Published : 23 Nov 2021 03:06 AM
Last Updated : 23 Nov 2021 03:06 AM

ஃபேஸ்புக் போனால் பழுக்கும் கன்னம்!

அமெரிக்காவில் பிஸியான பிளாகரான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மணீஷ் ஒரே நாளில் உலகப் புகழ் அடைந்துவிட்டார். காரணம் இதுதான். கம்ப்யூட்டர் புரோகிராமராகவும் பணியாற்றும் அவர், எப்போதும் ஃபேஸ்புக்கே கதியெனக் கிடப்பவர். ஒரு கட்டத்தில் ஃபேஸ்புக்குக்கு அடிமை ஆகிவிட்டார். இதனால், அவருடைய அன்றாட பணிகளுக்கு முட்டுக்கட்டை விழுந்தது. இதிலிருந்து எப்படி வெளியே வருவது என ரூம் போட்டு யோசித்துக்கொண்டிருந்தார்.

இறுதியாக அவருடைய மூளையில் ஒரு பல்பு எரிந்தது. உடனே, தன்னைக் கண்காணிப்பதற்காக கிளாரா என்கிற பெண்ணை வேலைக்கு அமர்த்தினார். அந்தப் பெண்ணுக்குக் கொடுத்த வேலைதான் இப்போது வைரலாகிவிட்டது. “நான் எப்போதெல்லாம் கணினியில் ஃபேஸ்புக்கைத் திறக்கிறேனோ, அப்போதெல்லாம் கன்னத்தில் ஓங்கி ஓர் அறை கொடுத்து எச்சரிக்க வேண்டும்” என்பதுதான் அந்தப் பெண்ணுக்கு மணீஷ் கொடுத்த வேலை. இப்போதும் பழக்கதோஷத்தில் மணீஷ் ஃபேஸ்புக்கைத் திறந்தால், கிளாரா கன்னத்தில் ஓங்கி ஒன்று கொடுக்கிறார். அந்த அறையை மகிழ்ச்சியாக ஏற்றுக்கொண்டு, ஃபேஸ்புக் பக்கத்தை மூடி வைத்து வேலையில் மூழ்கிவிடுகிறார்.

இந்த வினோத வழிமுறையால் மணீஷின் வேலையில் இருந்த தொய்வும் நீங்கிவிட்டதாம். மணீஷின் இந்த வழிமுறையை உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க் தனது சமூக ஊடகப் பக்கத்தில் பகிர, இன்று உலகப் புகழும் அடைந்துவிட்டார் மணீஷ். ஃபேஸ்புக் அடிமைகள் கொஞ்சம் குறிச்சு வைச்சுக்குங்கப்பா!

வந்தாச்சு லொள் லொள் டிவி!

பொழுதுபோக்கு சேனல், விளையாட்டு சேனல், கிட்ஸ் சேனல் கேள்விப்பட்டிருப்பீர்கள். ‘டாக் டிவி’ சேனலைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இங்கிலாந்தில் ‘டாக் டிவி’ என்கிற பெயரில் சேனலையே தொடங்கிவிட்டார்கள். மனிதர்களோடு நெருக்கமான பிராணி என்பதால் என்னவோ, சில நாய்நேயமிக்கவர்கள் நயமாக இந்தச் சேனலைத் தொடங்கியிருக்கிறார்கள். மனிதர்களைப் போலவே நாய்களுக்கு ஏற்படும் மனரீதியான பிரச்சினைகளுக்குக் காட்சிரீதியான பொழுதுபோக்கு அம்சங்கள் தேவையாம். இதை அடிப்படையாக வைத்துத்தான் ‘டாக் டிவி’ உருவாகியிருக்கிறது.

நாய்களின் மனநிலையை மூன்று ஆண்டுகள் ஆராய்ச்சி செய்து, அவை விரும்பும் வகையில் ஒளி ஒலியைச் சேர்த்து நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகிறார்கள். செல்லப் பிராணிகளை ஆசையோடு வளர்த்தால் மட்டும் போதாது; அவற்றை கூடுதலாகப் புரிந்துகொள்வதற்கான நிகழ்ச்சிகளும் ஒளிபரப்பப் படுகின்றன. தற்போது சோதனை ஒளிபரப்பில் உள்ள ‘டாக் டிவி’ வரவை எதிர்பார்த்து ஆவலோடு காத்திருக்கிறார்கள் இங்கிலாந்துவாசிகள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x