Published : 26 Dec 2021 10:05 AM
Last Updated : 26 Dec 2021 10:05 AM

விடைபெறும் 2021: முகங்கள்

ஒவ்வோர் ஆண்டும் தடைகளைத் தகர்த்துப் பெண்கள் முன் நகர்ந்து கொண்டே இருக்கிறார்கள். 2021இல் கரோனா பெருந்தொற்றால் உலகமே முடங்கிக் கிடந்தபோதும் தத்தமது துறைகளில் சாதித்த பெண்கள் ஏராளம். இன்னும் சிலர் சோர்ந்துகிடந்த மனங்களுக்கு நம்பிக்கை அளித்தனர். அப்படி மக்கள் மனத்தில் இடம்பிடித்த சாதனைப் பெண்களில் சிலர் இவர்கள்:

நாட்டுப்பற்றின் வெளிப்பாடு

ராணுவத்தில் பணியாற்றி நாட்டுக்காக உயிர்நீத்த மேஜர் விபூதி ஷங்கர் தெளண்டியாலின் மனைவி நிகிதா கெளல் (29). திருமணமாகி ஒன்பது மாதங்களே ஆன நிலையில் தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதலில் கணவன் இறந்துவிட, கணவனைப் போலவே தானும் தேசப் பாதுகாப்புப் பணியில் இணையத் தீர்மானித்தார். முறைப்படி தேர்வெழுதி தேர்ச்சிபெற்று சென்னையில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சிப் பள்ளியில் ஓராண்டு பயிற்சியை நிறைவுசெய்து ராணுவ அதிகாரியானார்.

இளைய குரல்

அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்ற விழாவில் கவிதை வாசித்து உலகத்தின் கவனத்தை ஈர்த்தார் 22 வயது அமெண்டா. அமெரிக்க வரலாற்றில் பதவியேற்பு விழாவில் கவிதை வாசித்த மிக இளவயதுப் பெண் இவர்.

மூத்த விவசாயி

கோயம்புத்தூர் தேக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பாப்பம்மாள் ரங்கம்மாளுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. தனது இரண்டரை ஏக்கர் நிலத்தில் பயறு வகைகளை இயற்கை முறையில் பயிரிட்டுவரும் பாப்பம்மாளுக்கு 105 வயது.

அக்கறைக்கு மரியாதை

அமெரிக்கக் காவல்துறையால் ஜார்ஜ் ஃபிளாய்டு கொல்லப்பட்டதை உலகுக்கு அம்பலப்படுத்திய டார்னெல்லா ஃப்ரேசருக்கு (18) புலிட்சர் சிறப்புப் பரிசு வழங்கப்பட்டது. தனது செல்போனில் டார்னெல்லா பதிவுசெய்த வீடியோ, ஜார்ஜ் ஃபிளாய்டு கொலையில் குற்றவாளிகள் தண்டிக்கப்படக் காரணமாக அமைந்தது.

வர்த்தக அடையாளம்

உலக வர்த்தக சபையின் இயக்குநராக 2021 மார்ச் முதல் செயல்பட்டுவரும் எங்கோசி ஒகோன்ஜோ இவேலா (67), அந்தப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண், கறுப்பினத்தவர். பொருளாதார நிபுணரான இவர், தேர்ந்த வர்த்தகத் தலைவர். சுற்றுச்சூழலிலும் மனித உரிமையிலும் ஆர்வம் மிக்கவர்.

மதம் கடந்த பொறுப்பு

பாகிஸ்தான் நிர்வாகப் பணிக்கு முதல்முறையாகத் தேர்வானார் இந்துப் பெண் சனா ராம்சந்த். இது இந்திய ஆட்சிப் பணிக்கு ஒப்பானது. பாகிஸ்தானில் சிந்து மாகாணத்தில் இந்துக்கள் அதிகமாக வசிக்கும் ஷிகார்பூர் மாவட்டத்தில் மருத்துவராகப் பணியாற்றிவந்தவர் சனா ராம்சந்த்.

திறமைக்கு அங்கீகாரம்

சீனாவின் ஜிங்ஜாங் மாகாணத்தில் செயல்பட்டுவந்த ரகசிய சிறைச்சாலை குறித்து ஆதாரத்துடன் நிறுவியதற்காக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இதழாளர் மேகா ராஜகோபாலன், சர்வதேச செய்திவழங்கலுக்கான புலிட்சர் பரிசை வென்றார்.

