Published : 24 Nov 2021 03:07 AM
Last Updated : 24 Nov 2021 03:07 AM

கதை: கல்லும் ஐந்து ரூபாயும்

யாழன் ஆதி

அமுதனுக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

தெருவில் ஓடினான்.

தெரு அவனுக்கு மிகவும் பிடிக்கும். அப்பா அவனைத் தெருவில் அழைத்துச் செல்லும்போதெல்லாம் கடைக்காரப் பாட்டி ஒருவர் மிட்டாய் கொடுப்பார். குழாயில் வரும் தண்ணீர் ஊற்று போல் மேல் நோக்கி அடித்துக்கொண்டிருக்கும். அவன் மேல் சில துளிகள் விழும்போது உடல் சிலிர்க்கும். பக்கத்து வீட்டுச் சாமுண்டி அக்கா அவனுக்காக எப்போதும் களாக்காய்களைத் தருவார். அந்தத் தெரு அமுதனுக்குப் பிடித்துப் போனதற்கான காரணங்கள் இப்படி நிறைய இருந்தன.

அமுதனின் அம்மா புதுத் துணி எடுத்து வந்திருந்தார்.

“பிறந்தநாள்கூட இல்லையே, எதுக்கும்மா புது டிரஸ்?”

“பொறந்தநாளுக்குத்தான் புதுத் துணி எடுக்கணுமா?”

இதுதான் அமுதன் தெருவில் குதித்து ஓடியதற்குக் காரணம். ஆனால், அந்த மகிழ்ச்சி கொஞ்ச நேரம்தான் நீடித்தது. வேகமாக ஓடியதில் கீழிருந்த அந்த வட்ட வடிவக் கல்லை அவன் பார்க்கவில்லை. கால் பெருவிரலில் அடிபட்டு, கீழே விழப் போனான். வலித்த விரலைக் கையால் பிடித்துக் கொஞ்ச நேரம் அப்படியே நின்றுகொண்டிருந்தான். அப்போது அவன் தமிழ் ஆசிரியர் முருகவேல் நினைவுக்கு வந்தார்.

“இந்த மனுசங்க இருக்காங்களே எப்பப் பாத்தாலும் மத்தவங்க மேல பழியைப் போடுறதுலேயே கவனமா இருப்பாங்க. இவன் பாக்காம போய், கல்லுல இடிச்சிக்குவான். ஆனால், கல்லு இடிச்சிடுச்சின்னு அதுமேல பழியப்போடுவான்.”

வலியிலும் கொஞ்சம் சிரிப்பு வந்தது அமுதனுக்கு.

அந்தக் கல்லைக் கையில் எடுத்துச் சுற்றும்முற்றும் பார்த்தான். “வேற யாரையும் இடிக்கக் கூடாது என்ன, அப்படி ஓரமா போய் இரு” என்று கல்லிடம் கூறி தலைக்குப் பின்னால் தூக்கி எறிந்தான்.

“ஆ... ஐயோ...”

சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்த்தான். அங்கே ஒரு பாட்டியைக் கண்டு பயந்து விட்டான். அவனுக்கு மனம் துடித்தது.

“மன்னிச்சிருங்க பாட்டி, நான்தான் தெரியாமல் போட்டுட்டேன்.”

“சரி விடு தம்பி” என்று கூறிக்கொண்டே இடுப்பிலிருந்து ஐந்து ரூபாயை எடுத்து நீட்டினார் அந்தப் பாட்டி.

அமுதனுக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை.

“எதுக்கு எனக்குப் பணம்? எனக்கு வேணாம்.”

“நீயும் என் பேரன் மாதிரிதான். ஏதாவது கடையில் வாங்கிக்க” என்று அன்போடு கொடுத்தார் பாட்டி. வேறு வழியில்லாமல் நன்றி சொல்லிவிட்டு, நகர்ந்தான் அமுதன்.

கடைக்குப் போனான். புதிய பொம்மைகள் வந்திருந்தன. ஒரு வீட்டைக் கட்டிவிட வேண்டும் என்று அம்மாவும் அப்பாவும் பேசிக்கொண்டிருந்தது நினைவுக்கு வர, பொம்மை வீட்டை வாங்கினான்.

எவ்வளவு அழகான வீடு! அவனுக்கும் அவன் தம்பிக்கும் ஓர் அறையை எடுத்துக்கொண்டான். அம்மாவுக்கும் அப்பாவுக்கும் ஓர் அறையை ஒதுக்கினான்.

அவன் அறை சுவர் முழுக்க அவனுக்குப் பிடித்த மரங்கள், கிளிகள், சிறுத்தை ஓவியங்கள் இருந்தன. வீட்டைத் தூக்கிக்கொண்டு வேகமாக நடந்தான் அமுதன். எதிரில் அந்தப் பாட்டி வந்துகொண்டிருந்தார்.

அமுதன் பாட்டியிடம் நன்றி சொன்னான். பாட்டி சிரித்தார்.

“பாட்டி, கல்லடிச்சா எல்லோரும் அடிப்பாங்க, நீங்க என்ன காசு தர்றீங்க!”

“அந்தக் கல் எம் மேல விழல. பக்கத்துலதான் விழுந்துச்சி. மேல விழுந்துடுமோன்னு பயந்துதான் கத்தினேன். அது மட்டுமில்ல, அந்தக் கல்ல தான் ரெண்டு நாளா தேடிக்கிட்டு இருந்தேன். வீட்ல ஒரு பொந்து இருக்கு, அதைக் இந்தக் கல்லால அடைச்சி வச்சிருந்தேன். யாரோ எடுத்துப் போட்டிருக்காங்க. வேற கல்ல வச்சி அடைச்சாலும் சரியா வரல. உன்னாலதான் இந்தக் கல்லு கெடைச்சது” என்று அமுதனின் முதுகைத் தட்டிக்கொடுத்தார் பாட்டி.

இப்போது தெரு இன்னும் அதிகமாகப் பிடித்துவிட்டது அமுதனுக்கு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x