Published : 29 Dec 2021 06:08 AM
Last Updated : 29 Dec 2021 06:08 AM

2021: கவனம் பெற்ற சிறார்

1.ரையான் குமார், l சைக்கிள் சாகச வீரர்

பெருந்தொற்றின் காரணமாக வீட்டுக் குள்ளேயே இருக்கும் சூழல். அதே நேரத்தில் உடலை ஆரோக்கியமாகவும் வைத்திருக்க வேண்டிய கட்டாயம். ரையானின் அம்மாவும் பாட்டியும் சைக்கிள் சாகச வீரர்கள். அதனால், ரையானையும் சைக்கிள் ஓட்டும்படி உற்சாகப்படுத்தினார்கள். ஐந்து கி.மீ. தொலைவுக்கு சைக்கிள் ஓட்ட ஆரம்பித்த ரையான் 10, 50 கி.மீ. என்று தொலைவை அதிகரித்தார். ஆறே மாதங்களில் 100 கி.மீ. தொலைவுக்கு சைக்கிள் ஓட்டிச்சென்றார். லண்டனில் மணிக்கு 20.08 கி.மீ. வேகத்தில் ஐந்து மணி 17 நிமிடங்களில் 108.09 கி.மீ. தொலைவை சைக்கிளில் கடந்து, உலக சாதனையாளர் பட்டியலில் இடம்பெற்றார். எங்கும் நிற்காமல் தொடர்ந்து சைக்கிள் ஓட்டி, சாதனை படைத்த இளம் வீரர் என்கிற சிறப்பையும் பெற்றிருக்கிறார். சென்னையில் வசிக்கும் ஏழு வயது ரையான் பள்ளிக்குச் செல்ல ஆரம்பித்த பிறகும் அதிகாலையில் எழுந்து சைக்கிள் பயிற்சியை மேற்கொண்டு வருகிறார்.

2. மோஷிகா, l தமிழ் பிராமி எழுதுபவர்

கோவை ராமலிங்கம் காலனி மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் 4ஆம் வகுப்புப் படிக்கும் மோஷிகா, தமிழ் பிராமி கற்றல் கையேடு ஒன்றை எழுதி, வெளியிட்டிருக்கிறார். பொஆ.மு(கி.மு)3ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது தமிழ் பிராமி எழுத்துமுறை. சின்ன வயதிலேயே தமிழ், ஆங்கிலம் போன்ற எழுத்துகளைக் கண்ணாடியில் பார்த்துப் படிக்க ஆரம்பித்த மோஷிகா, விரைவில் கண்ணாடியில் பார்த்ததை எழுதவும் ஆரம்பித்தார். இந்தப் பெருந்தொற்றுக் காலத்தில் வீட்டிலிருந்தபோது அம்மாவிடமிருந்து தமிழ் பிராமி எழுத்துகளைக் கற்றுக்கொண்டார். தமிழ் பிராமி எழுத்துகளுக்கு அருகில் தமிழ் எழுத்துகளையும் எழுதிக் கொடுத்ததால் விரைவாகக் கற்றுக்கொள்ள முடிந்தது என்கிறார் மோஷிகா. ஆத்திச்சூடி, மூதுரை, நன்னூல் போன்றவற்றைத் தமிழ் பிராமியில் எழுதி, ‘தமிழி’ என்று பெயரிட்டுக் கற்றல் கையேடாகக் கொண்டுவந்திருக்கிறார். அடுத்து திருக்குறளைத் தமிழ் பிராமியில் எழுதும் திட்டமும் இவருக்கு இருக்கிறது.

3. கே. சாய் சுதிர், l மலையேற்ற வீரர்

மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த சாய் சுதிருக்கு மலையேறுவதில் ஆர்வம் அதிகம். இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட மலைகளில் ஏறிவிட்டார்! நான்கு வயதில் மலையேற ஆரம்பித்தார். ஒன்பது வயதில் சஹ்யாத்ரி மலைகளை முறையாக ஏறி சாதனை படைத்தார். பத்து வயதில் ரஷ்யாவின் எல்ப்ரஸ் மலையில் ஏறியதால், ஆசியாவில் மலையேறிய மிக இளவயதுக்காரர் என்கிற சாதனையைப் படைத்தார். அடுத்த ஆண்டில் ஆப்பிரிக்காவின் கிளிமாஞ்சாரோவில் ஏறி மேலும் ஒரு சாதனையை நிகழ்த்தினார். இந்தப் பெருந்தொற்றுக் காலத்தில் உலகமே வீட்டில் முடங்கிக் கிடக்க, சாய் சுதிர் மட்டும் மூன்று மலைகளின் உச்சியைத் தொட்டுவிட்டுத் திரும்பியிருக்கிறார். சாய் சுதிர் எளிய குடும்பத்தைச் சேர்ந்தவர். இவர் மலையேற்றம் செல்வதற்குப் பள்ளியும் தன்னார்வ அமைப்புகளும் உதவிவருகின்றன.

4. அபிமன்யு, l சதுரங்க வீரர்

அமெரிக்காவில் வசிக்கும் இந்தியரான அபிமன்யு மிஸ்ரா, உலகிலேயே இளம் கிராண்ட் மாஸ்டர் என்கிற சாதனையைப் படைத்திருக்கிறார். அபிமன்யு 12 வயது 4 மாதங்களில் இந்தச் சாதனையை நிகழ்த்தி, கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்றிருக்கிறார். இதன் மூலம் 19 ஆண்டுகளாக இளம் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வைத்திருந்த ரஷ்யாவின் செர்கே கர்ஜாகினின் சாதனையையும் (12 வயது 7 மாதங்கள்) முறியடித் திருக்கிறார் அபிமன்யு. இதற்கு முன் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரக்ஞானந்தா 12 வயது 10 மாதங்களில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்றிருக்கிறார்.

5. உ. வினிஷா, l பருவநிலை ஆர்வலர்

திருவண்ணாமலையைச் சேர்ந்த 15 வயது வினிஷா, பருவநிலை மாற்றம் குறித்து அக்கறை செலுத்தி வருபவர். சூரிய ஆற்றலில் இயங்கும் இஸ்திரிப் பெட்டியை 12 வயதில் உருவாக்கியவர். இந்தக் கண்டுபிடிப்புக்காக ஸ்வீடனின் ‘சில்ட்ரன்’ஸ் க்ளைமேட் பிரைஸ்’ வழங்கப்பட்டது. இங்கிலாந்து இளவரசர் வில்லியம்ஸ் தலைமையில் சுற்றுச்சூழலுக்குத் தீர்வு தரக்கூடிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்துபவர்களுக்கு ‘எர்த்ஷாட்’ எனப்படும் சுற்றுச்சூழலுக்கான ஆஸ்கர் விருது வழங்கப்படுகிறது. இந்தப் போட்டியின் இறுதிச்சுற்று வரை சென்றவர் வினிஷா. நவம்பர் மாதம் ஸ்காட்லாந்தின் க்ளாஸ்கோ நகரில் நடைபெற்ற COP26 பருவநிலை மாநாட்டுக்கு, இளவரசர் வில்லியம்ஸ் அழைப்பின் பேரில் கலந்துகொண்டார். இந்த மாநாட்டில் பருவநிலை மாற்றம் குறித்து அக்கறைகொள்ளாத, வாக்குறுதிகளை நிறைவேற்றாத உலகத் தலைவர்கள் மீதான தன்னுடைய வருத்தத்தை வெளிப்படுத்தினார். வினிஷாவின் பேச்சு உலகம் முழுவதும் கவனம் பெற்றுள்ளது.

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x