Published : 25 Mar 2016 10:52 AM
Last Updated : 25 Mar 2016 10:52 AM

சினிமா ரசனை 39: விமர்சகர்களுக்குத் தெரியாத உண்மை!

'த ஷஷாங்க் ரிடெம்ப்ஷன்' (The Shawshank Redemption) என்ற புகழ்பெற்ற திரைப்படத்தின் இயக்குநர் ஃப்ராங்க் டேரபாண்ட். அந்தப் படத்தின் திரைக்கதையைப் புத்தகமாக வெளியிட்டிருக்கிறார். அந்தப் புத்தகத்தில் அவர் எழுதியிருக்கும் ஒரு முக்கியமான கட்டுரையின் சுருக்கமான மொழிபெயர்ப்பு இது. இதை நான் மொழிபெயர்க்கத் தீர்மானித்தது ஏனெனில், ஒரு படத்தை இயக்குவதில் உள்ள கஷ்டங்களைப் பற்றிய டேரபாண்ட்டின் இந்தக் கட்டுரை, ஒரு அற்புதமான தன்னம்பிக்கை டானிக்காகவும் விளங்குகிறது.

இனி, டேரபாண்ட் பேசுகிறார்.

‘கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக, ஒரு திரைக்கதையாசிரியனாக இருக்கும் பெரும் பேறு எனக்குக் கிட்டியுள்ளது. நான் சந்திக்கும் மக்கள், பொதுவாக என்னிடம் எப்பொழுதும் கேட்கும் ஒரு கேள்வி எனது வாழ்வாதாரமாக நான் கொண்டுள்ள இந்தப் பணியைச் செய்வது உள்ளூற எப்படி இருக்கிறது என்பதே.

கட்டாயம் இது ஒரு சுவாரஸ்யமான வாழ்க்கைதான். மனதுக்கு முழுத் திருப்தியளிக்கும் வாழ்க்கை. எதனாலும் எனக்குக் கிடைத்த இந்த வாழ்க்கையை நான் மாற்றிக்கொள்ள மாட்டேன். இருந்தாலும், எனது நேர்மையான கருத்து என்னவெனில், சமயங்களில், இந்த வாழ்க்கை, நான் சிறு வயதில் நினைத்துப் பார்த்ததுபோல் அந்த அளவு சுவாரஸ்யமாக இல்லாமலும் இருக்கிறது என்பதுதான்.

அழிந்துபோன நினைவு

மிகக் கடினமான வேலைப் பளுவோடு இருப்பதே எனது வாழ்க்கை. ஷஷாங்க் ரெடெம்ப்ஷன் படமாக்குதலுக்கு முந்தைய வேலைகளை, ஜனவரி 1993ல் இருந்து தொடங்கினேன். நடிகர்களைத் தேர்வுசெய்தல், லொகேஷன்களைப் பார்வையிடுதல், தொழில்நுட்ப வல்லுநர்களோடு எண்ணற்ற முறைகள் பேசுதல் இன்ன பிற வேலைகள் அதில் அடங்கும். இது ஐந்து மாதங்கள் வரை நீண்டது. இந்த ஐந்து மாதங்கள் கழித்து, மொத்தமாக ஓய்ந்துபோனேன்.

இதன் பிறகே, நிஜமான வேலை தொடங்கியது. மூன்று மாத ஷூட்டிங் ஓஹையோவிலும் மேன்ஸ்ஃபீல்டிலும். கிட்டத்தட்ட பதினைந்திலிருந்து பதினெட்டு மணி நேர வேலை தினமும். உட்காரக்கூட நேரமில்லாத சூழல். ஞாயிறு மட்டுமே ஷூட்டிங் இல்லை. ஆனால், அன்றும், அடுத்து வரும் வாரத்தில், காட்சிகளை எப்படி அமைப்பது என்று சிந்திப்பதிலேயே எனது நேரம் முழுவதும் கழிந்தது. ஓய்ந்துபோனேன் என்பது மிகப் பலவீனமான வார்த்தை. எனது நிலைமையை விளக்குவதற்கு இனிதான் ஒரு வார்த்தையைக் கண்டுபிடிக்க வேண்டும்.

