Published : 29 Nov 2021 11:26 AM
Last Updated : 29 Nov 2021 11:26 AM

ஃபேஸ்புக் நிறுவனம் ‘மெட்டா’வாக மாறியது ஏன்?

riyas.ma@hindutamil.co.in

ஃபேஸ்புக் நிறுவனம் தனது பெயரை ‘மெட்டா’ (Meta) என்று மாற்றி இருக்கிறது. மைக்ரோ சாஃப்ட், டென்சன்ட், பைடு டான்ஸ், அலிபாபா என சர்வதேச தொழில்நுட்ப நிறுவனங்கள் மெட்டாவர்ஸை (Metaverse) நோக்கி பயணிப்பதை தங்கள் இலக்காக அறிவித்துள்ளன. இந்தியாவில் ரிலையன்ஸ் நிறுவனம் தனது தொழில் செயல்பாட்டுக்கு மெட்டாவர்ஸை நாடத் தொடங்கி
யுள்ளது. பெங்களூரில் மெட்டாவர்ஸ் தொடர்பான ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் அதிக எண்ணிக்கையில் உருவாகத் தொடங்கி
யுள்ளன. மெட்டாவர்ஸ்… மெட்டாவர்ஸ்… மெட்டாவர்ஸ்.

அப்படியென்றால் என்ன?

இரு நூறு ஆண்டுகளுக்கு முன்பு தொலைபேசி என்று ஒரு சாதனம் உருவாக்கப்படும் என்றும் அதன் மூலம் உலகின் ஒரு மூலையில் இருப்பவர் மறு மூலையில் இருப்பவரிடம் பேச முடியும் என்றும் அக்காலகட்டத்தில் வாழ்ந்த மக்கள் எதிர்பார்த்திருப்பார்களா? அவ்வளவு ஏன், வீடியோ கால் என்றொரு வசதி வரும் என்றும் அதன் மூலம் எங்கோ ஒரு மூலையில் இருப்பவரிடம் திரையில் தோன்றி பேச முடியும் என்றும் நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு, பொதுச் சமூகம் எதிர்பார்த்திருக்குமா? ஆனால், தற்போது வீடியோ கால் என்பது நம் அன்றாடத்தோடு கலந்துவிட்டது.

சுருக்கமாகச் சொல்லப்போனால், ஆடியோ காலின் தொடர்ச்சி வீடியோ கால் என்றால், வீடியோ காலின் தொடர்ச்சிதான் மெட்டாவெர்ஸ். எனில், அந்தத் சூழல் என்னவாக இருக்கும்? நாம் திரைகளின் வழியாக அல்லாமல், நேரிலே இருப்பதுபோலான அனுபவத்தைத் தரக்கூடியாதாக அந்தச் சூழல் இருக்க வேண்டும்.அப்படித்தானே? ஆம். அந்தச் சூழல்தான் மெட்டாவர்ஸ். மெட்டா என்றால் அப்பால் என்று அர்த்தம். வர்ஸ் என்றால் பிரபஞ்சம். எனில், மெட்டாவர்ஸை இப்பிரபஞ்சத்தைத் தாண்டிய ஒரு உலகம் என்று அர்த்தப்படுத்திக்கொள்ள முடியும்.

மெட்டா உலகம் எப்படி இருக்கும்?

மெட்டா உலகைப் புரிந்துகொள்ள முதலில் நாம் கேமிங் உலகைப் புரிந்துகொள்ள வேண்டும். வீடியோ கேம்கள்தான் மெட்டாவர்ஸுக்கான அடிப்படை. நாம் நினைப்பதை திரையினுள் நம்மால் செய்ய முடிகிறது என்ற உணர்வுதான் மேரியோ முதல் பப்ஜி வரையிலான அனைத்து வீடியோ கேம்களின் தாத்பரியம். மிகப் பிரபலமான ‘ஜிடிஏ: கிராண்ட் தெஃப்ட் ஆட்டோ’ (Grand Theft Auto – GTA) கேமை எடுத்துக்கொள்வோம்.

நியூயார்க் சிட்டி, சான் பிரான்சிஸ்கோ, மியாமி ஆகிய நகரங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட புனைவு நகரங்களில் கார்களை திருடிச் சென்று ஊர் சுற்றுவதுதான் அந்தக் கேமின் கரு. எதிரே வரும் காரை நிறுத்தி, அதன் உரிமையாளரிடமிருந்து அந்தக் காரை வழிப்பறி செய்ய நாம் நினைக்கும்போது அதற்கேற்ற வகையில், ஜாய்ஸ்டிக்கில் உள்ள பட்டன்களை அழுத்தி நம் எண்ணத்தை நிறைவேற்றிக்கொள்கிறோம்.

