Last Updated : 14 Dec, 2021 03:08 AM

Published : 14 Dec 2021 03:08 AM
Last Updated : 14 Dec 2021 03:08 AM

பார்ம்.டி படிக்கலாமா

மருத்துவத் துறையில் மருந்தாளுநர்களுக்கான படிப்புகள் (Pharmacy Courses) முக்கியத்துவம் வாய்ந்தவையாகவும், மாணவர்கள் பெரிதும் விரும்பும் படிப்பாகவும் தொடர்ந்து இருந்துவருகின்றன. காரணம், மருத்துவருக்கு இணையான முக்கியத்துவம்மருந்தாளுநருக்கும் உண்டு.

சுகாதாரச் சங்கிலியில் நோயாளிகளையும் மருத்துவர் களையும் இணைக்கும் சரடு அவர்கள். சரியான முறையில் மருந்தைப் பயன்படுத்துதல், சேமித்தல், பாதுகாத்தல், நோயாளிகளுக்கு வழங்குதல் ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்ற மருத்துவ நிபுணர்கள் அவர்கள். நோயாளிகளுக்குப் பரிந்துரைக்கப்படும் மருந்துகள் குறித்த விரிவான அறிவும், அதைப் பயன்படுத்தும் வழிமுறைகள் குறித்த தெளிவான புரிதலும் அவர்களுக்கு உண்டு.

மருத்துவர்கள், மருந்து நிறுவனங்கள், பொதுமக்களுடன் இணைந்து பணியாற்றும் அவர்களே சமூகத்தில் பாதுகாப்பான மருந்தியல் நடைமுறைகளை உறுதிசெய்கிறார்கள். மருந்தாளுநர்களுக்கான தேவை முன்பு எப்போதும் இல்லாத அளவுக்குத் தற்போது அதிகமாக உள்ளது. டி.பார்ம், பி.பார்ம்., எம்.பார்ம்., பி.எஸ். பார்மசி, எம்.எஸ்.,பார்மசி, பார்ம்.டி போன்று பல பார்மசி படிப்புகள் இருந்தாலும், இவற்றில் பார்ம்.டி படிப்பே சிறந்ததாகக் கருதப்படுகிறது. பார்ம்.டி படிப்பைத் தேர்வு செய்து படிப்பது உடனடி வேலையை மட்டுமல்ல; நல்ல சம்பளத்தையும் உறுதிசெய்யும்.

ஏன் படிக்க வேண்டும்?

சுகாதார அமைப்பில் மருந்தாளுநர்களே முதல் தொடர்புப் புள்ளியாக இருக்க வேண்டும். இந்தியாவைப் பொறுத்தவரை மருந்துகளை எடுத்துத்தரும் கடைசி தொடர்புப் புள்ளியாக அவர்கள் இருக்கிறார்கள். பார்மசிஸ்ட்களின் அனுபவத்தை மருத்துவத்துறைக்குப் பயன்படுத்தும் முதல் முயற்சியாகவே பார்ம்.டி படிப்பு 2008ஆம் ஆண்டில் ‘பார்மசி கவுன்சில் ஆஃப் இந்தியா’ (PCI) அனுமதியுடன் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆறு ஆண்டுக் காலம் (5 வருடப் படிப்பு ஓராண்டு இன்டர்ன்ஷிப் / வேலை பயிற்சி) படிக்கக்கூடிய ஒருங்கிணைந்த முதுநிலைப் படிப்பு இது. பார்ம்.டி பட்டதாரிகளின் பெயருக்கு முன்பாக ‘டாக்டர்’ முன்னொட்டை போட்டுக்கொள்ள முடியும்.

சிறப்பம்சங்கள்

மருத்துவருடன் இணைந்து பணியாற்றுவது, புதிய மருந்துகளை உருவாக்குவதில் ஆலோசனைகளை வழங்குவது, மருந்துக்கும் உணவுக்குமிடையேயுள்ள தொடர்பை விளக்குவது போன்றவற்றைக் கற்றுக்கொடுப்பதே பார்ம்.டி படிப்பின் முக்கிய நோக்கம். அதற்கு ஏற்றதுபோல், அதிக அளவு நடைமுறைப் பயிற்சிகளையும் களப் பணிகளையும் உள்ளடக்கியதாக இதன் பாடத்திட்டம் இருக்கிறது. படிப்பின் இறுதியாண்டின் கடைசி ஆறு மாதங்கள் எம்.பி.பி.எஸ்., படிப்பைப் போல இதில் இன்டர்ன்ஷிப் உண்டு. இன்டர்ன்ஷிப் காலத்தில் மருத்துவர்களுடன் சேர்ந்து நோயாளிகளைச் சந்திப்பது, மருந்து தொடர்புடைய முக்கியத் தகவல்களை நோயின் தன்மைக்கேற்ப பரிந்துரைப்பது போன்ற பணிகளில் மாணவர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள்.

