Published : 08 Mar 2016 03:02 PM
Last Updated : 08 Mar 2016 03:02 PM

கலாமைக் கொண்டாடுவோம்: ஆர்ப்பரிக்கும் அக்னிச் சிறகுகள்

கோவை, திருச்சி, சென்னை, மதுரை மாணவர்களை அவர்களுடைய மண்ணிலேயே அணி திரட்டி “கலாமைக் கொண்டாடுவோம்” நிகழ்ச்சியைப் பிரம்மாண்டமாக நடத்தியது ‘தி இந்து - வெற்றிக் கொடி’. பிப்ரவரி 17-ல் கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில், 18-ல் திருச்சி தேசியக் கல்லூரியில், பிப்ரவரி 22-ல் சென்னை லயோலா கல்லூரியில், 29-ல் மதுரையில் வேலம்மாள் பொறியியல் கல்லூரியில் தோழமையோடு மாணவர்களோடு கலந்துரையாடினோம். விழாவின் முக்கியப் பகுதியாக “வாருங்கள் வளமான இந்தியாவை உருவாக்குவோம்” என்ற தலைப்பில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான கலந்துரையாடல் நான்கு மண்டலங்களிலும் மிக வித்தியாசமாக அரங்கேறியது.

எழுத்தாளர் நாஞ்சில் நாடனும் கவிஞர் புவியரசுவும் விஜயா பதிப்பகம் மு.வேலாயுதமும் கோவை இளைஞர்களின் அறிவுப் பசிக்குத் தீனி போட்டார்கள். வாசிப்பின் அருமையை, சிந்தனையின் மேன்மைகளைச் சொன்னார்கள். சிறப்புப் பேச்சாளர்களின் ஆற்றல் மிகு உரைக்கு அப்படியொரு கரகோஷம். மாணவ-மாணவிகளின் கலந்துரையாடல் மேலும் நிகழ்ச்சியைப் பலப்படுத்தியது. வேலம்மாள் கல்வி நிறுவனங்கள், ஏர்செல், காளிமார்க் பட்டாசுகள், தி சென்னை மொபைல்ஸ் ஆகிய நிறுவனங்கள் நிகழ்ச்சியை வழங்கின. கோவை தமிழ்நாடு வேளாண் கல்லூரி, அரோமா பேக்கரி, சுப்ரீம் பேரடைஸ் ஆகியவை நிகழ்ச்சியை இணைந்து வழங்கின.

கலாமின் பெயரால் ஒரு நல்ல விஷயத்தை முன்னெடுத்திருக்கும் தி இந்துவின் பணியைப் பாராட்டி திருச்சி நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்தார் கவிஞர் நந்தலாலா. சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற திருச்சி சமயபுரம் எஸ்.ஆர்.வி. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் க.துளசிதாசன், இளைஞர்கள் மீது தனக்கு இருந்துவரும் அவநம்பிக்கையை இந்த நிகழ்ச்சி போக்கியிருக்கிறது என்றார்.

“நாளிதழைப் படித்துவிட்டு இத்தனை இளைஞர்கள் திரண்டுவந்திருப்பது நல்ல தொடக்கம்” என்றார். விழாவில் பங்கேற்ற பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் இட ஒதுக்கீடு, அரசியல், நாட்டின் முன்னேற்றம் எனப் பல்வேறு பொருள்களில் நடத்திய விவாதம் மிகவும் ஆழமான கருத்துகளைக் கொண்டதாகவும் சிறப்பாகவும் இருந்தது. அரங்கில் கூடியிருந்த மாணவ, மாணவியரிடமும் அவ்வப்போது கருத்துகள் கேட்கப்பட்டு, சிறந்த கருத்துகளைத் தெரிவித்தவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. திருச்சி நிகழ்ச்சியில், கல்லூரி தேர்வுக் கட்டுப்பாட்டாளர் சுந்தர் ராமன் வாழ்த்துரை வழங்கினார். கல்லூரி தமிழ்த் துறைப் பேராசிரியர்கள் முனைவர் சபாபதி மற்றும் முனைவர் நீலகண்டன் ஆகியோர் நடுவர்களாகச் செயல்பட்டனர். ‘தி இந்து’வுடன் திருச்சி தேசியக் கல்லூரி, ஹால்மார்க் வணிகப் பள்ளி ஆகியவை இந்நிகழ்ச்சியை இணைந்து நடத்தின.

