Last Updated : 11 Jan, 2022 12:07 PM

 

Published : 11 Jan 2022 12:07 PM
Last Updated : 11 Jan 2022 12:07 PM

கதைப்போமா அறிவியல் 17: தலைமுறைகளின் தனி வழி!

புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளிலிருந்து புதிய தொழில்நுட்ப முனைவுகள் உருவாகும். அது, அடுத்த கட்ட அறிவியல் ஆராய்ச்சிகளுக்கு பயன்படும். அதன் மூலம் புதிய கண்டுபிடிப்புகள் நிகழும். இந்தச் சுழற்சியால் மனித சமூகத்துக்கு பலன்கள் விரிந்துகொண்டே போகும். நுண்ணுயிரிகளைக் காண பயன்படும் மைக்ரோஸ்கோப் ஓர் உதாரணம்.

19-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஜெர்மானிய ஆராய்ச்சியாளரான அபே, துளைகளின் வழியே ஒளி வேறுபடும் அடிப்படை இயற்பியல் விதியைக் கண்டறிந்தார். அதன் அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட மைக்ரோஸ்கோப், பாக்டீரியா உள்ளிட்ட நுண்ணுயிரிகளைப் பார்க்க உதவியது. நுண்ணுயிர்களைப் பற்றிய ஆராய்ச்சி வேகம் பிடித்து, வளரத்தொடங்கி, நோய் தடுப்புக்கான மருந்து, அறுவை சிகிச்சை போன்றவற்றில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டது. தாயின் வயிற்றில் கருவின் வளர்ச்சி சரியாக இருக்கிறதா என்பதைக் கண்டறியும் ஸ்கேனிங் கருவி மற்றோர் உதாரணம்.

ஒலியின் வேகத்தையும் அது தடுப்புகளில் தடைபடும்போது திரும்பி வரும் இயற்பியல் விதியின் அடிப்படையில் சோனார் கருவிகள் இரண்டாம் உலகப்போரின் போது உருவாக்கப்பட்டன. போர் முடிந்தபின்னர் எந்தத் தொழில்நுட்பத்தை என்ன செய்யலாம் என்ற சிந்தனையில் இருந்து உருவானது கரு வளர்ச்சியை அளவிடும் அல்ட்ரா சவுண்ட் கருவி. எக்ஸ்ரே கதிரியக்கத்தில் இயங்கும் கருவிகள், கருவுக்கே பாதிப்பை ஏற்படுத்திவிடும் என்பதால், ஒலியின் அடிப்படையில் இயங்கும் புதிய தொழில்நுட்பங்கள் பல உயிர்களைக் காக்கும் உன்னத பணியைச் செய்கின்றன.

நவீன மனித சமூகத்தில் தகவல் தொழில்நுட்பம் பிரமாண்ட முன்னேற்றங்களை கொண்டுவந்தது என்பதில் எதிர்கருத்து இருக்க முடியாது. வானொலியில் ஆரம்பித்து, தொலைக்காட்சி, தொலைபேசி, கணினி, இணையம், அலைபேசி என தொடர்ந்து நாம் பார்த்துவரும் தகவல் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் ஒளி, ஒளி கற்றை, கற்றையின் அலைவரிசை, அலைவரிசையின் தகவலை உட்கொள்ளும் வலிமை என்ற அடிப்படை அறிவியல் விதிகளைச் சார்ந்தே இருக்கின்றன. தொழில்நுட்ப வளர்ச்சியின் வரலாற்றைப் பார்த்தால், சில தொழில்நுட்பங்கள் தங்களது வடிவத்தில் இருந்து மாறாமால், வலுவாகிக் கொண்டே போவதையும், சில தொழில்நுட்பங்களின் வளர்ச்சி அதற்கு முந்தைய வடிவத்தை முற்றிலும் நீக்கிவிடும் (disruptive) வகையிலும் அமைவதுண்டு.

சமீபத்திய வரலாற்றில், இணையம் பல்வேறு தொழில்நுட்பங்களை வேரறுத்து புதிய வணிக வடிவங்களை வேகமாக வெளியிட அடிப்படையாக அமைந்தது. தரையில் பதிக்கப்பட்ட கம்பிகளின் மூலம் கட்டப்பட்ட பிணையமாக முதலில் உருவெடுத்த இணையம், பின்னர் துணைக்கோள்களின் வழியாக உலகை இணைக்க ஆரம்பித்ததது. அலைபேசி என்ற தொழில்நுட்பம் வந்தபின்னர் எப்படி மற்றவர்களுடன் இணைந்திருக்கிறோம் என்ற அடிப்படை தெரியாமலேயே நாம் இணைய ஆரம்பித்துவிட்டோம்.

இன்றைய நிலையில் அலைபேசிகள் இணைந்த இணையத்தில்தான் அதிக அளவில் தகவல் தொடர்பு நடக்கிறது என்பதால், அதன் வலிமையைக் கூட்டுவது எப்படி என்பதே டெக் நிறுவனங்களின் தலையாய குறிக்கோளாகிவிட்டன. நாம் பயன்படுத்தும் சாதனங்களின் வலிமை இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை இரண்டு மடங்காக உயரும் என அறுபதுகளில் கணித்தவர் அப்போதைய இண்டெல் நிறுவன தலைவர் கோர்டன் மூர். கணினிகளில் தொடங்கி அலைபேசி சாதனங்கள் வரை இந்த ‘மூர் விதி’ உண்மையானதாக இருந்து வருகிறது.

