Published : 27 Nov 2021 03:07 am

Updated : 27 Nov 2021 11:12 am

 

Published : 27 Nov 2021 03:07 AM
Last Updated : 27 Nov 2021 11:12 AM

மனநலம் காண வாழ்த்துகள்!

mental-health

சூ.ம.ஜெயசீலன்

பரபரப்பான வாழ்க்கைச் சூழலில் எதிர்காலத் தையும் கடந்த காலத் தையும் நினைத்துக்கொண்டே கடத்தும் நொடிகளின் தொகுப்பே நம்முடைய வாழ்வு. அந்த நொடியில் நாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளும் சவால்களும் ஏராளம். வீடு கட்டுதல், திருமணம், முடிக்க வேண்டிய வேலைகள், அருகில் உள்ளவர்களின் தொந்தரவு, அரசியல் நிகழ்வுகள், நோயுறுவது, வேலை இழப்பு, வாடகை, கடனுக்கான வட்டி என நாம் சந்திக்கும் பல சவால்கள் மன அழுத்தத்தை ஏற்படுத்தும் அளவுக்கு வீரியத்துடன் இருக்கின்றன.

மன அழுத்தம் என்றவுடன், அது தீயது என்று முடிவுசெய்ய வேண்டியதில்லை. ஏனென்றால், மன அழுத்தத்தில் நல்லதும் உண்டு, தீயதும் உண்டு. ஆபத்து நேரத்தில் விரைந்து முடிவெடுக்க, பொறுப்பை நிறைவேற்றி முடிக்க, போட்டிகளுக்கும் நேர்முகத் தேர்வுகளுக்கும் தயாரிக்க, குடும்ப நிகழ்வுகளுக்கு முன்பாக ஏற்படுகிற அழுத்தம் உள்ளிட்டவை நல்ல மன அழுத்தம் (Eustress). மன அழுத்தம் நாட்பட்டதாக நிலைக்கும்போதே, அது உடல் நலனைப் பாதிக்கிறது. மனநல னுக்கும் கேடானதாக வலுப்பெறுகிறது.

ஆபத்து நேரத்தில் பெருகும் ஆற்றல்

மன அழுத்தம் என்பது ஓர் எதிர்வினைதான். ஆபத்து, அவமானம், காத்திருப்பு, ஏமாற்றம் உள்ளிட்ட சூழலில் அதைத் துணிந்து சந்திக்க வேண்டும் அல்லது விலகிச் செல்ல வேண்டும் (fight or flight). இவற்றில் எதைத் தேர்ந்தெடுப்பது என்று சிந்தித்து முடிவெடுப்பதற்கு முன்பாகவே நம்முடைய எதிர்வினைகள் தொடங்கி முடிந்துவிடுகின்றன. சில வேளைகளில் அது நிறைவடைந்த பிறகுதான் நாம் நிதானத்துக்கே வருகிறோம்.

அமெரிக்காவின் மெக்சிகன் மாகாணத்தைச் சேர்ந்த அர்னால்டு லெமெரான்ட்க்கு அப்போது 56 வயது. ஒருநாள், விளையாடிக்கொண்டிருந்த ஐந்து வயது பிலிப் இரும்புக் குழாய்க்கு அடியில் சிக்கிக் கொண்டான். இதைப் பார்த்த அர்னால்ட் விரைந்து சென்று குழாயை மேலே தூக்கிக் குழந்தையைக் காப்பாற்றினார். அந்தக் குழாயைத் தூக்கியபோது அது 130-180 கிலோ எடை இருக்கலாம் என்று அவர் நினைத்தாராம். ஆனால் அதன் உண்மையான எடை 816 கிலோ. குழந்தையைக் காப்பாற்றிய பிறகு, செய்தியாளர்கள், காவலர்கள், ஏன் அர்னால்டால்கூட அதை அசைக்க முடியவில்லை. எப்படி அவரால் தூக்க முடிந்தது? அதுதான் ஆபத்து நேரத்தில் உடல் ஆற்றும் எதிர்வினை. வாகனம் ஓட்டும்போது “கண்ணிமைக்கும் நேரத்தில் விபத்திலிருந்து தப்பித்தேன்” எனச் சொல்கிறோமே, அதுபோலத்தான்.