முடிவில், பிணங்கள் நடப்பதைப் போன்று ஒரு நிலையில், வெறித்த பார்வையோடு, தானியங்கி முறையில் நடமாடுவதைப் போல், எங்கோ தொலைதூரத்தில் கண்ணுக்கு எட்டாத இலக்கை நோக்கித் தள்ளாடித் தள்ளாடி நடக்கும் ஒரு மனிதனின் நிலையில் இருந்தேன். அப்படி நடக்கையிலேயே தவறிக் கீழே விழுந்தாலோ, ஆள் காலி. இதில் வீட்டின் நினைவுகள் வேறு. மனோபலமும் உடல் பலமும் அபரிமிதமாகத் தேவைப்படும். நம்பவே முடியாத அசதியும் மன உளைச்சலும் கூடவே தொடர்ந்து வந்துகொண்டே இருக்கும்.

விமர்சகர்களுக்குத் தெரியாது!

ஷூட்டிங் முடிந்த பின்னர் போஸ்ட் ப்ரொடக்ஷன். வாரத்துக்கு ஏழு நாட்கள் மிகக் கடுமையாக எங்களின் மூளை காதுகளின் வழியே வழிந்து ஓடும்வரை - வேலை செய்தோம். இந்தத் திரைப்படம், எனது வாழ்வின் ஒன்றரை வருடங்களை என்னிடமிருந்து விழுங்கியது. நண்பர்களை ஒன்றரை வருடமாக நான் சந்திக்கவில்லை. இந்தக் காலத்தில் பெரும்பாலான நாட்கள் கடுமையாகவும் சோர்வுடனும்தான் கழிந்தன. இதிலும், முப்பதே நொடிகளில், எனது ஒன்றரையாண்டு உழைப்பை ஒரு டிவி விமர்சகர் நல்லதாகவோ கெட்டதாகவோ விமர்சித்துவிட முடியும். விமர்சகர்களுக்குத் தெரியாதது என்னவெனில், ஒரு திரைப்படம் எடுக்கப்படுவதே அதிசயம்தான் என்பதே.

சரி, இப்போது சொல்லுங்கள். எனது துறை, சுவாரஸ்யமாகவும் ஜாலியாகவுமா இருக்கிறது?

இருந்தாலும், என்னைப் பொறுத்தவரை, நான் என்ன செய்ய வேண்டுமென்று விரும்பினேனோ அதைச் செய்துகொண்டிருக்கிறேன். அதில் எனக்கு மனம் முழுக்க சந்தோஷமே நிரம்பியுள்ளது.

சரி. இவ்வளவு கடினமாக உள்ள ஒரு வேலையை ஏன் செய்ய வேண்டும்?

வெறும் பிம்பங்கள்

ஒரு ரகசியத்தை உங்களிடம் சொல்கிறேன். நாம் செய்ய நினைக்கும் வேலை, ஜாலியாகவும் மகிழ்ச்சி தரக்கூடியதாகவும் இருந்தால் மட்டுமே அதனைச் செய்ய வேண்டும் என்ற ஒரு தவறான செய்தி நம்மிடையே பரப்பப்பட்டு வருகிறது. டிவியும் வீடியோ கேம்களும் இதைத்தான் நம்மிடையே போதிக்கின்றன. வீட்டில் சொகுசாக அமர்ந்துகொண்டே, எதுவும் கிடைக்கப்பெறும் சோம்பேறிகளாகவே நாம் இருந்துவிட்டோம். சமுதாயத்தில் நம்முடைய லட்சிய மாந்தர்கள், ஐன்ஸ்டைன், ஆப்ரஹாம் லிங்கன், ஷ்வைட்ஸர், லிண்ட்பெர்க் போன்ற சாதனையாளர்களாக இப்போது இல்லை.

நம்முடைய ஹீரோக்கள் யாரென்று பார்த்தால், வெறும் சிம்ப்ஸன் (அமெரிக்கத் தொலைக்காட்சியில் வரும் ஒரு கார்ட்டூன் கதாபாத்திரம்) அல்லது அதனைப் போன்ற வெறும் பிம்பங்களாகவே இருக்கின்றன. இவை நமக்குச் சொல்லவரும் செய்தி இதுதான்: வாழ்வில் சாதிக்கவே தேவையில்லை. சாதாரண வாழ்வு வாழ்வது மட்டுமல்லாது, பொதுவான வேலைகள்கூடச் செய்யாமல் சோம்பித் திரிவதே நல்ல விஷயம்தான் என்பதுபோன்ற கேடுகெட்ட செய்திகள்தான்.

