Published : 12 Mar 2016 11:37 AM
Last Updated : 12 Mar 2016 11:37 AM

கிழக்கில் விரியும் கிளைகள் - 21: கடம்பும் முருகனும்

கண்களுக்குப் புலப்படாத தெய்வீக ஆற்றலைக் கடவுள், தெய்வம், அணங்கு என்ற பெயர்களால் பண்டைய தமிழர் சுட்டினர். இவற்றைத் தமிழரின் முதல் மற்றும் முக்கியப் பெருந்தெய்வமான முருகு என்ற முருகனுடனும் தொடர்புபடுத்தினர். (முருகன் சூரணங்கு, சூர் உறை வெற்பன் போன்ற அகநானூறு பாடல் வரிகளை நோக்கவும்). முருகனின் மலராகக் கடம்ப மலர் பண்டைய காலம் முதலே கருதப்பட்டுவருகிறது.

கடம்ப மலரைச் சூடுவதாலேயே முருகனுக்குக் கடம்பன் என்ற பெயரும் அமைந்தது. இந்தப் பெயர் தமிழகத்தின் மித்ரகைனா பார்விஃபோலியா என்ற நிஜமான கடம்ப மரத்தின் அடிப்படையில் பெறப்பட்டதாகும். பூவைச் சூடுவதோடு மட்டுமின்றி முருகன், கடம்ப மரத்தில் முருகன் இடம்பெறுவதாகவும் கருதப்பட்டது (கடம்பமர் நெடுவேள் பெரும்பாணாற்றுப்படை: 75).

முருகனை முன்னிட்டு வெறியாடும் பூசாரியான வேலன் கடம்பப்பூ மாலையை அணிந்தும், கடம்ப மலரைச் சூடியும் ஆடுவான் (வெண்போழ் கடம்புடன் சூடி… வேலன் வெறியர் வியன் களம் அகநானூறு 98: 16-18). இந்த வெறியாட்டம் மேற்கொள்ளப்படும் களங்களில் ஒன்றாகத் திருமுருகாற்றுப்படையில் கடம்ப மரத்தடி சுட்டப்பட்டுள்ளது.

ஏன் கடம்பு இல்லை?

பொதுவாக, எந்தவொரு தெய்வத்துக்கும் உரித்தான / பிடித்தமான ஒரு தாவரம்தான், அந்தத் தெய்வம் உறையும் கோவிலின் தலமரமாக அமைவது தமிழகக் கோயில்களின் முக்கியப் பண்பு. ஆனால், வியப்பளிக்கும் வகையில் முருகனின் அறுபடை வீடுகளாகக் கருதப்படும் எந்தக் கோயிலிலும் கடம்ப மரம் தலமரமாக இல்லை. மாறாக வேறு மரங்கள் உள்ளன. கல் ஆத்தி, மகிழமரம், நெல்லி (இரண்டு படை வீடுகளில்), நாவல், திருச்செந்தூருக்குத் தல மரம் இல்லை. இதர சிறப்பு பெற்ற முருகன் கோயில்களிலும் கடம்ப மரம் தலமரமாக இல்லை. வன்னி, நெல்லி போன்ற மரங்கள்தான் உள்ளன. எனினும், பல சிவன் கோயில்களில் கடம்ப மரம் தலமரமாக உள்ளது.

சரியான மீட்பு தேவை

மதுரைக்கு அருகில் வைகை ஆற்றங்கரையில் முன்பு காணப்பட்ட கடம்ப வனம் (பரிபாடலின் மொத்தமுள்ள 70 பாடல்களில் கிடைக்கப்பெற்றுள்ள 22-ல் 15 பாடல்கள் முருகனைப் பற்றியும் வைகை ஆற்றைப் பற்றியும் இருப்பதையும், இவற்றில் ஒருசில கடம்ப மரத்தைச் சுட்டியுள்ளதையும் நோக்க வேண்டும்) முற்றிலும் அழிக்கப்பட்டதால், தற்போது அதை மீண்டும் உருவாக்கத் தொடங்கப்பட்டுள்ள முயற்சி வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. என்றாலும், மித்ரகைனா பார்விஃபோலியாதான் உண்மையான கடம்ப மரமாகக் கருதப்பட்டு இந்த வனம் புதுப்பிக்கப்பட வேண்டும். நியோலமார்க்கியா கடம்பா என்ற தாவரத்தை வைத்தல்ல. பழமையான, உண்மையான கடம்ப மரம் சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள அர்த்தபுரீஸ்வரர் கோயிலில் இன்னும் நிலைத்துக் காணப்படுகிறது.

உண்மைக் கடம்ப மலரும் மொட்டுகளும்

(அடுத்த வாரம்: எப்படி வந்தது வெளிக் கடம்பு?)

- கட்டுரையாளர், ஓய்வு பெற்ற தாவரவியல் பேராசிரியர்
தொடர்புக்கு: kvkbdu@yahoo.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x