Published : 30 Dec 2021 06:50 AM
Last Updated : 30 Dec 2021 06:50 AM

அகத்தைத் தேடி 74: கேட்கும் ஒலியில் எல்லாம்

நீ செய்யும் சின்ன சின்ன துஷ்டத் தனங்கள் எல்லாம் கடவுளுக்கு தெரியாது என்று நினைக்காதே. நம் வீட்டில் நடந்துபோகும் எறும்பின் காலடிச் சத்தம் கைலாயத்தில் திடும் திடும் என்று கேட்கும் என்று பக்கத்து வீட்டு பாட்டி என்னிடம் சொல்வார்.

நாங்கள் சிறுவயதில், இதை வேடிக்கைக் கதை என்று நினைத்தோம். உண்மையில், மண்ணுலகத்து நல் ஓசைகள் யாவும் இறைத்தன்மை கொண்டிருக்கின்றன. கேட்கும் ஒலியில் எல்லாம் நிந்தன் கீதம் இசைக்குதடா நந்தலாலா என்று பாடுகிறார் பாரதி. அரவிந்தர் இதைப் பற்றி ஆங்கிலத்தில் ஒரு அருமையான கவிதை எழுதி இருக்கிறார். இறை ஒலி (divine hearing) என்பது அதன் தலைப்பு.

இறைவா அனைத்து ஓசைகளும் குரல்களும் உன் குரல் ஆயிற்று ....

மனிதரின் பேச்சு முணுமுணுப்பு சொற்கள்

வசப்பட்ட விண்ணில் சிறகு விமானம் பறக்கும் சத்தம் மண்ணில் ஊர்திகளின் வேகம் சொல்லும் குழல்களின் பேரிசை இயந்திரத்தின் மந்தகதி

சிற்றிரைச்சல் எச்சரிக்கை சங்கின் வீறிடும் அலறல்

(தமிழாக்கம் : கவிஞர் இரா. மீனாட்சி)

ஓசையில் இருந்தே இசை பிறக்கிறது. ஓசைகளை ரசித்தால் இசையின் லயம் புரிபட்டுவிடும். நார்களில் இருந்து கயிறு திரிப்பது மாதிரி, ஓசையைத் திரித்து ராகங்கள் செய்து அதிலே தாளரூபங்களை சேர்த்து ஆலாபனை செய்துகொண்டு போகிறார் இசைவாணர்.

நெஞ்சைப் பறிகொடுக்கும் பக்குவம்

காற்று மரங்களின் இடையே காட்டும் இசைகளையும் ஆற்று நீர் ஓசையையும் நீல பெருங்கடலின் ஓலத்தையும், ஏற்றப்பாட்டையும், குக்குலவென நெல்லிடிக்கும் பெண்களின் கொஞ்சு மொழிகளையும், சுண்ணமிடிப்பாரின் பாட்டையும் கேட்டு நெஞ்சைப் பறி கொடுக்கும் பக்குவம் வந்தாலே போதும் பாரதி போல்.

பேரண்டத்தில் சூரியக் குடும்பத்தையும் தாண்டிய விண்மீன் வெளி (stellar space) ஹம் என்ற விசித்திர ஓசையால் நிறைந்திருப்பதாக நாசா கண்டுபிடித்திருக்கிறது.

எங்கோ பல மில்லியன் ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் நிறைந்திருக்கும் பேரண்ட நுண் ஒலியை இழுத்து வந்து ஓம் என்று சொல்லி நம் நாபிக்கமலத்தில் நிறுத்தி ஒலிக்க வைத்தனர் நமது முனிவர்கள். இது ஓசையை விழுங்கி மானுடத்தை தெய்வத்தோடு இணைக்கும் உத்தி.

கோவில் மணிகளிலே இந்த ஓம்காரம் நிறைந்திருக்கும். சிதம்பரம் நடராஜர் கோவில் மணியோசை, கேட்போரின் மனத்தில் துயரங்கள், கவலைகள் கற்பாறைகளாய் கனத்தாலும் அவற்றைக் கரைக்க வல்லது. உடம்பையும் மனசையும் கரைத்து பேரானந்த வெளியில் லயிக்கச் செய்வது. வேளாங்கண்ணி மாதா கோயிலின் மணியோசை கண்ணீர் மல்க வைத்துவிடும். கருணையே ஓசையாகி நம்மை வாவென்று அழைக்கின்ற ரசவாதம் நிகழ்த்துகிற ஓசை அது. இது மார்கழி மாதம். ஆண்டாள் பாடிய திருப்பாவைப் பாசுரங்களில் ஓசைகளை சொல்லும் நயம் கேட்போரைக் கிறங்கடித்து விடுகிறது.

புள்ளும் சிலம்பினகாண் புள்ளரையன் கோயிலில் வெள்ளை விளி சங்கின் பேரரவம் கேட்டிலையோ?

சங்கிற்கு உள்ளே இருக்கும் சமுத்திரத்தின் அலையோசையை அதில் பொதிந்து வைத்திருக்கிறது. அதைக் கண்டத்திலிருந்து வரும் ஓசையோடு கலந்து ஊதினால் கடவுள் கண் விழிப்பார். யுத்தங்கள் நிற்கும் அல்லது தொடங்கும். அண்டமே அரை நொடிப்போது அசையாது நிற்கும்.

கீசு கீசென்றெங்கும் ஆனைச்சாத்தன் கலந்து பேசின

பேச்சரவம் கேட்டிலையோ?

பேய்ப் பெண்ணே!

காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து

வாசநறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால் ஓசை படுத்தத் தயிரரவம் கேட்டில்லையோ?

