Published : 15 Dec 2021 03:06 AM
Last Updated : 15 Dec 2021 03:06 AM

கதை: சாகசம் செய்த சின்ன வெங்காயம்!

இன்று காய்களும் கனிகளும் சுதந்திரமாக வாழ்கின்றன. ஆனால், ஒரு காலத்தில் காய்களும் கனிகளும் ‘எலுமிச்சை’ மகாராஜாவின் அடிமைகளாக இருந்தன.

எலுமிச்சை மகாராஜாவிடம் கனிவே கிடையாது. எந்த வேலையும் செய்யாது. எப்போதும் யாரிடமாவது சண்டையிடத் துடிக்கும். தும்மினால்கூடச் சிரச்சேதம், நாடு கடத்தல், கடுங்காவல் சிறைத் தண்டனை என்று பல கொடுமைகளை நிகழ்த்திக்கொண்டிருந்தது.

கோட்டையில் எலுமிச்சை மகாராஜாவின் சித்திகளான செர்ரி கோமாட்டிகள் வாழ்ந்தார்கள். அந்தக் கோட்டையின் அடித்தளத்தில்தான் எல்லாவிதமான கொடுமைகளும் அரங்கேறும் சிறைச்சாலை இருந்தது.

அந்த நாட்டில்தான் வெங்காயமும் வாழ்ந்துவந்தது. அதற்கு ‘சின்ன வெங்காயம்’ என்று பெயர். அதன் அப்பாதான் பெரிய வெங்காயம். நேற்று முன்தினம் மிகப் பெரிய துயரச் சம்பவம் ஒன்று நடந்துவிட்டது.

மகாராஜா எலுமிச்சை நகர்வலம் வருவதாக அறிவிப்பு வந்தது. கோட்டையின் மிடுக்கான தளபதி தக்காளி, அந்த நகரத்தின் அதிகாரத்தைத் தன் கையில் வைத்திருந்தது. அதைப் பார்த்துப் பயப்படாதவர்களே கிடையாது. தக்காளியின் கண்கள் செக்கச் சிவந்து அதிகாரத்தை வெளிக்காட்டிக்கொண்டே இருக்கும்.

எலுமிச்சை மகாராஜாவின் நகர்வலத்தின்போது எல்லோரையும்போல நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது பெரிய வெங்காயம். அதாவது சின்ன வெங்காயத்தின் அப்பா. அப்போது கூட்டத்தில் யாரோ தள்ளிவிட, பெரிய வெங்காயம் மன்னர் வரும் வழியில் போய் விழுந்துவிட்டது. சட்டென்று சுதாரித்துக்கொண்டு எழுந்துவந்துவிட்டது. விழுந்ததில் பெரிய வெங்காயத்தின் உடலில் காயங்கள் ஏற்பட்டிருந்தன. பெரிய வெங்காயத்தின் மீது தவறு எதுவும் இல்லை என்று தெரிந்தாலும் தளபதி தக்காளியால் சும்மா இருக்க முடியவில்லை. காவலர்களை அனுப்பி, பெரிய வெங்காயத்தைக் கைது செய்து சிறையில் அடைத்தது.

சின்ன வெங்காயம் தன் அப்பாவைப் பார்க்கச் சிறைக்குச் சென்றது. பெரிய வெங்காயம் வருத்தத்துடன் பேச ஆரம்பித்தது. “மக்களைக் காக்க வேண்டியவர்கள் ஆட்சியாளர்கள். ஆனால், மக்களுக்குத் துன்பத்தை மட்டுமே கொடுக்கக்கூடியவர்களாக இருக்கிறார்கள். சிறைச்சாலை என்பது கொலைகாரர்களும் மக்களைக் கொள்ளை அடிப்பவர்களும் இருக்க வேண்டிய இடம். ஆனால், அவர்கள் எல்லோரும் வெளியே இருக்கிறார்கள். அப்பாவிகளும் அநியாயத்தைத் தட்டிக் கேட்டவர்களும் சிறையில் இருக்கிறார்கள்.”

