Published : 21 Nov 2021 03:20 am

Updated : 21 Nov 2021 07:46 am

 

Published : 21 Nov 2021 03:20 AM
Last Updated : 21 Nov 2021 07:46 AM

தொடரும் பாலியல் வன்முறை: பேசினால் மட்டும் போதுமா?

sexual-abuse

மா

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் தினமும் வீடுகளிலும் வீதிகளிலும் நிறுவனங்களிலும் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. அதைக் கேட்டும் கேட்காதவர்களைப் போல், கண்டும் காணாதவர்களைப் போல் நாம் கடந்து போய்க்கொண்டிருக்கிறோம். கொலையோ, தற்கொலையோ, பொள்ளாச்சி மாதிரியான அதிக எண்ணிக் கையிலான சம்பவங்களோ நடக்கும்போது மட்டும் நம் முதுகுக் கூன் சற்று நிமிர்கிறது. ஆனாலும், சிறிது நேரத்திலேயே இயல்புக்குத் திரும்பி நம் வேலையைப் பார்க்கப் போய்விடுகிறோம்.

பெண்கள், பெண் குழந்தைகள் எதிர்கொள்ளும் பாலியல் வன்முறைகள் தொடர்பாகப் பல்வேறு சட்டங்கள் இருக்கின்றன. அந்தப் பிரிவில் கைதும் செய்துவிடுகிறார்கள். ஆனால், ஏன் இன்னும் இப்படியான வன்முறைகள் நிகழாத ஒரு சமூகத்தை நம்மால் கட்டமைக்க முடியவில்லை?

காரணம் என்ன?

நம்முடைய கலாச்சார மதிப்பீடுகளே இத்தகைய வன்முறைகளின் ஆணிவேர் என் பதைப் புரிந்துகொள்ள மறுக்கிறோம் அல்லது தயங்குகிறோம். பண்பாடு, கலாச்சாரம் நிறைந்த பூமி என்று எந்த அடிப்படையும் இல்லாதவற்றை பெருமையாகச் சொல்லிச் சொல்லித்தான் நிறுவப் பார்க்கிறோம். ‘ஆம்பளைன்னா அப்படித்தான் இருப்பான், பொம்பளைன்னா இப்படித்தான் இருக்க வேண்டும்’ என்று மார்தட்டிக்கொள்ளும் நம் சமூகத்தில், ‘பொம்பளைன்னா அப்படித்தான் இருப்பாள். ஆம்பளைன்னா இப்படித்தான் இருக்க வேண்டும்’ என்று சொல்ல முடியுமா? சொல்வதை விட்டுவிடுவோம், அதை நாம் கனவிலாவது நினைத்துப் பார்க்க முடியுமா?

நம்முடைய சமூகத்தின் அடி ஆழம் வரை ஊடுருவி நிலைத்து இருக்கும் பாலினச் சமத்துவமின்மை இதிலிருந்தே தொடங்குகிறது. நம் சமூகத்தில் ஆணுக்கென்று ஒரு நீதியும், பெண்ணுக்கென்று ஒரு நீதியையும் வைத்துக் கொண்டிருக்கும்வரை இந்த அவலங்கள் தொடரும். இத்தகைய வளர்ப்பு முறை ஆணுக்கு வரையறையற்ற சுதந்திரத்தை அளிப்பதன் மூலம் ஆணை மட்டுமல்ல; சமூகத்தையும் சேர்த்தே பலவீனப்படுத்துகிறது.

அர்த்தமற்ற கேள்விகள்

இன்றைக்கு ஒரு பெண்ணின் மரணத்துக்குப் பிறகு பல நியாயங்கள் பேசுகிறோம். சென்னைப் பள்ளியில் நடந்த சம்பவத்தையொட்டி, அதே பள்ளியில் அதே ஆசிரியரிடம் படித்த சில மாணவிகளின் பெற்றோர்களிடம் பேச நேர்ந்தது. “அந்த சார் அப்படியெல்லாம் கிடையாது. பாடங்கள் சொல்லிக்கொடுப்பதில், மாணவர்களின் படிப்பில் அக்கறை உள்ளவர். அவர் அப்படி நடந்துகொண்டிருக்க மாட்டார். இந்தப் பெண்கள் இளித்துக்கொண்டு போய் நின்றிருப்பார்கள்” என்று சிலர் கூறினார்கள். இதுதான் நம் சமூகம். தவறு செய்தவரை விட்டுவிட்டுப் பாதிக்கப்பட்டவரைக் குறை சொல்கிறது. இதற்குத்தான் பெண்ணைப் பெற்றவர்கள் பயப்படுகிறார்கள். பிரச்சினைகளை மூடி மறைக்கிறார்கள்.