இப்போது இப்படி கற்பனை செய்து பாருங்கள். ஜிடிஏ கேமில் வரும் உலகினுள் நாம் பயணித்தால் எப்படி இருக்கும்? நவீன கார்கள், விடுதிகள் என அந்த புனைவு நகரில் பயணிக்கும் அனுபவம் நமக்கு நேரடியாகவே கிடைக்கும், அல்லவா. அந்த உலகம்தான் மெட்டாவர்ஸ். கேமிங்கை உதாரணம் காட்டியதால், மெட்டாவர்ஸை வீடியோ கேம்களோடு சுருக்கிப் பார்த்துவிடக் கூடாது. மெட்டாவர்ஸ் மூலம் தமிழ்நாட்டில் ஒரு பெயிண்ட் உறிந்த அறையில் அமர்ந்துகொண்டு, பாரிஸில் உள்ள பூங்காவில் நண்பர்களுடன் நடை செல்லலாம், வீட்டில் இருந்தபடியே, ஸ்பெயினில் உள்ள நடனக் குழுவினருடன் சேர்ந்து நடன
மாடலாம், இமய மலையில் தியானம் செய்யலாம். உலகின் தலைசிறந்த பேராசிரியர்களின் வகுப்புகளில் பங்கேற்கலாம். இவ்வாறாக, நம் அன்றாடங்களில் மெட்டாவர்ஸ் அங்கம் வகிக்கும். மருத்துவம், பொறியியல் போன்ற துறைகளில் மெட்டாவர்ஸ் மிக முக்கியப் பங்கு வகிக்கும். கல்வி மற்றும் வர்த்தகத்தில் அது மிகப் பெரும் மாற்றத்தைக்கொண்டு வரும்.

மெட்டாவர்ஸை சாத்தியப்படுத்தும் தொழில்நுட்பங்கள்

வீஆர் (Virtual Reality - VR), ஏஆர் (Augmented Reality - AR), எம்ஆர் (Mixed Reality - MR). இவைதான் மெட்டாவர்ஸைக் சாத்தியப்படுத்தும் தொழில்நுட்பங்கள். ஏஆர் (Augmented Reality - AR) தொழில்நுட்பமானது நம் நிஜ உலகத்தில் பார்க்கும் பொருட்களின் மீது டிஜிட்டல் லேயரை உருவாக்கும். அதாவது, அந்தத் தொழில்நுட்பத்துடன் கூடிய கண்ணாடியை அணிந்து நிஜ உலகைப் பார்க்கும்போது அங்கு இருக்கும் மனிதர்கள், பொருள்கள் தொடர்பான தகவல் அவற்றின் அருகில் தோன்றும். நிஜ உலகில் உள்ள பொருட்களின் தகவல்களை மட்டுமல்ல, டிஜிட்டல் உருவங்களையும் ஏஆர் தொழில்நுட்பம் நிஜ உலகில் ஒரு மேலடுக்காகத் தோன்றச்செய்யும். பல ஹாலிவுட் படங்களில் இத்தகைய காட்சிகளைப் பார்த்திருக்கக் கூடும். ‘போக்கேமான் கோ’ கேம் கேள்விப்பட்டிருப்பீர்கள். விளையாடக்கூட செய்திருப்பீர்கள். அது ஏஆர் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக்கொண்ட கேம்தான்.

ஏஆர் என்பது நிஜ உலகில் டிஜிட்டல் லேயரை உருவாக்கிறது என்றால், நம்மையே வேறு டிஜிட்டல் உலகத்துக்கு இட்டுச்செல்லும் வீஆர் (Virtual Reality - VR) எனப்படும். வீஆர் கண்ணாடியை அணிந்ததும் நாம் இருக்கும் நிஜ உலகம் நம் கண்ணிலிருந்து மறைந்துவிடும். அந்தக் கண்ணாடி வழியே புதிய டிஜிட்டல் உலகம் நம் முன் உருவாகும். அதாவது, நீங்கள் தமிழகத்தில் ஒரு அறையில் இருந்தபடி இமய மலையில் நடமாட முடியும்.
ஏஆர் தொழில்நுட்பத்தைப் பொருத்தவரையில் நிஜ உலகின் மீது மேலடுக்காகத் தோன்றும் டிஜிட்டல் லேயரை நம்மால் பார்க்க மட்டும்தான் முடியும். அதனுடன் ஊடாட முடியாது. அந்த ஊடாட்டத்தை சாத்தியப்படுத்தும் தொழில்நுட்பம்தான் எம்ஆர் (Mixed Reality - MR) எனப்படுகிறது. மொத்தமாக இந்த தொழில்நுட்பக் கட்டமைப்பு எக்ஸ்ஆர் (Extended Reality -XR) என்று அழைக்கப்படுகிறது.