உடலின் எதிர்வினை

நாம் ஆபத்தான சூழலில் இருப்பதைக் கண்களும் காதுகளும் மூளையில் உள்ள அமிக்டலாவுக்குச் சொல்கின்றன. ஆபத்து உறுதியானதுடன், தான் நெருக்கடியில் இருக்கும் தகவலை ஹைபோதாலமஸுக்கு அமிக்டலா உடனடியாகச் சொல்கிறது. ஹைப்போதாலமஸ், தன்னாட்சி நரம்பு மண்டலம் வழியாக அட்ரினல் சுரப்பிக்குத் தகவல் அனுப்பிப் பரிவு நரம்பு மண்டலத்தை முடுக்கிவிடுகிறது. இந்தச் சுரப்பிகள் எபினஃபெரின் (epinephrine) ஹார்மோனை ரத்தத்தில் செலுத்துகின்றன. எபினஃபெரின் என்பது அட்ரினலின் (adrenaline) எனவும் அழைக்கப்படுகிறது.

எபினஃபெரின் உடலுக்குள் பாயத் தொடங்கியதும் எண்ணற்ற மாற்றங்கள் உடலில் நடக்கத் தொடங்குகின்றன.வழக்கத்தைவிட இதயம் வேகமாகத் துடிக்கும். தசைகளுக்கும், இதயத்துக்கும், முக்கிய உறுப்புகளுக்கும் ரத்தம் பாயும். நாடித்துடிப்பும் ரத்த அழுத்தமும் அதிகரிக்கும். நுரையீரலில் உள்ள மூச்சு கிளைச் சிறுகுழல்கள் விரிந்துகொடுக்கும். ஒவ்வொரு முறையும் சுவாசிக்கும்போது இதன் வழியாகப் போதுமான ஆக்ஸிஜனை நுரையீரல் பெற்றுக் கொள்ளும்.

கூடுதல் ஆக்ஸிஜன் மூளைக்கு அனுப்பப்பட்டு விழிப்புணர்வு அதிகரிக்கிறது. பார்வை, செவிமடுத்தல் உள்ளிட்ட மற்ற புலன்கள் கூர்மையாகின்றன. செரிமானப் பகுதிக்குச் செல்லும் ரத்தம் நிறுத்தப்படுகிறது. செரிமானம் நடைபெறாது. இதனிடையே, உடலின் தற்காலிக சேமிப்புப் பகுதியில் இருக்கும் குளுகோஸும் கொழுப்புகளும் வெளியேற எபினஃபெரின் முடுக்கிவிடுகிறது. இந்தச் சத்துக்கள், உடலின் எல்லாப் பகுதிகளுக்கும் ஆற்றலைக் கொடுத்துக்கொண்டு ரத்த ஓடையில் பாய்கின்றன.

எபினஃபெரின் தொடக்க அலை குறைந்த பிறகு, ஹைப்போதாலமஸ், HPA எனப்படும் இரண்டாவது எதிர்வினையைச் செயல்படுத்து கிறது. ஹைபோதாலமஸ், பிட்டியூட்டரி சுரப்பி, அட்ரினல் சுரப்பி ஆகியவற்றை உள்ளடக்கிய வலைப்பின்னல்தான் இந்த HPA. எதிர்வினையின் வேகம் குறைவதற்காகப் பல்வேறு சமிக்ஞைகளை இந்த HPA அனுப்பும்.

இன்னும் ஆபத்து நீடிப்பதாக மூளை சொன் னால், அது கார்ட்டிகோடிராப்பின் (Corticotropin) ஹார்மோனை அனுப்பும். இது பிட்டியூட்டரி சுரப்பி வழியாகச் சென்று அட்ரினோகார்ட்டிகோடிராபிக் (adrenocorticotropic) ஹார்மோனை விடுவிக்கும். இந்த ஹார்மோன் அட்ரினல் சுரப்பிக்குச் சென்று கார்டிசோல் (cortisol) ஹார்மோனை விடுவிக்கச்செய்யும். இதனால், உடம்பு மிகவும் விழிப்பாக இருக்கும். அச்சம் நீங்கியவுடன் கார்டிசோல் அளவு குறையும். இது மன அழுத்த எதிர்வினையைக் குறைக்கும்.