ஆனால், சாதனங்களின் வலிமை கூடுவதால் மட்டுமே தகவல் தொடர்பு மேம்பட்டு விடாது. இதை இப்படி ஒப்பீடாகச் சொல்லலாம். டிஜிட்டல் சாதனம் ஒன்றை அணை என வைத்துக் கொள்ளுங்கள். அணையின் அளவை பெரிதாக்கிக் கொண்டே போகலாம். ஆனால், தண்ணீர் வரும் அளவை அதிகரிக்கவில்லை என்றால் மேற்படி அணை காலியாகத்தானே இருக்கும்? ஆக, சாதனங்கள் இணைந்திருக்கும் இணையத்தின் அலைக்கற்றையின் வலிமை அதிகரிக்கப்பட வேண்டும். 2ஜி, 3ஜி, 4ஜி என நடந்து வந்த பாதையின் அடுத்த படி 5ஜி. தகவல் பரிமாற்றத்தின் அளவு மற்றும் வேகம் இரண்டிலுமே 5ஜி கொடிகட்டிப் பறக்கிறது.

4ஜியைவிட தகவல் அளவு இருபது மடங்காகவும், வேகம் ஐம்பது மடங்காகவும் இருப்பதால் இதன் இடையீடு ஆழமானதாக இருக்கும் என்பது உறுதி. யூடியூபில் காணொலிகளைப் படுவேகமாகத் தரவிறக்கம் செய்துகொள்ளலாம் என்பதிலிருந்து தானியங்கி கார்களை விரைவில் சாலைகளில் பார்க்கலாம் என்பது வரை மாற்றங்கள் வரப்போகிறது. கடந்த 10 ஆண்டுகளாக 5ஜி தொழில்நுட்பத்துக்கான அடிப்படை கட்டமைப்பை மாற்றியமைப்பதில் உலகில் உள்ள தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஈடுபட்டிருந்தன. 4ஜி போல் அல்லாமல், 5ஜிக்கு உயரமான கோபுரங்கள் தேவையில்லை; மாறாக, செவ்வக வடிவில் ஸ்பீக்கர் போல இருக்கும் உபகரணங்களை வட்டவடிவில் கட்டியிருப்பதைப் பார்த்தால் அது 5ஜி பிணையத்திற்கானது எனப் புரிந்துகொள்ளலாம். 4ஜி போல் அல்லாமல் உயர்ந்த அலைவரிசையைப் பயன்படுத்துவதால், அதிக தகவல்களை சுமந்து செல்ல இயலும். என்றாலும், தகவல் இழப்பு நேரிடுவதைத் தவிர்க்க குறுகிய இடைவெளிகளில் சாதனங்களை அமைத்தாக வேண்டும்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் அமெரிக்காவின் இரண்டு தொலைதொடர்பு நிறுவனங்கள் 5ஜி சேவையை ஆரம்பிக்க இருந்தார்கள். 5ஜி இயங்கும் வசதி கொண்ட அலைபேசியை வாங்க நானும் தயாராக இருந்தேன். ஆனால், விமானங்களில் இருக்கும் சமிக்ஞை சாதனங்களுடன் இடைபட்டு அவற்றின் இயக்கத்தை குலைத்துவிடும் ஆபத்து இருப்பதாகச் சொல்லி, விமான நிறுவனங்கள் 5ஜி வெளியீட்டை ஆறு மாதங்களுக்கு தள்ளிப்போடும்படி தடாலடியாக கோரிக்கை வைத்திருக்கிறார்கள். ஆனால், தொலைதொடர்பு நிறுவனங்கள்,
“நாங்கள் இரண்டு வாரங்கள் தருகிறோம். பின்னர் சேவையை ஆரம்பித்துவிடுவோம். விமான நிலையங்கள் அருகில் மட்டும் வலிமை குறைவாக இருக்கும்படி பார்த்துக்கொள்வோம்” என சொல்லியிருக்கிறார்கள். இரண்டு வாரங்களுக்குப் பின்னர் என்ன நடக்கும் என்பதை அப்போது கதைப்போம்.

ஒரு அப்டேட்!

இத்தொடரின் முதல் கட்டுரையில் தெரோனாஸ் நிறுவனத்தைப் பற்றியும், அதன் நிறுவனரான எலிசபெத் ஹோல்ம்ஸ் கோடிக்கணக்கில் முதலீட்டை வாங்கிக் குவித்து, இயக்க முடியாத தொழில்நுட்பம் பற்றிய உண்மையைத் தெரிவிக்காமல் மறைத்தது பற்றியும் பார்த்தோம் அல்லவா? அவர் மீது தொடங்கப்பட்ட வழக்கு பல மாதங்களாக நடந்து முடிந்து, கடந்த வாரத்தில் தீர்ப்பை அடைந்திருக்கிறது. எலிசபெத் செய்தது தண்டனைக்குறிய குற்றமே என்பது தீர்ப்பு. அவருக்கு என்ன தண்டனை என்பது விரைவில் தெரிவிந்துவிடும். 20 ஆண்டுகள் வரை எலிசபெத் சிறைக்கு செல்ல நேரிடும் என ஊகிக்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x