பயன்பாட்டில் இருக்கும் மெட்டாவர்ஸ்

மெட்டாவர்ஸ் கேம்கள் பயன்பாட்டுக்கு வந்து விட்டன. தற்போது அலுவலக மீட்டிங் தொடர்பான கட்டமைப்பை மெட்டாவர்ஸில் உருவாக்கியிருக்கிறார்கள். நாற்காலி, மேஜை, சுவரோவியங்கள் கொண்டதாக அந்த மீட்டிங் ரூம் இருக்கும். அலுவலக அதிகாரிகள் தங்கள் வீட்டில் இருந்தபடி, முகத்தில் மெட்டாவர்ஸுக்கான கண்ணாடியை மாட்டிக்கொண்டால், அவர்கள் அனைவரும் அவதார் உருவத்தில் (அவதார் என்றால் நம் உருவத்தின் கார்ட்டூன் தோற்றம்) அந்த மீட்டிங் அறைக்கு உள்ளே வந்துவிடுவார்கள். தற்போது நாம் ஜூம், கூகுள் மீட் போன்றவற்றில் திரை வழியே முகம் பார்த்து உரையாடுகிறோம். ஆனால், மெட்டாவர்ஸில் சக பணியாளர்களுடன் அலுவலக மீட்டிங் அறையில் நேருக்கு நேர் சந்தித்து உரையாடுவதுபோல உணர்வைப் பெற முடியும்.

பலருக்கு இந்த விசயங்கள் எல்லாம் அறிவியல் புனைவுகள் போலவும், நடைமுறையில் சாத்தியமில்லை என்றும் தோன்றக்கூடும். நம்புங்கள். இவையெல்லாம் இனி வரவிருக்கும் தொழில்நுட்பங்கள் அல்ல. ஏற்கனவே வந்துவிட்ட தொழில்நுட்பங்கள். மைக்ரோசாஃப்டின் ஹோலோலென்ஸ், ஆப்பிள் நிறுவத்தின் ஏஆர்கிட், மேஜிக் லீப் நிறுவனத்தின் புதிய தயாரிப்புகள் இத்தகைய தொழில்நுட்பங்களைக் கொண்டவைதான். மெட்டாவர்ஸை பரவாலான பயன்பாட்டுக்குக் கொண்டுவரும் வகையில் அதற்கான தொழில்நுட்பக் கட்டமைப்பை உருவாக்குவதுதான் இனி செய்யப்பட வேண்டியது. இன்னும் பத்து ஆண்டுகளில் மெட்டாவர்ஸ் பரவலான பயன்பாட்டுக்கு வரக்கூடும் என்று அது தொடர்பான முதலீடுகளில் ஈடுபடுபவர்கள் கூறுகின்றனர். 2020-ம் ஆண்டில் நிலவரப்படி, உலக அளவில் மெட்டாவர்ஸின் சந்தை மதிப்பு 47.69 பில்லியன் டாலர். அது 2028-ம் ஆண்டில் 828.95 பில்லியன் டாலராக விரிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மெட்டாவர்ஸும் கிரிப்டோ உலகமும்

கடந்த ஏப்ரல் மாதத்தில் இதே வணிக வீதி பக்கத்தில், ‘மெய்நிகர் உலகில் உங்களுக்கு எவ்வளவு சொத்து இருக்கிறது?’ என்றொரு கட்டுரை வெளியாகியிருந்தது. என்எஃப்டி, கிரிப்ட்டோ கரன்ஸி போன்றவை எப்படி செயல்படுகின்றன, தற்போது அதன் போக்கு என்ன என்பதைப் பற்றிய கட்டுரை அது. அந்தக் கட்டுரையில், தமிழகத்தில் பிறந்து சிங்கப்பூரில் வசித்துவரும் விக்னேஷ் சுந்தரேசன் பற்றி குறிப்பிடப்பட்டிருக்கும். அவருக்கு நிஜ உலகில் பெரிய அளவில் சொத்து கிடையாது. ஆனால், கிரிப்டோ உலகில் பில்லியன் டாலருக்கு மேல் சொத்துக்களைக் கொண்டிருக்கிறார். அவர் இந்திய மதிப்பில் ரூ.525 கோடி கொடுத்து பீப்பிள்ஸ் என்ற ஓவியரின் டிஜிட்டல் ஓவியங்களை வாங்கினார்.

