Last Updated : 16 Jan, 2022 11:48 AM

Published : 16 Jan 2022 11:48 AM
Last Updated : 16 Jan 2022 11:48 AM

முகங்கள்: பள்ளி மாணவியின் சூழலியல் ஆய்வு

வீட்டிலிருந்து பேருந்தில் பள்ளிக்குச் செல்லும்போதும் பள்ளியில் இருந்து வீடு திரும்பும்போதும் 17 வயது பள்ளி மாணவி என்னவெல்லாம் செய்யக்கூடும்? நண்பர்களுடன் பேசியபடி செல்லலாம், ஏதாவது படிக்கலாம் அல்லது வேடிக்கை பார்க்கலாம். கோவையைச் சேர்ந்த சாந்தலா தேவியும் பள்ளிக்குச் செல்லும் வழியில் தான் பயணம் செய்யும் பேருந்தின் ஜன்னலுக்கு வெளியே விரியும் காட்சிகளை வேடிக்கை பார்த்தபடிதான் சென்றார். ஆனால், அது வெறும் வேடிக்கையோடு மட்டும் நின்றுவிடவில்லை. அதுஅவரைச் சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த ஆய்வு நூலை எழுத வைத்துள்ளது.

சாந்தலா சிறு வயது முதலே இயற்கை மீது ஆர்வமும் ஈடுபாடும் கொண்டிருந்தார். இந்தியாவின் சிறந்த பறவையியல் நிபுணர் சாலிம் அலி எழுதிய, ‘பேர்ட்ஸ் ஆஃப் இந்தியா’ புத்தகத்தை யு.கே.ஜி. படித்தபோது சாந்தலா பார்த்தார். அதிலிருந்த பறவைகளின் படங்கள் நான்கு வயதுச் சிறுமியின் ஆர்வத்தைத் தூண்ட, வீட்டுக்கு வெளியே சிறகடிக்கும் பறவைகளைப் பார்ப்பதில் நேரத்தைச் செலவிட்டார்.

பறவைகளுடன் பயணம்

நான்காம் வகுப்பு வரை பள்ளிக்குச் சென்றவர், ஐந்தாம் வகுப்பு முதல் வீட்டிலிருந்தபடியே படித்தார். அந்த நாட்களில்தான் பறவைகளோடு அதிக நெருக்கமானார் சாந்தலா. பறவைகள் குறித்துப் படித்துத் தெரிந்துகொண்டவர், அவற்றை அடையாளம் காண ஆரம்பித் ததும் அப்போதுதான். பிறகு அவற்றைப் படமெடுத்து ஆவணப்படுத்தும் ஆர்வமும் ஏற்பட்டது.

பறவைகளைப் பார்த்தபோது அவை வாழும் சூழலும் அவர் கண்களை நிறைத்தது. தன்னைச் சுற்றியுள்ள தாவரங்கள் சிலவற்றை, ‘தாவரங்கள் அறிவோம்’ என்கிற தலைப்பில் தன் யூடியூப் அலைவரிசையில் (TUNO) வெளியிட்டார். இதுவரை 200 வகையான தாவரங்களை ஆவணப்படுத்தியிருக்கும் சாந்தலா, அவற்றைப் புத்தகமாக வெளியிடும் திட்டத்தில் இருக்கிறார். வீட்டிலிருந்தபடியே படித்த சாந்தலாவை ஒன்பதாம் வகுப்பிலிருந்து பள்ளியில் சேர்த்தனர் அவருடைய பெற்றோர்.

