Last Updated : 24 Dec, 2021 11:31 AM

Published : 24 Dec 2021 11:31 AM
Last Updated : 24 Dec 2021 11:31 AM

உலகைக் கட்டிப்போட்ட ஓடிடி தொடர்கள்

திரையரங்குக்கு மாற்றாக ஓடிடி தளம் உருவெடுத்துவருகிறது. கரோனா வைரஸ் பரவல் அதை உறுதிப்படுத்திவிட்டது. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் போல், திரைப்பட மொழியையோ நாடக மொழியையோ பிரதியெடுக்க முயலாமல், தனித்துவ மொழி ஓடிடி தளத்தில் உருவாகிவருகிறது. ஓடிடி தளங்களின் கதைக்களமும் அவை பேசும் விஷயங்களும் எல்லையற்றதாக விரிந்துவருகின்றன. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, இந்த ஆண்டு வெளியான தொடர்களின் ஆக்க நேர்த்தி மேம்பட்டிருக்கிறது. இந்த ஆண்டு வெளியாகிப் பரவலான வரவேற்பைப் பெற்ற முக்கியமான ஓ.டி.டி. தொடர்களில் சில:

ஸ்க்விட் கேம் | நெட்பிளிக்ஸ்

மிகவும் மோசமான பண நெருக்கடியில் இருக்கும் நபர்கள், 350 கோடி ரூபாய் பரிசுக்கான போட்டியில் பங்கேற்கிறார்கள். அதில் ஒருவரே வெற்றி பெற முடியும், அந்த ஒருவர் மட்டுமே உயிர் வாழவும் முடியும். இந்தச் சூழலில், அந்த மனிதர்களிடம் வெளிப்படும் முனைப்பு, சுயநலம், குரூர வன்முறையைக் காட்சிப்படுத்தியிருக்கும் விதம், மனசாட்சியை உலுக்குவதாக உள்ளது. பொருளாதார ஏற்றத்தாழ்வுகள், அதன் நுட்பமான அரசியல், அதில் சிக்கிக்கொள்ளும் மனிதர்களின் உளவியல் போன்றவற்றை குறித்து இந்தத் தொடர் உருவாக்கியுள்ள உரையாடல் மனிதர்களின் அடிப்படை இயல்பு குறித்து விவாதத்தை உலகெங்கும் ஏற்படுத்தி இருக்கிறது.

மணி ஹெய்ஸ்ட் பாகம் 5, பகுதி 2 | நெட்பிளிக்ஸ்

மனிதர்களின் இருப்பையும் சமூகத்தின் அமைப்பையும் பாதுகாக்க உருவாக்கப்பட்ட சட்ட திட்டங்களையும் அதிகார மையத்தையும் கேள்விக்கு உள்ளாக்கிய தொடர். எது சரி, எது தவறு, அதைப் பிரிக்கும் கோடு எது, அந்தக் கோட்டைத் தீர்மானிப்பது யார் என்பது போன்றவற்றைச் சட்டத்தின் பார்வையில் குற்றவாளிகளாக இருக்கும் கொள்ளையர்களிடம் வெளிப்படும் நல்ல இயல்புகள் மூலமாகக் கேள்விக்கு உட்படுத்திய தொடர். டோக்கியோவின் மரணத்துக்குப் பின்னர் தொடங்கும் இந்த இறுதிப் பகுதியில், புரொஃபசர் தன் குழுவினருடன் இணைந்து அரசாங்கத்தின் மொத்த தங்க இருப்பையும், அரசாங்கத்தின் அனுமதியுடனே வெற்றிகரமாகக் கொள்ளை அடிப்பதுடன் தொடர் முடிந்திருக்கிறது.