சின்ன வெங்காயம் சிறையிலிருந்து வெளியே வந்து, சுரைக்காய் தாத்தாவைச் சந்திக்கச் சென்றது. சுரைக்காய் தாத்தா ஊரிலேயே வயதானவர். சட்டம் தெரிந்தவர். தனக்காக ஒரு வீடு கட்டிக்கொள்ள எத்தனையோ வருடங்களாக முயன்றுவருகிறார். சின்ன வெங்காயம் அங்கே சென்றபோது, சுரைக்காய் தாத்தாவை இரண்டு தக்காளி காவலர்கள் பிடித்துக்கொண்டிருந்தன. எதிரில் தளபதி தக்காளி தாம்தூம் என்று குதித்துக்கொண்டிருந்தது.

“வீடு கட்டுவதற்கு உனக்கு எந்தத் தகுதியும் கிடையாது. இனி வீடு கட்டுவதைப் பார்த்தால், சிறையில் தள்ளிவிடுவேன்” என்று மிரட்டியது தக்காளி.

“ஒரு தாத்தாவிடம் உன் வீரத்தைக் காட்டுகிறாயே, உனக்கு வெட்கமாக இல்லையா?” என்கிற சின்ன வெங்காயத்தின் குரல் கேட்டுத் திரும்பிப் பார்த்தது தளபதி தக்காளி.

அப்போது ஓர் எலி வேகமாக ஓடியது. எலியைப் பார்த்ததும் தளபதி தக்காளி தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓட்டம்பிடித்தது. சின்ன வெங்காயத்தைப் பார்த்துத்தான் தளபதி தக்காளி பயந்து ஓடியதாக நினைத்துக்கொண்டது சுரைக்காய்.

ஓடிய தக்காளி சட்டென்று திரும்பிப் பார்த்தது. எலியைக் காணோம் என்றதும் சின்ன வெங்காயத்தை நோக்கி வந்தது.

“மண்ணுக்கடியில் வாழறவனுக்கு என்னையே எதிர்த்துப் பேசும் அளவுக்குத் துணிச்சல் வந்துவிட்டதா?” என்று கோபமாகக் கத்தியது.

மண்ணுக்கு அடியில் விளையும் வெங்காயம், கேரட், முள்ளங்கி எல்லாம் கீழ் பிறவிகள் என்றும் செடியிலும் மரத்திலும் காய்ப்பவை எல்லாம் உயர்பிறவிகள் என்றும் நாடே கருதியது. அதனால்தான் தக்காளி, எலுமிச்சை, ஆரஞ்சு, செர்ரி எல்லாம் ஆதிக்கம் செலுத்தி, மற்றவர்களை அடிமையாக வைத்திருந்தன.

“சுரைக்காய் தாத்தா பூமிக்கு அடியிலிருந்தா வந்தார்?” என்று சின்ன வெங்காயம் எதிர் கேள்வி கேட்டது.

“வாயை மூடு... உனக்குப் புரியாது. சுரைக்காய், பூசணி எல்லாம் மண்மீது படர்ந்து வளர்பவை. எங்களைவிட மட்டமானவர்கள்” என்றது தளபதி தக்காளி.

மீண்டும் எலி அந்தப் பக்கமாக வந்தது. உடனே தளபதி தக்காளி ஓடிவிட்டது.

“எலி நண்பா, காலில் என்ன காயம்?” என்று பரிவோடு கேட்டது சின்ன வெங்காயம்.

“ஓடிய வேகத்தில் ஒரு கல்லில் இடித்துக் கொண்டேன். பயங்கர வலி.”

“என்னை எடுத்து லேசாகத் தரையில் தேய்த்து, அடிபட்ட இடத்தில் தடவு. விரைவில் வலி காணாமல் போகும்.”

“ஐயோ... உனக்கு வலிக்கும். வேண்டாம்.”

“உன் காயம் குணமாகும்னா நான் வலியைக்கூடப் பொறுத்துக்கொள்வேன்.”