தவிர, மில்லியன் கணக்கில் பணம் செலுத்தி மெய்நிகர் உலகில் நிலம் வாங்கியுள்ளார். அந்தப் புகைப்படத்தைக்கொண்டு அவர் என்ன செய்யப்போகிறார் என்றும், மெய்நிகர் உலகில் நிலம் வாங்கி என்ன லாபம் என்றும் பலரும் குழம்பினர். மெட்டாவர்ஸை உருவாக்க இத்தகைய மெய்நிகர் நிலங்கள், ஓவியங்கள், பொருட்கள்தான் அடிப்படை. அவை என்எஃப்டி என்று அழைக்கப்படுகின்றன.

அந்த வகையில் சுந்தேரசன் போன்ற மெய்நிகர் உலகில் நிலங்கள் ஓவியம் போன்று கலைப் பொருட்களைக் வாங்கியிருப்பவர்கள், இனி வரும் காலத்தில் மிகப் பெரும் அளவில் லாபம் ஈட்டுவார்கள். உதாரணத்துக்கு நீங்கள் மெய்நிகர் உலகத்தில் ஒரு பூங்காவை வாங்குகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். நிஜ உலகத்தில் அதற்கு எந்த மதிப்பும் இல்லை. ஆனால் மெட்டாவர்ஸை உருவாக்கும் பணியில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு மெய்நிகர் உலகில் உள்ள உங்கள் பூங்கா மிக அவசியமான ஒன்று. உங்கள் பூங்காவை வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக்கொள்ள மெட்டாவர்ஸ் நிறுவனங்கள் உங்களுக்கு வாடகை தரத் தயாராக இருப்பார்கள்.

சமீபத்தில் நடிகர் கமலின் லோட்டஸ் மீடியா எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனம், கமல் உருவத்திலான அவதார்களை உருவாக்க ஃபேன்டிகோ நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. அதன்படி, கமலின் அவதாரை ஃபேன்டிகோ வீடியோ கேமில் பயன்படுத்தும். இதன் மூலம் இந்தியத் திரைப்பட நடிகர்களில் மெட்டாவர்ஸுக்கான அவதாரைப் பெறும் முதல் நடிகர் என்ற அடையாளத்தை கமல் பெற்றுள்ளார். இவ்வாறாக, மெட்டாவர்ஸ் தொடர்பாக உருவாகிவரும் பொருளாதார வாய்ப்பைக் கணக்கில்கொண்டு பலரும் அது தொடர்பான முதலீட்டில் இறங்கியுள்ளனர்.

இனி உலகின் போக்கை மெட்டாவர்ஸ் மாற்றி அமைக்கும் என்பதை உணர்த்தும் வகையிலே ஃபேஸ்புக் அதன் பெயரையே ‘மெட்டா’ என்று மாற்றியிருக்கிறது. மார்க் ஜூகர்பெர்க் மெட்டாவர்ஸ் தொடர்பான ஆராய்ச்சிகளுக்கு பல பில்லியன் டாலர் முதலீடு செய்துவருகிறார். ஒன்றை நாம் புரிந்துகொள்ள வேண்டும். மெட்டாவர்ஸ் என்பது தனி ஒரு நிறுவனத்தால் உருவாக்கப்படக் கூடியது அல்ல. தனி ஒரு நிறுவனத்தால் உருவாக்கி விடவும் முடியாது. அது ஒரு கூட்டுச் செயல்பாடு. கலையுணர்வும், கற்பனைத் திறனும் கொண்ட கலைஞர்களின் பங்கு மெட்டாவர்ஸ் உருவாக்கத்தில் மிக அவசியமான ஒன்று. எப்படியாயினும், அறிவியல் புனைவுகளில் மட்டும் சாத்தியப்பட்டுவந்த மெட்டாவர்ஸ், தற்போது நிஜமாகியுள்ளது. எப்படி இணையம் உலகின் போக்கை மாற்றி அமைத்ததோ அப்படியே மெட்டாவர்ஸும் மாற்றி அமைக்கும்.

`மெட்டா' வீடியோ!

ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூகர்பெர்க்,மெட்டாவர்ஸின் சாத்தியத்தையும், அதை உருவாக்குவது தொடர்பாக என்னென்ன செயல்திட்டங்களை அவரது நிறுவனம் கொண்டிருக்கிறது என்பதையும் விவரிக்கும் வகையில் 1.15 மணி நேர வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

அந்த வீடியோ மெட்டாவர்ஸ் பற்றி கூடுதல் புரிதலை ஏற்படுத்த உதவும். வீடியோ இணைப்பு: https://www.facebook.com/watch/?v=282623437072819. அதேபோல், மெட்டாவர்ஸ் எப்படி இருக்கும் என்பதை உணர விரும்பினால், ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் இயக்கத்தில் 2018-ம் ஆண்டு வெளியான ‘ரெடி பிளேயர் ஒன்’ (Ready Player One) படத்தைப் பார்க்கலாம்.

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x