Published : 23 Dec 2021 11:07 AM
Last Updated : 23 Dec 2021 11:07 AM

அகத்தைத் தேடி 73: வண்ணங்களின் கடவுள்!

யுனெஸ்கோ நிறுவனத்தின் உதவி பெற்று ஆரோவில் இளைஞர் கல்வி மையம் கோலங்கள் பற்றிய ஆய்வினை மேற்கொண்டது. குடிசை கள், மச்சு வீடுகள் என்ற பேதமின்றி மண்தரையில் போடப்பட்டிருந்த கோலங்களையும், கோலமிட்ட கைகளையும் கண்டு பதிவு செய்தது அக்குழு. ஜவ்வாது மலையில் வசிக்கும் பழங்குடியினர் தமது குடிசைகளுக்கு முன்னால் விதம் விதமான கோலங்களை வரைந்து அவற்றுக்கு தீட்டப்பட்டிருந்த வண்ணங்களையும் பார்த்து குழு வியப்பில் ஆழ்ந்தது.

பழங்குடியினர், குழுவினரை தமது குடிசைக்குள் வரவேற்றனர். ஒற்றைக் கூடம். மூலையில் சுருட்டி வைத்த பாய். குடிநீர் பானை. ஒரு மூலையில் சமையல் அடுப்பு. இவ்வளவே அவர்களின் உடமை. எதிரே வெள்ளை அடிக்கப்பட்ட சுவரில் ஒரு சாண் நீளத்துக்கு செங்குத்தாகத் தீட்டப்பட்டிருந்த நாலைந்து வண்ணத் தீற்றல்கள். சுற்றிலும் பறக்கும் கானகப் பறவைகளின் படங்கள்.

“இதுதான் எங்க சாமி” என்றனர் கானகவாசிகள். பயபக்தியுடன் வடிவமே இல்லாத வெறும் வர்ணப் பட்டைகள். அந்த இடத்தில் உண்மையிலேயே கடவுளின் சாந்நியத்தியத்தை உணர்ந்தோம் என்று குழுவின் பதிவு கூறுகிறது.

கடவுளின் வண்ணங்கள் பொருள் பொதிந்தவை. பரந்து கிடக்கின்ற நீலவானம் பரம்பொருளை உணர்த்துகிறது. செக்கர் வானம் மனசுக்குள் தெய்விகத்தை புலரவைக்கிறது. பச்சை மலைகள், இறைவனின் மேனியாய் விஸ்வரூபம் கொள்கின்றன.

படைக்கும் கடவுளான பிரம்மனின் வெண்ணிறமும், வெண்ணிறத் திருநீறும், செந்நிறக் குங்குமமும் சிருஷ்டியின் குறியீடுகளாக இருப்பதைப் பற்றியும் சிந்திக்க வேண்டும்.

வள்ளலார் சொன்ன ஏழு வண்ணத்திரைகள்

நமது ஆன்மாவினை ஏழு வண்ணத் திரைகள் மறைத்துள்ளன. கறுப்புத்திரை-மாயாசத்தி, நீலத்திரை - கிரியா சத்தி, பச்சைத்திரை - பராசத்தி,

சிவப்புத்திரை-இச்சா சத்தி, வெண்மைத் திரை - ஞான சத்தி, கலப்புத்திரை- ஆதிசத்தி.

பரலோக விசாரணையிலிருந்தால் நமது அறிவை மூடிக்கொண்டிருக்கும் முதல் திரையாகிய பச்சைத்திரை நீங்கிவிடும். இவ்வாறே முயற்சித்தால் அசுத்தமான இகலோக மாயா திரைகள் நீங்கிப் போய்விடும். ஏழு திரைகளும் நீங்கிவிட்டால், ஞானசபையின் அருட்சோதி காட்சியினைக் காணலாம் என்கிறார் வள்ளல் பெருமான். கல்லார்க்கும் கற்ற வர்க்கும் களிப்பருளும் காட்சி அது.

வண்ணங்கள் இன்றி வழிபாடு ஏது?

மஞ்சளும் சுண்ணாம்பும் கலந் தால் நெஞ்சை அள்ளும் செந்தூரம் உருவாவதுபோல, வண்ணங்களின் சேர்க்கை ஒரு பேருண்மையை உணர்த்து கிறது. இங்கு எதுவுமே அழிவதில்லை. ஒன்று மற்றொன்றாய் மாறுகிறது. இதுவே இயற்கையின் நியதி. இறைவனின் கட்டளை.

