Published : 22 Jan 2022 10:41 AM
Last Updated : 22 Jan 2022 10:41 AM

ஒமைக்ரானுக்கு எதிராகக் கைகொடுக்கும் கபசுரக் குடிநீர்

லோ. கார்த்திக்

உலகம் முழுவதும் இரண்டு ஆண்டு களாக கரோனா வைரஸ் பிடியில் சிக்கியுள்ளது. 2021இல் டெல்டா, டெல்டா பிளஸ் அலையால் பல லட்சம் மக்கள் உயிரிழந்தனர். இப்போது ஒமைக்ரான் வைரஸ் உலகத்தின் பல நாடுகளில் வீரியமாகப் பரவிவருகிறது. ஒமைக்ரான் பரவினால் இந்தியாவில் தினசரி 15 லட்சம் பேர் பாதிக்கப் படுவார்கள் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

கோவிட்-19 இன் புதிய வேற்றுருவம் ஒமைக்ரான், ஒரே மாதத்தில் உலகம் முழுவதும் தனது ஆதிக்கத்தைச் செலுத்தத் தொடங்கிவிட்டது. மிகவும் துரிதமாகப் பரவக்கூடிய ஒமைக்ரான் வேற்றுருவம் (Omicron Variant), குறைந்து வந்த கரோனா பாதிப்பைத் திடீரென அதிகரித்துள்ளது. கோவிட் நோயின் அடுத்த அலை பூதாகரமாக வந்துவிட்டதோ என்கிற கவலை உலகெங்கிலும் வியாபித்துள்ளது.

ஒமைக்ரான் அறிகுறிகள் வழக்கமான கரோனா வைரஸ் அறிகுறிகளிலிருந்து வேறுபட்டவை என்பதை மருத்துவர்கள் கவனித்துள்ளனர். அமெரிக்கன் நோய்த் தடுப்பு -கட்டுப்பாட்டு மையம் (Center for Disease Control and Prevention) அமைப்பின் கணிப்புகளின்படி, ஒமைக்ரான் உள்ளவர்கள், முதன்மையான மூன்று அறிகுறிகளுடன் கூடுதலாகப் பலவிதமான அறிகுறிகளையும் அனுபவிக்கின்றனர்.

இந்தியாவில் சித்த மருத்துவம் பல வைரஸ் நோய்களுக்கு அருமருந்தாகத் திகழ்கிறது. நிலவேம்புக் குடிநீர், கபசுரக் குடிநீர் போன்றவை கரோனா காலத்தில் பலருக்கும் கைகொடுத்தன. ஒமைக்ரான் பரவல் அச்சம் எழுந்துள்ள இந்த நேரத்தில் கபசுரக் குடிநீர் பயன்படுத்துவது தொடர்பாக ஆராய்ச்சிகள் நடைபெற்றுவருகின்றன.

தலைகீழ் மருந்தியல் முறை

கோவிட் தொற்றுக்கான ஆய்வுகளை பிப்ரவரி 2020இல் நாங்கள் தொடங்கினோம். முதலில் வெவ்வேறு பாரம்பரிய மருந்துகள் சார்ந்து பணிபுரிந்தோம். மார்ச் 2020 முதல் சித்தா ஆராய்ச்சிக்கான மத்திய கவுன்சில் இயக்குநர் கே. கனகவள்ளி அறிவுறுத்த லின்படி ஒரு குழுவை உருவாக்கினோம். அனுராங் பல்கலைக்கழக முனைவர் கிரண், லவ்லி புரொபெஷ்னல் பல்கலைக்கழக முனைவர் ஏ.விஷ்ணுகீர்த்தி, சித்தா ஆராய்ச்சிக்கான மத்திய கவுன்சில் முனைவர் எம்.எஸ். ஸ்ரீதேவி, உதவி இயக்குநர் டாக்டர். சத்யராஜேஸ்வரன், சேலம் மைக்ரோப்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனர் முனைவர் டி.ரமேஷ் குமார் ஆகியோரின் ஆதரவுடன் இந்த ஆராய்ச்சி நடைபெற்றது.

இந்தத் தொற்றுநோய் இன்னும் தொடர்வதால் புதிய தடுப்பு, சிகிச்சை முறைகளைக் கூடிய விரைவில் கண்டுபிடிக்க வேண்டிய அவசரத் தேவை உள்ளது என்கிறது உலக சுகாதார நிறுவனம். கோவிட்-19 நோய் மீது புதிய தலையீடு உருவாக இன்னும் பல ஆண்டுகள் தேவைப்படும்.தொற்றுநோய் சூழ்நிலையின் அடிப்படையில், வைரஸ் தொற்றுகளுக்குச் சிகிச்சையளிப்பதற்காகத் தற்போதுள்ள சாத்தியமான மருந்துகளில் நாங்கள் கவனம் செலுத்து கிறோம். காய்ச்சல், டெங்கு, சிக்குன்குனியா, காசநோய் போன்ற பரவலான நோய்க் காரணிகளுக்கு எதிராகச் செயல்படக்கூடிய தாக மருத்துவ முக்கியத்துவம் வாய்ந்த சித்த மூலிகைக் கலவைகள் நிரூபிக்கப்பட்டுள்ளன (2018).