சென்னை லயோலா கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியை தி இந்து நாளிதழின் நடுப்பக்க ஆசிரியர் சமஸ் ஒருங்கிணைத்தார். சித்த மருத்துவர் கு.சிவராமன், மீனாட்சி மகளிர் கல்லூரி முன்னாள் தமிழ்ப்பேராசிரியை பத்மாவதி விவேகானந்தன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர். சமூக அவலங்களைப் போக்க இன்றைய இளைஞர்கள் துடிப்போடும், ஆழ்ந்த புரிதலோடும், அறச் சீற்றத்தோடும் செயல்பட வேண்டும் என்பதை வலியுறுத்தினார் மருத்துவர் சிவராமன். இளைஞர்கள் தங்களைச் சமூகப் பணியில் ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும். அதனை அனைவரும் அங்கீகரிக்க வேண்டும் என்றார் தமிழ்ப் பேராசிரியை பத்மாவதி விவேகானந்தன்.

மாணவ-மாணவிகள் பேசியது அரங்கில் பலத்த கரவொலியையும், பாராட்டையும் பெறுவதாக அமைந்தது. இந்தக் கலந்துரையாடலில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம், தருமபுரி ஆகிய மாவட்டங்களையும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தையும் சேர்ந்த முதல் கட்டக் குரல் பதிவில் தேர்வான பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.

மாணவர்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. சிறப்பாகக் கருத்துகளைத் தெரிவித்த டிஆர்பி பொறியியல் கல்லூரி மாணவர் செ.யுவராஜ், திருவண்ணாமலை அருணை பொறியியல் கல்லூரி மாணவி சு.மீனாட்சி ஆகியோருக்கு வெள்ளிப் பதக்கம், சென்னை மொபைல்ஸ் நிறுவனத்தின் ரூ.5 ஆயிரத்துக்கான பரிசு கூப்பன் ஆகியவை வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியை ‘தி இந்து’வுடன் இணைந்து வேலம்மாள் கல்வி நிறுவனங்கள், ஏர்செல், காளீஸ்வரி பட்டாசுகள், தி சென்னை மொபைல்ஸ், லயோலா கல்லூரி ஆகியவை நடத்தின.

மதுரையில், இறுதிக் கட்டப் போட்டிக்குத் தகுதிபெற்ற 22 பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளும் சிறப்பு விருந்தினர்களுக்கு இணையாக மேடையில் அமர வைக்கப்பட்டார்கள். மதுரை மண்டலத்தின் பிரதிநிதியாகப் பார்வையாளர்களும், அவர்களின் பிரதிநிதிகளாக மேடையில் இருந்த மாணவர்களும் ஜனநாயகபூர்வமான விவாதத்தை முன்னெடுத்துச் சென்றனர். இளைஞர்களின் சுதந்திர வேட்கைக்குத் தேவையான கல்வி முறை குறித்து சாகித்ய அகாடமி விருதுபெற்ற எழுத்தாளர் சு.வெங்கடேசன் அறிமுக உரையாற்றினார். அடுத்துப் பேசிய எழுத்தாளர் ஷாஜஹான், இன்றைய தலைமுறையினர் தெளிவான சிந்தனையோடும் பன்முகத் திறன்களோடும் மிளிர்கிறார்கள். அவர்களுக்கு ஏற்ற கல்வியைக் கற்றுக் கொடுத்தால் அற்புதமான எழுத்தாளராக, படைப்பாளியாக உருவாகுவார்கள் என்றார்.

