Last Updated : 24 Dec, 2021 12:01 PM

 

Published : 24 Dec 2021 12:01 PM
Last Updated : 24 Dec 2021 12:01 PM

டிசம்பர் திரும்பியது திரை ரசிகர் திருவிழா

இன்னும் விடைபெறாத கரோனா பெருந்தொற்று, ஓடிடி எழுச்சி எனும் இரு பெரும் சவால்களுக்கிடையில் சென்னை டிசம்பர் விழாக்களின் அடை யாளங்களில் ஒன்றான சர்வதேசத் திரைப்பட விழா அடுத்த வாரம் கோலாகலமாகத் தொடங்குகிறது.

தொடக்க விழா திரைப்படமாக கான் விழாவில் பாம் டிஓர் (Palme d'Or) விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட இயக்குநர் நன்னி மொரட்டியின் (Nanni Moretti) ‘த்ரீ ஃப்ளோர்ஸ்’ திரையிடப்படுகிறது. மூன்று மாடிகளில் வசிக்கும் இஸ்ரேலின் மூன்று நடுத்தர வர்க்கக் குடும்பங்களை மையமாகக் கொண்ட நாவலை, அந்நாட்டின் பண்பாட்டுக்கும், வாழ்க்கை முறைக்கும் நேரடித் தொடர்பில்லாத இத்தாலியின் ரோம் நகரத்தை கதைக் களமாக்கியிருப்பதே இயக்குநர் எதிர்கொண்டுள்ள முதல் சவால். காலத்தாலும் மாறுபட்ட கதாபாத்திரங்களாலும் பின்னப்பட்ட ஓர் உணர்வுபூர்வ மெலோ டிராமாவாக இந்தப் படம் கருதப்படுகிறது.

இந்த ஆண்டு நிறைவு விழாவில் திரையிடப்படும் ‘வோர்டெக்ஸ்’ சான் செபாஸ்டியன் திரைப்பட விழாவில் பரிசு வென்ற படம். ‘லவ்’, ‘க்ளைமாக்ஸ்’ போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் கேஸ்பர் நோவாவின் படைப்பு என்கிற நினைப்பில் ‘வோர்டெக்ஸ்’ படத்தை அணுகுவோர் ஏமாற்றம் அடையலாம். அதேநேரம், மாறுபட்ட வியத்தகு திரை விருந்து உத்தரவாதம். வயோதிகத்தையும் மரணத்தையும் தனக்கே உரிய திரைமொழியில் கையாண்டுள்ள கேஸ்பரின் இந்தப் படம், வயோதிகத்தின் வலிமிகு துயரக் காவியமான 'Amour' படத்தையும் நினைவூட்டலாம். திரைமொழியை புதுப்புது பரிசோதனைகளைச் செய்பவர், அதனூடாக பலரும் சொல்லத் தயங்கும் மனித மனத்தின் அதீதத்தை வெளிக்காட்ட முயலும் கேஸ்பரின் பக்குவமான படைப்பாக இப்படம் கருதப்படுகிறது.

சிங்கீதம் சீனிவாசராவ் தமிழில் இயக்கிய முதல் படமான, ‘திக்கற்ற பார்வதி’ சிறப்புத் திரையிடலில் இடம்பெறுகிறது. காந்த், லட்சுமி, பூர்ணம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் நடிப்பில் 1975-ம் ஆண்டில் தமிழில் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருது பெற்ற இப்படம் ராஜாஜி எழுதிய நாவலைத் தழுவியது.

இந்தப் படங்கள் அனைத்தையும் டிசம்பர் 30-ம் தேதி தொடங்கி ஜனவரி 6-ம் தேதி வரை 8 நாட்கள் நடைபெறும் 19-வது சென்னை சர்வதேசத் திரைப்பட விழாவில் காணலாம். ‘இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன்’ நடத்தும் இந்தத் திரைப்பட விழாவை பிவிஆர் சினிமாஸ் இணைந்து வழங்குகிறது.

2020 டிசம்பரில் நடந்திருக்க வேண்டிய 18-வது சென்னை சர்வதேசத் திரைப்பட விழா கரோனா பரவல் காரணமாக 2021 பிப்ரவரி 19-ம் தேதி தொடங்கி 25-ம் தேதி வரை நடைபெற்ற நிலையில், அடுத்த சர்வதேசத் திரைப்பட விழா வழக்கம்போல் டிசம்பரில் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

53 நாடுகள், 121 படங்கள்

19 ஆண்டுகளாக சென்னை சர்வதேசத் திரைப்பட விழாவை ஒருங்கிணைத்துவரும் இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் (Indo Cine Appreciation Foundation) திரைப்படச் சங்கத்தின் பொதுச் செயலாளரும் திரைப்பட விழா இயக்குநருமான இ.தங்கராஜ் கூறுகையில், ‘‘கடந்த சில ஆண்டுகளில் 53 உலக நாடுகளிலிருந்து வெளியான 121 படங்கள் 19-வது சென்னை சர்வதேசத் திரைப்பட விழாவில் திரையிடப்படுகின்றன. இவற்றில் சிறந்த வெளிநாட்டுப் படத்துக்கான ஆஸ்கர் போட்டிப் பிரிவுக்கு அனுப்பப்பட்ட ஈரான் நாட்டின் ‘ஹீரோ’ (A Hero), ஆஸ்திரேலியாவின் ‘வென் பொமேகிரேனட்ஸ் ஹவுல்’ (When Pomegranates Howl), இந்தோனேசியாவின் ‘யுனி’ (Yuni), தென்கொரியாவின் ‘டேக்ஸி டிரைவர்’ ஆகிய நான்கு படங்கள் சிறப்பு கவனம் பெறுகின்றன.

