Published : 20 Mar 2016 10:54 AM
Last Updated : 20 Mar 2016 10:54 AM

மாண்டலின் ஸ்ரீநிவாஸுக்கு சிங்கப்பூரில் இசை அஞ்சலி: புல்லாங்குழல் வாசிக்கும் சிறுமிக்கு சர்வதேச விருது

மாண்டலின் கலைஞர் யு.ஸ்ரீநிவாஸுக்கு இசை அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி சிங்கப்பூரில் நடந்தது. அவரது பெயரிலான முதலாவது சர்வதேச விருது, புல்லாங்குழல் வாசிக்கும் சிங்கப்பூர் சிறுமிக்கு வழங்கப்பட்டது.

பிரபல மாண்டலின் இசைக் கலைஞர் யு.ஸ்ரீநிவாஸ் கடந்த 2014-ம் ஆண்டில் மறைந்தார். அவருக்கு இசை அஞ்சலி செலுத்தும் விதமாக ‘தி மாண்டலின் அண்ட் பியாண்ட்’ என்ற பெயரிலான ஃப்யூஷன் இசை நிகழ்ச்சி சிங்கப்பூரின் எஸ்பிளனேடில் உள்ள கான்சர்ட் ஹாலில் சமீபத்தில் நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு ஸ்ரீநிவாஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் வேர்ல்டு மியூசிக் நிறுவனத்துடன் இணைந்து ஆர்டி காம்பஸ், அக்ரோகார்ப் ஆகிய நிறுவனங்கள் ஏற்பாடு செய்திருந்தன.

‘ரகுபதி ராகவ ராஜாராம்’ பாடல் ஒலிக்க நிகழ்ச்சி தொடங்கியது. இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத், தனது குரு மாண்டலின் ஸ்ரீநிவாஸுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் காட்சிப்படுத்திய வீடியோ நிகழ்ச்சி கருத்துச் செம்மையுடன் அருமையாக இருந்தது.

சர்வதேச அளவில் இளம் இசைக் கலைஞர்களை கவுரவிக்கும் வகையில் மாண்டலின் ஸ்ரீநிவாஸ் பெயரில் சர்வதேச விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. முதல் ஆண்டுக்கான இந்த விருதை புல்லாங்குழல் வாசிக்கும் சிங்கப்பூர் சிறுமி ஆங் யி டிங் பெற்றார். இந்த விருது, அக்ரோகார்ப் இன்டர்நேஷனல் நிறுவனம் ஆதரவில் வழங்கப்படும் 500 சிங்கப்பூர் டாலர் ரொக்கப் பரிசு மற்றும் ஸ்ரீநிவாஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் வேர்ல்டு மியூசிக் நிலையத்தில் ஒரு வாரம் தங்கி ‘மாஸ்டர்’ பயிற்சி வகுப்பில் பங்கேற்பது ஆகியவற்றை உள்ளடக்கியது.

ஸ்ரீநிவாசின் ‘ஹிடன் டிரைல்ஸ்’ என்ற இசைக் கோர்வையை, உலகப் புகழ்பெற்ற டிரம்ஸ் கலைஞர் ரஞ்சித் பரோட், மாண்டலின் யு.ராஜேஷ், பேஸ் கிடார் மோகினி டே ஆகியோர் இணைந்து சிறப்பாக வழங்கினர். பத்மஸ்ரீ அருணா சாய்ராம், தபேலா கலைஞர் பத்மஸ்ரீ விஜய் காட், கீபோர்டு ஸ்டீபன் டேவஸி ஆகியோர் இணைந்து அற்புத இசை நிகழ்ச்சியை வழங்கினர். அருணா சாய்ராம் கர்னாடக இசை, ஹிந்துஸ்தானி, மேற்கத்திய இசை ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக தனது இனிய குரலில் பாடி ரசிகர்களை ஈர்த்தார். ‘சர்வ மங்கள மாங்கல்யே’ சுலோகத்தை விருத்தமாகப் பாடியது இனிய ஆன்மிக அனுபவத்தை தந்தது. இத்தாலியப் பாடலை இரண்டு சரணம் பாடி, மெதுவாக கர்னாடக இசையில் கொண்டு இணைத்தது இயல்பாக தங்கக் கம்பியை இழைத்து நீட்டியதுபோல் இருந்தது. ரஞ்சித் பரோட், காட் ஆகியோரின் ஜுகல்பந்தி புதுமை. இதைத்தொடர்ந்து, அருணா சாய்ராம் பாடிய ‘அயிகிரி நந்தினி’ சுலோகத்தின் சில வரிகள் சிந்தனைக்கு விருந்தாக அமைந்தது. கலைஞர்கள் தங்கள் இசைக் கருவிகளில் தனி ஆவர்த்தனம் வாசித்தது அவர்களது இசைத் திறமையைக் காட்டியது.

இந்நிகழ்ச்சியை ஸ்ரீநிவாஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் வேர்ல்டு மியூசிக் நிறுவனத்துடன் இணைந்து ஆர்டி காம்பஸ், அக்ரோகார்ப் ஆகிய நிறுவனங்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x