மேர் ஆஃப் ஈஸ்ட் டவுன் | டிஸ்னி ஹாட்ஸ்டார்

மேர் ஷீஹானாக கேட் வின்ஸ்லெட் நடித்திருக்கும் இந்த மர்மத் தொடர் தொடக்கம் முதல் இறுதிவரை நம்மை இருக்கை நுனியில் வைக்கிறது. இளம் பெண்களுக்குப் பாதுகாப்பற்றதாக இருக்கும் ஊரில் ஒரு இளம்பெண் கொலை செய்யப்படுகிறான். போதைப்பொருட்களும், அதற்கு அடிமையானவர்களும் அந்த ஊரின் தெருக்களில் நிரம்பி வழிகிறார்கள். இவற்றை மீறி கொலைகளுக்கான முடிச்சுகளை மேர் எப்படி அவிழ்க்கிறார் என்பதே இந்தத் தொடர். மகனின் இழப்பால் ஏற்பட்ட சோகத்தை மீறி புலனாய்வு செய்யும் மேரின் அன்றாட வாழ்வை காட்சிப்படுத்தியிருக்கும் விதமும், ஊர் குறித்த அழகிய காட்சிகளும், ஆக்க நேர்த்தியும், கேட் வின்ஸ்லெட்டின் நடிப்பும் இந்த தொடரை கவனத்துக்குரியதாக மாற்றியுள்ளன.

வாண்டா விஸன் | டிஸ்னி ஹாட்ஸ்டார்

பெருந்தொற்றால் பெரும் இன்னலுக்கு உள்ளான கடந்த ஆண்டை முழுமையாக உள்ளடக்கிய நிகழ்ச்சி இது. துக்கமும் சோகமும் ஓர் ஆழ்ந்த தியானமாக இந்தத் தொடரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கும், அதிர்ச்சியில் உறைந்தவர்களுக்கும் இந்தத் தொடர் ஆறுதல் அளித்தது. அவர்களின் சோகத்தை மடைமாற்றிக்கொள்ள உதவியது. நம் வீட்டு ஜன்னலின் வழியே வெளி நிகழ்வுகளை ரசிப்பதைவிட, தொலைக்காட்சியைப் பார்ப்பதே மேல் என்றிருந்த காலம் ஒன்று இருந்தது என்பதை இந்த தொடர் நமக்கு நினைவூட்டும்.

மெய்டு | நெட்பிளிக்ஸ்

ஓர் எளிய கதையில், எளிய மனிதர்களின் வாழ்க்கை சார்ந்த பிரச்சினைகளை நெகிழ்ச்சியுடன் பதிவுசெய்ததன் மூலம் கவனம் ஈர்த்த தொடர். திருமணத்துக்குப் பிந்தைய வாழ்வில் சுய சம்பாத்தியம் இல்லாத பெண்களின் நிலை உலகெங்கும் ஒரே மாதிரியாகவே உள்ளது என்பதை அழுத்தமாக உணர்த்தியது. மனரீதியாக குடும்ப வன்முறைக்கு ஆளாகும் ஒரு இளம்பெண் தன் குழந்தையுடன் குடும்ப அமைப்பிலிருந்து வெளியேறி, தனக்கென்று ஒரு அடையாளத்தை உருவாக்கிக்கொள்ளும் முயற்சியைக் காட்சிப்படுத்தி இருப்பதன் மூலம், பொருளாதார சுதந்திரமற்ற பெண்களுக்கு நம்பிக்கையூட்டியது இந்தத் தொடர்.

இந்தியத் தொடர்கள்

ஃபேமிலி மேன் 2 l அமேசான் பிரைம்

சமூக அவலங்களாலும், அதிகார துஷ்பிரயோகங்களாலும் பாதிக்கப்படும் மக்களின் உண்மை நிலையை ஓடிடி தொடர்கள் மட்டுமே ஓரளவுக்குத் துணிச்சலாகக் காட்டுகின்றன. ஃபேமிலி மேனின் முதல் பாகத்தைப் போலவே இதிலும் சர்ச்சைகளுக்குப் பஞ்சமில்லை. இரண்டாம் பாகம் முழுக்க ஈழப் பின்னணியைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதை இயக்குநர் லாகவமாகவும் கையாண்டிருக்கிறார். தமிழ்நாட்டில் நிகழும் கதை என்பதால், நிறையத் தமிழ் நடிகர்கள் பயன்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.

