Published : 29 Dec 2021 06:05 AM
Last Updated : 29 Dec 2021 06:05 AM

கதை: என்ன சொன்னது லூசியானா?

முயலும் ஆமையும் ஒரு நாள் சண்டை போட்டுக்கொண்டிருந்தன.

“நான் உன்னைவிட வேகமா ஓடுவேன். ரொம்ப அழகாவும் இருக்கேன் பாரு!”

“நீ நிலத்தில் மட்டும்தான் வாழ முடியும். நீர், நிலம் ரெண்டிலும் என்னால வாழ முடியுங்கிறது தெரியுமா, உனக்கு?”

“உனக்கு உடம்பு மேல கறுப்பா ஒரு ஓடு இருக்கு. அதைப் பார்த்தாலே எனக்குப் பிடிக்கல. என்னைப் பாரு எவ்வளவு மென்மையா அழகா இருக்கேன்!”

“நீ ரொம்ப அழகா இருந்து என்ன பண்ண? நான்தான் ரொம்ப வருஷம் உயிர் வாழ்வேன்.”

ஆமை இப்படிச் சொன்னவுடன் முயலுக்குக் கோபம் வந்துவிட்டது. குரலை உயர்த்திப் பேச ஆரம்பித்தது. இரண்டும் சண்டை போட்டுக்கொண்டே குளக்கரைக்குச் சென்றுவிட்டன.

“முயலே, கொஞ்சம் இந்தப் பக்கம் வா, தண்ணில விழுந்துடப் போறே” என்று சண்டையிலும் கரிசனத்துடன் சொன்னது ஆமை.

“இந்த வேலையெல்லாம் என்கிட்ட வேணாம். எல்லாம் எனக்குத் தெரியும்” என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே தண்ணீருக்குள் பொத்தென்று விழுந்துவிட்டது முயல்.

“ஐயோ... யாராவது ஓடி வாங்க... என்னைக் காப்பாத்துங்க” என்று அலறியது முயல்.

ஆமை வேகமாகக் குளத்துக்குள் இறங்கியது. “பயப்படாதே... என் முதுகில் ஏறிக்கோ. உன்னைக் கரையில் விட்டுடறேன்” என்று முயலிடம் சொன்னது ஆமை.

அப்போது அந்தப் பக்கம் வந்த மீன் ஒன்று, ‘என்ன நடந்தது’ என்று விசாரித்தது.

காரணத்தைக் கேட்டுச் சிரித்த மீன், “உங்களைவிடப் பெரியவங்க நாங்களே அமைதியா இருக்கோம். நீங்க ஏன் இப்படி அடிச்சிக்கிறீங்க?” என்று சொல்லிவிட்டு, வேகமாக நீந்திச்சென்றது.

தரைக்கு வந்த முயலுக்கும் ஆமைக்கும் ஒரே குழப்பம்.

“மீன் என்ன சொன்னதுன்னு உனக்குப் புரிஞ்சுதா?” என்று கேட்டது ஆமை.

இல்லை என்று தலையாட்டியது முயல்.

“கிளியே, இங்கே வா. மீன்தான் எங்களைவிடப் பெரியவங்கன்னு சொன்னுச்சு. அப்படின்னா என்ன?”

“இதைக் காட்டுப் பள்ளிக்கூடம் நடத்துற லூசியானா கரடி கிட்ட கேளு” என்று சொல்லிவிட்டு, கொய்யாப் பழத்தை நோக்கிப் பறந்தது கிளி.

முயலும் ஆமையும் காட்டுப் பள்ளிக்கூடத்துக்குச் சென்றன. லூசியானா பாடம் எடுத்துக்கொண்டிருந்தது. ஆமையும் முயலும் காத்திருந்தன.

சற்று நேரத்தில் வகுப்பு முடிந்ததும் லூசியானா வெளியே வந்தது.

“பள்ளியில் சேர வந்தீங்களா?”

இரண்டும் ஒரே குரலில், “இல்லை... ஒரு சந்தேகம் கேட்க வந்தோம்” என்றன.

“என்ன சந்தேகம்?”

“எனக்கும் இந்த ஆமைக்கும் யார் பெரியவங்கன்னு சண்டை வந்தது. ரெண்டு பேரும் குளத்துக்குள் விழுந்துட்டோம். அப்போ அங்கே வந்த ஒரு மீன், உங்களைவிட நான்தான் பெரியவன்னு சொன்னது. அது எப்படின்னு எங்களுக்கு ஒரே குழப்பம்.”

லூசியானா கொஞ்ச நேரம் யோசித்துவிட்டு, “அந்த மீன் ஏன் அப்படிச் சொல்லுச்சு தெரியுமா? இந்தப் பூமி, சூரியன்ங்கிற நெருப்புக் கோளம்கிட்ட இருந்து பிரிந்துவந்து, சூடான குழம்பாக இருந்தது. பல நூறு கோடி ஆண்டுகளுக்கு முன்னால குளிர்ந்தது. வாயுக்கள் உருவாயின. தண்ணீர் வந்தது. ஒரு செல் உயிரி தோன்றியது. மீன்கள் தோன்றின. அதுக்கப்புறம் ஊர்வன உயிரினங்கள் தோன்றின. அதுக்கப்புறம்தான் பாலூட்டிகள் உருவாயின. அப்படின்னா மீன் சொன்னது சரிதானே? முயலே உன்னைவிட இந்த ஆமை இனம் சீனியர். இதெல்லாம் ஒரு விஷயம்னு சண்டை போடாதீங்க. நம்மையெல்லாம்விட உயர்ந்தது அந்தச் சூரியன். அது இல்லைனா உயிரினங்களே இல்லை” என்றது.

“ஓ... அப்படியா! நன்றி லூசியானா. நாளையிலிருந்து நாங்களும் பள்ளிக்கு வர்றோம். நாலு விஷயங்களைக் கத்துக்கறோம்” என்று முயலும் ஆமையும் ஒன்றாகச் சொன்னவுடன், மகிழ்ச்சியில் சிரித்தது லூசியானா.

- பி. செல்வ ஸ்ரீராம், 4-ம் வகுப்பு, ஜெ.எஸ்.ஆர். மெட்ரிக். பள்ளி, மடத்துக்குளம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x