

வரும் 2022-ல் ஏழை மக்களுக்கு 5 கோடி வீடுகள் கட்டித் தரப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி பிப்ரவரி 21 அன்று அறிவித்தார். ‘பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா’ திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டும் திட்டத்தின் அடிக்கல் நாட்டு விழா சத்தீஸ்கர் தலைநகர் ராய்ப்பூரில் நடந்தது. இந்தத் திட்டத்துக்குப் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். “நாடு சுதந்திரம் அடைந்து இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் 5 கோடிக்கும் அதிகமான மக்கள் வீடுகள் இல்லாமல் உள்ளனர். அவர்களில் 2 கோடி பேர் நகரங்களிலும், 3 கோடி பேர் கிராமங்களிலும் உள்ளனர். வரும் 2022-ல் ஏழைகளுக்கு 5 கோடி வீடுகள் கட்டித் தரப்படும்” என்று விழாவில் மோடி பேசினார்.
காற்று மாசில் இந்தியா முன்னிலை
மாசடைந்த காற்றின் அளவில் சீனாவை இந்தியா கடந்துவிட்டது என்று உலகச் சுற்றுச்சூழல் இயக்கமான கிரீன்பீஸ் பிப்ரவரி 22 அன்று எச்சரித்தது. நாசா செயற்கைக் கோள் தரவுகளைக் கொண்டு கிரீன்பீஸ் நடத்திய ஆய்வில் காற்று மாசு அளவு தெரியவந்துள்ளது. “இந்த 21-ம் நூற்றாண்டில் இந்திய மக்கள் மீது தாக்கம் செலுத்திய நுண்ணிய காற்று மாசின் அளவு சீன மக்களின் மீதான தாக்கத்தைவிட அதிகம். காற்றில் அடையும் மாசைக் குறைக்க சீனா கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டதால் அங்கே தாக்கம் குறைந்துள்ளது. ஆனால், இந்தியாவில் அது போன்ற நடவடிக்கைகள் ஏதும் எடுக்கப்படாததால் மக்களின் ஆரோக்கியம் கடுமையாக பாதிப்படைந்துவருவதாக” அறிக்கையில் கிரீன்பீஸ் தெரிவித்தது.
மகாமகம் பெருவிழா
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகாமகப் பெருவிழாவின் முக்கிய நிகழ்வான தீர்த்தவாரி பிப்ரவரி 22 அன்று நடைபெற்றது. இந்தத் தீர்த்தவாரி நிகழ்ச்சியில் 10 லட்சம் பக்தர்கள் கலந்துகொண்டு புனித நீராடினர். கும்பகோணத்தில் பிப்ரவரி 13 அன்று மகாமகப் பெருவிழா தொடங்கியது. 10 நாட்களில் மொத்தம் 46 லட்சம் பக்தர்கள் கலந்துகொண்டு மகாமகம் குளத்தில் நீராடினார்கள். கடைசியாக, 2004-ல் மகாமகப் பெருவிழா நடைபெற்றது.
அருணாச்சலப் பிரதேச முதல்வருக்கு எதிர்ப்பு
அருணாச்சலப் பிரதேசத்தில் புதிய முதல்வராக கலிகோ புல் பதவியேற்றதை ஆராய உச்ச நீதிமன்றம் பிப்ரவரி 23 அன்று ஒப்புதல் தெரிவித்தது. பிப்ரவரி 20 அன்று இரவு கலிகோ புல் திடீரென முதல்வராகப் பதவியேற்றதற்கு முன்னாள் முதல்வர் நபம் துகி, முன்னாள் சபாநாயகர் நபம் ரெபியா ஆகியோர் எதிர்ப்புத் தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுவை நீதிபதி ஜகத் சிங் கேகர் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு விசாரிக்க உள்ளது. அருணாச்சலப் பிரதேசத்தில் அரசியல் நெருக்கடியைத் தொடர்ந்து கடந்த ஜனவரி 25 அன்று குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. குடியரசுத் தலைவர் ஆட்சி 20-ம் தேதி விலக்கிக்கொள்ளப்பட்ட சில மணி நேரத்தில் கலிகோ புல் புதிய முதல்வராக பதவியேற்றார்.
மெக்கல்லம் புதிய சாதனை
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிவேக சதத்தைப் பதிவுசெய்த வீரர் என்ற சாதனையை நியூசிலாந்து அணித் தலைவர் பிரண்டன் மெக்கல்லம் பிப்ரவரி 20 அன்று படைத்தார். கிரைஸ்சர்ச்சில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்த மைல்கல்லை அவர் எட்டினார். 101-வது டெஸ்ட் போட்டியில் விளையாடிய பிரண்டன் மெக்கலம் 54 பந்துகளை மட்டும் சந்தித்து சதத்தைப் பூர்த்தி செய்தார்.
இந்தப் போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து மெக்கலம் ஓய்வு பெற்றார். ஏற்கெனவே 1986-ல் இங்கிலாந்து அணிக்கெதிராக மேற்கிந்திய தீவுகளின் வீரர் சர் விவியன் ரிச்சர்ட்ஸும், 2014-ல் ஆஸ்திரேலிய அணிக்கெதிராக பாகிஸ்தான் அணித் தலைவர் மிஸ்பா உல் ஹக்கும் 56 பந்துகளில் சதம் அடித்த சாதனையைக் கைவசம் வைத்திருந்தார்கள்.