Published : 26 Apr 2016 12:58 PM
Last Updated : 26 Apr 2016 12:58 PM

வேலை வேண்டுமா?- ஏர்போர்ட் அதிகாரியாக ஆசையா?

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான இந்திய விமானப் போக்குவரத்து ஆணையம் இளநிலை அதிகாரி (Junior Executive) பணியில் 220 காலியிடங்களைப் போட்டித் தேர்வு மூலம் நிரப்ப இருக்கிறது. விமானப் போக்குவரத்து ஆணையமானது உயரிய அந்தஸ்து பெற்ற பொதுத்துறை நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.

சிவில், எலெக்ட்ரிக்கல், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, விமான இயக்கம் ஆகிய 4 பிரிவுகளில் இந்த இளநிலை அதிகாரி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்ட பாடப்பிரிவில் பிஇ அல்லது பிடெக் பட்டம் பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விமான இயக்கப் பிரிவு இளநிலை அதிகாரி பணிக்குப் பிஎஸ்சி பட்டத்துடன் எம்பிஏ பட்டம் பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண் அவசியம்.

கை நிறைய சம்பளம்

இளநிலை அதிகாரி பணிக்கு வயது வரம்பு 27 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனினும், மத்திய அரசின் இடஒதுக்கீட்டு விதிமுறைகளின்படி எஸ்சி, எஸ்டி வகுப்பினருக்கு 5 ஆண்டுகளும், அதேபோல், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (ஓபிசி) 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு. தகுதியான நபர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் பணிக்குத் தேர்வுசெய்யப்படுவார்கள்.

இளநிலை அதிகாரி பணிக்கு மாதச் சம்பளம் ரூ.57 ஆயிரத்துக்கு மேல் கிடைக்கும். உரிய கல்வித் தகுதியும், இதர தகுதிகளும் உடைய பொறியியல் பட்டதாரிகளும், எம்பிஏ பட்டதாரிகளும் மே 17-ம் தேதிக்குள் ஆன்லைனில் ( >www.aai.aero) விண்ணப்பிக்க வேண்டும். தேர்வுக் கட்டணத்தை மே 20-ம் தேதிக்குள் செலுத்த வேண்டும். ஆன்லைன் விண்ணப்ப முறை, தகுதிகள், பாடத்திட்டம் உள்ளிட்ட விவரங்களை இந்திய விமானப் போக்குவரத்து ஆணையத்தின் இணையதளத்தில் விரிவாகத் தெரிந்துகொள்ளலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x