ஒரே நோயாளிக்கு ஒன்றுக்கு மேற்பட்ட மருந்துகளைப் பரிந்துரைக்கும்போது மருந்துகளுக்கு இடையேயுள்ள தொடர்புகளும் பின் விளைவுகளும் தவிர்க்க முடியாத முக்கியக் காரணிகளாக இருப்பதால், அவை குறித்த தெளிவான புரிதலை மாணவர்களுக்கு ஏற்படுத்தும் வகையில் இந்தப் படிப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது. மனித உடற்கூறியல், மருத்துவ பயோகெமிஸ்ட்ரி, ரெமடியல் மேத்ஸ் அண்டு பயாலஜி, போத்தோ பிசியாலஜி, பார்மசூடிகல் மைக்ரோ பயாலஜி, சமூக மருந்தியல், பார்மகோ தெராபியூடிக்ஸ், கிளினிகல் டாக்சிகாலஜி போன்றவை பார்ம்.டி படிப்பில் முக்கியக் கூறுகளாக உள்ளன.

யார் படிக்க முடியும்?

நீங்கள் குறைந்தபட்சம் 17 வயதுடையவராக இருக்க வேண்டும். பிளஸ் 2 அல்லது டி.பார்ம்., முடித்த மாணவர்கள் இந்தப் படிப்பில் சேர முடியும்.

பன்னிரண்டாம் வகுப்பில், இயற்பியல், வேதியியல், உயிரியல் அல்லது தாவரவியல், விலங்கியல் பாடங்களில் 50 சதவீதம் அல்லது அதற்கும் கூடுதலான மதிப்பெண் பெற்றவர்கள் பார்மஸி படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம்.

டி.பார்ம் படித்தவர் என்றால், நீங்கள் PCI அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் டி.பார்ம் படித்திருக்க வேண்டும். B.Pharm, M.Pharm முடித்த பட்டதாரிகள், பார்ம்.டி படிப்பின் நான்காம் ஆண்டில் நேரடியாக இணைந்து மூன்று ஆண்டுகளில் படிப்பை முடிக்கலாம்.

எங்கே படிக்கலாம்?

இந்தியா முழுவதும் 125 பார்மசி கல்லூரிகளில் பார்ம்.டி, படிப்புகளை நடத்த பார்மசி கவுன்சில் அனுமதி வழங்கியுள்ளது. இவற்றில் 25 கல்லூரிகள் தமிழகத்தில் உள்ளன. அரசுக் கல்லூரிகளில் இதுவரை இந்தப் படிப்பு தொடங்கப்படவில்லை.

வேலைவாய்ப்புகள்

சுகாதார மையங்கள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், மருந்து கட்டுப்பாட்டு நிர்வாகம், உணவு, மருந்து நிர்வாகம், அரசு / தனியார் மருத்துவமனைகள், லாப நோக்கற்ற நிறுவனங்கள் மருந்து நிறுவனங்கள், ஆராய்ச்சி முகமைகள் ஆகியவற்றில் பார்ம்.டி படித்தவர்களுக்கான தேவை அதிகம் உள்ளது.

இன்றைய சூழலில் பார்ம்.டி படிப்பவர்கள் எதிர்காலம் பற்றி எந்தக் கவலையும் பட வேண்டியதில்லை. ஏனென்றால், பார்ம்.டி முடிப்பவர்களுக்குக் கணிசமான வாய்ப்புகள் வரிசையில் நிற்கின்றன. முக்கியமாக, இந்தப் படிப்பை முடித்த பின்னர், உங்கள் பெயருக்கு முன் ‘Dr.’ என்று போட்டுக்கொள்ளலாம்.

நன்றி: டர்னிங் பாயிண்ட் யூத் வெல்ஃபேர் அசோசியேஷன்.

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x