டீகப்புள்டு l நெட்ஃபிளிக்ஸ்

ஹர்திக் மேத்தா இயக்கத்தில் மாதவன், சுர்வீன் சாவ்லா நடிப்பில் உருவாகியிருக்கும் தொடர் இது. திருமணத்துக்குப் பிந்தைய உறவுச் சிக்கல்களை, விவகாரத்தின் விளிம்பில் நிற்கும் மாதவன், சுர்வீன் ஆகியோரின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களின் வழியே பேசுகிறது இந்தத் தொடர். உறவுகளும் உணர்ச்சிகளும் முக்கியத்துவம் இழந்து, தொழில்சார் வாழ்க்கையே பிரதானம் என்றாகி இருக்கும் இன்றைய காலகட்டம் பிரதிபலிக்கப்படுகிறது.

குல்லாக் சீசன் 2 l சோனி லிவ்

நடுத்தரவர்க்க இந்தியக் குடும்பங்களில் ஒன்றான மிஸ்ராவின் குடும்பத்துடைய அன்றாட நிகழ்வுகள், அதில் அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள், அவற்றை அவர்கள் எதிர்கொள்ளும் விதத்தை மென் சோகம் கலந்த நகைச்சுவையினூடே நெகிழ்ச்சியுடன் பதிவுசெய்திருக்கும் தொடர் இது. ‘குலாக்’ எனும் களிமண் உண்டியலின் குரல் வழியே நிகழ்வுகள் முன்னெடுத்துச் செல்லப்படுகின்றன. மிஸ்ரா குடும்பத்தினர் நம்மைப் பிரதிபலிப்பதால், நாமும் அவர்களுடன் இணைந்து பயணிக்கிறோம்.

அஸ்பிரண்ட்ஸ் l யூடியூப்

பொதுவாக நண்பர்கள் என்றால், ஒன்று கூடி வெட்டியாக ஊர் சுற்றுவார்கள் என்றே திரைப்படங்களில் காட்டப்படுகிறது. இந்த நிலையில், யூடியூபில் வெளியாகியிருக்கும் இந்த தொடர் லட்சியத்துக்காக இணைந்து பயணிப்பவர்களாக நண்பர்களைக் காட்டியுள்ளது. யுபிஎஸ்சி தேர்வில் வெற்றிபெறும் முனைப்புடன் இருக்கும் மூன்று நண்பர்களின் லட்சியப் பயணம் இது. சற்றும் திசை மாறாமல் அவர்களின் விருப்பு வெறுப்பைச் சுற்றியே கதை நிகழ்வதால், நம்மையும் ஈர்க்கிறது.

கோட்டா ஃபேக்டரி சீசன் 2 l நெட்ஃபிளிக்ஸ்

ஐஐடி-ஜேஇஇ தேர்வில் ஆர்வம் கொண்டிருக்கும் இன்றைய தலைமுறை மாணவர்கள் அன்றாட வாழ்வில் எதிர்கொள்ளும் சவால்கள், சிக்கல்கள், சிரமங்கள் ஆகியவற்றின் தொகுப்பு. இந்த தொடரில் ஜீது பய்யா எனும் கதாபாத்திரமாகவே பிரபல இந்தி நடிகர் ஜிதேந்திர குமார் வாழ்ந்திருக்கிறார், இயக்கம் ராகவ் சுப்பு. நம் மனத்தில் இடம்பிடித்துவிடும் தொடர்களில் இதுவும் ஒன்று. முதல் சீசனில் பெற்ற வரவேற்பை இரண்டாம் சீசன் விஞ்சிவிட்டது.

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x