Last Updated : 16 Apr, 2016 12:38 PM

 

Published : 16 Apr 2016 12:38 PM
Last Updated : 16 Apr 2016 12:38 PM

சுவர் ஓவியம் 4 - வார்லி ஓவியங்கள்: பழங்குடியினரின் கொடை

இந்தியாவின் பிரசித்து பெற்ற பழங்குடி ஓவியங்களுள் ஒன்று வார்லி. இது மராட்டிய மாநிலத்தின் தலைநகரான மும்பையின் வடக்குப் புறநகர்ப் பகுதிகளில் வாழும் வார்லி பழங்குடிகள் உருவாக்கிய ஓவியக்கலை. இன்று இந்த ஓவியக் கலை மராட்டிய மாநிலம் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் பரவியிருக்கிறது. தொடக்கத்தில் குகையில் தீட்டப்பட்டு வந்த இந்த ஓவியக் கலை வீட்டுச் சுவர், துணி என வளர்ந்திருக்கிறது.

வார்லி ஓவியக் கலை இரண்டாயிரம் வருஷத்துக்கு மேற்பட்ட தொன்மையுடையது. மனிதன் குகைகளை வசிப்பிடமாகக் கொண்டிருந்த காலகட்டத்தில் தங்கள் அன்றாட நிகழ்வுகளை, சடங்குகளை அறிவிக்கும் வகையில் வரையப்பட்ட ஓவியங்களே வார்லி ஓவியங்கள். இந்த ஓவியக் கலைக்கும் மத்தியப் பிரதேசத்தின் பீம்பெத்கா பகுதில் காணப்படும் குகை ஓவியங்களுக்கும் தொடர்பு உள்ளது. இந்த இரு பகுதிகளில் ஓவியக் கலையும் ஒரே காலகட்டத்தைச் சேர்ந்தவையாக இருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது.

வார்லி ஓவியக் கலை இரண்டாயிரம் வருஷத்துக்கு முந்தைய காலகட்டத்தைச் சேர்ந்தவையாகச் சொல்லப்பட்டாலும் இந்த ஓவியக் கலை மிகச் சமீபத்தில்தான் பரவலான கவனத்துக்கு வந்தது. கி.பி. 10-ம் நூற்றாண்டில் இந்த ஓவியக் கலை ஆய்வாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டது. வார்லி பழங்குடிகளின் வீட்டுச் சுவர்கள் மூலம் இந்தக் கலை புற உலகின் கவனத்துக்கு வந்தது.

வார்லி பழங்குடியினர் தங்கள் வீட்டுச் சுவர் கட்டுமானத்துக்கு மண்ணைக் குழைத்துப் பயன்படுத்துகிறார்கள். இந்தச் சுவரில் காவி வண்ணம் பூசுகிறார்கள். இந்தக் காவி பின்புலத்தில்தான் ஓவியங்கள் வரையப்படுகின்றன. காவிப் பின்புலத்தில் தெளிவாகத் தெரிவதற்காக வெள்ளை நிறத்தைப் பயன்படுத்துகிறார்கள்.

வெள்ளை நிறத்துக்கு அரிசி மாவைத் தண்ணீரில் குழைத்துப் பயன்படுத்துகிறார்கள். இதேபோல்தான் இங்கு தமிழ்ப் பண்பாட்டிலும் கோலமிடுவதற்கு அரிசி மாவைப் பயன்படுத்தும் வழக்கம் இருந்துவந்தது.

இன்று வர்த்தக ரீதியிலான அந்தஸ்து கிட்டியிருக்கும் இந்த ஓவியங்கள் தொடக்கக் காலத்தில் வார்லி பழங்குடியினர் தங்களுக்காக மட்டும் வரைந்தவை. இந்த ஓவியக் கலைக்கும் இந்தியாவின் பிற வட்டார ஓவியக் கலைக்கும் மிகப் பெரிய வித்தியாசம் என்னவென்றால் இந்த வார்லி ஓவியக் கலையில் தெய்வ உருவங்கள் உருவாக்கப்படுவதில்லை; மேலும் இந்து மதச் சடங்குகளோ வழிபாடுகளோ இல்லை.

அவர்களின் அன்றாடப் பாடுகளின் பல நிலைகளை ஓவியமாக அம்மக்கள் தீட்டியிருக்கிறார்கள். அவர்களது திருமணத்தை ஒட்டி ஓவியங்கள் வரையும் பழக்கம் இருந்திருக்கிறது. ஆனால் அவை சடங்குகள் குறித்தானதாக அல்லாமல் பொதுவானவையாக இருந்திருக்கின்றன. ஆனால் மணமக்கள் குதிரையில் பயணிக்கும் ஒரு ஓவியத்தைக் காண முடிகிறது.

இந்த ஓவியக் கலையும் மற்ற பழங்குடி ஓவியக் கலையைப் போல பெண்களால் வரையப்படுபவையே. அதனால் பெண்களின் அன்றாடப் பாடுகள் அதிகமாக வரையப்பட்டுள்ளன. பெண்கள் அடுப்பூதுதல், குழந்தைகளைக் குளிப்பாட்டுதல் போன்ற ஓவியங்களைக் காண முடிகிறது.

வார்லி ஓவியக் கலை இன்றைக்கு சுவர் ஓவியமாக மட்டுமின்றி ஆடை வடிவமைப்பாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சேலை, சுடிதார் வார்லி ஓவியத்தை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டு வருகின்றன. மட்டுமல்லாமல் திரைச் சீலைகள், படுக்கை விரிப்புகள் போன்றவையும் வார்லி ஓவியத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படுகின்றன.

வார்லி ஓவியத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படும் ஆடைகளுக்கும், விரிப்புகளுக்கும் சந்தையில் நல்ல வரவேற்பு கிடைக்கிறது. இது மட்டுமல்லாது ஓவியங்களாகவும் இவை இப்போது கிடைக்கின்றன. மேலும் வீட்டின் உள் அழங்கார வடிவமைப்பில் இந்த வார்லி ஓவியங்கள் முக்கியப் பங்கு வகுக்கின்றன. வார்லி பழங்குடியினரின் கொடையான இந்தக் கலை இன்று இந்தியா முழுவதும் வரையப்படும் கலையாக இருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x