Published : 04 Dec 2021 03:07 AM
Last Updated : 04 Dec 2021 03:07 AM

பாலியல் வன்முறைகளை எதிர்கொள்வது எப்படி?

பாலியல் வன்முறை நாகரிக சமூகத்தின் பெரும் இழிவுகளில் ஒன்று. நாகரிகம் மனிதனைப் பக்குவப்படுத்தி இருந் தாலும், பாலியல் வன்முறையில் ஈடுபடும் இயல்பு இன்னும் சிலரிடம் எஞ்சியிருக்கிறது. இதன் வெளிப்பாடே கல்வி நிலையங்களில் மாணவிகள் பாலியல் தொந்தரவுக்கு உள்ளாக்கப்படுவது.

தற்போதைய தொழில்நுட்ப யுகத்தில், இரு பாலினருக்கு இடையேயான பாலியல் வரைமுறை களை இணையதளமும், சமூக வலைத்தளங்களும் பெரிதும் மாற்றியமைத்துவிட்டன. கல்வியும், கைபேசிகளும் இணையும் புள்ளி, பாலியல் அத்துமீறல்களுக்கு அதிக சந்தர்ப்பங்களை ஏற்படுத்தித் தருகிறது.

மிரட்டல் என்னும் ஆயுதம்

பள்ளி, கல்லூரி வகுப்புகளில் சில மாணவ, மாணவிகளுக்கு மட்டும் ஆசிரியர்கள் தனிக் கவனம் கொடுப்பது இயல்பானதுதான். நன்றாகப் படிக்கும் மாணவர்களை இன்னும் மேம்படுத்து வதற்கும், பின்தங்கிய மாணவர்களைத் தேர்ச்சி பெறவைப்பதற்கும் இப்படிச் செய்வதுண்டு. ஆனால், இதே காரணங்கள் மாணவி களுக்குப் பாதகமாகவும், சபலத்தன்மை கொண்ட ஆசிரியர் களுக்குச் சாதகமாகவும் மாறிவிடுகின்றன.

வகுப்பிலோ அதற்கு அப்பாற்பட்டோ ஒரு குறிப்பிட்ட மாணவியிடம் மட்டும் தொடர்ச்சியாக மதிப்பெண்களைக் குறைத்துவிடுவதாக மிரட்டுவது, படிப்பைத் தொடர முடியாமல் செய்து விடுவேன் என்று எச்சரிப்பதைக் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். இதை முழுமையாகத் தவறான கண்ணோட்டத்தில் எடுத்துக்கொள்ள முடியாது என்றாலும், சம்பந்தப்பட்ட மாணவி முந்தைய சூழ்நிலைகளுடன் ஒப்பிட்டுத் தான் நிர்பந்திக்கப்படுவதைக் கண்டறிய முடியும்.

இந்தச் சூழலில், தனது படிப்புக்கும் நற்பெயருக்கும் பாதிப்பு வந்துவிடுமோ என்று பயந்து காலந்தாழ்த்துவதைவிடப் பெற்றோரிடம் கூறிவிடுவது நல்லது. பெற்றோரிடம் சொன்னால் இது தவறாக எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது என்கிற நம்பகத்தன்மையை உருவாக்க வேண்டியது பெற்றோரின் கடமை.

பாலியல் மிரட்டல்களின் வளர்ச்சி

தனிமனிதனாகச் சிறிய தவறுகளைச் செய்யத் தயங்கும் நபர்கூட வன்முறையில் ஈடுபடும் கும்ப லில் இருக்கும்போது, கல்லெறியும் அளவிற்குத் தைரியம் பெற்றுவிடுவார். தன்னை யாரும் கவனிக்க வாய்ப்பில்லை என்கிற அநாமதேய எண்ணமே (Anonymity) இதற்குக் காரணம். இதே மனநிலை கைபேசி வழியாகப் பாலியல் தொல்லை கொடுக்கும் நபருக்கும் இருக்கலாம். வெளிப்படையாக இதைப் பற்றிப் பேசத் தைரியம் இல்லாத நபர்கள் சபலத்தை வெளிப்படுத்த இணையதளம், கைபேசியைப் பயன்படுத்தலாம். இதையும் செய்ய தைரியம் இல்லாதவர்கள் குழந்தைகளை இரையாக்கத் துணிகிறார்கள்.

எச்சரிக்கை அறிகுறிகள்

ஓர் ஆசிரியர் அல்லது சக மாணவன் பாலியல் சீண்டல் நோக்கத்துடன் தன்னை அணுகு கின்றாரா என்பதை ஆரம்பக் கட்டத்திலேயே அறிந்துகொள்ள முடியும்.