சின்ன வெங்காயத்தை உரசி, காயத்தில் வைத்தது எலி. சற்று நேரத்தில் வலி மறைந்தது.

“நீ செய்த இந்த உதவியை மறக்க மாட்டேன். எப்போது வேண்டுமானாலும் என்னை அழைக்கலாம். என்னால் முடிந்த உதவியைச் செய்கிறேன்” என்று கூறி, விடைபெற்றது எலி.

சின்ன வெங்காயம், தன்னைப் போன்று மண்ணுக்கு அடியில் விளையும் முள்ளங்கி, கேரட், உருளை, பீட்ரூட், வேர்க்கடலை, மரவள்ளி என்று பலரையும் திரட்டியது. இஞ்சியும் மஞ்சளும் தங்களையும் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டன. முட்டைகோஸ், காலிஃபிளவர், பூசணி, பறங்கி, தர்பூசணி போன்று மண்ணுக்கு மேலே விளையும் காய்கறிகளும் தங்கள் ஆதரவைத் தெரிவித்தன. இந்த விஷயம் எலுமிச்சை மகாராஜாவின் காதுகளுக்குச் செல்லாதவாறு ரகசியமாக வைத்துக்கொண்டன.

எலுமிச்சை மகாராஜா நகர்வலம் வரும் நாள் வந்தது. இந்த முறை கோட்டையில் வசித்த கோமாட்டிகளும்கூட ராஜாவோடு சேர்ந்து வந்தன. தளபதி தக்காளி, அமைச்சர் ஸ்டிராபெர்ரி, திராட்சை, ஆப்பிள், ஆரஞ்சு என்று ஒரு பெருங்கூட்டமே வந்தது.

எல்லோரும் நகர்வலத்தில் இருந்தபோது, சின்ன வெங்காயமும் அதன் தோழர்களும் சேர்ந்து கோட்டையைப் பிடித்தன. ஒரு வெள்ளைக்கொடியைச் சின்ன வெங்காயம் பறக்கவிட்டது. அந்தக் கொடியில் ‘அனைவரும் சமம்’ என்று எழுதப்பட்டிருந்தது.

கோட்டை பிடிக்கப்பட்டதை அறிந்த தளபதி தக்காளி, படையோடு விரைந்தது.

“சண்டை வேண்டாம், தளபதி. யாரும் யாரைவிடவும் உயர்ந்தவர்களும் அல்ல, தாழ்ந்தவர்களும் அல்ல. எல்லோருக்கும் சமமான வாய்ப்புகளும் உரிமைகளும் வழங்கப்பட வேண்டும்” என்றது சின்ன வெங்காயம்.

தக்காளி கோபத்துடன் சின்ன வெங்காயத்தின் மீது பாய்ந்தது. சின்ன வெங்காயத்தைப் பிய்த்ததால் தக்காளி வீரர்களின் கண்கள் எரிந்தன.

நண்பன் எலியை அழைத்தது சின்ன வெங்காயம். எலி தன் கூட்டத்தோடு வந்தது. மண்ணைத் தோண்டி, சிறையில் இருந்த பெரிய வெங்காயத்தையும் பிறரையும் மீட்டது. கோட்டை தரைமட்டமானது.

“இன்று முதல் இந்த நாட்டுக்கு யாரும் ராஜா இல்லை. எல்லோரும் சமம்” என்று அறிவித்தது சின்ன வெங்காயம்.

எலுமிச்சை ராஜாவும் தளபதி தக்காளியும் தங்கள் தவறை உணர்ந்தன. அனைத்துக் காய்களும் கனிகளும் அன்றுமுதல் சுதந்திரமாக வாழ்ந்தன.

(ஜானி ரொடாரி இத்தாலிய எழுத்தாளர். சிறார்களுக்காக ஏராளமாக எழுதியிருக்கிறார்.)

ஜானி ரொடாரி
தமிழில்: ஆயிஷா இரா. நடராசன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x