தற்போது கோயம்புத்தூர் மாணவியின் மரணத்தை ஒட்டியும் பல்வேறு கேள்விகள் எழுப்பப்படுகின்றன. அவற்றில் சில:

1. ஏன் பெற்றோரிடம் சொல்ல முடியவில்லை?

2. ஏன் தலைமை ஆசிரியர் ஒன்றும் செய்யவில்லை?

3. அந்தப் பெண்ணுக்குப் பிரச்சினையை எதிர்கொள்ள ஏன் தைரியம் இல்லை?

4. தற்கொலைதான் தீர்வா?

இத்தகைய கேள்விகளை எழுப்புபவர்கள் அந்தப் பெண்ணின் வயதுக்குரிய மனநிலையிலிருந்து எண்ணிப்பார்க்க முயல்வது இல்லை. அந்தப் பெண் தன்னுடைய பெற்றோரிடம் சொன்னாளா, இல்லை சொல்ல முற்பட்டாளா என்று தெரியாது. ஆனால், போராடிப் பள்ளிக் கூடத்தை மாற்றி இருக்கிறாள். பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு ஆதரவாகத் தோள்கொடுத்து நிற்க வேண்டிய பள்ளி நிர்வாகத்தினர் இப்படி ஒரு விஷயத்தைக் கையாளத் தயங்கும் போக்கே பெரும்பாலும் உள்ளது.

திடீரென எங்கிருந்து 16, 17 வயதில் தைரியம் வரும்? சிறு வயதிலிருந்தே அல்லவா அதை ஊட்டி வளர்த்திருக்க வேண்டும்? பிரச்சினையை மூடி மறைப்பது, பெண்ணை வீட்டிற்குள் முடக்குவது, பிரச்சினை பெரிதான பிறகு வெளிவருவது போன்ற பெற்றோரின் நடவடிக்கைகளும், ஆதரவாக நிற்க மறுக்கும் சமூகமும், இந்தப் பிரச்சினையைக் கையாளத் தயங்கும் பள்ளிகளும் பாதிக்கப்பட்ட பெண்ணை என்ன மாதிரியான துயர மனநிலைக்கு இட்டுச்செல்லும்? தங்களுக்கு ஆதரவாக இருக்கக்கூடிய, புரிந்துகொள்ளக்கூடிய ஒரு ஆசிரியரைக்கூடப் பாதிக்கப்பட்ட மாணவிகளால் கண்டுபிடிக்க முடியவில்லை என்பது நம்முடைய சமூக அமைப்பின் அவலம் அல்லவா.

தீர்வுதான் என்ன?

தனிப்பட்ட பெற்றோரோ, பள்ளியோ மட்டும் குற்றம் சாட்டப்பட வேண்டியவர்கள் அல்ல. தனி மனிதரிலிருந்து அரசாங்கம் வரை கூட்டாக எதிர்கொள்ள வேண்டிய பிரச்சினை இது. மொத்தமாக மாற்றி அமைக்க வேண்டிய கட்டமைப்பு இது. வீடுகளிலிருந்து தொடங்கி அரசு வரை கொண்டு செல்வதா அல்லது அரசிலிருந்து தொடங்கி வீடு வரை கொண்டு செல்வதா என்று ஆராயாமல், இரண்டு தளத்திலிருந்தும் முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும். குடும்ப அளவில் பெற்றோர்களும் உறவினர்களும் குழந்தைகளுக்கு ஆதரவாக செயல்பட வேண்டும்..

முன்பெல்லாம் கிராமம்தோறும் அறிவொளி இயக்கத்தைச் சார்ந்த அண்ணன்களும், அக்காக்களும் இருந்தனர். நாங்கள் களத்தில் வளரிளம் பருவத்தினருடன் வேலை பார்த்தபோது, அவர்கள் கிராமங்களில் நடந்த பாலியல் பிரச்சினைகளை அவர்கள் மூலம் எங்களிடம் தெரிவித்திருக்கிறார்கள். அவற்றைக் கையாள்வதற்கான முறைகளையும் கற்றறிந்திருக்கிறார்கள். ஆசிரியர் களிடமோ, பெற்றோர்களிடமோ பகிர முடியாததை இந்த அக்காக்கள், அண்ணன்களோடு பகிர முடிந்திருக்கிறது. இப்போது இத்தகைய அமைப்பு இல்லை.

