Published : 08 Dec 2021 04:07 am

Updated : 08 Dec 2021 11:27 am

 

Published : 08 Dec 2021 04:07 AM
Last Updated : 08 Dec 2021 11:27 AM

ஆடுகளைக் கண்டு பயந்த பூனைகள்!

frightened-cats

சில மாதங்களுக்கு முன்பு நடந்த கதையை உங்களோடு பகிர விரும்புகிறேன். உங்களைச் சுற்றி இருப்பவர் யாரும் நாம் பேசுவதைக் கேட்கவில்லை என்பதை உறுதிசெய்து கொள்ளுங்கள். அதிலும் அம்மா, அப்பா வயதை ஒட்டிய விலங்குகள் எந்தக் காரணம் கொண்டும் நம் விவாதம் குறித்து அறியக் கூடாது.

இளம் விலங்குகள் ஒருவருக்கொருவர் சீக்கிரமே புரிந்துகொள்கிறோம். எதையும் நமக்குள் ஒளிவுமறைவு இல்லாமல் பகிர்ந்துகொள்கிறோம். அன்போடு பழகுகிறோம். ஆனால், பெரியவர்கள்?

அவர்கள் எப்போதும் இளம் விலங்குகளுக்கு எதுவும் தெரியாது என்றே நினைக்கிறார்கள். நம் ஒவ்வொரு செயலையும் கூர்ந்து கவனிக்கிறார்கள். நம்மைப் பற்றி நிறையவே புரிந்துவைத்துள்ளதாக நினைத்துக்கொள்கிறார்கள்.

அதோ அந்த ஓவியத்தில் இடதுபக்கம் நின்றுகொண்டிருக்கும் பூனை நான்தான். நீண்ட வாலுடைய நான், கடைசியில் உட்கார்ந்திருக்கிறேன். ஓவியத்தில் உள்ள மற்றவர்கள் என் குடும்ப உறுப்பினர்கள். அம்மா, அண்ணன், அப்பா ஆகியோர்.

எங்கள் பக்கத்து வீட்டுக்கு, புதிதாக ஓர் ஆட்டுக்குடும்பம் குடிவந்தது. அன்று நடந்த நிகழ்வைத்தான் உங்களோடு பகிர இருக்கிறேன்.

நாங்கள் ஆடு என்ற விலங்கை இப்போதுதான் முதல் முறை பார்க்கிறோம். அதிலும் அந்தத் தந்தை ஆடு ஒரு மாதிரி குரல் எழுப்பும்போது எங்களுக்குப் பயத்தில் உடலே நடுங்கிவிடுகிறது. குட்டி ஆடுகள்கூட அடிக்கடி ‘மே...’ என்று கத்தி, எங்களைப் பயத்திலேயே வைத்திருக்கின்றன.

அன்று முதல் என் அப்பா வீட்டுக் கதவை மூடியே வைத்திருக்க உத்தரவிட்டார். ஆடுகள் எங்களைப் பின்தொடரக்கூடும் என்பதால் நாங்கள் வெளியே செல்வதைத் தடுத்தார். அம்மாவிடமும் அண்ணனிடமும் செம்மறியாடுகள் பற்றித் தனக்குத் தெரிந்த விஷயங்களைப் பேசினார்.

நாங்கள் மெல்லிய குரலில் ‘மியாவ்’ என்று சொல்வதற்கும்கூடத் தடை விதித்தார் அப்பா. நூல்கண்டை உருட்டி வெளியில் விளையாடச் செல்வதையும் தடுத்துவிட்டார். அம்மா எனக்காகச் செய்து கொடுத்த எலி பொம்மையுடன் விளையாடக்கூட அனுமதியில்லை.

புதிதாக வந்திருந்த ஆடுகள், எங்கள் வசிப்பிடம் பற்றி அறியக் கூடாது. ஒவ்வொரு முறையும் நான் எழுப்பும் ‘மியாவ்’ சத்தம் குடும்பத்திலுள்ள மற்றவர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் என்றார் அப்பா.

ஆடுகளை வெறுக்க ஆரம்பித்தேன். ஆனால், அவை என் பெற்றோர் எதிர்பார்த்த அளவுக்கு வெளிப்படையாக எதுவும் செய்யவில்லை. குறிப்பாக என்னைப் பயமுறுத்தவில்லை. கடிந்துகொள்ளவில்லை.

ஒரு நாள் என் ஜன்னலுக்கு வெளியே, “மே...மே...” என்ற குரல் வந்த பக்கம் கவனித்தேன். எட்டிப் பார்த்தேன். எங்கள் பக்கத்து வீட்டில் வாழும் குட்டி ஆடு புல் மேய்ந்துகொண்டிருந்தது.

ஆட்டுக் குட்டியைப் பார்த்ததும் எனக்குப் பயம் வரவில்லை. ஆடுகளைப் பற்றி அப்பா சொன்னதற்கும் இந்த ஆட்டுக்குட்டிக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்று நினைத்தேன். ஆட்டுக்குட்டி மிகவும் அழகாக இருந்தது.

