

நம் நாட்டில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் கிளார்க், அதிகாரி வேலையில் சேர ஐபிபிஎஸ் நடத்தும் தேர்வில் வெற்றி பெறுவது அவசியம்தான். ஆனால், மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி மட்டும் கிளார்க், அதிகாரிகள் மற்றும் சிறப்பு அதிகாரிகளையும் தானே போட்டித் தேர்வு நடத்திப் பணியமர்த்துகிறது தெரியுமா?
அந்த வகையில், நடப்பு ஆண்டு கிளார்க் நிலையிலான பணிகளில் (ஜூனியர் அசோசியேட்) 17,400 காலியிடங்களை நிரப்ப பாரத ஸ்டேட் வங்கி தற்போது அறிவிப்பு வெளியிட்டி ருக்கிறது. இதில், 1700-க்கும் மேற்பட்ட காலியிடங்கள் தமிழகத்தில் உள்ளன.
தகுதி என்ன?
கிளார்க் பணிக்கு விண்ணப்பிக்க ஏதேனும் ஒரு பட்டப் படிப்பு முடித்திருந்தால் போதும். தற்போது கல்லூரியில் இறுதி ஆண்டு படித்துக்கொண்டிருக்கும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். வயது 20 முதல் 28-க்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி வகுப்பினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும். எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் பணிக்கு தேர்வுசெய்யப்படுவர். எழுத்துத் தேர்வில் முதல்நிலைத் தேர்வு, மெயின் தேர்வு என 2 நிலைகள் உண்டு.
என்ன கேட்கப்படும்?
முதல்நிலைத் தேர்வில் ஆங்கிலம், கணிதம், ரீசனிங் ஆகிய 3 பகுதிகளில் இருந்து 100 வினாக்கள் கேட்கப்படும். மொத்த மதிப்பெண் 100. இதில் தேர்ச்சி பெறுவோர் அடுத்த கட்டமான மெயின் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவார்கள். மொத்தமுள்ள காலியிடங்களில் 20 மடங்கு எண்ணிக்கையிலான விண்ணப்பதாரர்கள் மெயின் தேர்வுக்கு தேர்வுசெய்யப்படுவார்கள்.
மெயின் தேர்வில் நிதி, ஆங்கிலம், கணிதம், ரீசனிங், கணினி அறிவு ஆகிய 4 பகுதிகளில் இருந்து 190 கேள்விகள் இடம்பெறும். மொத்த மதிப்பெண் 200. தேர்வு நேரம் 2 மணி நேரம் 40 நிமிடங்கள். மெயின் தேர்வில் வெற்றிபெறுவோர் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர். இறுதியாக மெயின் தேர்வு மதிப்பெண், நேர்முகத் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பணிநியமனம் நடைபெறும்.
முதல்நிலைத் தேர்வு மே, ஜூன் மாதங்களில் நடத்தப்பட உள்ளது. கிளார்க் பணிக்கு ஆரம்ப நிலையில் ரூ.21 ஆயிரத்துக்கு மேல் சம்பளம் கிடைக்கும். அதிகாரியாகவும் வாய்ப்பு உண்டு. தகுதியுள்ள பட்டதாரிகள் ஏப்ரல் 25-ம் தேதிக்குள் பாரத ஸ்டேட் வங்கியின் இணையதளத்தைப் பயன்படுத்தி (>www.sbi.co.in) ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும் முறை, பாடத்திட்டம், இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு தேர்வுக்கு அளிக்கப்படும் இலவசப் பயிற்சிகள் உள்ளிட்ட இதர தகவல்களை பாரத ஸ்டேட் வங்கியின் இணையதளத்தில் விளக்கமாக தெரிந்துகொள்ளலாம்.