

சுப.மீனாட்சி சுந்தரம்
somasmen@gmail.com
நமது வாழ்வில் அன்றாடம் செய்யக்கூடிய பல பணிகளை இன்று இணையம் எளிதாக்கி இருக்கிறது. கடைக்குச் சென்று பொருள்களைத் தேடி எடுத்து,பில் போட்டு வாங்கி வர வேண்டிய தேவை இல்லை. நினைத்த நேரத்தில், தேவைப்பட்டப் பொருள்களை நம் வீடு தேடி வரச் செய்ய முடிகிறது. வங்கிக்குச் செல்லாமலே சுலபமாக பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடிகிறது. அதுவும் இந்தப் பெருந்தொற்று காலத்தில், நமது இணையப் பயன்பாடு பல மடங்கு அதிகரித்துள்ளது. அதேசமயம், இணையப் பயன்பாடு அதிகரிக்க அதிகரிக்க அதற்கு ஏற்ற வகையில் இணையம் தொடர்பான மோசடிகளும் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன.
இந்நிலையில், புதிதாக பிறந்திருக்கும் இவ்வாண்டில் இணையம் சார்ந்து என்னென்ன விதமான மோசடிகள் நிகழலாம், எந்தெந்த முறையில் நமது தகவல்கள் திருப்படப்படலாம் என்பது தொடர்பாக கணினிகளுக்கு ஆண்டி வைரஸ் மென்பொருள் வழங்கும் நார்ட்டன் லேப்ஸ் கணிப்பு வெளியிட்டுள்ளது. அவை என்னென்ன என்பதை சுருக்கமாகப் பார்க்கலாம்.
கிரிப்டோகரன்சி தொடர்பான மோசடி: கிரிப்டோகரன்சி பயன்பாடு அதிகரித்து வரும் வேளையில்,பல்வேறு நிறுவனங்கள் அவற்றை வாங்கவும், விற்கவும் உதவுகின்றன. இந்தச் சூழலில் கிரிப்டோகரன்சி வர்த்தகம் எப்படி செயல்படுகிறது என்ற நுணுக்கங்களை முழுமையாகப் புரிந்துகொள்ளாத சாதாரண முதலீட்டாளர்கள் ஏமாற்றப்படலாம். கடந்தகாலத்தில் நடைபெற்ற தேக்குமர வளர்ப்பு, ஈமு கோழி போன்ற மோசடித் திட்டங்கள் போன்று கிரிப்டோகரன்சி சார்ந்தும் நடைபெறலாம்.
டிஜிட்டல் ஐடி சார்ந்த மோசடிகள்: பெருந்தொற்றுக்குப் பிறகு, அலுவலக வேலையை வீட்டிலிருந்து செய்வது, மருத்துவமனைக்குச் செல்லாமல் வீட்டிலிருந்தபடியே மருத்துவர்களிடம் ஆலோசனை பெறுவது என பல்வேறு விஷயங்களை ஆன்லைன் மூலமாக மேற்கொண்டு வருகிறோம். பல சந்தர்ப்பங்களில் வங்கிக் கணக்கு திறப்பதற்கு, வேலைக்கு விண்ணப்பிப்பதற்கு, நம் புகைப்படங்கள், ஆதார், ஓட்டுநர் உரிமம் போன்ற தகவல்களை மொபைல் வழியாகவே அனுப்புகிறோம். இது மோசடிக்காரக்காரர்களுக்கு சாதகமாக அமைந்துவிடுவதுண்டு. எனவே, இத்தகைய தகவல் பரிமாற்றம் சார்ந்து பாதுகாப்பு அவசியமாகிறது.
குடிமக்கள் தங்களது அடையாளங்களை விரைவாகவும், எளிதாகவும் நிரூபிக்கக்கூடிய வகையில் டிஜிட்டல் ஐடிக்களை உலக நாடுகள் உருவாக்கி வருகின்றன. அந்த வகையில், டிஜிட்டல் ஐடி தொடர்பான செயல்பாடுகள் இன்னும் வேகம் கொள்ளும். அது சார்ந்த மோசடிகளும்அதிகரிக்கும்.