இதையடுத்து, இன்றைய அரசியல், கல்வி, காதல், காமராஜர் ஆட்சிக் காலம் என்று பல்வேறு தளங்களில் மேடையில் இருந்த மாணவர்கள் அனல் பறக்கும் கலந்துரையாடலில் இறங்கினர். கலந்துரையாடலை நெறிப்படுத்திய ‘தி இந்து’ நடுப்பக்க ஆசிரியர் சமஸ், மேடையில் விவாதம் நிகழும்போதே வேறு கோணங்களிலும் அதே விஷயத்தைப் பார்க்கும்படி மாற்றுக் கருத்துகளை முன்வைத்தார். அதுபற்றிப் பார்வையாளர்களின் கருத்தையும் கேட்டு அடுத்தடுத்த கட்டத்துக்குக் கலந்துரையாடலை முன்னெடுத்துச் சென்றார். இந்த அணுகுமுறை ஜனநாயகபூர்வமாகவும் இளைஞர்களின் சிந்தனை வீச்சை அங்கீகரிப்பதாகவும் அமைந்தது. நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார் முதுநிலை உதவி ஆசிரியர் முருகேஷ்.

மாணவ, மாணவிகளின் உரிமைக் குரல், ஆழமான துடிப்பான கேள்விகள், கூர்மையான விமர்சனங்கள், ஓயாத தேடலை மேலும் மெருகேற்றி அவர்களை சிந்தனை மற்றும் செயல் வீரர்களாக மாற்றக்கூடிய விதத்தில் நடைபெற்றன ‘கலாமைக் கொண்டாடுவோம்’ நிகழ்ச்சிகள்.



ஞானப்பறவையின் வேகம்...!

கவிஞர் புவியரசு

ரிச்சர்டு பாக் எழுதிய நாவல் ‘ஞானப்பறவை’யில் 4 பறவைகள் வருகின்றன. அவை உயரே உயரே பறக்கின்றன. ஒன்றுக்கு மற்றவை துணையாகவும் இருக்கின்றன. மிக உயர்ந்த நிலைக்குச் செல்கிறது ஒரு பறவை. அந்தப் பறவை மற்ற மூன்று பறவைகளில் இருந்து ஞானம் பெற்றே அந்த உயர்ந்த நிலையை அடைகிறது. அதனால் மற்ற பறவைகள் அதை இனத்திலிருந்து ஒதுக்கிவைக்கின்றன. அதனால் என்ன பரவாயில்லை என்கிறது நான்காவது பறவை. வேதனைப்படவில்லை. துடித்துப் போகவில்லை. அதுதான் ஞானம் என்பது. இச்சமூகத்தில் ஞானம் பெற்றவர்கள் கவலைகள் அற்றவர்களாக உள்ளனர்.



புது நம்பிக்கை

எழுத்தாளர் நாஞ்சில் நாடன்

சமீபத்தில் ஒரு நாளிதழ் ஆசிரியரிடம் பேசிக்கொண்டிருந்தபோது தமிழகத்தில் நாளிதழ். வாரஇதழ் என வரும் அனைத்து இதழ்களையும் சேர்த்தால் எத்தனை பிரதிகள் விற்பனையாகும் என்று கேட்டபோது சுமார் 25 லட்சம் எனக் குறிப்பிட்டார். மலையாள நாளிதழில் பணியாற்றும் என் நெருக்கமான கவிஞரிடம் மலையாளத்தில் எத்தனை பிரதிகள் போகும் என வினவியதில், ‘75 லட்சம் காப்பிகள்’ என்றார். ஆக. 8 கோடி தமிழ் மக்கள் வாழும் மாநிலத்தில் தமிழ் இதழ்கள் வெறும் 25 லட்சம் பிரதிகள், 3.5 கோடி மக்கள் தொகை கொண்ட கேரளத்திலோ 75 லட்சம் பிரதிகள் என்றால் வாசிப்பில் நாம் எவ்வளவு தூரம் பின்தங்கி உள்ளோம் என்பதைப் புரிந்துகொள்ளலாம். இதுபோன்ற கலந்துரையாடல் பேச்சுப் போட்டிகளில் மாணவர்களைப் பங்கேற்கச் செய்து ‘தி இந்து’ மாணவர்களிடையேயான இயக்கத்தை முன்னெடுத்து செல்வதைப் பார்க்கும்போது வாசிப்பில் புது நம்பிக்கை பிறக்கிறது.