எதிர்பாராத விபத்து

ஆனைக்கட்டியில் உள்ள வித்யா வனம் பள்ளியில் படித்த சாந்தலாவுக்குப் பள்ளிக்குச் செல்லும் வழியில் இருக்கும் தடாகம் பள்ளத்தாக்கைப் பார்க்க பார்க்கச் சலிக்காது. அப்போது சாந்தலாவுக்கு 15 வயது. வழக்கமாகப் பள்ளியிலிருந்து பேருந்தில் வீடு திரும்பும் மகளை அழைத்து வர அன்று இருசக்கர வாகனத்தில் சென்றார் சாந்தலாவின் அம்மா ஷோபனா. அம்மாவைப் பார்த்ததும் ஆச்சரியத்துடன் ஓடிவந்த சிறுமிக்கு 2019 ஜூன் மாதத்தின் அந்த மாலை அவ்வளவு துயரமாக மாறும் என்று தெரியாது. அம்மா, மகள் இருவரும் இருசக்கர வாகனத்தில் பேசி சிரித்தபடி வீடு திரும்ப, எதிர்பாராத கணத்தில் நிகழ்ந்தது அந்த விபத்து. எதிரே வந்த இருசக்கர வாகனம் இவர்கள் வாகனத்தின் மீது மோத, சாந்தலா நினைவிழந்தார். காலில் மிக மோசமான எலும்பு முறிவுடன் கண்களைக்கூடத் திறக்க முடியாமல் கிடந்தவரது காதுகளில், விபத்தில் தன் அம்மா இறந்துவிட்ட செய்தி விழுந்தது. அது உண்மை என்று நம்பவே ஏழு மாதங்களானது அவருக்கு.

சாந்தலாவின் அம்மா மரணத்துக்குக் காரணமான அந்தக் கோர விபத்தை எளிதில் மறந்துவிட முடியாது. விபத்து நடந்த இடத்துக்கு அருகில்தான் டாஸ்மாக் கடை இருந்தது. அந்தப் பகுதியில் அடிக்கடி விபத்து நடப்பதால் டாஸ்மாக் கடையை மூடும்படி ஏற்கெனவே பலர் வலியுறுத்திவந்த நிலையில்தான் அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் மோதியதில் ஷோபனா உயிரிழந்தார். சாந்தலாவின் தந்தை மருத்துவர் ரமேஷ், மனைவியை இழந்து, மகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த துயரத்துக்கு நடுவிலும் விபத்துக்குக் காரணமான டாஸ்மாக்கை மூடச் சொல்லி தன் மனைவியின் சடலத்துடன் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினார்.

ஓடைகளில் தடைபடும் நீர்வரத்து

நீண்ட, நெடிய சிகிச்சை சாந்தலாவின் புறத்தோற்றத்தில் பாதிப்பை ஏற்படுத்திய போதும், அகத்துக்கு உரமளித்திருந்தது. விபத்திலிருந்து மீண்டவர், தாயின் இழப்பிலிருந்தும் மீண்டு, சுற்றுச்சூழல் குறித்த தேடலில் இறங்கினார்.

2021 அக்டோபர், நவம்பர் மாதங்களில் போதும் போதும் என்கிற அளவுக்குத் தமிழகத்தில் கொட்டித் தீர்த்தது மழை. நொய்யல் ஆற்றுடன் கலக்கும் 25 சிற்றோடைகளில் 23 சிற்றோடைகள் முழுவதும் நிரம்பிவிட்டதாகத் தமிழக நீர்வளத் துறை சார்பாக அறிவிக்கப்பட்டது. தான் சிறுமியாக இருந்தபோது மழைப் பெருக்குக் காலத்தில் ஓடைகளில் சலசலத்து ஓடும் நீரின் சத்தத்ததைக் கேட்ட சாந்தலாவுக்கு இப்போது மட்டும் சிற்றோடைகளில் இருந்து தடுப்பணைக்கு ஏன் நீர்வரத்து இல்லை என்கிற கேள்வி எழுந்தது. அதற்குப் பதில் தேடும்விதமாக ஓடைகளைப் பற்றிக் கள ஆய்வு மேற்கொண்டார்.

முதல் வேலையாகத் தடாகம் பள்ளத்தாக்கில் உள்ள ஓடைகளைக் கண்டறிந்து அவற்றை ‘மேப்பிங்’ செய்தார். மழை நின்ற பிறகு சில ஓடைகளுக்குச் சென்று அவற்றின் பாதையைக் கண்டறிய முனைந்தார். எங்கெல்லாம் நீர் அதிகமாக இருக்கிறது, எங்கெல்லாம் அடைபட்டி ருக்கி றது என்பதையும் கண்டறிந்தார். கனுவாய் தடுப்பணைக்குத் தண்ணீர் வருவது தடைபடுவதையும் அப்போது அவர் கண்டறிந்தார். கனுவாய் - பன்னிமடைக்கு இடைப்பட்ட பகுதியில் 2006 முதல் 2021 வரையி லான நீர்வரத்துத் தரவுகளை ஒப்பிட்டு ஆய்வுசெய்தார். குறிப்பிட்ட இடத்துக்கு மேல் நீர்வரத்துத் தடைபட்டிருப்பதைக் கண்டவர், அதற்கான காரணங்களையும் ஆராய்ந்தார்.