திரைக்குப் பின்னால்

‘நொமாட்லேண்ட்’ படத்தை இயக்கிய சீன இயக்குநர் க்ளோயி ஸாவோ, ஆஸ்கர் விருது பெற்ற இரண்டாம் பெண், முதல் ஆசியப் பெண் என்கிற பெருமையைப் பெற்றார்.

‘உயர்ந்த’ பணி

துர்கா சதி (32), ரோஷினி நெகி (25), மம்தா கன்வாசி (33) மூவரும் இந்தியாவின் இரண்டாம் உயர்ந்த சிகரமான நந்தாதேவியில் 14,500 அடியில் பாதுகாப்புப் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.

இளம் மேயர்

இந்தியாவின் இள வயது மேயரானார் கேரளத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஆர்யா ராஜேந்திரன் (21). சிறுவர் அமைப்பான பால சங்கத்தில் பத்து வயதில் இணைந்தவர், பிறகு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் அமைப்பான ‘இந்திய மாணவர் சங்க’த்தில் செயல்பட்டு வந்தார்.

பெண்கள் படை

மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படை சார்பில் உயரடுக்கு கமாண்டோ படையான ‘கோப்ரா’ பிரிவில் 34 பெண்கள் இணைக்கப்பட்டனர். பெண்களை மட்டுமே கொண்ட உலகின் முதல் கமாண்டோ படை இது.

வழிகாட்டிய தலைமை

நாசாவின் பெர்சிவியரன்ஸ் ரோவர் விண்கலத்தை வான்வெளியில் அதற்குரிய பாதையில் வழிநடத்தி செவ்வாய்க் கோளில் தரையிறக்கும் பணியைச் செய்த குழுவை இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விண்வெளி வீராங்கனை ஸ்வாதி மோகன் வழிநடத்தினார்.

பறக்கும் பெண்கள்

ஸோயா அகர்வால், பப்பாகரி தன்மாய், அகான்ஷா சோனாவரே, ஷிவானி மன்ஹாஸ் ஆகிய நால்வர் அடங்கிய ‘ஏர் இந்தியா’ நிறுவனத்தின் கேப்டன் குழு சான்பிரான்சிஸ்கோவிலிருந்து பெங்களூருவரை 16 ஆயிரம் கி.மீ., தொலைவுக்கு விமானத்தை இயக்கி வரலாறு படைத்தது.

இனி துணிந்து சொல்லலாம்

பத்திரிகையாளர் பிரியா ரமணி மீது முன்னாள் மத்திய அமைச்சர் எ.ஜே.அக்பர் தொடுத்த அவதூறு வழக்கில் டெல்லி நீதிமன்றம் பிரியா ரமணியை விடுதலை செய்து தீர்ப்பளித்தது. “ஆணின் நற்பெயரைவிடவும் வழக்கில் தொடர்புடைய பெண்ணின் வாழ்வுரிமையும் கண்ணியமும் முக்கியம். ஒரு பெண் தனக்கு நேர்ந்ததை எந்தத் தளத்தில் வேண்டுமானாலும் சொல்லலாம், எத்தனை ஆண்டுகள் கழித்தும் சொல்லலாம்” என்று அந்தத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டது.

போராட்டத்துக்குக் கிடைத்த பரிசு

பெங்களூருவைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் திஷா ரவி (22), சர்வதேச சதியில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு ‘டூல் கிட்’ வழக்கில் டெல்லி காவல் துறையினரால் கைதுசெய்யப்பட்டார். ஓராண்டுக்கும் மேலாக டெல்லியில் நடந்த விவசாயிகள் போராட்டத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக இவர் பங்கேற்றார். ஸ்வீடன் காலநிலை மாற்றப் போராளியான கிரெட்டா துன்பெர்க் முன்னெடுத்த ‘ஃபிரைடேஸ் ஃபார் ஃபியூச்சர்’ அமைப்பின் இந்தியப் பிரிவின் பொறுப்பாளர் திஷா.

முதல் பிரதமர்

துனீசியப் பிரதமராக நியமிக்கப்பட்டதன் மூலம் அரபு உலகத்தில் பிரதமரான முதல் பெண் என்னும் பெருமையைப் பெற்றுள்ளார் நஜ்லா பெளடென் ரோம்தானே. பல்கலைக்கழகப் பேராசிரியையான நஜ்லா, உயர்கல்வி அமைச்சகத்தில் முக்கியப் பொறுப்பு வகித்தவர்.