உயிர்த்திரள் கூட்டம்

ஆதியில் வார்த்தைகள் இருந்ததாக விவிலியம் கூறுகிறது. ஆதியில் வண்ணங்கள் இருந்தன என்கிறது அறிவியல். உயிர்கள் அனைத்தும் வண்ணங்களிலிருந்தே தோன்றின. முதலில் வண்ணக் குழப்பம். பிறகு வண்ணங்களின் பிரிகை. பின்னர், அவற்றிலிருந்து பீறிடும் உயிர்த்திரள் கூட்டம். அவற்றினின்றும் பிறக்கும் வடிவங்கள். இருப்பிடத்தால் அவற்றிலேறும் வண்ணத்தின் சாயல்கள்.

மீன்கொத்திப் பறவைகளின் நீலநிறம் நீரைக் குறிக்கிறது. மரங்கொத்திக்கு மரத் தோடு தொடர்புடைய பழுப்பு வண்ணம் கிடைக்கிறது. இலைகளின் பசுமை கிளிகளின் சிறகுகளில் ஏறுகிறது. எண்ணத் தொலையாத எத்தனையோ உயிர்கள் ஏன் இத்தனை வண்ண விசித்திரங்களோடு உள்ளன என்பதை இயற்கை உணர்த்தும். இறைவன் அறிவான். நமது அறிவுக்கு எட்டுவன கண்டு நாம் இன்புறல் வேண்டும்.

வண்ணமயமான உலகினைப் படைத்த இறைவனை வண்ணங்களால் வழிபடுகிறான் மனிதன்.

திருவிழா வந்துவிட்டது. ஊரே வண்ணக் கோலம் பூணுகிறது. வீடுகள் எல்லாம் வண்ணமயமாகிவிட்டன. பொங்கல் வந்துவிட்டது. வெள்ளை பூசுதலும், வண்ணம் அடித்தலும் தொடங்கிவிட்டன. மாடுகளின் கொம்புகளும் வண்ணங்கள் பூசி அழகுகாட்டுகின்றன. கோலங்களின் நடுவே பூசணி மஞ்சள் பூத்திருக்கிறது.

கீதாஞ்சலி படைத்த தாகூர் மலர்களின் வண்ணங்களில் மயங்கி அவற்றைப் பிழிந்து வண்ணச் சாயங்களை உருவாக்க முயல்கிறார். முடியவில்லை. மலர்கள் மறைந்ததும் வண்ணங்களும் மறைந்தன. மலர்கள் உதிரலாம். வண்ணங்கள் உதிர்வதில்லை. தாகூரின் வெண்ணிறத் தாடிக்குள் புன்னகை பூக்கிறது.

அசுரதேவ வடிவங்களில் அவற்றின் சுபாவத்திற்கேற்ப கம்பீரம், காருண்யம், ராட்சசம், தெய்விகம், குழந்தைமை, கொடூரம் என்று பாவங்கள் பல காட்டும் கேரளத்தின் கதகளி நடனங்கள் வண்ணங் களின் பிரதானம். தாளமும் வண்ணமும் கூடிப் பிசைந்து தாண்டவமாடும் அற்புத நடனம் கதகளி.

அன்னையின் மலர்கள்

புதுவை அன்னை ஒவ்வொரு மலரையும் அவற்றின் வண்ணத்தையும் இறைசக்தியோடு தொடர்புபடுத்துவார்.

எது மனிதரின் அறிவுக்கு அப்பாற் பட்டதோ அறியப்படாததோ அதைக் கருநிறத்தோடு தொடர்புபடுத்துவது வழக்கம். பேரண்டம் ஒரு கரும் பரப்பு. அந்தப் பேரிருட்டின் இடையிடையே கருந் துளைகள் உள்ளன. அவை அவிந்துபோன நட்சத்திரங்கள் என்று அறிவியல் கூறுகிறது. இக்கருந்துளைகள் விண்மீன்களையும் விழுங்க வல்லவை. அவற்றின் உள்ளே செல்லும் ஒளிக்கதிரையும் இழுத்து விடுபவை. அறிவியலுக்கு எட்டாத புதிராக கரும்துளை இருந்துவருகிறது.

ஆம் காளியும் கருநிறம் கொண்டு எங்கும் களிநடம் புரிகிறாள்!

(தேடல் தொடரும்)

கட்டுரையாளர், தொடர்புக்கு: thanjavurkavirayar@gmail.com

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x