சூழலுக்குக் கேடு

“இந்தப் பகுதியில் செங்கல் சூளை அமைப்பது மிக முக்கியமான தொழில். செங்கல் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் மண், பெரும்பாலும் ஓடைகளில் இருந்தும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்தும் எடுக்கப்படுகிறது. சில இடங்களில் பல மீட்டர் ஆழத்துக்கு மண் எடுக்கப்பட்டுள்ளது. மண் அள்ளுவதற் காகப் பெரிய பெரிய வாகனங்கள், ஓடையின் வழியாகச் செல்லும்போது மண் அதிக அழுத்தத்துக்கு ஆளாகி அதன் நீர்ப்பிடிப்புத் தன்மை குறைகிறது. வெள்ளத்துக்கும் வறட்சிக்கும் மண்ணின் நீர்ப்பிடிப்புத் தன்மை முக்கியக் காரணம்” என்று சொல்லும் சாந்தலா, சுற்றுச்சூழலுக்குக் கேடு விளை விக்கும் வகையில் ஓடைகளில் மண் அள்ளப்படுவதைத் தடுத்தால் ஓடைகளின் பாதை தடைபடாது என்கிறார்.

கள ஆய்வின் ஒரு பகுதியாக காளையனூர் பகுதிக்கு, சூழலியல் ஆர்வலர்கள் இருவருடன் ஜனவரி முதல் வாரத்தில் சென்றிருந்தார். அப்போது கடந்து செல்ல முடியாத பகுதிகளைப் பார்வையிட டிரோனைப் பறக்கவிட்டார். “அது தகவல் தொடர்பு இழந்து கீழே விழுந்துவிட்டது. டிரோனைத் தேடி நாங்கள் சென்றபோது அங்கிருந்த செங்கல் சூளை உரிமையாளர், நாங்கள் அவரது சூளையைப் படம் பிடிக்க வந்ததாக நினைத்து எங்களைத் தாக்கினார். நாங்கள் ஆய்வுக்காகத்தான் வந்திருக்கி றோம் என்று எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் கேட்கவே இல்லை” என்று வேதனையுடன் குறிப்பிடுகிறார் சாந்தலா.

தான் மேற்கொண்ட ஆய்வுகளைத் தரவுகளோடு தொகுத்து, ‘Stuck in the days of abundance: The strange case of streams at thadagam valley’ என்கிற தலைப்பில் ஆய்வுப் புத்தகமாக எழுதியுள்ளார். சாந்தலாவின் இந்தப் புத்தகப் பணியை வெகுவாகப் பாராட்டிய சாலிம் அலி பறவையியல் இயற்கை வரலாற்று மையத்தின் முன்னாள் தலைவர் பேராசிரியர் அஜீஸ், ஓடைகளின் பாதை தடைபடுவதற்கான செயல்களையும் ஆக்கிரமிப்புகளையும் அகற்ற அரசு முன்வர வேண்டும் என்று தன் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்கத் தாவரவியல் அறிஞரும், ‘பாட்டனி இன் எ டே’ நூலின் ஆசிரியருமான தாமஸ் ஜே.எல்பெல் இந்தப் புத்தகத்துக்கு அணிந்துரை எழுதியுள்ளார். புத்தகத்தை இன்னும் மேம்படுத்தி, பொதுமக்கள் பார்வைக்குத் தரவிருக்கிறார் சாந்தலா தேவி. பதின்பருவத்தில் தாயைப் பறிகொடுத்த நிலையிலும் சூழலியல் நோக்குடன் செயல்படும் சாந்தலா, இளம் தலைமுறையினருக்குச் சிறந்த முன்மாதிரி.

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x