Published : 23 Jan 2022 01:48 PM
Last Updated : 23 Jan 2022 01:48 PM

பெண்களைச் சுற்றி... - துணிவு: உரிமைக்கான போராட்டம்

கர்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ள பள்ளி ஒன்றில் தங்களை வகுப்பறைக்குள் அனுமதிக்குமாறு ஆறு மாணவிகள் கடந்த ஒரு மாதமாகப் போராடிவருகிறார்கள். ஹிஜாப் எனப்படும் முகத்தை மூடும் துணியை வகுப்பறைக்குள் அணிந்துவரக் கூடாது என்று பள்ளி நிர்வாகம் சொன்னதை யடுத்து, ‘ஹிஜாப் அணிவது எங்கள் உரிமை’ என்று சொல்லி இந்த மாணவிகள் வகுப்பறைக்கு வெளியே போராடிவருகிறார்கள். இந்த மாணவிகள் இப்படிச் செய்வது பள்ளியின் சீருடைத்தன்மையைக் குலைக்கும் என்று பள்ளி தரப்பில் சொல்லப்படுகிறது. மேலும், 37 ஆண்டுகாலப் பள்ளி வரலாற்றில் யாரும் வகுப்பறைக்குள் ஹிஜாப் அணிந்திருக்கவில்லை என்றும் சொல்லப்படுகிறது. “எங்கள் சீனியர் மாணவிகள் வகுப்பறைக்குள் ஹிஜாப் அணிந்திருப்பதை நாங்களே பார்த்திருக் கிறோம்” என்று ஊடகங்களில் அந்தப் பெண்கள் சொல்லியுள்ளனர்.

வகுப்பறைக்குள் ஹிஜாப் அணிந்து வருவது மத அடையாளத்தை வெளிப்படுத்துவதாக அமையும் என்கிற பள்ளி நிர்வாகத்தின் கருத்துக்கும் மாணவிகள் பதில் சொல்லியுள்ளனர். “எங்கள் பள்ளியில் இந்து மத விழாக்கள் கொண்டாடப்பட்டுள்ளன. அப்போது மாணவிகள் நெற்றியில் பொட்டு வைத்துக்கொண்டு வருவார்கள். அது மத அடையாளம் இல்லையா? அதை அனுமதிக்கும்போது நாங்கள் ஹிஜாப் அணிய மட்டும் ஏன் எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும்?” என்று மாணவிகள் கேட்கிறார்கள். 70 மாணவிகள் படிக்கும் பள்ளியில் இவர்கள் மட்டும் இப்படி அடம் பிடிப்பது சரியல்ல என்று பள்ளி நிர்வாகம் குற்றம்சாட்டுகிறது. ஆனால், மாணவிகளோ, ‘அவர்களுக்கு விருப்பமில்லை. அதனால், ஹிஜாப் அணியவில்லை. ஹிஜாப் அணிவதும் மறுப்பதும் அவரவர் தனிப்பட்ட உரிமை’ என்று மாணவிகள் சொல்ல அவர்களுக்கு ஆதரவாகவும் எதிராகவும் சமூக வலைத் தளங்களில் கருத்துகள் பதிவிடப்பட்டன.

மாணவிகள் ஹிஜாப் அணியத் தடைவிதிக்கும் பள்ளியின் செயலைக் கண்டித்து #hijabisourright என்கிற ஹேஷ்டேக் சமூக வலைத்தளத்தில் வைரலானது. “மாணவிகள் பள்ளிக்கு ஹிஜாப் அணிந்து வரலாம்; ஆனால், வகுப்பு தொடங்கியதும் அதை அகற்றிவிட வேண்டும். இது குறித்து நாங்கள் ஏற்கெனவே மாணவியரின் பெற்றோரிடம் ஆலோசித்துவிட்டுத்தான் இந்த நடைமுறையைச் செயல்படுத்திவருகிறோம்” என்று சம்பந்தப்பட்ட பள்ளியின் முதல்வர் ருத்ர கவுடா தெரிவித்துள்ளார். பள்ளியின் மேம்பாட்டுக் குழுத் தலைவரும் பாஜக சட்டமன்ற உறுப்பினருமான ரகுபதி பட், “வெளி அமைப்புகளின் தூண்டுதலால் ஆறு மாணவிகள் மட்டும்தான் இப்படிச் செய்கிறார்கள். ஹிஜாப் என்பது பள்ளிச் சீருடை அல்ல. அதனால், அதற்கு அனுமதியில்லை” என்று கூறியுள்ளார். மாணவிகளோ, “நாங்கள் எங்கள் அடிப்படை உரிமைக்காகத்தான் போராடுகிறோம். ஆனால், பள்ளி நிர்வாகம் எங்களது செயல்பாட்டைத் தவறாகச் சித்தரிக்க முயல்கிறது. நாங்கள் 20 நாட்களாகப் பள்ளிக்கு வந்தும் வகுப்பறைக்குள் அனுமதிக்கப்படவில்லை” என்கிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x