மக்கள் தேடிய தலைவர்

கவிஞர் நந்தலாலா

சமூகம் வளர வளர பிரச்சினைகளும் வளர்கின்றன. பிரச்சினை வரும்போது அவற்றுக்கான காரணத்தை ஆராய்ந்து தனது அறிவின் மூலம் நேர்மறையாக அவற்றைக் களைபவரே நல்ல தலைவர். அப்படிப்பட்ட நல்ல தலைவராக மக்களால் பார்க்கப்பட்டவர்தான் கலாம். நாடாளுமன்றத்தில் தன் வாழ்நாளில் சுமார் 10-க்கும் அதிகமான முறை கலாம் பேசியுள்ளார். பல மாநிலங்கள் அவரை ஆலோசகராகவே வைத்திருந்தன. எல்லா மாநிலத் தலைமைச் செயலகமும் டிஜிட்டல்மயமாகி மாநிலத்தில் உள்ள மக்களின் பிரச்சினைகளைக் கேட்டு டேட்டா பேஸ் உருவாக்கி அவற்றைக் களைவதற்கான ஆலோசனைகள் வழங்கினார். நல்ல விஷயத்தை கலாமின் பெயரால் முன்னெடுத்து மாணவச் சமூகத்தைப் பேசவைத்து, இளையத் தலைமுறை என்ன நினைக்கிறது என்று கேட்பதே ஒரு பத்திரிக்கையின் தொழில் தர்மம். அதை தி இந்து செய்வதை நேசிக்கிறேன்.



இது முக்கியத் தருணம்

எழுத்தாளர் சு.வெங்கடேசன்

டெல்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் போராட்டம் எட்டுத் திக்கும் பரவிக்கொண்டிருக்கும் நேரத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெறுவதை முக்கியமானதாகக் கருதுகிறேன். மாணவர்களுடைய கலைத்திறன், அறிவுத்திறன் வெளிப்படுத்துகிற வாய்ப்பு, இன்றைய சூழலில் கல்லூரி வாழ்க்கையில் மிக அரிதாக இருக்கிறது. கலையுடன் முழுக்க முழுக்கத் தொடர்பு அறுந்து போகிற கல்விதான் இன்று இருக்கிறது. மும்பை நகரில் மட்டும் 420 கலைப்பள்ளிகள் உள்ளன. தமிழகத்திலோ ஒன்றுகூட இல்லை என்பது கலை வளர்த்த தமிழகம் தலைகுனிந்து நொந்துகொள்ள வேண்டிய விஷயம்.

மாணவர்கள் ஆற்றல் மிகுந்த பேச்சுக் கலையைக் கற்றுக்கொண்டு தங்களை வளப்படுத்திக்கொள்கிற மேடைகளும் பள்ளி, கல்லூரிகளில் அரிதாகிவிட்டன. அரசியல், சமூக சிந்தனை பற்றிய ஆழமான பார்வை, விழிப்புணர்வு போன்றவை மாணவர்களிடம் இருந்து வர வேண்டும். அதற்கான களத்தை, மாணவ சமுதாயத்துக்கு ‘தி இந்து’ உருவாக்கி கொடுத்திருப்பது வரவேற்கத்தக்கது. ஒரு புத்தகம், ஒரு கட்டுரை மட்டுமல்ல இதுபோன்ற கூட்டமும் மாணவர்களின் சிந்தனையில் பெரிய அளவு தாக்கத்தை ஏற்படுத்தும்.