உள்ளாட்சியில் அதிகாரம்

2021இல் நடந்த உள்ளாட்சித் தேர்தல் உள்ளூர் அரசியல் அதிகாரத்தில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை உறுதிபடுத்தியிருக்கிறது. இளையோரையும் புது முகங்களையும் இந்தத் தேர்ந்தலில் காண முடிந்தது. பி.ஏ., பட்டதாரியான 21 வயது அனு, புதிதாக உருவாக்கப்பட்ட தென்காசி மாவட்டத்துக்குட்பட்ட தெற்குமேடு ஊராட்சி மன்றத் தலைவரானார். வேங்கடம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் இன்ஜினீயரிங் பட்டதாரி சாருகலா (22). திருநெல்வேலி மாவட்டம் சிவந்திப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டு மகத்தான வெற்றிபெற்றார் பெருமாத்தாள். 90 வயதாகும் இவர், தன்னை எதிர்த்துப் போட்டியிட்டவர்களை டெபாசிட் இழக்கச் செய்தார்.

விளையாட்டில் முத்திரை

சர்வதேச கிரிக்கெட்டில் 10 ஆயிரம் ரன்களை அடித்த இரண்டாம் வீராங்கனை, முதல் இந்திய வீராங்கனை ஆகிய இரண்டு பெருமைகளைப் பெற்றார் மிதாலி ராஜ். ஒரு நாள் போட்டியில் அதிக ரன்களைக் குவித்த முதல் வீராங்கனை என்கிற சாதனையையும் நிகழ்த்தியிருக்கிறார்.

கவனம் ஈர்த்த குரல்

கன்னியாகுமரி மாவட்டம் வாணியக்குடி கிராமத்தைச் சேர்ந்த செல்வமேரி (65). அவர் மீது மீன் நாற்றம் வீசுவதாகக் கூறி பேருந்தில் இருந்து இறங்கும்படிச் சொல்லியிருக்கிறார் நடத்துநர். செல்வமேரி தனக்கு நேர்ந்த அநீதி குறித்து ஆற்றாமையோடு அழுது புலம்பினார். இதை அங்கிருந்த ஒருவர் வீடியோவாகப் பதிவுசெய்து வெளியிட அது சமூக வலைத்தளங்களில் வைரலானது.

ஒலிம்பிக் தங்கங்கள்

2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கான முதல் பதக்கத்தை வென்றார் பளு தூக்கும் வீராங்கனை மீராபாய் சோனு. அவரைத் தொடர்ந்து குத்துச்சண்டை வீராங்கனை லவ்லினா பதக்கம் வென்றார். இந்திய ஹாக்கி அணியின் வந்தனா, தென்னாப்ரிக்கவுக்கு எதிரான போட்டியில் மூன்று கோல்களை எடுத்து ஹாட்டிரிக் அடித்தார். ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதிபெற்ற முதல் இந்திய வாள்வீச்சு வீராங்கனை என்கிற பெருமையைப் பெற்றார் பவானி தேவி. பாய்மரப் படகுப் போட்டியில் இந்தியாவின் சார்பில் ஒலிம்பிக்கில் காலடி எடுத்து வைத்த முதல் பெண் நேத்ரா குமணன். தமிழகத்தைச் சேர்ந்த சுபா, ரேவதி, தனலட்சுமி ஆகிய மூன்று தடகள வீராங்கனைகளும் ஒலிம்பிக்கில் பங்கேற்றனர்.

வெற்றிக்கான ஓட்டம்

திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட நாயக்கனேரி ஊராட்சித் தலைவர் பதவிக்கு, அந்த ஊர் மக்களின் எதிர்ப்பையும் மீறி கடைசி நாளன்று பரபரப்பாக ஓடிவந்து வேட்பு மனு தாக்கல் செய்தார் பட்டியல் இனத்தைச் சேர்ந்த இந்துமதி.

வரலாற்றுப் பெருமை

உச்ச நீதிமன்ற நீதிபதியாக பி.வி. நாகரத்னா, ஹிமா கோலி, பாலா திரிவேதி ஆகிய மூவரும் பதவி உயர்வு பெற்றதன் மூலம் உச்ச நீதிமன்றத்தில் பெண் நீதிபதிகளின் எண்ணிக்கை நான்காக அதிகரித்தது. இந்திரா பானர்ஜி 2018 முதல் நீதிபதியாக இருக்கிறார். ஒரே நேரத்தில் மூன்று பெண் நீதிபதிகள் உச்ச நீதிமன்றத்தில் பதவியேற்றது இதுவே முதல் முறை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x