது. வருமான வரி, கார்ப்பரேட் வரிபோன்று வரி விதிக்காதநாடுகளை ‘வரி சொர்க்கம்’நாடுகள் என்பார்கள். எண்ணெய் வளம் மிகுந்தவளைகுடா நாடுகள் மற்றும் வரிச்சொர்க்க நாடுகள் என்று அழைக்கப்படும் சைப்ரஸ், கேமன் தீவு, பனாமாபோன்ற இயற்கை வளம் மிகுந்தகுட்டி நாடுகள் என சில நாடுகளில்தான் வருமானவரி என்ற நடைமுறை இல்லை. அந்த நாடுகளில் நிறுவனங்களை பதிவு செய்து மற்ற நாடுகளில் முதலீடு செய்தால், மூலதன லாப வரி, டிவிடண்ட்டுக்கான வரி இல்லை. இதனால் பல நாடுகளிலிருந்து முதலீடு செய்பவர்கள் வரி சொர்க்க நாடுகளில் நிறுவனங்களைத் தொடங்கி இந்தியா போன்ற வேகமாக வளரும் பொருளாதார நாடுகளில் முதலீடு செய்கிறார்கள். வரி சொர்க்க நாடுகளுக்கான வருமானம் அங்கே நிறுவப்படும் நிறுவனங்கள் மூலம் கிடைக்கும் பரிவர்த்தனை மற்றும் சேவை கட்டணங்களே.

இந்தியாவின் வருமான வரி

140 கோடிக்கும் அதிகம் மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் கிட்டத்தட்ட 6.4 கோடி மக்கள் வரி செலுத்துபவர்களாக இருக்கிறார்கள். வருமான வரி என்பது ஒரு முற்போக்கான வரிவிதிப்பு முறை. அதாவது அதிக வருமானம் ஈட்டுபவர்கள் அதிக வரியும் குறைந்த வருமானம் சம்பாதிப்பவர்கள் குறைந்த வரியும் செலுத்த வேண்டும். இந்தியாவில் அதிகபட்ச வரியாக 90% மேல் இருந்த காலமும் உண்டு. தற்போது வருமானத்தைப் பொறுத்து 10%, 20%, 30% உள்ள வரி விகிதம், ஆண்டு வருமானம் ரூ.50 லட்சத்திற்கு மேல் இருப்பவர்களுக்கு உபரி வரியும் விதிக்கப்படுகிறது. இந்தியாவின் ஆண்டு பட்ஜெட் வருவாயில் வரி வருவாய்தான் பெரும் பங்கு வகிக்கிறது. மொத்த வரி வருவாயில் வருமான வரியின் பங்கு 54% ஆகும்.

2020-21-ம் ஆண்டுக்கான மொத்த வரி வருவாயான ரூ.24.2 லட்சம் கோடியில் கம்பெனிகள் செலுத்தும் வருமான வரியாக ரூ.6.80 லட்சம் கோடியாகவும் (28%) மற்ற வருமான வரி ரூ.6.38 லட்சம் கோடியாகவும் (26%) உள்ளது. இவ்வாறு நாட்டின் வரிவருவாயில் அடித்தளமாக இருக்கும் வருமான வரியை ரத்து செய்வது என்கிற பேச்சுத்தான் தற்போது அடிபட்டுவருகிறது. தனி நபர் வருமான வரி மட்டும் ரத்து செய்யப்படலாம் என்ற கருத்தும் நிலவுகிறது.

அரசிற்கு மாற்று வருமானம் என்ன?

நாட்டுக்கு வருவாயை ஈட்டித்தரும் வருமான வரியை ரத்து செய்தால் அதற்கான மாற்று வருமானத்துக்கு என்ன வழிகள் உள்ளன? வருமான வரியை ரத்து செய்யச் சொல்லும் தரப்பினர் சில வழிமுறைகளை முன்வைக்கின்றனர். செலவு வரி அல்லது நுகர்வு வரி அறிமுகப்படுத்தலாம் என்கின்றனர். வருமான வரிக்கு மாற்று ஏற்பாடாக பொதுமக்களின் வங்கிப் பரிவர்த்தனைகள் மற்றும் செலவுகளின் மீது 1% வரி விதிப்பு செய்யலாம் என்கிற உத்தியை தருகின்றனர். இதனால் மத்திய அரசுக்கு ஆண்டுக்கு ரூ.15 லட்சம் கோடியிலிருந்து ரூ.18 லட்சம் கோடி வரை வரி வருவாய் கிடைக்கலாம் என்று கணக்கிடப்படுகிறது. ஆனால் இது அவ்வளவு சுலபமா என்ற கேள்வி எழுகிறது.

பெரும்பான்மையான உலக நாடுகளில் கடந்த 2 ஆண்டுகளாக கரோனா தொற்று காரணமாக, அந்தந்த நாட்டின் ஜிடிபி (மொத்த உள்நாட்டு உற்பத்தி) தொகையில் சுமார் 10%-லிருந்து 20%-ம் வரை ஊக்கத் தொகுப்பாகக் (stimulus) கொடுக்கப்பட்டுள்ளது. இது அமெரிக்கா உட்பட்ட பல நாடுகளில் பணவீக்கத்தை ஏற்படுத்தி அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றத்துக்கு வழிவகுத்துள்ளது. இந்த சூழ்நிலையில் வருமான வரிக்குப் பதிலாக செலவு வரி அறிமுகம் செய்தால் நாட்டின் வரி வருமானம் அதிகரிக்கும் என்கிற பார்வை முன்வைக்கப்படுகிறது.