பாடப் புத்தகங்கள் மட்டும் போதாது

க.துளசிதாசன்

இன்றைய இளைஞர்களுக்கு உலகைப் பற்றிய போதுமான விழிப்புணர்வு இல்லையோ என்ற கவலை நிலவும் வேளையில், இந்நிகழ்ச்சியில் 6,800 மாணவர்கள் தி இந்துவைப் படித்து தானாக முன்வந்து பங்கேற்றிருப்பது நம்பிக்கை ஊட்டுகிறது. வெறும் பாடப் புத்தகங்கள் மட்டுமே நம் அறிவை வளர்த்துவிடாது. அதையும் தாண்டி நம் சுற்றுப்புறத்தையும், உலகத்தையும் அதில் நாள்தோறும் நடைபெறும் மாற்றங்களையும் படிக்க வேண்டும்.



எதையும் சாதிக்கலாம்

தமிழ்ப் பேராசிரியை பத்மாவதி விவேகானந்தன்

விடுதலைப் போராட்டக் காலத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், காந்தியுடன் இணைந்து போராடினார்கள். ஆனால், இன்றைய தினம் பணம் பணம் என்று பொருளைத் தேடி ஓடிக்கொண்டிருக்கிறார்கள். பெற்றோரும் தங்கள் பிள்ளைகளை இத்தகைய மனப்பான்மையுடன்தான் வளர்க்கிறார்கள். சீனாவுக்கு அடுத்தபடியாக அதிக இளைஞர்களைக் கொண்ட நாடாக இந்தியா இருக்கிறது. இந்தச் சூழலில் சமுதாய வளர்ச்சியில் இளைஞர்களின் பங்களிப்பும் சேரும்போது எதை வேண்டுமானாலும் சாதிக்கலாம். இளைஞர்கள் தங்களைச் சமூகப் பணிகளில் இணைத்துக்கொள்ள வேண்டும். அனைவருக்கும் அனைத்தும் கிடைக்கிற ஒரு சமத்துவமான சமுதாயத்தை உருவாக்க வேண்டும்.



சாதனை மனிதர்களுக்குப் பின்னால்

மு.வேலாயுதம் - விஜயா பதிப்பகம்

ஒரு சாதனை மனிதனுக்குப் பின்னால் மனைவி இருக்கிறார்; தாய் இருக்கிறார்; மகள் இருக்கிறார் என்பார்கள். அது எல்லாம் உண்மையில்லை. மகாத்மா காந்தி முதல் அலெக்சாண்டர் வரையிலான சாதனை மனிதர்களின் பின்னால் புத்தகங்களும் வாசிப்பும்தான் இருந்துள்ளன. ஆகவே வாசிப்பிற்குள் வெற்றி இருக்கிறது. எனவே வாசியுங்கள்!



அறச் சீற்றம் வேண்டும்

மருத்துவர் கு.சிவராமன்

இன்றைய தலைமுறை மாணவர்கள் மத்தியில் வாசிப்புப் பழக்கம் வெகுவாகக் குறைந்து கொண்டே வருகிறது. மாணவர்களுக்குப் பாடத்தைத் தாண்டிய சமூக அக்கறை இருக்க வேண்டும். நமது இந்திய நாடு ஒருபுறம் வளர்கிறது. மறுபுறம் மிகவும் பின்தங்கியிருக்கிறது. ஒரு பக்கம் பணக்காரர்கள், இன்னொரு பக்கம் ஏழைகள் என ஏற்றத்தாழ்வான சமூக நிலை நிலவுகிறது. இத்தகைய முரண்பாட்டை நீக்குவதற்கான புதிய சிந்தனை இளைய தலைமுறைக்கு வர வேண்டும். புத்தக வாசிப்பு மூலமாகத்தான் இதுபோன்ற சிந்தனைகள் மனதில் எழும்.

சமூகத்தில் நடக்கும் எதிர்மறையான நிகழ்வுகள் குறித்த அறச் சீற்றம் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இருக்க வேண்டும். சமூக அவலங்களுக்கு என்ன காரணம் என்று யோசிக்கும் முனைப்பு இன்றைய இளைஞர்களிடம் இல்லை. இந்த அவலங்களைப் போக்க என்ன செய்யலாம் என்று யோசிப்பதே இளைஞர்கள் முன்னுள்ள சவால்.