மத்தால் கடையும் ஓசையை தயிரின் அரவம் என்று சொல்வது நயம். ஆனைச் சாத்தன் என்னும் வலியன் குருவியின் கீச்சுக் குரலில் பேச்சரவம் கேட்கிறது ஆண்டாள் பெருமாட்டிக்கு! திருவெம்பாவையில்

கோழிச் சிலம்பச் சிலம்பும்

குருகெங்கும் ஏழில் இயம்ப இயம்பும் வெண்சங்கெங்கும் கேழில் பரஞ்சோதி

கேழில் பரங்கருணை

கேழில் விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ

- என்கிறார் மாணிக்கவாசகர்.

காய்கள் உதிரும் ஓசை காதில் விழும். மலர்கள் உதிர்வது கேட்குமோ கேட்டிருக்கிறது, கேட்டதோடு நிற்காமல் தனிமையின் துயரத்தையும் தூண்டி விட்டிருக்கிறது. குறுந்தொகையில் ஒரு பாடல் கொல்லன் அழிசி என்ற கவிஞர் எழுதியது. தலைவனுக்காக ஏங்கும் தலைவி தூங்காமல் விழித்திருக்கிறாள். அவளைத் தூங்கவிடாமல் செய்கிறது, வீட்டுவாசலில் உள்ள நொச்சிப் பூக்கள் உதிரும் ஓசை. நொச்சிப் பூ மிக மென்மையானது. அதை எவ்வளவு கொட்டினாலும் ஓசை கேட்பது அரிது. பின் எப்படி ஏன் கேட்கிறது அவளுக்கு மட்டும்? காரணம், தலைவியை சூழ்ந்திருக்கும் தனிமையின் ஆழம்.

கொன்னூர் துஞ்சினும் யாந்துஞ் சலமே எம்மி லயல தேழி லும்பர் மயிலடி யிலைய மாக்குர னொச்சி அணிமிகு மென்கொம் பூழ்த்த மணிமருள் பூவின் பாடுநனி கேட்டே.

நொச்சி மரத்தின் நீலமணி நிறம் ஒத்த மலர்கள் மென்மையான கிளைகளில் இருந்து உதிரும் ஒலி கேட்டு எங்கள் தூக்கம் கெட்டது என்பது இதன் பொருள்.

குறுந்தொகையில் வரும் தலைவியின் ஏக்கமும் ஆண்டாளின் ஏக்கமும் ஒரு புள்ளியில் இணைவதைக் காணலாம் மானிடக் காதலும் தெய்விகக் காதலும் வேறுபாடற்ற இறைநிலையை அடைவதற்கு இயற்கையின் ஓசைகள் துணைபோகின்றன!

கல்லுக்குள் ராகம்

பிரமிளின் கவிதை ஒன்றில் கிரேன்கள் லாரிகள் இரும்பு சாமான்கள் என்று நெறிபடும் துறைமுகத்தை வர்ணிக்கும்போது எங்கும் இரும்பின் கோஷம் என்று எழுதியிருப்பார். உயிரற்ற பொருள்கள் கோஷம் எழுப்புவது மட்டுமல்ல இசையும் எழுப்பும்.

கருங்கல்லில் காது வைத்து கேட்டு சப்தஸ்வரங்கள் ஒலிக்கும் ஸ்வரத்தூண்களை அக்கால சிற்பிகள் உருவாக்கியிருக்கிறார்கள் பல கோயில்களில் இத்தகைய ஸ்வரங்களை தம்முள் அடக்கிக் கொண்டு நிற்கும் கற்களை உயிரற்றவை என்பீர்களா?

லா.ச.ரா தன் கதை ஒன்றில் மதிய மோன வேளையில் கேட்பது வேலி யோரத்து பாம்பின் சரசரப்பா, தேவியின் பாத சப்தமா என்று பதைத்துப் போவார்.

காண்டாமணி ஓசை

தி.ஜானகிராமன் ‘காண்டாமணி’ என்று ஒரு சிறுகதை எழுதி இருக்கிறார் அதில் வருகிற மார்க்கபந்து என்கிற மார்க்கம் சாப்பாட்டு மெஸ் நடத்துகிறவர். ஒருநாள் மெஸ்ஸில் முதலில் வந்த வாடிக்கையாளருக்கு உணவு பரிமாறிவிட்டு அவர் சென்றதும் பார்த்தால் குழம்பில் பாம்புக் குட்டி செத்துக் கிடக்கிறது. வாடிக்கையாளர் வீட்டுக்கு போனதும் குழம்பைக் கொட்டிவிட்டு கணவனும் மனைவியும் அவருக்கு ஒன்றும் ஆகக்கூடாது என்றும் பிராயச்சித்தமாக சுவாமிக்கு காண்டாமணி வாங்கிச் சாத்துவதாக வேண்டிக்கொள்கிறார்கள். ஆனால் மறுநாள் பாவம் அந்த மனிதர் இறந்து போனதாகத் தெரியவருகிறது. ஆனால், மாரடைப்பால். வாக்களித்தபடி சுவாமிக்கு காண்டாமணி வாங்கிச் சாத்துகிறார்கள் ஆனால் நிம்மதியாக இருக்க முடியவில்லை காண்டாமணிச் சத்தம் வேளை தவறாமல் அர்த்த சாம பூஜை வரை டணார் டணார் என்று அடித்து இவர்கள் மனசாட்சியில் அறைகிறது. மார்க்கபந்து போல இங்கே காண்டாமணி யாருக்கெல்லாம் தேவைப்படுகிறதோ யார் அறிவார்?

(தேடல் தொடரும்)

கட்டுரையாளர், தொடர்புக்கு : thanjavurkavirayar@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x