வரி ரத்தின் சாதகங்கள்

வருமான வரி ரத்து என்கிற அறிவிப்பு வரி செலுத்த வேண்டியது இல்லை என்பது தவிர, வரி இலாகாவிலிருந்து பெறப்படும் நோட்டீஸ், செலுத்திய வரியை ரீஃபண்டாக பெறுவதில் தாமதம், புதிய ஆன்லைன் வரித்தளத்தில் திண்டாட்டங்கள், அப்பீல், முகமற்ற வரி மதிப்பீடு போன்ற சிரமங்களிலிருந்து விடுதலை போன்ற காரணங்களாலும் பெரும் வரவேற்பு கிடைக்கும். இது தவிர, வருமான வரி ரத்து என்கிற சூழலில் கணக்கில் காட்டப்படாத கறுப்புப்பணம் அல்லது கருப்புச் சொத்து என்று வகைமை மறைந்துவிடும். இதனால் வங்கிகள், நிதி அமைப்புகள், பங்கு சந்தைகளில் அதிக அளவு முதலீடுகள் நடக்கும். இது நாட்டின் வளர்ச்சிக்கு உதவும். வருமான வரி இல்லாத நிலையில் நிறுவனங்களின் அசையாச் சொத்துக்கள் சந்தை விலைக்கு கொண்டு வரப்பட்டு பங்கு விலைகள் உயர்ந்து, பங்குதாரர்கள் உடனடிப் பலனைக் காணும் நிலையும் ஏற்படும்.

வருமான வரி ரத்தின் பாதகங்கள்

வருமானவரி விதிப்பு ரத்து செய்யப்படுவது என்பது அனைவருக்கும் சந்தோஷம் அளிக்கக்கூடிய விஷயம்தான்.ஆனால் அது சாத்தியமாவது அவ்வளவுஎளிதல்ல.அதேசமயம், வருமான வரிக்கு மாற்றாக முன்வைக்கப்படும் மாற்று திட்டமான செலவு வரி நடைமுறையில் சில சிக்கல்கள் உள்ளன.

வருமான வரி என்பது வரி வருவாய் மட்டுமல்லாமல் இந்தியாவில் மற்ற தீய நோக்கங்களையும் கட்டுப்படுத்துகிறது. உதாரணமாக தீவிரவாதிகள், தேச விரோத சக்திகள் பணப்பரிமாற்றங்களை கண்காணித்து தேசப்பாதுகாப்பிற்கும் வரித்துறை முக்கிய அங்கம் வகிக்கிறது. பினாமி சட்டம், பணச்சலவை சட்டம், அன்னிய செலாவணி சட்டம் ஆகிய சட்டங்களுக்கு வருமான வரி சட்டம் ஓர் அச்சாணி போல செயல்பட்டு வருகிறது. இதற்கு மாற்றுத்திட்டம் என்னவாக இருக்கும் என்பதை கவனிப்பது அவசியம். மேலும் தற்போது விவசாயிகளுக்கு வருமான வரி கிடையாது. ஆனால் செலவு வரி என்று கணக்கிட்டால் நாட்டின் முதுகெலும்பான விவசாயத்தைக் காக்கும் விவசாயிகளும் செலவு வரி செலுத்த வேண்டி வரலாம்.

தற்போது குறிப்பிட்ட பிரிவின் கீழ் பதிவு பெற்ற அறக்கட்டளைகளுக்கு வருமான வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அறக்கட்டளைகளும் செலவு வரி செலுத்த வேண்டி வரும். ஏற்றுமதி நிறுவனங்களுக்கும் செலவு வரி காரணமாக பாதிப்பு இருக்கும். இது தவிர நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்களுக்கும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கும், அவற்றின் செலவுகளுக்கு வரிச்சுமை ஏற்படலாம். மேலும் வருமான வரிச் சட்டப்படி, குறிப்பிட்டஅளவுக்கு மேல் ரொக்கமாக செலவு செய்யவோ, கடனாக தரவோ பெறவோ அனுமதிக்கப்படுதில்லை. எனில் வருமான வரி ரத்து செய்யப்பட்டால் வங்கி வாயிலாக மேற்கொள்ளப்படும் பணப்பரிவர்த்தனை தொடர்பாக குழப்பம் ஏற்படும்.

இந்தியா போன்ற நாடுகளில் வருமான வரியை ரத்து செய்வது என்பது எளிதான செயல் அல்ல. அப்படி ஒரு அறிவிப்பு ஒன்று இருக்குமானால் அது பட்ஜெட் அறிவிப்பாக இருக்காது. பண மதிப்பு நீக்கம் போன்று பிரதமரின் சிறப்பு அறிவிப்பாகத்தான் இருக்கும். சமீப ஆண்டுகளில் பல்வேறு அதிரடி பொருளாதார சீர்திருத்தங்களை செய்து வரும் மத்திய அரசு வருமான வரி குறித்து வரும் நாட்களில் என்ன செய்யப்போகிறது என்பதைப் பார்ப்போம்!

தொடர்புக்கு: karthi@gkmtax.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x