அடைத்து வைக்கக் கூடாது!

எழுத்தாளர் ஷாஜஹான்

தெளிவான சிந்தனை, பன்முகத் திறன்கள், நவீனத் தொழில்நுட்பங்கள் ஆகியவற்றைக் கையாளும் திறன்களை இளைஞர்கள் பெற்றுள்ளனர். இந்தத் தலைமுறையினருக்கு அந்தத் திறன்களை எப்படி வெளிப்படுத்துவது என்கிற இடத்தில்தான் பிரச்சினை ஏற்படுகிறது. அதற்கான சூழலை ஆசிரியர்கள், பெற்றோர் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

அன்று சைக்கிள் ஓட்டவும், நீச்சலடிக்கவும் பெற்றோர்கள் கற்றுக் கொடுத்தார்கள். பாடங்களைப் பள்ளி சொல்லிக் கொடுத்தது. இப்போது சைக்கிள் ஓட்டவும், நீச்சலடிக்கவும், சாப்பிடுவது, கை கழுவுவது என்பதையும்கூடப் பள்ளியில் கற்றுக்கொடுக்கின்றனர். இந்த தலைமுறைக்கு ஏற்ற கல்வியை கற்றுக் கொடுத்தால் அவர்கள் அற்புதமான எழுத்தாளர்களாக, படைப்பாளியாக உருவாகுவார்கள்.



கோவை மாணவர்கள்

விவசாயம் இல்லாமல் வல்லரசா?

புவனேஸ்வரி - தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக மாணவி

பசுமைப் புரட்சிக்கு முன்பு நாம் சுயமாக உணவு உற்பத்தி செய்தோம். அதை இப்போது செய்ய முடியுமா? ஏன் முடியாது? தடகளப் போட்டியில் நல்லா ஓடக்கூடிய ஓட்டக்காரருக்கு இன்னும் நல்ல ஓடணும்ன்னு ஊக்க மருந்து கொடுத்து ஓடச் சொன்னோம். அந்த ஊக்க மருந்தின் பாதிப்பு 25 ஆண்டுகளுக்குப் பின்னால்தான் தெரியவந்தது. அதேபோன்று, 25 ஆண்டுகளுக்கு மேலாக பூச்சிக் கொல்லி, ரசாயன உரம் பயன்படுத்தி நம் நிலத்தையெல்லாம் மலடாக்கிவிட்டோம். எல்லோரும் படித்து என்னென்னவோ ஆக ஆசைப்படுகிறார்கள், ஆனால் விவசாயி ஆகணும்; விவசாயத்தில் தன்னிறைவு அடைய வேண்டும். அதுதான் நம் நாட்டை வல்லரசு என்கிற பாதைக்கு இட்டுச் செல்லும் என்று யாராவது சொன்னார்களா?



சாமானியர் அரசியலில்…

சாளை விஸ்வராஜ் - இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி மாணவர்.

இந்தச் சமூக அமைப்பை மீறி இளைஞர்கள் செயல்பட முடியும். அதற்கு அவர்கள் முக்கியப் பொறுப்புகளுக்கு வர வேண்டும். அவர்கள் தீர்மானிக்கிற சக்தியாக விளங்க வேண்டும். அவர்கள் வெகுஜன மக்களிலிருந்தே வர வேண்டும். அப்படி வருகிறவர்களும் இந்த நுகர்வு கலாச்சாரத்துக்கு ஏற்ப மாறி நல்ல சமுதாயம் உருவாக விடாமல் தடுக்கிறார்கள் என்றால் மக்களிடம் பிரச்சினை இல்லை. இந்தக் கட்டமைப்பை உருவாக்கியிருக்கிற அரசியல்வாதிகளிடம்தான் கோளாறு இருக்கு. அதை முதலில் உடைக்கணும்.