தளராத போராட்டம்

நான் ஒருபோதும் இவர்களை எனது ஆதர்சங்களாகக் கொண்டவனில்லை. சோம்பலையும் முட்டாள்தனத்தையும் கொண்டாடும் விஷயங்களைக் கண்டால், எனது பொறுமையை நான் இழந்துவிடுகிறேன். எவ்வளவு கடினமான, நிறைவேறுவதற்கு வாய்ப்பே இல்லாத கனவுகளை நாம் நினைத்தாலும், அவை அத்தனையுமே கட்டாயம் நிறைவேறுபவைதான். ஆனால், இதற்குத் தேவை, கடும் உழைப்பு. ஒரு திரைக்கதையாசிரியனாக நான் மாறுவதற்கு, பசியும் போராட்டமும் நிறைந்த ஒன்பது வருடங்கள் ஆயின.

அந்த ஒன்பது வருடங்களும் மிகக் கொடுமையான வருடங்கள். விடாமுயற்சியும் உழைப்பும் இருந்தால், எவ்வளவு கடினமான நிலையிலும் நமது லட்சியம் நிறைவேறவே போவதில்லை என்ற ஒரு இருண்ட சந்தர்ப்பத்திலும் கூட பிடிவாதமான தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்வதன் மூலம், நமது விதியையும் அதிர்ஷ்டத்தையும் நாமே உருவாக்கிக்கொள்ள முடியும். இதில் எனக்குத் துளிக்கூட சந்தேகமே இல்லை. இந்தத் தத்துவமே ஷஷாங்க் ரெடெம்ப்ஷனின் அடிநாதமாக விளங்குகிறது. இந்தக் காரணத்தினாலேயேதான் ஸ்டீஃபன் கிங்கின் இந்தக் கதையை நான் காதலிக்கத் தொடங்கினேன்.

என்னை விடவும் திறமை வாய்ந்த பல இயக்குநர்களும் திரைக்கதையாசிரியர்களும், இந்த நகரத்தின் பல இடங்களில், சிறிய கடைகளிலும் அலுவலகங்களிலும் வேலை செய்துகொண்டிருக்கிறார்கள். ஆனால், ஒன்பது வருடங்களை இந்தத் துறையில் செலவிட நான் தயாராக இருந்ததுபோல், அவர்கள் தயாராக இல்லை. எனவே அவர்களால் பளிச்சிடவும் முடியவில்லை. எடிசன் ஆயிரம் முறை முயன்றுதானே ஒரு பல்பை எரியவைக்க முடிந்தது? சற்று யோசித்துப் பாருங்கள். ஒருவேளை, 999 முயற்சிகளுக்குப் பிறகு அவர் சோர்வடைந்து, இந்த முயற்சியைக் கைவிட்டிருந்தால்?

நான் சொல்லவரும் செய்தி மிகச் சுலபமானது. ஜான் எஃப் கென்னடியை விட வேறு யாராலும் இதனை எளிதாகச் சொல்லிவிட முடியாது: ‘சந்திரனுக்குச் செல்ல நாம் முயல்வது, அது சுலபமானது என்பதால் அல்ல; அது மிக மிகக் கடினமானது என்பதால் மட்டுமே’. உங்களுக்கு ஒரு கனவு இருக்கும் பட்சத்தில், எழுந்து, அதனை நோக்கி ஒவ்வொரு அடியாக வைக்கத் தொடங்குங்கள். என்னைப் பொறுத்தவரை, கென்னடியையும் எடிசனையும் எந்த நாளிலுமே உதாரணங்களாகக் கொண்டு செயல்பட்டு என்னால் வெற்றி காண முடியும். வாழ்த்துக்கள்’.

முப்பதே நொடிகளில், எனது ஒன்றரையாண்டு உழைப்பை ஒரு டிவி விமர்சகர் நல்லதாகவோ கெட்டதாகவோ விமர்சித்துவிட முடியும். விமர்சகர்களுக்குத் தெரியாதது என்னவெனில், ஒரு திரைப்படம் எடுக்கப்படுவதே அதிசயம்தான் என்பதே.

தொடர்புக்கு: rajesh.scorpi@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x