

ஏற்றத்தாழ்வுகளை களைந்து நிலையான வளர்ச்சி இலக்குகளை எட்டும் வகையில் இந்திய சட்ட மேதை டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் 125-வது பிறந்தநாளை கொண்டாட முடிவு செய்துள்ளது ஐக்கிய நாடுகள் சபை. இதை ஏப்ரல் 10-ல் அறிவித்தது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் அம்பேத்கரின் பிறந்த நாளுக்கு முந்தைய தினம் 13-ல் இவ்விழா நடத்தப்பட்டது. கல்பனா சரோஜ் அறக்கட்டளையுடன் இணைந்து ஐ.நா இந்த விழாவை நடத்தியது.
வெப்பப் பதிவில் புதிய உச்சம்
இந்த ஆண்டு கோடையில் இதுவரையிலான கால கட்டத்தில் ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் மிக அதிகபட்சமாக 45.8 டிகிரி வெப்ப நிலை ஏப்ரல் 11 அன்று பதிவானது. வெப்ப அலையின் காரணமாக இந்த அளவுக்கு வெயில் அதிகரித்ததாக இந்திய வானிலை மையம் தெரிவித்தது. புவனேஸ்வரில் 30 ஆண்டுகால வரலாற்றில் இப்போதுதான் அதிகளவு வெயில் பதிவாகியுள்ளது.
காலை 11.30 மணியளவில் 44 டிகிரி செல்சியஸைத் தொட்ட வெப்ப நிலை, கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து மதியம் 2 மணியளவில் 45.8 டிகிரி செல்சியஸ் அளவுக்கு அதிகரித்து உக்கிரத்தைக் காட்டியது. புவனேஸ்வரில் இயல்பான வெப்ப நிலையைக் காட்டிலும் இது 7-8 டிகிரி கூடுதலாகும். வெயிலின் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இதேபோல, தமிழகத்தில் 15, 16 ஆகிய தேதிகளில் 41 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பநிலை அதிகரிக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. நாமும் கொளுத்தும் வெயிலில் வாடினோம்.
செல்வமகளுக்கு வயது வரம்பு அதிகரிப்பு
செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் இனி, 15 வயது வரையிலான சிறுமிகளுக்கு கணக்கு தொடங்கலாம் என்று ஏப்ரல் 12-ல் அஞ்சல் துறை அறிவித்தது. இதற்கு முன்புவரை பிறந்த குழந்தை முதல் 14 வயதான சிறுமிகள்வரை இணையலாம் என்ற நிலைதான் இருந்தது. இந்தத் திட்டத்தை நோக்கி அதிகப்படியான கணக்குகளை ஈர்க்கும் நோக்கில் மத்திய அரசு பல்வேறு திருத்தங்களை மேற்கொண்டுள்ளது. அதன்படி வயது வரம்பு நீட்டிக்கப்பட்டிருக்கிறது. மேலும், அபராதக் கட்டணம், பணம் செலுத்தாமை போன்ற பிரச்சினைகளால் வரும் விளைவுகளை தடுக்க ஆண்டு தோறும் ரூ.1000 வசூல் செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இத்திட்டத்தின் கீழ் 12 லட்சத்து 38 ஆயிரம் கணக்குகள் உள்ளன. சென்னை நகர மண்டல அஞ்சல் வட்டத்தில் 4 லட்சத்து 38 ஆயிரம் கணக்குகள் உள்ளன.
வருகிறது டி.பி.எல்.
தமிழ்நாடு அளவிலான டி 20 போட்டியை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிமுகப்படுத்த உள்ளது. தமிழ்நாடு பிரிமீயர் லீக் என்று ஐ.பி.எல் பாணியில் இந்த தொடருக்குப் பெயரிடப்பட்டுள்ளது. இதனை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் ஏப்ரல் 10 அன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. ஆகஸ்ட் கடைசி வாரத்தில் தொடங்கி செப்டம்பர் இரண்டாவது வாரம் வரை இந்தத் தொடரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்க உள்ளன. தமிழ்நாடு லீக் போட்டிகளில் கலந்துகொண்டுள்ள தமிழ்நாடு மற்றும் இதர மாநில வீரர்கள் மட்டுமே இந்தப் போட்டியில் பங்கேற்க முடியும். இந்த ஆண்டு சென்னையில் மட்டும் இந்தத் தொடரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு திண்டுகல்லில் போட்டிகளை நடத்தவும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.
பாலின பாகுபாட்டுக்கு எதிர்ப்பு
சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்களுக்கு அனுமதி மறுப்பது போன்ற விவகாரங்களில், பாலின பாகுபாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது என உச்ச நீதிமன்றம் ஏப்ரல் 13-ல் கருத்து தெரிவித்தது. சபரிமலையில் பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என தொடரப்பட்ட வழக்கில் நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு இக்கருத்தைத் தெரிவித்தது. “அரசியலமைப்பு கோட்பாடுகளின் கீழ்தான் முடிவெடுக்க முடியும். மரபாக பின்பற்றப்படும் நடைமுறைகளைப் பொறுத்து முடிவெடுக்க முடியாது.
எந்த ஒரு தடையும் அரசியல் சட்டம் சார்ந்து இருக்க வேண்டும். பொது இடத்துக்குள், கோயிலுக்குள் நுழைவதற்கு பெண்களுக்கு அனுமதி மறுப்பவர்கள் எந்த உரிமையின் கீழ் அதனைச் சொல்கிறார்கள். அரசியல் சட்டத்தில் இதுபோன்ற தடை அனுமதிக்கப்பட்டுள்ளதா? சிலை வடிவில் உள்ள தெய்வத்தை யார் வேண்டுமானாலும் வழிபடலாம். கோயிலுக்குள் நுழைவதற்கு பெண்களைத் தடை செய்ய முடியாது” எனக் கருத்து தெரிவித்தனர்.