திருச்சி மாணவர்கள்

ஆள்பவர்களைக் கேள்வி கேட்டால் தேசக் குற்றமா?

கமலபாலன் - திருவாரூர் மத்திய பல்கலைக்கழக மாணவர்

பெரியார் கூற்றுப்படி, ஜாதியால் ஏற்பட்ட ஏற்றத்தாழ்வுகளைப் போக்கவே இட ஒதுக்கீடு. ஆனால், தற்போது இட ஒதுக்கீட்டுக்கு எதிரான கருத்துகள் வலுப்பெறுகின்றன. வெளிப்படையாக அரசியலில் இட ஒதுக்கீட்டை ஆதரிப்பதுபோல பேசினாலும், உள்ளார்ந்து அவற்றுக்கு எதிரான கருத்துகளைக் கொண்டவர்களாகவே சில அரசியல்வாதிகள் செயல்படுகின்றனர்.

அதேபோல், பகுத்தறிவு பேசினாலும், ஜாதி உணர்வு நம் சமூகத்தில் ஊறிவிட்டது. காலங்காலமாக ஒடுக்கப்பட்டவர்கள் எக்காரணம் கொண்டும் பொருளாதாரரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் முன்னேறுவதைப் பொறுக்காத நிலைதான் உள்ளது. இந்திய இறையாண்மை என்பது நாட்டை ஆளுவோரின் கொள்கையாகவே உள்ளது. ஆளும் கட்சி சார்ந்த கொள்கைகள் குறித்து கேள்வி கேட்டாலே தேசியப் பாதுகாப்புச் சட்டம் பாயும் அளவுக்கு ஆட்சியில் ஆளும் கட்சியின் தத்துவங்கள் உள்ளன.



மாற்றிக் காட்டுவோம்

க.சுவேதா - திருச்சி காவேரி மகளிர் கல்லூரி பிஎஸ்சி கணித மாணவி

எப்போது குழாயைத் திறந்தாலும் தண்ணீர் வர வேண்டும். தடையில்லா மின்சாரம் வேண்டும் என்பன உள்ளிட்ட மக்களின் அனைத்து அடிப்படைத் தேவை களும் நிறைவாக உள்ள நாடுதான் வளமான நாடாகும். இளைஞர்கள் கையில் நாட்டை கொடுத்தால் மாற்றிக் காட்டுவோம்.



ராணுவத்தைவிடக் கல்வி முக்கியம்

எஸ்.கணேஷ்வர் - திருவாரூர் மத்திய பல்கலைக்கழக மாணவர்

நீங்கள் என்னிடம் ஆயிரம் கோடி ரூபாய் கொடுத்து தேசப்பாதுகாப்பு ராணுவ போர் விமானங்கள் அல்லது நூற்றுக்கணக்கான பள்ளிகளை நிறுவுதல் இதில் ஏதேனும் ஒன்றுக்கு மட்டும்தான் செலவிட வேண்டும் எனச் சொன்னால், நிச்சயமாக பள்ளிகளை மட்டுமே உருவாக்குவேன். ஏனெனில் இத்தனைக் காலம் தேச எல்லையில் நடந்த போரினால் இழந்த உயிர்களைவிடவும் அதிகமானது உள்நாட்டில் சாதி வெறியால் நடத்தப்பட்ட கொலைகளே! இதற்கு ஒரே தீர்வு சாதி, மத பேதங்களை அழித்தொழிக்கும் வல்லமைப் படைத்த கல்வி மட்டுமே!



சென்னை மாணவர்கள்

சுதந்திரமாக சுவாசிக்க அரசுப் பள்ளி!