# தேவைக்கு மீறி அடிக்கடி தனியாகப் பேசுவதற்கான அல்லது சாட் செய்வதற்கான சந்தர்ப்பங்களை ஏற்படுத்துவது.

# வகுப்பு நேரம் தவிர மற்ற நேரத்தில் வலியவந்து பாடம் சம்பந்தமாக உதவிசெய்வதாகக் காண்பித்துக் கொள்வது.

# குடும்ப நபர்களைப் பற்றித் தேவைக்கு அதிகமாக விசாரிப்பது; வீட்டில் யார் இருக்கிறார்கள் என்பதை அடிக்கடி உறுதிப்படுத்திக்கொள்வது.

# தான் அனுப்பிய குறுஞ்செய்திகளை அல்லது அழைப்பு வரலாற்றை அழித்துவிடுமாறு பேச்சு வாக்கில் சொல்வது.

# மாணவியின் படிப்பு அல்லது தனித்திறமைகளை அதிகம் புகழ்ந்து பேசுவது.

# மாணவியின் உடைகளை, அழகை நேரடியாகவோ மறைமுகமாகவோ வர்ணிப்பது.

# பாடங்களில் ஆரம்பித்துத் தனிப்பட்ட பேச்சுக்கு இழுப்பது.

செய்யவேண்டியது என்ன?

ஒருவேளை ஆசிரியர்களோ, சக மாணவர் களோ அல்லது பள்ளிக்குச் செல்லும் வழியில் அடிக்கடி எதிர்ப்படும் நபரோ பாலியல்ரீதியாகச் சீண்ட முயல்வதாக ஒரு பெண் நினைத்தால், தாமதிக்காமல் அதற்கு முற்றுப்புள்ளி வைக்க முயல வேண்டும். ‘இனி என்னைத் தொந்தரவு செய்தால் வெளியே சொல்லிவிடுவேன்’ என்று அவர்களை எச்சரிப்பது சிலநேரம் அவர்கள் உடல் ரீதியான அத்துமீறல்களை மேற்கொள்ள வழிவகுக்கும். மாறாக நம்பிக்கைக்குரிய சக பாலின ஆசிரியர்களிடமோ, பெற்றோரிடமோ சொல்லி அவர்கள் மூலமாக அடுத்தகட்ட நடவடிக்கையை மேற்கொள்வது நல்லது. இப்படிச் செய்வதால் நம் படிப்பு பாதிக்கப்படும் என்கிற பயமோ, அந்த நபரின் வாழ்க்கை பாதிக்கப்படும் என்கிற குற்றவுணர்வோ தேவையில்லை. மாறாக நாம் சிக்கிக்கொள்ளாமல் இருப்பதுடன், இதைப்போல் இன்னொரு பெண்ணும் பாதிப்புக்குள்ளாவதைத் தடுக்க முடியும் என்பதை மறந்துவிடக் கூடாது.

பலவீனங்களை வெளிப்படுத்த வேண்டாம்

வகுப்புகளிலும், சமூக வலைத்தளங்களிலும் சில கட்டுப்பாடுகளைப் பின்பற்றத் தவறும் மாணவிகள் எளிதில் பாதிப்புக்குள்ளாகக்கூடும்.

# படிப்பதற்கும், வரைமுறைக்கு உட்பட்ட பொழுது போக்குக்கும் மட்டுமே இணையதளம், கைபேசியை உபயோகியுங்கள்.

# சமூக வலைத்தளங்களில் பரிச்சயம் இல்லாத நபர்களிடம் சாட் செய்வதைத் தவிருங்கள்.

# பரிச்சயம் இல்லாத நபர்களிடமிருந்தோ, பரிச்சயம் உள்ள நபர்களிடமிருந்தோ தேவையற்ற நேரங்களில் வரும் ‘ஹலோ’க்களை அங்கீகரிக்க வேண்டாம்.

# தடம் மாறும் பேச்சுக்கள் அல்லது சாட்களுக்கு முதலி லேயே முற்றுப்புள்ளி வைத்துவிடுவது நல்லது.

# விருப்பம் இல்லாத சீண்டல்களுக்கு எதிர்ப்பைத் தெரிவிக்காமல் இருக்கும்போது, உங்களுக்கும் விருப்பம் இருக்கிறது என்று எதிர்தரப்பினர் நினைத்துக்கொண்டு இன்னும் நெருங்கிவரும் தவறான அணுகுமுறையை ஏற்படுத்தும்.

# ஏற்கெனவே நம்பிக்கை பெற்ற எதிர்பாலின நபராக இருந்தாலும், அவரது நம்பகத்தன்மையை அவ்வப்போது சீராய்வு செய்துகொள்வது நல்லது.

# உங்களின் தனிப்பட்ட தகவல்கள், ஒளிப்படங்களைச் சமூக வலைத்தளங்களில் பகிர்வதைத் தவிர்த்து விடுங்கள்.

# ‘நான் மனச்சோர்வில் இருக்கிறேன், தனிமையாக உணர்கிறேன், புரிந்துகொள்ள யாருமில்லை’ என்பது போன்ற உங்கள் மனநிலையை வெளிப்படுத்தும் வகையில் வாட்ஸ் அப் ‘ஸ்டேட்டஸ்’ வைத்து உங்கள் பலவீனங்களைப் பிறருக்கு வெளிப்படுத்த வேண்டாம்.