கான் விழாவில் வென்ற ஐஸ்லாந்தின் லேம்ப் ( Lamb), தாய்லாந்தின் மெமோரியா (Memoria), கிரீஸ் நாட்டின் ஃபெதர்ஸ் (Feathers) ஆகிய படங்கள், பெர்லின் திரைப்பட விழாவில் தங்கக் கரடி, வெள்ளிக் கரடி விருது வென்ற படங்கள், வெனிஸ் திரைப்பட விழாவில் வென்ற மூன்று படங்கள், சான் செபாஸ்டியன் திரைப்பட விழாவில் வென்ற மூன்று படங்கள் உள்ளிட்டவை இந்த முறை திரையிடப்படுகின்றன.

படைப்பாளிகள், சினிமா ஆர்வலர்கள், உதவி இயக்குநர்கள் ஓரிடத்தில் சங்கமிக்க வைக்கும் வகையில் சர்வதேசத் தரத்தில் திரைப்பட விழா நடத்தப்படுவதால் இது சென்னையின் அடையாளமாகவும், கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு இடையில் திரை ரசிகர்கள் கொண்டாடும் விழாவாகவும் அமைந்துள்ளது.

‘தி இந்து’ ஆங்கிலம், ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ்களின் ஊடக ஒத்துழைப்புடன் இவ்விழா நடைபெற உள்ளது. நிறைவு நாளில் அமிதாப் பச்சன் ‘யூத் ஐகான்’ விருது, சிறந்த படம் முதலிடம், சிறந்த படம் இரண்டாமிடம், ஸ்பெஷல் மென்ஷன் ஜுரி விருது ஆகிய பிரிவுகளின் கீழ் படைப்புகளுக்கு விருதுகள் வழங்கப்பட உள்ளன’’ என்று தெரிவித்தார்.

‘கன்ட்ரி ஃபோகஸ்’ பிரிவு

‘கன்ட்ரி ஃபோகஸ்’ பிரிவில் பிரான்ஸ் நாட்டின் 6 பிரெஞ்சுப் படங்கள், 4 ஜெர்மானியத் திரைப்படங்கள், ஈரான் நாட்டின் 9 படங்கள், 5 கொரியப் படங்கள் இடம்பெறுகின்றன. இந்தியன் பனோரமா பிரிவில் சிறந்த 10 திரைப்படங்களும், மலையாளத்தில் 4 படங்களும் திரையிடப்படுகின்றன.

சென்னை சர்வதேசத் திரைப்பட விழாவில் முதல்முறையாக கஸகஸ்தான், கம்போடியா, கானா, உருகுவே, ஆப்கானிஸ்தான், லாட்வியா உள்ளிட்ட 8 நாடுகளின் படங்களும் திரையிடப்படுகின்றன. இத்துடன் டிமாசா எனும் திபெத் மொழியில் எடுக்கப்பட்ட செம்கோர் படமும் திரையிடப்படுகிறது. இப்படம் கோவா சர்வதேசத் திரைப்பட விழாவிலும் திரையிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அண்ணா சாலை அருகில் உள்ள பி.வி.ஆர். மல்டி ஃபிளக்ஸில் (பழைய சத்யம் சினிமாஸ்) நான்கு திரையரங்குகள் (சத்யம், சீசன்ஸ், செரீன், சிக்ஸ் டிகிரீஸ்), அண்ணா திரையரங்கம் ஆகிய ஐந்து திரைகளில் படங்கள் திரையிடப்படுகின்றன. திரைப் படைப்பாளிகள் பங்கேற்கும் 6 ‘மாஸ்டர் கிளாஸ்’ பயிலரங்குகளும் நடைபெற உள்ளன. அனைத்து நாட்களிலும் கரோனா பாதுகாப்பு வழிமுறைகளை ரசிகர்கள் தவறாமல் பின்பற்ற வேண்டும்.

19-வது சென்னை சர்வதேசத் திரைப்பட விழாவில் பங்கேற்பதற்கான முன்பதிவு, திரைப்படங்களின் பட்டியல், நேரம் உள்ளிட்ட கூடுதல் விவரங்களை www.icaf.in; www.chennaifilmfest.com; https://bit.ly/3qmpsC8 ஆகிய இணையதளங்களில் அறிந்துகொள்ளலாம்.

திரையிடப்படும் இந்தியப் படங்கள்

தமிழ்ப் படங்கள்

கர்ணன்
உடன்பிறப்பே
தேன்
கட்டில்
சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்
இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும்
ஐந்து உணர்வுகள்
மாறா
பூமிகா
சேத்துமான்
கயமை கடக்க

மலையாளப் படங்கள்

காக்கத்துருத்து
நாயாட்டு
நிறைய தத்தகளுள்ள மரம்
சன்னி

பிறமொழி இந்தியப் படங்கள்

21-ஸ்ட் டிஃபன் - குஜராத்தி
டொல்லு - கன்னடம்
ஃபனரல் - மராத்தி
கல்கொக்கோ - பெங்காலி
நாட்யம் - தெலுங்கு
நிவாஸ் - மராத்தி
கிலியு பஞ்சரதொலில்லா - கன்னடம்
செம்கோர் - திமாசா
அன்ஹெர்ட் - தெலுங்கு
வர்துல் - மராத்தி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x