Last Updated : 04 Dec, 2021 03:07 AM

Published : 04 Dec 2021 03:07 AM
Last Updated : 04 Dec 2021 03:07 AM

எங்கே செல்லும் இந்தப் பாதை?

யானையையும் ரயிலையும் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காமல் பார்ப்பது எளிய மக்களின் இயல்பு. இதற்கு நானும் விதிவிலக்கல்ல. மூன்று யானைகள் ரயிலில் அடிபட்ட செய்தியைக் கேள்விப்பட்டு நானும் நண்பர் மோகனும் அதைப் பார்த்து வரப் புறப்பட்டோம். ரயிலில் அடிபட்ட ஒரு யானையைப் பார்ப்பது அயர்ச்சி தரும் செயல். அதிலும் மூன்று யானைகள் அடிபட்டுக் கிடந்த காட்சியைப் பார்த்தபோது, நிலச்சரிவு ஏற்பட்ட குன்று போல அவை சரிந்துகிடந்தன. அந்தக் காட்சி, கலிங்கத்துப் பரணியை நினைவுபடுத்தியது.

யானை இறந்து கிடந்த அதே இடத்தில் ரயில்வே அடையாள அறிவிப்புப்பலகையும் கண்ணில் பட்டது. இங்கே யானை குறுக்கிடும், எனவே விசில் ஊதுக என்று பொருள் விளங்கும்படி, யானையின் படம் வரையப்பட்டு Whistle என்கிற ஆங்கிலச் சொல்லின் முதல் எழுத்தான ‘W’ என்கிற குறியீடும் அதில் வரையப்பட்டிருந்தது. இந்த எச்சரிக்கையின்படி, ரயில் ஓட்டுநர் விசில் ஊதியிருப்பார். வேகத்தையும்கூடக் குறைத் திருப்பார் என்றே வைத்துக்கொள்வோம். அப்படி யானால் இந்த விபத்துக்கள் எப்படி நேர்கின்றன?

காரணம் என்ன?

இந்த விபத்துக்கள் எல்லாம் பொதுவாக இரவில்தான் நேர்கின்றன. ரயிலின் முகப்பிலி ருந்து வெள்ளம்போல வரும் ஓளி யானையின் கண்களைக் கூசச்செய்து, அவற்றைத் திக்கு முக்காடச் செய்திருக்க வேண்டும் என்று தோன்றி யது. போதாக்குறைக்கு ரயில் தண்டவாளத்தின் இரண்டு பக்கமும் விவசாய நிலங்களைப் பாதுகாப்பதற்காகப் போடப்பட்ட மின்வேலிகளும் தடையாக இருந்துள்ளன.

எங்கே போவது என்று தெரியாமல் தனது குட்டிகளையும் காப்பாற்றியாக வேண்டிய சூழலில் அந்தத் தாய் யானை படாதபாடு பட்டிருக்கும். எனவே, விசில் மட்டும் ஊதிப் பயனில்லை. சில நிமிடங்கள் விளக்கை நிறுத்தி விட்டு, அவற்றின் கண்கள் இயல்பு நிலைக்குத் திரும்ப வாய்ப்புக் கிடைத்திருந்தால், ஒருவேளை அவை தப்பியிருக்கலாமோ என்று தோன்றியது.

இந்தச் சிந்தனை தோன்றியவுடன் விளக்கைச் சில நிமிடம் நிறுத்தியபடி ரயிலை இயக்க முடியுமா என்பதைத் தெரிந்த ரயில் ஓட்டுநர் ஒருவரிடம் கேட்டேன். அதற்கு வாய்ப்பு குறைவு என்று சொல்லிவிட்டு, விபத்து நேரும் வாய்ப்பு இருப்பதாகக் கருதினால், அப்பகுதியில் ரயிலை, நடக்கும் வேகத்தில் இயக்கி விபத்தைத் தவிர்க்கச் சட்டத்தில் இடமிருக்கிறது என்றார். ஏனெனில், குறிக்கப்பட்ட வேகமான 40 கி.மீ. வேகத்தில் ஓட்டினாலும் எஞ்சினை உடனே நிறுத்த முடியாது. எனவே, ஊர்ந்து செல்வதுபோலச் சென்றால்தான் எஞ்சினை நிறுத்தி, அவை தப்பிப்போவதற்கு வழி ஏற்படுத்த முடியும் என்றார்.

