Published : 21 Nov 2021 03:06 AM
Last Updated : 21 Nov 2021 03:06 AM

போராட்டம்: பெண்களும் பெற்றுத்தந்த வெற்றி!

வேளாண்மைத் துறையில் சீர்திருத்தங்களை மேற் கொள்வதற்காக இந்திய அரசால் நிறைவேற்றப்பட்ட மூன்று புதிய சட்டங்களும் ரத்து செய்யப்படும் என்று சீக்கிய மத நிறுவனர் குரு நானக்கின் பிறந்தநாளான நவம்பர் 19 அன்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.

இந்த மூன்று வேளாண் சட்டங்களும் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் இந்திய விவசாயத்தின் கட்டுப்பாட்டை ஒப்படைத்து, கோடிக்கணக்கான விவசாயி களை அவற்றின் ஏவலாளிகளாக மாற்றிவிடக் கூடியவை என்பதால் இவை ரத்து செய்யப்பட வேண்டும் என்று நாடு முழுவதும் உள்ள பல்வேறு விவசாய சங்கங்கள், அமைப்புகள் எதிர்ப்புக் குரல் எழுப்பின. அதற்காகக் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாகத் தொடர்ந்து அயராமல் அறவழியில் ஒற்றுமையுடனும் தீய சக்திகளை ஊடுருவவிடாமலும் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் போராடிவருகின்றனர். குறிப்பாக பஞ்சாப், ஹரியாணா மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் தலைநகர் டெல்லியின் எல்லையோரப் பகுதிகளில் கூடாரம் அமைத்து, கிட்டத்தட்ட ஓர் ஆண்டு காலமாகப் போராடிவருகின்றனர். பல வழிகளில் முயன்றும் விவசாயிகளின் மன உறுதியைக் குலைக்க முடியாத அரசு ஒருவழியாக விவசாயிகளின் கோரிக்கையை முழுமையாக ஏற்றுக் கொண்டுள்ளது.

இது விவசாயிகளின் வெற்றி என்று எதிர்க்கட்சிகளும் ஜனநாயக ஆதரவு அமைப்புகளும் புகழ்கின்றன. தேர்தலுக்காகச் செய்துகொள்ளப்பட்ட தற்காலிகப் பின்வாங்கல் என்று சிலர் சந்தேகம் எழுப்புகின்றனர். பிரதமரின் அறிவிப்பு வரவேற்புக்குரியது என்றாலும் வேளாண் சட்டங்கள் முறையாக நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் ரத்து செய்யப்படும்வரை போராட்டக் களத்தைவிட்டு நீங்க மாட்டோம் என்று விவசாயிகள் அறிவித்துள்ளனர். எப்படி இருந்தாலும் கடந்த ஏழாண்டுகளாக மோடி தலைமையினாலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு தடாலடி யான நடவடிக்கைகளை எடுக்கும் அரசாகவும் எதிர்ப்புகளைக் கண்டு பின்வாங்காத ‘வலிமையான’ அரசாகவும் அறியப்படுவதில் பெருமைகொள்ளக் கூடியதாக இருக்கிறது. இந்நிலையில், மக்கள் போராட்டத்துக்குச் செவிசாய்த்தி ருப்பதன்மூலம் மக்களாட்சியில் மக்களின் குரலுக்கே முதல் மதிப்பு என்பது மீண்டும் உறுதியாக நிலைநாட்டப்பட்டிருக்கிறது. இது இந்தச் சட்டங்களை எதிர்த்துப் போராடிய விவசாயிகளின் மிகப் பெரிய சாதனை. அந்தச் சாதனையில் பெண்களுக்கும் சரிபாதி பங்கிருக்கிறது.

அனைத்து நிலைகளிலும் பங்கேற்பு

டெல்லி எல்லைப் பகுதிகளில் நடைபெற்றுவரும் போராட்டங்களில் தொடக்கத்திலிருந்தே ஆயிரக்கணக் கான பெண்கள் பங்கேற்றுவருகின்றனர். அவர்களில் பலர் வீட்டுக்குச் செல்லாமல் மாதக்கணக்கில் அங்கேயே இருக்கின்ற னர். போராட்டக் களத்தில் சமைப்பது, தேநீர் தயாரிப்பது ஆகியவற்றை மட்டும் பெண்கள் செய்யவில்லை. போராட்டப் பந்தல்களில் விண்ணதிர கோஷங்களை எழுப்புவது, மேடைகளில் உரையாற்றுவது ஆகியவற்றையும் செய்கின்றனர். போராட்டத்தை வழிநடத்திய விவசாய சங்கங்களின் கூட்டமைப்பான ‘சம்யுக்தா கிசான் மோர்ச்சா’வின் ஒவ்வொரு முக்கியமான முடிவும் பெண் உறுப்பினர்களின் ஒப்புதலுக்குப் பிறகே நடைமுறைப்படுத்தப்பட்டன.