எவ்வளவுதான் ஆபத்துகள் இருந்தாலும் சில மணி நேரங்களிலோ, சில நாட்களிலோ மூளை, நரம்பு மண்டலம், தசைகள், இதயம் உள்ளிட்டவை மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பிவிடுகின்றன. இருப்பினும், தங்கள் மன அழுத்தத்தை நிறுத்தி, சமநிலைக்கு வரும் வழி தெரியாமல் சிலர் தவிக்கிறார்கள். எனவே, HPA தொடர்ந்து இயங்க வேண்டியிருக்கிறது. இடைவிடாது செயல்படும் வாகனம் பழுதுபடுவதுபோல மனித உடலின் தசைநார், சுவாச உறுப்புகள், இதய, ரத்தக்குழாய், நாளமில்லாச் சுரப்பி, இரைப்பைக் குடல், நரம்பு, இனப்பெருக்க மண்டலம் உள்ளிட்டவை பாதிப்புக்குள்ளாகின்றன.

நம் தேர்வு, நம் வாழ்வு

மனம், உணர்ச்சிரீதியிலான எதிர்வினையானது தன்னுடைய, தன் குடும்பத்தினருடைய பாதுகாப்பு குறித்த கவலை, அவமானம், எரிச்சல், கோபம், சோகம், துயரம், நம்பிக்கையின்மை, படபடப்பு, அமைதியற்ற நிலை, மகிழ்ச்சியின்மை எனப் பல வகைகளில் வெளிப்படுகிறது. நாள்பட்ட மன அழுத்தமாக மாறுகிறபோது மனச்சோர்வு, பதற்றம், பாலுறவில் நாட்டமின்மை, கவனம் செலுத்துவதிலும் நினைவில் வைத்திருப்பதிலும் சிக்கல், நிலையில்லாத மனநிலை, போதைக்கு அடிமையாதல், அதிகப்படியான கோபம் என நம்மைப் பாதிக்கிறது.

நல்ல வேளையாக நம்மை வளப்படுத்துவதற் கான வழிமுறைகள் நிறைய உள்ளன. ஒருவருக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்துகிற ஒரு நிகழ்வோ சூழலோ மற்றவருக்கும் அதே தாக்கத்தை உருவாக்க வேண்டும் என்பது கட்டாயமில்லை. அதேபோல, அனைவருக்கும் பொதுவான உத்திகள் என்று ஏதும் இல்லை. முக்கியமானது என நீங்கள் நினைக்கும் உத்தியைத் தேர்வுசெய்து தொடர்ந்து பயிற்சி எடுங்கள். அது உங்களுக்கு மகிழ்ச்சியையும் மனத்துக்குச் சமநிலையையும் அளிக்கும்.

என்ன செய்ய வேண்டும்?

1. ஓடுதல், சீராக ஓடுதல், நீச்சல் உள்ளிட்ட அதிக உடல் ஆற்றல் தேவைப்படும் உடற்பயிற்சி களைச் செய்வது உடலை இலகுவாக்கும்.

2. யோகா அல்லது தாய்ச்சி (Tai Chi) மனத்தை இலகுவாக்குவதுடன், உடலுக்கும் வலு சேர்க்கிறது.

3. தியானம் உள்ளிட்ட மனச் சமநிலைப் பயிற்சி கள் மன அழுத்தக் காரணிகள் மீதான நமது எதிர்வினையைப் பக்குவமாக வெளிப்படுத்த உதவுகின்றன.

4. அடிக்கடி மன அழுத்தம் தருகிற நிகழ்வுகளில் விழிப்புடன் இருப்பது.

5. தொடர் பயிற்சிக்குப் பிறகும் நம்மால் இயல்பு நிலைக்கு வர இயலாவிட்டால் மனநல மருத்துவரைப் பார்ப்பது அவசியம்.

கட்டுரையாளர், மொழிபெயர்ப்பாளர்

தொடர்புக்கு: sumajeyaseelan@gmail.com

மனநலம்ஆபத்து நேரம்உடலின் எதிர்வினைMental health

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x