பாரம்பரிய, நிரப்பு மருந்துகள் பழங் காலத்திலிருந்தே தொற்றுநோய்களுக்கான தீர்வைத் தருகின்றன. ஹெபாடைடிஸ்ஏ, ஹெபாடைடிஸ் பி, எச்.ஐ.வி., டெங்கு, சிக்குன்குனியா ஆகியவற்றால் ஏற்படும் நோய்த்தொற்றுகளுக்குச் சிகிச்சை அளிப்பதில் சித்த மருத்துவ முறை, தடயங்களைக் கொண்டுள்ளது.இந்தத் தொற்றுநோய்களின்போது பயன்படுத்தப்படும் சித்த மருந்துகளின் செயல்திறனை நிரூபிக்கத் தலைகீழ் மருந்தியல் முறை பயன்படுத்தப்படுகிறது. அதாவது, ஆதாரங்களை வழங்குவதற்கான முந்தைய மருத்துவ ஆய்வுகள். இந்த வகையில் சமீபத்திய உதாரணம் இன்விட்ரோ ஆய்வுகள் மூலம் நிலவேம்புக் குடிநீர் டெங்கு வைரஸைத் தடுப்பது கண்டறியப்பட்டது.

கபசுரக் குடிநீரின் செயல்திறன்

கணினியை வைத்துச் செய்யப்படும் மருந்து ஆராய்ச்சி முறையாகிய இன்-சிலிகோ முறை மூலம் கோவிட்-19க்கு எதிராகக் கபசுரக் குடிநீரின் செயல்திறனை எங்கள் குழு முதல் கட்ட ஆய்வில் நிரூபித்துள்ளது. கபசுரக் குடிநீர் சூரணத்தின் கிரிசோரியோல், லுடோலின் ஆகியவை நாவல் கரோனா வைரஸ் ஏ.சி.இ. 2 கூர்ப்புரதத்தைத் தடுக்கின்றன. வாய்வழி உயிர் கிடைக்கும் தன்மையை அதிகரிக்கிறது, குறைந்த நச்சுத்தன்மையை மட்டுமே உருவாக்குகிறது என்று கூறப்படுகிறது. இந்த ஆராய்ச்சிக் கட்டுரை ஆயுர்வேத மற்றும் ஒருங்கிணைந்த மருத்துவ இதழில் வெளியானது.

ஃபரிதாபாத்தில் உள்ள உயிரித் தொழில் நுட்பத்திற்கான பிராந்திய மையத்திற்கு, கபசுரக் குடிநீரின் இன்விட்ரோ வைரஸ் தடுப்புச் செயல்பாட்டைச் சரிபார்க்க அனுப்பினோம். நாவல் கரோனா வைரஸுக்கு எதிரான கபசுரக் குடிநீரின் வைரஸ் தடுப்புச் செயல்பாடு வெரோ இ6 கலங்களிலும், ஆர்.டி.பி.சி.ஆர். மதிப்பீட்டின் மூலமும் மதிப்பிடப்பட்டது. 24 மணி நேரத்தில், கபசுரக் குடிநீர் முறையே இ, என் வைரஸ் ஆர்என்ஏவில் 76.71%, 80.44% குறைப்பைக் காட்டியது. இந்தத் தரவுகள் மூலம் வைரஸின் எதிரான சிகிச்சையில் கபசுரக் குடிநீர் பயன்படுவது முதல் கட்ட ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் எங்கள் குழு டெல்டா, ஒமைக்ரான் வகை நாவல் கரோனா வைரஸ் கூர்ப்புரதத்தையும் கபசுரக் குடிநீர் தடுக்கிறது என்பதை இன்சிலிகோ எனப்படும் முதல்கட்ட முறை மூலம் கண்டறிந்துள்ளோம். இந்த முடிவுகளை ஆயுஷ் அமைச்சகம், இந்திய அரசு மருத்துவம் - ஹோமியோபதி இயக்குநகரத்துடன் இணைந்து இந்தியாவின் சித்தா ஆராய்ச்சிக்கான மத்திய கவுன்சில், தேசிய சித்தா நிறுவனம் நடத்திய தொற்று நோய்களுக்கான சித்த மருத்துவத்தின் வலிமை பற்றிய தேசிய மாநாட்டில் முன்வைத்தோம். இந்த ஆய்வுத்தொகுப்பை, மத்திய ஆயுஷ் அமைச்சர் சர்வானந்த சோனேவால் சித்த மருத்துவ தினத்தன்று வெளியிட்டார்.

நாவல் கரோனா வைரஸில் நாளுக்கு நாள் புது வேற்றுருவம் வந்துகொண்டிருக்கிறது.ஒற்றை மாத்திரையைக் கொண்டு சிகிச்சையளிக்கும் மோனோ தெரபி மட்டும் இதற்குப் பலன் தராது. கபசுரக் குடிநீர் போன்ற கூட்டு மூலிகை சிகிச்சை இந்தச் சிக்கலைத் தீர்ப்பதில் கைகொடுக்கும் என்பதை முதல் கட்ட ஆய்வுகள் சொல்லத் தொடங்கியுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x