சு.மீனாட்சி - திருவண்ணாமலை அருணை பொறியியல் கல்லூரி மாணவி

பள்ளிப்படிப்பு என்றாலே பெரும்பாலோர் தனியார் பள்ளிகளைத்தான் நாடுகிறார்கள். ஆனால், மேற்படிப்புக்கு அரசுக் கல்லூரிகளில் சேரவே ஆசைப்படுகிறார்கள். அதிலும் அரசுப் பள்ளிகளில் படித்துவிடும் மாணவர்களுக்குத் திறமை இருக்காது என்று தவறாக எடைபோடுகிறார்கள். அரசுப் பள்ளியில் படித்த மாணவியாகச் சொல்கிறேன், நெருக்கடி இல்லாத சுதந்திர உணர்வை எனக்கு என் பள்ளி தந்தது. மறுபுறம், தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் சிறைச்சாலையில் இருக்கும் மனோபாவத்தோடு இருக்கிறார்கள். அரசுப் பள்ளிகள் மீது பெற்றோர் வைத்திருக்கும் தவறான எண்ணம் மாறினால் மட்டுமே இதை எதிர்கொள்ள முடியும்.



ஊடகத்தில் உண்மை?

தென்னரசன் - லயோலா கல்லூரி மாணவர்

இன்றைய சூழலில் செய்தி ஊடகங்கள் சில விஷயங்களைத் திட்டமிட்டே பெரிதுபடுத்திக் காட்டுகின்றன. அப்படிப்பட்ட விஷயங்களே பொதுமக்களின் கருத்தாகவும் மாறுகிறது. சமுதாயத்தின் உண்மையான கருத்துகளை ஊடகங்கள் பிரதிபலிக்க வேண்டும்.



மதுரை மாணவர்கள்

மேடை ஏறிய பார்வையாளர்

இந்திரகுமார் - வேலம்மாள் பொறியியல் கல்லூரி மாணவர்

இந்த அரங்கத்தின் பெயரில் ஒரு தலைவர் (காமராஜர்) இருந்தார். தமிழக மக்கள் செய்த மிகப் பெரிய பாவம், அவரை ஆட்சியை விட்டு இறக்கியதுதான். இன்றைய அரசியல்வாதிகளுக்கு எதிர்க் கருத்து சொன்னால்கூட அதனை ஏற்றுக்கொள்ளும் தன்மை இல்லை. ஒரு கட்சி இன்னொரு கட்சியின் செயல்பாட்டைக் குறை சொல்லியே ஆட்சியைப் பிடிக்கிறது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வோம் என்று பேசுவதே கிடையாது. தொடர்ந்து 3 முறை பிரதமராக இருந்த நேரு, ஒரு தேசிய நாளிதழில் தன்னைப் பற்றியும், தன் ஆட்சியைப் பற்றியும் விமர்சித்துத் தானே புனைபெயரில் கட்டுரை எழுதினார். ஆனால் இன்று அது சாத்தியமா?



இளைஞர்களின் மீம்ஸ்

ஸ்ரீதேவி அரியநாச்சி - அருப்புக்கோட்டை சவுடாம்பிகை பொறியியல் கல்லூரி மாணவி

இன்றைய இளைஞர்கள் அரசியலில் இருந்து தள்ளி நிற்பதாகச் சொல்வது சரியல்ல. அவர்கள் அரசியலைக் கவனிக்கிறார்கள். அதுபற்றி விவாதிக்கிறார்கள். பாட்டி, தாத்தா காலத்தில் வானொலி இருந்தது, அதைக் கேட்டுவிட்டு சுதந்திரத்திற்காகப் போராடினார்கள். அப்பாக்கள் காலத்தில் நாளிதழ்கள் இருந்தன, அரசியலைப் பற்றி டீக்கடையில் விவாதித்தார்கள். இப்போது சமூக வலைத்தளங்கள் இருக்கின்றன. அதில் தலைவர்களை விமர்சித்தும், கூட்டணி பேரங்களை இப்போது மீம்ஸ் போட்டும் எங்கள் கருத்தை வெளிப்படுத்துகிறோம். இது ஜாலிக்காக அல்ல. எங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்துவதற்கே. .

படங்கள்: ஜெ.மனோகரன், எஸ்.கிருஷ்ணமூர்த்தி, எல். ஸ்ரீநிவாசன், ஜி.ஞானவேல் முருகன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x