ஆனால், 5 கி.மீ. வேகத்தில் மெதுவாக இயக்கினால் சேருமிடத்தை அடைய ஒரு மணி நேரத்திற்கும் மேலாகத் தாமதமாகும் என்று கூறி ரயில்வே உயரதிகாரிகள் இந்தக் கருத்தை வரவேற்கவில்லை என்று தெரியவருகிறது. பத்து மணிக்குச் சேர வேண்டிய ரயிலின் கால அட்டவணையை 11 மணிக்குச் சென்றுசேரும் என்று மாற்றி அமைத்துவிட்டால், குறிப்பிட்ட நேரத்திற்கு அந்த ரயில் சென்று சேர்ந்துவிட்டதாகத்தானே பொருள். இதில் ஏது கால தாமதம்?

எப்போது தீர்வு?

யானை முக்கியமா, நேரம் முக்கியமா என்று கேட்டால், யானை முக்கியம் என்று சொல்வேன். இந்தப் பதிலோடு ரயில் பயணிகள் கூட ஒரு வேளை உடன்படக்கூடும். ஆனால், சாதாரண ரயிலையும் எக்ஸ்பிரஸ் ரயிலாகக் காட்டி கூடுதல் கட்டணம் வசூல்செய்யும் நினைப்பிலிருப்பதோடு, தனியார்மயமாக்கும் ஆர்வத்தில் இருக்கும் ரயில்வே நிர்வாகம் இதற்கு உடன்படுமா என்றுதான் தெரியவில்லை.

வழக்கம்போல, இந்நிகழ்வும் யானை ரயிலில் அடிபடும்போது மட்டும் பேசுபொரு ளாய் இருந்துவிட்டுப் பின் நினைவிலிருந்து மறைந்துவிடும். ஆனால், யானை வேண்டும் என்று கருதினால் நாம் சில தியாகங்களைச் செய்துதான் ஆக வேண்டும். சற்றே மாற்றியும் யோசிக்கலாம். ஒருவேளை யானையின் மீது ரயிலேறிக் கவிழ்ந்திருந்தால், அதில் பயணம் செய்த பயணிகளுக்கும் ஒட்டுநருக்கும் காயமோ உயிர்ச்சேதமோ ஏற்பட்டால்? அப்படி நேர்ந்தால்தான் இதற்குத் தீர்வு பிறக்குமா?

ஸ்காண்டிநேவியப் பகுதிகளில் மேற்கொள்ளப் பட்டுவரும் ஒரு முன்முயற்சி குறித்த காணொலியை நண்பர் பாபுஜி அனுப்பியிருந்தார். அந்தக் காணொலியின் சாரம் இதுதான். எந்தச் சத்தத்தைக் கேட்டால் உயிரினங்கள் பயந்து விலகிச் செல்லுமோ அதைப் பதிவுசெய்து ரயில் வருவதற்கு சில நிமிடங்களுக்கு, அந்த ஓடுபாதையில் ஒலிபரப்பச் செய்வதன் மூலம் தண்டவாளத்தில் திரியும் விலங்கை விலகி ஓடச்செய்யலாம் என்று நிரூபித்திருக்கிறார்கள். இது சார்ந்து வனத்துறையும் ரயில்வே துறையும் இணைந்து செயல்பட்டால் தீர்வு காண முடியும்.

சுழற்சி காப்பாற்றப்படுகிறதா?

இறந்து கிடந்த யானையைப் பார்க்க வந்த சிலர் சத்தமில்லாமல் யானையின் வால்முடியைப் பிடுங்கிச் சேகரிக்க ஆரம்பித்திருந்தனர். அவர்களுக்கு யானை இறந்தது பிரச்சினையாகத் தெரியவில்லை. இது போன்ற மூடநம்பிக்கைகளை நம் மக்கள் எப்போதுதான் விட்டொழிப்பார்களோ? இதைத் தவிர்ப்பதற்காக வனத்துறையினர் சாக்கைப் போட்டு வாலைச் சுருட்டி மூடிவிட்டனர். இதுபோல, ஒவ்வொருவரும் வெவ்வேறு காரணத் துக்காக யானையைப் பார்க்க வருகிறார்கள். இறந்து கிடந்த யானையைப் பார்க்கப் போனதில் எங்களுக்குத் தனிப்பட்ட காரணம் இருந்தது. இறந்துவிட்ட யானைகளை உடற்கூறு ஆய்வுக்குப் பின் புதைக்கிறார்களா அல்லது அப்படியே விடு கிறார்களா என்பதைத் தெரிந்து கொள்ளவேண்டும் என்று விரும்பினேன்.