போராட்டங்களும் பயங்கரவாதமும்: ஹேக்கர்கள் உங்களது கணினி, மொபைல், வங்கி கணக்குகள் போன்றவற்றில்நுழைந்து பணத்தை எடுப்பது போன்ற மோசடிகளில் மட்டும்தான் ஈடுபடுவார்கள் என்று நினைத்து விடாதீர்கள். அரசியல் ரீதியான மாற்றங்களைக் கொண்டுவரவும் ஹேக்கிங் மேற்கொள்ளப்படும். அரசாங்கத்தை சீர்குலைப்பதற்கான முயற்சிகளிலும் அவர்கள் ஈடுபடக்கூடும். இனி உண்மை எது, பொய் எது என்று வேறுபடுத்திக் கொள்ளமுடியாத நிலையில் செய்திகள், வீடியோக்கள் உலாவரும் அபாயம் இன்னும் அதிகரிக்கும்.
அரசுக்கு எதிராக போராட்டங்கள் அதிகரிக்கவும், பயங்கரவாதங்கள் பெருகவும் அவை வழிவகுக்கும்.
பணப்பரிவர்த்தனை மோசடிகள்: பெருந்தொற்று போன்ற பேரிடர் காலங்கள் எப்போதும் மோசடி செய்பவர்களுக்கு ஒரு உகந்த நேரம். தீப்பிடித்த வீட்டில் அகப்பட்டது மிச்சம் என நினைப்பது போன்ற சூழ்நிலைதான் இது. இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்படுபவர்களுக்கு காப்பீட்டு நிறுவனங்கள் வழங்கும் இழப்பீடுகள், அரசாங்கம் வழங்கும் நிதி உதவிகள் போன்றவற்றை மோசடி செய்ய முயற்சிக்கும் நபர்கள் எப்போதும் இருந்து கொண்டே இருக்கிறார்கள். இனி அது இன்னும் அதிகரிக்கக்கூடும்.
சமீபத்தில் பெட்ரோல் பங்க் ஒன்றில் வைக்கப்பட்டிருந்த க்யூஆர் கோடு படத்தின் மேல், ஒரு மோசடியாளர் தனது கணக்கிற்குரிய க்யூஆர்கோடை ஒட்டி வைத்துள்ளார். பங்குக்கு வந்து பெட்ரோல் நிரப்பிய வாடிக்கையாளர்கள், மொபைல் போன் மூலம் அதில் உள்ள க்யூஆர் கோடை ஸ்கேன் செய்து பணம் பரிமாற்றம் செய்திருக்கின்றனர். நீண்ட நேரமாக தங்களின் கணக்கில் எந்த பணமும் வராதது கண்டு சந்தேகித்த பெட்ரோல் பங்க் நிர்வாகிகள், அதன் பிறகுதான் க்யூஆர் கோடில் மேற்கொள்ளப்பட்ட நூதன மோசடியைக் கண்டுபிடித்திருக்கின்றனர். இப்படியான நூதன மோசடிகள் இனி இன்னும் அதிகரிக்கும்.
தகவல் திருட்டு: செயற்கை நுண்ணறிவு, மிஷின் லேர்னிங் ஆகிய தொழில்நுட்பங்கள்மிகப் பெரிய அளவில் வளர்ந்துள்ளன. பெரிய தரவுத் தொகுப்புகளிலிருந்து தேவைப்பட்ட தகவல்களை - வெவ்வேறு வகைகளில் பிரித்தெடுப்பதுஉட்பட பல விஷயங்களைச் செய்வதை அவை எளிதாக்குகின்றன. இது மோசடியாளருக்குப் பெரும் வாய்ப்பாக உள்ளது.
ஒருவர் வழக்கமாக உபயோகப்படுத்தி வரும் ஒரு செயலி அல்லது பரிவர்த்தனையை தெரிந்துகொண்டு அதன் மூலம் மோசடியை மேற்கொள்ளலாம். பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், ஹோட்டல்களில் இருக்கும் வைஃபையைப் பயன்படுத்தும்போது நமது இணைய தொடர்பு நம்பகமானது என்று உறுதியாகக் கூற முடியாது. ஹேக்கர்கள் இந்தச் சூழ்நிலையை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு போலி தளங்களை உருவாக்கி, பயனாளர்களிடமிருந்து அவர்களது தகவல்களைத் திருடுகின்றனர்.