பள்ளி புறக்கணிப்பு

பள்ளிக்குச் செல்வதைத் தவிர்க்க விரும்பும் மாணவிகள், படிக்க விருப்பமில்லாமல் அப்படிச் செய்கிறார்கள் என்று பழியைப் போட்டுவிட வேண்டாம். பள்ளிக்கு அழைத்துச்செல்லும் ஓட்டுநர்கள் முதல் ஆசிரியர்கள், சக மாணவர்கள் வரை அனைவரின் அணுகுமுறைகளைப் பெற்றோர் அடிக்கடி விசாரித்து அறிந்துகொள்வது மாணவிகளுக்குப் பாதுகாப்பு உணர்வையும், பிரச்சினை ஏற்படும்பட்சத்தில் உடனடியாக வெளிப்படுத்தும் தைரியத்தையும் கொடுக்கும்.

வடிகால் தேடும் வயது

பெற்றோரின் அரவணைப்பு இல்லாமை, தந்தையின் குடிப்பழக்கம், அடிக்கடி கண்முன் நடக்கும் குடும்பத்தகராறுகள், அதிகப்படியான கல்விச்சுமை, விருப்பமில்லாவிட்டாலும் நீட் போன்ற தேர்வுகள் எழுத நிர்ப்பந்திக்கப்படுவதால் ஏற்படும் மன அழுத்தம், ஆளுமைக்கோளாறு, பதின்பருவ தெளிவின்மை, கைபேசிகளில் ஆபாசக்காட்சிகளைப் பார்ப்பதால் ஏற்படும் ஆர்வக்கோளாறு உள்படப் பல காரணங்கள் மாணவிகளை எளிதில் பாலியல் வன்முறைக்கான இரையாக மாற்றிவிடக்கூடும்.

எதிர்பாலினரோடு கூடிய சகஜமான உறவில் அதிக அப்பாவித்தனமும் கூடாது; அதிக சந்தேக புத்தியும் கூடாது. இரண்டும் தேவையான அளவிற்குத் தேவையான இடங்களில் வெளிப்படும்வகையில் பிள்ளைகளுக்குப் பெற்றோர் கற்றுக்கொடுப்பது இன்றைய காலத்தின் அடிப்படைத் தேவை.

பாதிக்கப்பாட்டால் என்ன செய்ய வேண்டும்?

பாதிக்கப்பட்டவர்கள்

* இது எனக்கு ஏன் நேர்ந்தது, நான் என்ன தவறு செய்தேன், ஒரு வேளை நான் இதைத் தடுக்கத் தவறிவிட்டேனோ என்கிற கைவிடப்பட்ட அல்லது குற்ற உணர்ச்சியை மாணவிகள் கைவிட வேண்டும்
* வெளியுலகை எதிர்கொள்ளக் கூச்ச உணர்வு, உலகமே பாதுகாப்பற்றது என்பது போன்ற எண்ணங்களைத் தவிர்க்க வேண்டும்.
* இது ஒரு விபத்துதான்; இது நிரந்தரமானது அல்ல எனும் உண்மையை எந்தச் சூழலிலும் மறக்கக் கூடாது.

பள்ளி நிர்வாகம்

* பாலியல் அத்துமீறலை நிர்வாகத்தினர் எச்சரிக்கையுடன் அணுக வேண்டும்.
* முதலில் அந்த மாணவியின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும்.
* ஊடக வெளிச்சத்திற்கு வந்துவிட்டால் பள்ளியின் பெயர் கெட்டுவிடும் என்று பிரச்சினைகளை மூடிமறைக்க முயலக் கூடாது.
* மாணவியின் பெற்றோரை அழைத்துப் பாது காப்பையும் நடவடிக்கையையும் உறுதிசெய்ய வேண்டும்.

பெற்றோர்

* பாதிக்கப்பட்ட மாணவியைக் குற்றவாளிக் கண்ணோட்டத்துடன் பார்க்காமல், ‘இதில் உன்னுடைய தவறு எதுவும் இல்லை’ என்று ஆறுதலும், உறுதியும் அளிக்கவேண்டும்.
* எல்லாவற்றையும் இழந்துவிட்டோம் என்று அவர்கள் முன் அழுது புலம்பக் கூடாது.
* பாதிக்கப்பட்ட மாணவியிடம் பெண் மருத்துவர் உடல் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.
* அதிர்ச்சியிலிருந்து மீளவும், பிற்காலத்தில் மன உளைச்சல் (PTSD) ஏற்படாமலிருக்கவும் மனநல மருத்துவரின் ஆலோசனை அவசியம்.

கட்டுரையாளர், திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி உதவிப் பேராசிரியர்.

தொடர்புக்கு: godsonpsychiatrist@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x