Last Updated : 29 Mar, 2016 12:15 PM

 

Published : 29 Mar 2016 12:15 PM
Last Updated : 29 Mar 2016 12:15 PM

ஆங்கிலம் அறிவோமே - 103: ஆடர் ஆடர் ஆடர்!

“Infinite? Indefinite?” என்று ர.சு.மாக ஒரு வாசகர் கேட்டிருக்கிறார்.

Infinite என்றால் மிக மிக அதிக எண்ணிக்கையில் என்று அர்த்தம். அதே சமயம் எல்லையில்லாத என்றும் அர்த்தம். அளந்து பார்க்க முடியாத என்றும் கூறலாம்.

Infinite mercy of God.

Infinite amount of people have tried to have a glimpse of Miss World from nearby.

Indefinite என்றால் வரையறுக்கவே முடியாத அளவுக்கு மிக நீண்ட காலத்துக்கு என்று அர்த்தம். These data can be stored for indefinite lengths of time.The criminals may face indefinite detention.

தெளிவாகக் கூற முடியாத வற்றுக்கும் indefinite என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதுண்டு.

An indefinite number of properties were damaged in the recent rains.



“New என்றால் புதிய. Neo என்றால் என்ன?’’ என்று கேட்ட நண்பருக்கு அதுவும் newதான் என்று கூறினேன்.

Neonatal என்றால் இப்போதுதான் பிறந்த குழந்தை தொடர்பானது என்று அர்த்தம்.

Neophyte என்றால் ஒரு துறையிலோ, செயலிலோ புதியவன்.

Five day classes are offered to neophytes and experts.

புதிதாக மதம் மாறியவர்களையும் neophyte என்பதுண்டு.

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஹிட்லரின் கொள்கைகளைப் புதுப்பிப்பதில் சில இயக்கங்கள் ஆர்வம் காட்டின. மிகவும் வலதுசாரிப் போக்குக் கொண்ட இந்தக் கொள்கைகளை Neo-Nazism என்று குறிப்பிட்டார்கள்.



“இரண்டு வார்த்தைகளை இணைத்து ஒரே வார்த்தை ஆக்கினால் அதை எப்படிக் குறிப்பிடுவார்கள்?’’ என்று கேட்கிறார் ஒரு வாசகர்.

They will என்பதை they’ll என்கிறார்கள். She is என்பதை She’s என்கிறார்கள். I have என்பதை I’ve என்கிறார்கள். இதைக் contraction என்கிறார்கள். கொடுக்கப்பட்ட எடுத்துக்காட்டுகளில் இரண்டாவது வார்த்தைதான் மாறியிருக்கிறது. அதாவது apostrophe-யைப் பயன்படுத்தி இப்படி இணைக்கப்படும் வார்த்தைகளிலெல்லாம் இரண்டாவது வார்த்தைதான் சில எழுத்துகளை இழக்கும். ஆனால் ஒரே ஒரு இணைப்பில் மட்டும் முதல் வார்த்தையிலுள்ள எழுத்துகளும் மாறுதலுக்கு உள்ளாகின்றன. அது என்ன தெரியுமா? யோசியுங்கள்.



“என்னைக் கேட்டால் கமா என்பது தேவையில்லாதது என்பேன். I like idly dosa oothappam and poori என்றால் போதாதா? எதற்காக ஒவ்வொரு சிற்றுண்டியின் பெயருக்குப் பின்னாலும் கமா போட வேண்டும்?’’ என்றார் ஒரு நண்பர்.

அது சரி! கீழே உள்ள இரண்டு வாக்கியங்களையும் ஒப்பிடுங்கள்.

(1) Stop that man Ramesh.

(2) Stop that man, Ramesh

முதல் வாக்கியம் ரமேஷ் என்கிற மனிதனைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்ற பொருளைத் தருகிறது. இரண்டாவது வாக்கியம் ரமேஷ் என்பவரைப் பார்த்து ஒரு குறிப்பிட்ட மனிதரைத் தடுத்து நிறுத்து என்று கட்டளையிடுகிறது.