இது தொடர்பான வழக்குகளை விசாரித்துவந்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தொடக்கம் முதல் இந்தப் பிரச்சினையில் விவசாயிகளுக்கு ஆதரவாகப் பேசிவந்தனர். ஆனாலும், கடந்த ஜனவரியில் போராட்டக் களத்தில் பெண்கள் ஏன் இருக்கின்றனர் என்று கேள்வி எழுப்பியதோடு அவர்களை வீடுகளுக்குத் திரும்பிச் செல்ல வலியுறுத்துமாறு போராட்டத்தை ஒருங்கிணைத்தவர்களுக்கு உச்ச நீதிமன்றத்தின் அன்றைய தலைமை நீதிபதி அறிவுரை வழங்கினார். இது விவசாயத்தில் தங்களின் பங்களிப்பை மறுப்பதாகப் பெண் விவசாயிகளை உணரச் செய்தது. அதையடுத்து மேலும் பல பெண்கள் போராட்டக் களத்துக்கு வரத் தொடங்கினர். சர்வதேச மகளிர் தினமான மார்ச் 8 அன்று பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 4,000 பெண் விவசாயிகள் போராட்டக் களத்துக்கு வந்தனர். அண்மையில் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் நடந்தபோது அதற்கெதிராக விவசாயிகளின் நாடாளு மன்றம் (கிசான் சன்சத்) டெல்லியில் நடத்தப்பட்டது. இதில் முழுக்க முழுக்க பெண்களுக்கென்றே ஒரு நாள் ஒதுக்கப்பட்டது. நாடு முழுவதிலும் இருந்து பல ஆயிரம் பெண்கள் பங்கேற்ற இந்த ‘பெண் விவசாயிகளின் நாடாளுமன்ற’த்தில் விவசாய சட்டங்கள் மட்டுமல்லாமல் பெண்கள் சந்தித்துவரும் பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. நாடாளுமன்றத்தில் பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பல வடிவப் பிரச்சாரம்

டெல்லியில் மட்டுமல்ல, இந்தப் போராட்டத்துக்கு விதை போடப்பட்ட பஞ்சாபிலும் விவசாயத்தில் ஈடுபட்டிருக்கும் பெண்களும் குடும்பப் பொறுப்பைக் கவனிக்கும் பெண்களும் பட்டம்பெற்று கார்ப்பரேட் வேலைகளில் இருக்கும் அவர்களின் அடுத்த தலைமுறையினரும் விவசாய சட்டங்களுக்கெதிரான பிரச்சாரங்களைப் பலவழிகளில் முன்னெடுக்கின்றனர். பல கிலோமீட்டர் தொலைவுக்கு டிராக்டரில் பயணம் செய்து பொதுமக்களிடம் விவசாய சட்டங்கள் ஏன் எதிர்க்கப்படுகின்றன என்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவது, கடன் தொல்லையால் தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் மனைவிகளுக்கும் குடும்பங்களுக்கும் இந்தச் சட்டங்களின் தீய விளைவுகளை விளக்கிச் சொல்வது எனப் பல வகையான பிரச்சார வடிவங்களைப் பெண்கள் முன்னெடுத்தனர்.

கவனத்துக்கான போராட்டம்

வேளாண் சட்டங்களுக்கு எதிரான இந்தப் போராட்டம் பெண் விவசாயிகள் தங்கள் மீது கவனம் செலுத்தப்பட வேண்டிய அவசியத்தை வலியுறுத் துவதற்கான போராட்டமாக உருப்பெற்றது. வேளாண்மை கணக்கெடுப்புத் தரவுகளின்படி கிராமப் புறங்களில் வசிக்கும் பெண்களில் 73.2 சதவீதத்தினர் உழவில் ஈடுபடுகிறாரகள். இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் பெண்கள் செய்யும் விவசாயப் பணிகளின் நேர அளவு 3,300 மணி என்றால் ஆண்களின் பங்கு 1,860 மட்டுமே. இதிலிருந்தே விவசாயத்தில் ஆண்களைவிடப் பெண்களே அதிகமாகப் பங்களிக்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ளலாம். ஆனால், விவசாயத்தில் ஈடுபடும் பெண்களில் 12.8 சதவீதத்தினர் மட்டுமே நிலவுடைமையாளர்களாக உள்ளனர். மற்றவர்களின் நிலங்களில் விவசாயம் தொடர்பான அனைத்துப் பணிகளையும் செய்யும் பெண்கள், ‘விவசாயிகள்’ என்று அங்கீகரிக்கப்படுவதற்கே பெரும் போராட்டத்தை நடத்த வேண்டியுள்ளது. பெரும்பாலும் ‘பயிரிடுவோர்’, ‘வேளாண் தொழிலாளர்கள்’ என்றே பெண் விவசாயிகள் குறிப்பிடப்படுகின்றனர். இந்த நிலையில் விளைபொருள் விற்பனையில் மண்டிகளுக்குப் பதிலாகப் பெருவணிக நிறுவனங்கள் அனுமதிக்கப்பட்டால் தற்போதைய அமைப்பில் தங்களுக்கு இருக்கும் குறைந்தபட்ச வாழ்வாதார பாதுகாப்பையும் இழக்க நேரிடும் என்கிற அச்சமே பெண்களை இந்தப் போராட்டத்தில் தன்னெழுச்சியுடன் பங்கேற்க வைத்துள்ளது. அதோடு இந்தப் போராட்டத்தின்மூலம் நம் நாட்டில் விவசாயத்தில் பெண்கள் ஆற்றிவரும் பங்கு குறித்தும் அவர்களுக்கு மறுக்கப்பட்டுவரும் உரிமைகளும் அங்கீகாரங்களும் இனியாவது அளிக்கப்பட வேண்டும் என்பது குறித்தும் பரவலாக அறியச் செய்திருப்பதோடு அது குறித்த விவாதங்களையும் தொடங்கி வைத்திருக்கிறது இந்தப் போராட்டம்.

தொடர்புக்கு: gopalakrishnan.sn@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x