விழிப்புணர்வு அவசியம்

எல்லாப் பள்ளிகளிலும், பள்ளிகளில் மட்டுமல்ல; வளரிளம் பருவ குழந்தைகள் புழங்கக்கூடிய அனைத்து இடங்களிலும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டி உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன், திருவண்ணாமலையைச் சேர்ந்த நந்தினி என்கிற சிறுமி, தனக்கு நிகழ விருந்த குழந்தைத் திருமணத்தைத் தடுத்து நிறுத்த உதவியது எது தெரியுமா? இத்தகைய பிரச்சினை வந்தால் தெரிவிக்க வேண்டிய தொலைபேசி எண்ணைத் துண்டறிக்கை மூலம் பள்ளியில் அவள் தெரிந்துகொண்டதே. அரசு திரும்ப இதே மாதிரி விழிப்புணர்வு திட்டங்களைத் தீவிரமாக அமலாக்க வேண்டும். ஏற்கெனவே இதற்குரிய சட்டங்கள், திட்டங்கள் இருந்தாலும், இவை சரிவர அமலாக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். பள்ளி மேலாண்மைக் குழுக்கள் மூலம் அனைத்துப் பெற்றோருக்கும் விழிப்புணர்வு அளிக்கப்பட வேண்டும்.

வீட்டுக் குழந்தைகளின் செயல்பாடுகளில் திடீரென்று ஏதேனும் மாற்றம் தெரிகிறதா, சோகமாக, சோர்வாக, தனித்து இருக்கிறார்களா, பள்ளிக்கோ, டியுஷனுக்கோ போகத் தயங்குகிறார்களா, ஏதாவது குறிப்பிட்ட உறவினரோ தெரிந்தவரோ வந்தால் பயப்படுகிறார்களா, யார் வீட்டுக்காவது போகத் தயங்குகிறார்களா என்றெல்லாம் கவனிக்க வேண்டும். இப்படியான சூழ்நிலையில் அவர்களிடம் பெற்றோர் எப்படி ஆதரவாகச் செயல்பட வேண்டும், இதற்கு யாருடைய உதவியை நாடலாம் – இப்படி எல்லா விஷயங்கள் பற்றியும் அனைத்துப் பெற்றோருக்கும் தகவல்களும் விழிப்புணர்வும் அளிக்கப்படுவதை அரசு உறுதிசெய்ய வேண்டும். பள்ளிகள், இளம் பெண்கள் வேலை பார்க்குமிடங்கள், பொது இடங்கள் என அனைத்துத் தளங்களில் இயங்கும் அனைவருக்கும் இந்த விழிப்புணர்வு அவசியம். முக்கியமாக, வளரிளம் பெண்களுக்கும் அவர்கள் குடும்பத்தாருக்கும் இந்த விழிப்புணர்வு அவசியம்.

நாம் இதுவரை குடும்பங்களில் நடக்கும் பாலியல் சீண்டல்கள், வன்முறைகள் பற்றிப் பேசவே ஆரம்பிக்கவில்லை. இவற்றையும் பேச ஆரம்பித்தால்தான் எல்லா இடங்களிலும் நிகழும் பாலியல் சீண்டல்களை, வன்முறைகளைத் தவிர்க்க முடியும். யாருக்கோ நடக்கிறது என்றில்லாமல் என் சக மனிதனுக்கு நடக்கிறது என்கிற மன உளைச்சல் நம் அனைவருக்கும் வர வேண்டும். அதுவே, நம் அனைவரையும் தட்டி எழுப்பி இயங்க வைக்கும். அனைவரும் கூட்டாக இணைந்து செயல்பட்டால் மட்டுமே, கலாச்சார மதிப்பீட்டையும் பாலியல் வன்முறைகளையும் நம்மால் வேரறுக்க முடியும்.

கட்டுரையாளர்,எழுத்தாளர், செயற்பாட்டாளர்.

தொடர்புக்கு: maa1961@gmail.com

பாலியல் வன்முறைSexual abuseகலாச்சார மதிப்பீடு

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

kollywood-junction

கோலிவுட் ஜங்ஷன்

இணைப்பிதழ்கள்

More From this Author

x