

உங்களுக்குப் பிடித்த தொலைக்காட்சி நிகழ்ச்சியைப் பார்க்கும்போது உங்கள் உடல் அசைவு எப்படியிருக்கும் என கவனித்ததுண்டா? கண் கொட்டாமல், கை, கால் அசைவின்றி கிட்டத்தட்ட உறைந்த உடல்நிலையில் இருப்பீர்கள். உண்மைதான், நமக்கு விருப்பமான செயல்களில் ஈடுபடும்போது தன்னிச்சையற்ற இயக்கம் எதுவும் இன்றி ஆழ்ந்துகிடப்போம்.
ஆனால், சலித்துக்கொண்டு ஒரு வேலையைச் செய்யும்போது படபடவெனக் கண்சிமிட்டுதல், கால் ஆட்டுதல், அசவுகரியமான உடல் அசைவுகள் என தன்னிச்சையான உடல் அசைவுகள் அதிகம் இருக்கும். “அட! ஒருவரின் உடல் அசைவைப் பார்த்தே அவர் ஏனோதானோவென வேலைபார்க்கிறாரா இல்லை லயித்துச் செய்கிறாரா என நான் சரியாகக் கண்டுபிடித்துவிடுவேன்” எனச் சொல்கிறீர்களா? இப்போது இதைக் கண்டுபிடிக்கும் கணினி வந்துவிட்டது.
மூன்றே நிமிடங்களில்
உடல்மொழியை உற்றுநோக்கி சலிப்பைக் கண்டறியும் கணினி புரோகிராமை லண்டன் சசெக்ஸ் பல்கலைக்கழக உடல்மொழி நிபுணரான டாக்டர் ஹாரி விட்சல் வடிவமைத்திருக்கிறார். இந்தக் கணினியின் செயல்பாட்டை நிரூபிக்கும் ஆய்வில் 27 பேர் கலந்துகொண்டனர். சுவாரஸ்யமான கணினி விளையாட்டை விளையாடுதல், கடினமான பாடப் பகுதிகளை படித்தல் என விதவிதமான செயல்திறனில் ஒவ்வொருவரும் ஈடுபடுத்தப்பட்டனர். இதில் பங்குபெற்றவர்களின் அங்க அசைவுகளை வெறும் 3 நிமிடங்கள் மோஷன் டிராக்கிங் தொழில்நுட்பம் மூலம் துல்லியமாகக் கண்காணித்தது இந்தப் புதிய கணினி. சோதனையின் முடிவில் முழு ஈடுபாட்டுடன் இருப்பவர்களிடம் கண் சிமிட்டுதல், கை, கால் அசைத்தல் போன்ற தன்னிச்சையான உடல் அசைவுகள் 42 சதவீதம் குறைவாக இருப்பது கண்டறியப்பட்டது.
இத்தனை கூர்மையாக உடல் அசைவுகளை உற்று நோக்கும் இந்தக் கணினியானது ரோபோ தொழில்நுட்பத்தின் அடுத்த கட்டம் எனச் சொல்லப்படுகிறது. நுண்ணிய அசைவைக்கூட அச்சு அசலாகப் பதிவுசெய்யும் இந்தத் தொழில்நுட்பத்தைக் கொண்டு செயற்கை அறிவுத்திறனைக்கூட (Artificial Intelligence) மேம்படுத்தலாம் என்றால் கற்பனை செய்து பாருங்களேன். ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் எடுத்த ‘ஆர்டிஃபிஷியல் இண்டெலிஜென்ஸ்’ படம் நினைவிருக்கிறதா? பாருங்கள். கூடிய விரைவில் பல ஸ்பீல்பெர்க்குகள் உருவாகப்போகிறார்கள்!