காரணம், இறந்து போன விலங்கைத் தின்பதற்காகவே காகம், பாறுக் கழுகுகள், மைனா, பெருநாரை (Adjutant stork), பன்றி, கழுதைப்புலி, செந்நாய் உள்ளிட்ட பல உயிரினங்கள் உள்ளன. அதை அப்படியே விட்டால் பல விலங்குகள் பயன்பெறும். கூடவே, பாறுக் கழுகுகளுக்கும் பாதுகாப்பான உணவு கிடைக்குமே என்கிற எண்ணமும் இருந்தது. இப்படிச் செய்வதால் பன்றிகள் தோட்டத் துக்குள் புகுந்து வெள்ளா மையைச் சேதப்படுத்துவது குறையுமே. பாறுக் கழுகுகள் உண்பதன் மூலம் இறந்த விலங்கிலிருந்து நோய்த்தொற்று ஏற்படுவது குறையும் என்று தோன்றியது.

இதை வனத்துறையினரிடமும் மருத்துவப் பரிசோதகரிடமும் வலியுறுத்தி னோம். ஆனால், பல்வேறு காரணங்களை விளக்கி இந்த இடம் அதற்கு ஏற்ற இடமல்ல. எனவே, புதைப்பதே சிறந்தது என்று அவர்கள் கூறினார்கள். அதில் உண்மை இருக்கலாம். இறந்த விலங்கை, அதுவும் உடற்கூறு ஆய்வுக்குப்பின் எடுத்துச் சென்று காட்டுக்குள் போடுவதில் பல சவால்கள் இருக்கின்றன என்பது உண்மைதான். ஆனால், இறந்த உயிர் இன்னொரு உயிரினத்துக்கு உணவாகும் வாய்ப்பை நாம் தட்டிப்பறிக்கிறோம் என்றே தோன்றுகிறது. இதற்கு ஒரு வழி பிறக்க வேண்டும். வருங்காலத்தில் இது மாறும் என்று நம்புவோம்.

எச்சரிக்கை ஒலி

இறந்து கிடந்த யானையை உடற்கூறு செய்வ தற்கு ஆயத்தப்படுத்தியபோது அவற்றின் கால்கள் வெட்டுப்பட்ட பனைமரம் போலக் கிடந்தன. காடு, மலை, சதுப்புநிலம், வழுக்கும் பாறை, முள் இவற்றின் மேல் நடப்பதற்கு ஏற்றபடி அதன் பாதங்கள் சொர சொரப்புடன் பல்லாங்குழி போலக் காணப்பட்டன. ரயில் இழுத்துச் சென்றதில் அந்தக் காலின் மேல்பகுதி நகத்தோடு சேர்ந்து பிளந்திருந்தது. உள்ளே நுங்குபோல மென்மையாக இருந்தது. யானையின் கால்கள் எவ்வளவு மென்மையானவை என்பதைப் பலரும் வர்ணித்திருக்கிறார்கள். உல்லாச நோக்கில் சுற்றுலாப் பயணிகளால் உடைத் தெறியப்படும் பாட்டில்கள் யானையின் காலை எப்படியெல்லாம் வதைக்கின்றன என்றும் பலர் விவரித்திருக்கிறார்கள். அவை ஒரு மின்னலைப் போல என் மனத்தில் வந்து போயின.

யானையிடம் உடற்கூறு ஆய்வு மேற்கொண்ட போது, யானையின் வயிற்றிலிருந்து குட்டிக் கரு ஒன்றையும் மருத்துவர் வெளியில் எடுத்தார். அப்போது பாலக்காட்டை நோக்கி ரயில் சங்கு ஊதியபடி கடந்து சென்றது. அந்தச் சங்கு நமக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை ஒலி என்று தோன்றியது. இந்த எச்சரிக்கையைப் புறந்தள்ளிவிட்டுச் சத்தியமங்கலம் வழியாக மைசூருக்கு ரயில்விட வேண்டும் என்று முனைப்புடன் ஒரு சாரார் இயங்கி வருகின்றனர். இதை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என்று தோன்றுகிறது. ஆனால், அந்த நினைப்பு அனைவரிடமும் வரவேண்டுமே.

கட்டுரையாளர், சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்

தொடர்புக்கு: arulagamindia@gmail.com

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x