Published : 09 Dec 2021 03:07 AM
Last Updated : 09 Dec 2021 03:07 AM

என்னை நீ செய்த நாடகமே

ப. இராஜராஜேஸ்வரி

அண்டசராசரம் அனைத்துமாய் அதில் நில்லாது இயங்கும் ரூபமாய், நிலைத்து நிற்கும் அரூபமாய் விளங்குகிறது பரம்பொருள்.அது துலாம்பரமாய்த் தன்னைக் காட்டிக் கொண்டே காண்பவரின் பார்வையை, அறிவை மயக்கவல்லது, மயங்கி நிற்பது. இதை மாணிக்கவாசகர்,

“ஞாலமே விசும்பே இவை வந்துபோம்

காலமே உனை என்றுகொல் காண்பதே” (திருச்சதகம்-43) என்கிறார்.

என்ன கொண்டு வந்தோம் எடுத்துச் செல்ல என்று பேச்சுவழக்கு ஒன்று உண்டு. நாம் கொண்டுவரும் வினைதானே நமக் கான ஆடுகளத்தையும் சக நடிகர்களையும் அமைத்துக் கொடுக்கிறது. திருச்சதகத்தில் மட்டும் கூத்து எனும் சொல் நான்கு முறை யும், நாடகம் எனும் சொல் ஐந்து முறையும் நடித்து எனும் சொல் ஒரு முறையும் மாணிக்க வாசகரால் ஆளப்பட்டுள்ளது. இவை தவிர ஈசனை ஆடுபவன் எனப் பல இடங்களில் சுட்டுகிறார். கூத்து என்பது நாட்டியத்தையும் நாடகம் என்பது கதை தழுவிய கூத்தையும் குறிக்கின்றன. நாடகத்தை, நாடு அகம் என்று பிரித்து நாட்டை அகத்தில் வைப்பது என்றும் அகம் நாடு என்று பிரித்து அகத்தை நாடுவது, உள்ளத்தை நுணுகி அணு குவது என்றும் பொருள் கொள்ளலாம்.

ஒவ்வொரு கணமும் சூழலுக் கேற்ப மனம், வாக்கு, செயல் என நம் முக்கரணமும் அடவு வைத்துக் கூத்தாடுகின்றன. நம்மை வெல்ல யாரும் இல்லை என்று எல்லோருமே நம்புகிறோம். திருப்பங்கள் நிறைந்த வாழ்க்கை நாடகத்தின் முழுக்கதை ஈசனிடம் உள்ளது. அவனோ நின்றோ அமர்ந்தோ கிடந்தோ அல்லாமல் ஆடியபடியே உள்ளான்.

“கழுதொடு காட்டிடை நாடகமாடி கதியிலியாய்

உழுவையின் தோலுடுத்து உன்மத்தம் மேற்கொண்டு உழிதருமே” (திருச்சதகம்-7)

பேயோடு சுடுகாட்டில் கூத்தாடி, கதியிலி யாய், வறியவனாய்ப் புலித்தோல் உடுத்திப் பித்தனாய் அலைந்து திரிகிறான். ஆதியும் அந்தமும் இலானாய் அவை யாவுமாய் இருக்கும் பரம்பொருள் நாட வேண்டிய கதி ஒன்றும் இல்லையே. வித்து இல்லாமலேயே விண்ணும் மண்ணும் எல்லாமும் விளையச் செய்யும் திண்மை மிக்கவன் அவன்.

“விச்ச தின்றியே விளைவு செய்குவாய்

விண்ணும் மண்ணும் முழுதும் யாவையும்” (திருச்சதகம்-96)

விதைகளிலிருந்து விளைவைத் தருவது அவனுக்குப் பெருங்கூத்து அல்லவா. உயிர்களிடத்தில் ஆணவம், கர்மம், மாயை ஆகிய மும்மலமும் பருவம் தவறாமல் செழித்து வளர்கின்றன. பேராசை, சினம், கடும்பற்று, மோகம், உயர்வு - தாழ்வு மனப்பான்மை, வஞ்சம் என விளைச்சலும் அமோகமாகவே இருக்கிறது. நிற்கும் இடத்திலிருந்து விண்ணும் மண்ணும் இணையும் புள்ளியைத் தொட்டுவிட முடியும் என்று இடையறாது ஓடுகிறோம்.

நின்று, திரும்பிப் பார்க்கும் போது ஓட்டம் தொடங்கிய இடத்தில் விண்ணும் மண்ணும் மயங்கி நிற்பதாய்த் தெரிகிறது. தோற்றதாய் அயர்ந்து விழுகிறோம். அங்குதான் விழிப்புணர்வில் உயர்ந்து எழுகிறோம். எப்போதும் புறத்தே ஓடுகளங்களையும் ஓட்ட வேகத்தையும் மாற்றி அமைப்பதிலும் கவனம் செலுத்துகிறோம். ஆனால் ஒருபோதும் அகத்தின் கையிருப்பை, மெய்ப்பொருளைக் கணக்கில் கொள்ள மறந்தோமே.

ஊனை நடுங்கச் செய்ததும், உள்ளம் உருகி அவன் அருளைப் பருகச் செய்ததும், உலகப் பற்றுகள் சிதைந்து ஒழியும்படி ஞானக்கூத்து நிகழ்த்தியதும் அவன் அருள் அல்லவா.

“ஊனை நாடகம் ஆடு வித்தவா

உருகி நானுனைப் பருக வைத்தவா

ஞான நாடகம் ஆடு வித்தவா

நைய வையகத் துடைய விச்சையே” (திருச்சதகம்-95)

வாதைகளை நாம் ஒப்புக்கொள்ளும் போது பக்குவம் அடைகிறோம். பால் தயிராகி வெண்ணெய் ஆவது போல, வாதைகளுக்கு நம்மை ஒப்புக்கொடுக்கும்போது வசம் இழந்து போகிறோம். அதனால்தான் ஈசன் தன்னைக் கண்டுகொண்டு ஆண்ட பெருமையை மாணிக்கவாசகர், “நகவே தகும்எம் பிரான் என்னை நீ செய்த நாடகமே” என்று சொல்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x