வேகமாக ஜன்னல் கதவுகளைத் திறந்து, ‘மியாவ்’ என்றேன். தலையை உயர்த்தி என்னைப் பார்த்த ஆட்டுக்குட்டி, ‘மே...’ என்றது. இருவரும் சிரித்தோம். குட்டி ஆட்டின் கண்களில் பாசம் மிளிர்ந்தது. மனம் மகிழ்ந்தேன்.

உடனே அப்பாவிடம் விஷயத்தைச் சொன்னேன். அப்பா கோபத்துடன், “நான் சொன்னதைக் கேட்காமல் ஆட்டுக்குட்டியிடம் பேசியிருக்கே... ஆடு உன்னைச் சாப்பிட்டிருந்தால் நாங்கள் என்ன செய்வோம்?” என்றார்.

“அப்பா, ஆட்டுக்குட்டி புல் மேய்ந்துகொண்டிருந்தது.”

“பெற்றோரை எதிர்த்துப் பேசலாமா? அப்பா சொல்வதை மதிக்காமல் நடந்துகொள்ளலாமா?”

நான் நினைத்திருந்தால், அப்பா தூங்கும்போது அவருக்குத் தெரியாமல் வெளியே சென்று விளையாடி இருப்பேன். ஒரு நாளும் அப்படிச் செய்ததில்லை. அவரில்லாமல் நான் சாப்பிட்டதே இல்லை.

அதே சிந்தனையில் என் அறைக்குத் திரும்பினேன். கதவைத் திறப்பதற்கு முன்பு, “காப்பாற்றுங்கள், பயமாக இருக்கிறது. பக்கத்து வீட்டுப் பூனைகளே, உதவிக்கு வாருங்கள்” என்ற குரல் கேட்டது. அது உறுதியாக ஆட்டுக்குட்டியின் குரல்தான். எங்களால் அமைதியாக இருக்க முடியவில்லை. அப்பா என்ன செய்யப்போகிறார் என்று காத்திருந்தேன்.

ஓர் எலி தங்கள் வீட்டுச் சமையலறையில் நுழைந்து தொல்லைத் தருவதாகச் சொன்ன செம்மறியாடுகள், அலறியடித்து ஓடியதைப் பார்த்தோம்.

அப்பா துரிதமாகச் செயல்பட்டார். கண்ணிமைக்கும் நேரத்தில் பாய்ந்து ஓடினார். எலியைத் துரத்திச் சென்றார். கண்காணாத இடத்துக்குச் செல்லும்வரை விரட்டினார். பக்கத்து வீட்டு ஆடுகளைப் பொல்லாத எலியிடமிருந்து காப்பாற்றினார். செம்மறியாட்டுக் குடும்பத்தார் அப்பாவுக்கு நன்றி சொன்னார்கள். சில நாட்களில் நாங்கள் ஆட்டுக் குட்டிகளோடு நண்பர்களாகப் பழக ஆரம்பித்தோம்.

அன்று முதல் வீட்டுக்கு வெளியே விளையாடச் செல்ல எனக்கு அனுமதி கிடைத்தது. கடைசியில் ஆடுகள் பூனைகளைச் சாப்பிடுவதில்லை என்ற உண்மையைக் கண்டுபிடித்துவிட்டேன். அதை என் பெற்றோரிடமும் சொல்லிவிட்டேன். மறுபடியும் என்னை நூல்கண்டு உருட்டி விளையாட அனுமதித்த அப்பாவுக்கு நன்றி சொன்னேன்.

உங்களுக்குத் ஒரு விஷயம் தெரியுமா? நேற்று, எங்கள் மறுபக்கத்து வீட்டுக்குப் புதிதாக ஒரு குதிரை, தன் குடும்பத்தாருடன் குடியேறியது. இந்தத் தடவையும் அப்பா பயந்துவிட்டார்.

மறுபடியும் அவர் வீட்டுக் கதவுகளை மூடிவைக்கிறார். கடுமையான வார்த்தைகளால் என்னை எச்சரிக்கிறார். எனக்கு எதுவும் தெரியாது என்றே நினைக்கிறார். நான் எழுப்பும் ‘மியாவ்’ சத்தம் குடும்பத்திலுள்ள மற்றவர்கள் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் என்று சொல்கிறார்.

மீண்டும் அது சாதுவான விலங்கு என்று என் அப்பாவுக்குப் புரியவைக்க வேண்டுமா?

கதை : காலித் ஜுமா
தமிழில்: கொ.மா.கோ. இளங்கோ

ஆடுகள்பயந்த பூனைகள்பூனைகள்Frightened catsCats

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

do-you-know-the-message

சேதி தெரியுமா?

இணைப்பிதழ்கள்

More From this Author

x