Can I call Divya? என்றால் திவ்யாவைத் தொலைபேசியில் அழைக்கலாமா? என்று அர்த்தம். Can I call, Divya? என்றால் யாரையோ தொலைபேசியில் அழைப்பதற்கு திவ்யாவின் அனுமதியை நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்.

கீழே உள்ள இரண்டு வாக்கியங்களுக்கும் உள்ள வித்தியாசம் இப்போது உங்களுக்குப் புரியும். எனவே, கமாவின் அவசியம் மேலும் தெளிவாகத் தெரியும்.

(1) Please invite her boss.

(2) Please invite her, boss.



“Order order order’’ என்று நீதிபதி சுத்தியலால் ஏன் மேஜையின்மீது தட்டுகிறார்?’’ என்பதோடு அந்த வாசகர் தன் கேள்வியை நிறுத்திக்கொண்டிருந்தால் “வளவளவென்று பேசி நீதிமன்றத்தின் அமைதியைக் கெடுப்பவர்களின் தலையில் சுத்தியலால் தட்ட முடியாது அல்லவா, அதனால்தான் மேஜைமீது தட்டுகிறார்’’ எனலாம். ஆனால், வாசகரின் முக்கிய சந்தேகம் அடுத்த வாக்கியத்தில். “மூன்று முறை order என்று சொன்னால் அதற்கு ஆங்கிலத்தில் தனி அர்த்தம் உண்டா?’’.

ஏதோ காரணத்தால் மூன்று என்பது நமக்கு ஆகிவந்த எண்போல! கோவிலை மும்முறை வலம் வருவோம். ஏலத்தை முடிவுக்குக் கொண்டுவர ‘ஒரு தரம், ரெண்டு தரம், மூணு தரம்’ என்பார்கள். மற்றபடி முக்கனி, முத்தமிழ், மும்மூர்த்தி, மும்மாரி இதெல்லாம் நாம் அறிந்தவைதானே.

ஆனால், order என்பது குறித்து நாம் வேறு சிலவற்றைத் தெரிந்துகொள்வோமே.

Order என்றால் கட்டளை. “சும்மா சும்மா எனக்கு order கொடுத்துகிட்டே இருக்க வேண்டாம்’’ என்று சில வீடுகளில் மனைவியரும், சில வீடுகளில் கணவர்களும், அத்தனை வீடுகளிலும் குழந்தைகளும் வெறுப்பாக வாக்கியத்தை உதிர்ப்பது இந்த அர்த்தத்தில்தான்.

ஆனால், ‘in order’ என்றால் ஒழுங்காக அல்லது சரியாக என்று அர்த்தம். Everything is in order.

Out of order என்றால் சரியில்லை என்று அர்த்தம். Lift out of order என்ற அறிவிப்பைப் பார்த்தால் பெருமூச்சு விட்டபடி படிகளில் ஏறி நாம் மேல்மூச்சு, கீழ்மூச்சு வாங்கத் தயாராவது இந்த அர்த்தத்தில்.

To take orders என்றால் கீழ்ப்படிவது என்று அர்த்தம். Of high order என்றால் உயர்தரம் என்று பொருள்.



ஆங்கிலம் அறிவோமே - 103

# Sheriff என்பது என்ன பதவி?

சட்ட அதிகாரியை அப்படிக் குறிப்பிட்டார்கள். முன்பு முஸ்லிம் ஆட்சியாளரை Sherif (கவனிக்க - ஒரு ‘f’ தான்) என்றார்கள்.

# Condiment என்றால்?

Spice. அதாவது மசாலாப் பொருள்.

# Ryot என்றால் கலவரமா?

Riot என்றால் கலவரம். Ryot என்றால் விவசாயி.



இந்தப் பகுதியில் contractions பற்றிக் குறிப்பிடும்போது ஒரு இணைப்பில் மட்டும் முதல் வார்த்தையில் உள்ள எழுத்துகள் மாறுதலுக்கு உள்ளாகின்றன என்றேன். அது இதுதான் Will not என்பது won’t என்று ஆகிறது.

தொடர்புக்கு: aruncharanya@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x