கவனம் தேவை: மோசடியாளர்கள் இருக்கும்வரை மோசடிகள் நடந்து கொண்டுதான் இருக்கும். இது காலத்திற்கும், தொழில்நுட்ப மாற்றத்திற்கும் ஏற்றவகையில் மாறிக் கொண்டு இருக்கிறது. அறிமுகமில்லாத எண்களில் இருந்து வரும் அழைப்புகள், டெக்ஸ்ட் மெசேஜ்கள் மற்றும் இ-மெயிலில் வரும் சந்தேகத்துக்கிடமான இணைப்புகளை கிளிக் செய்வதைத் தவிர்க்கவும். அந்த இணைப்பு முறையானதுதானா என்பதை சரிபார்க்க, அது தொடர்பான நிறுவனங்களின் அதிகாரபூர்வ வலைத்தளம் அல்லது தொலைபேசி எண்ணுக்கு அழைத்து உறுதி செய்வது அவசியம். நீங்கள் செல்லும் வலைதளங்களின் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு அமைப்புகளைச் சரிபார்க்கவும். தேவைப்படும் நேரங்களில் மட்டும் உங்கள் மொபைலில் உள்ள‘லொகேஷன்’ வசதியைப் பயன்படுத்துங்கள். மற்ற நேரங்களை அந்த வசதியை ஆப் செய்துவிடுங்கள்.
பெருநிறுவனங்கள், தங்கள் நிறுவனங்களில்சைபர் குற்றங்களைத் தடுக்க, பெரும் முதலீடு செய்துவருகின்றன. சாமானியர்கள் தங்களுக்கு அத்தகைய பாதுகாப்பு முறைகளை உருவாக்குவது சாத்தியமில்லை. எனவே, நம் எல்லைக்கு உட்பட்டு நம்மை பாதுகாத்துக்கொள்வதுதான் நாம் செய்யக்கூடிய ஒன்று.எனவே நமது தகவல்கள், யூசர் நேம், பாஸ்வேர்டு, கிரெடிட் கார்டு டெபிட்கார்டு விவரங்கள், புகைப்படம், அடையாள அட்டை விவரங்கள் போன்றவற்றை பிறருக்குப் பகிரும்போது அதிகப்படியான கவனத்துடன் பகிர்வது 2022-க்கு மட்டுமல்லாமல் எல்லா ஆண்டுகளுக்கும் பின்பற்ற வேண்டியவையாகும்.
இந்தியாவில் அதிகரிக்கும் இணைய வழி குற்றங்கள்: இந்தியாவில் ஆண்டுக்கு ஆண்டுக்கு இணையவழி குற்றங்கள் (Cyber Crime)அதிகரித்தபடி இருக்கின்றன. ஹேக்கிங் வகையான மோசடிகளைத் தாண்டி, பாலியல் தொந்தரவு, மத ரீதியாக வெறுப்பைப் பரப்புதல், பிறரைப் பற்றி அவதூறு பரப்புதல், பழி வாங்கும் நோக்கில் பிறரின் அந்தரங்கங்களை வெளியிடுதல் போன்ற செயல்பாடுகள் இந்தியாவில் அதிகரித்துள்ளன. 2016-ம் ஆண்டு 12,317 இணையவழி குற்றங்கள் பதிவானது. 2020-ம் ஆண்டில் பதிவான இணையவழி குற்றங்களின் எண்ணிக்கை 50,035. கிட்டத்தட்ட 300 சதவீதம் அளவில் இணையவழி குற்றங்கள் அதிகரித்துள்ளன. 2020-ம் ஆண்டில் உத்தரப் பிரதேசத்தில் மட்டும் 11,097 இணையவழி குற்றங்கள் பதிவாகியுள்ளன. அதற்கு அடுத்த இடத்தில் கர்நாடகா (10,741), மகாராஷ்டிரா (5,496) ஆகிய மாநிலங்கள் உள்ளன.