Published : 20 Nov 2021 03:06 AM
Last Updated : 20 Nov 2021 03:06 AM

பெண்களே, ஜிம் செல்கிறீர்களா?

டாக்டர் சசித்ரா தாமோதரன்

கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் சமீபத்திய மரணம், நாடெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. உடற் பயிற்சிக்குப் பின்னர் ஏற்பட்ட மாரடைப்பால் அது நிகழ்ந்ததால், அவருடைய கடின உடற் பயிற்சியே மாரடைப்புக்குக் காரணம் என்கிற கருத்து இணையத்தில் வேகமாகப் பரவியது. அபரிமித உடற்பயிற்சியால் ஏற்படும் ஆபத்துகள் சமூக ஊடகங்களில் விவாதப் பொருளாக மாறியிருக்கின்றன. இருப்பினும், இந்த விவாதங்கள் அனைத்தும், ஜிம்முக்கு செல்லும் ஆண்களை மையம் கொண்டே நிகழ்கின்றன.

உண்மையில் மகப்பேறு, ஒவ்வாத உணவுப் பழக்கம், உட்கார்ந்தே பணிபுரிதல், உறக்க நேர வித்தியாசங்கள் போன்ற காரணங்களால் ஆண்களைவிடப் பெண்களே அதிக உடல் எடை பிரச்சினையால் பாதிக்கப்படுகின்றனர். சமீப காலத்தில் ஏற்பட்டிருக்கும் சமூக மாற்றங் களால், உடல் எடையைக் குறைப்பதற்கும், உடற்பயிற்சிகளை மேற்கொள்வதற்கும் பெண்கள் ஜிம்முக்கு செல்லும் போக்கு அதிகரித்துவருகிறது. எனவே, ஜிம் செல்லும் பெண்கள் மனத்தில் கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்துப் பேசுவது இன்றைய காலத்தின் கட்டாயம்.

இயற்கை அளிக்கும் பாதுகாப்பு

பொதுவாக ஆண்கள் அளவிற்குப் பெண்களுக்கு மாரடைப்பு அல்லது முடக்குவாதம் ஏற்படுவதில்லை அல்லது ஆண்களைக் காட்டிலும் ஆறேழு வருடங்கள் தாமதமாகவே இந்த நோய் அறிகுறிகள் பெண் களுக்குத் தென்படுகின்றன. காரணம், ஈஸ்ட்ரோஜன். பெண்மைக்கும் தாய்மைக்கும் உரிய ஹார்மோனான இந்த ஈஸ்ட்ரோஜன், ஒரு பெண் பூப்படைவதிலிருந்து மூப்படைவது வரை சுரக்கிறது என்றாலும், அவற்றின் அளவும் செயல்பாடுகளும் வயதிற்கேற்ப மாறுபடுகின்றன.

பருவமடையும்போது, இனப்பெருக்க உறுப்புகளின் வளர்ச்சிக்கும், கர்ப்ப காலத்தில் வளரும் கருவிற்குப் பாதுகாப்பு அளிக்கவும், மாதவிடாய் நிறுத்தம் ஏற்படும் முன்னர் முறையான உதிரப்போக்கை உண்டாக்கவும் என ஒவ்வொரு காலத்திலும் இந்த ஹார்மோன் தனது செயலை முறைப்படுத்திக்கொள்கிறது.

அதேவேளை, இந்தப் பெண்மை ஹார்மோன்கள் ரத்தத்தில் ஹெச்.டி.எல். என்ற நல்ல கொழுப்பை அதிகரித்து, எல்.டி.எல். எனும் கெட்ட கொழுப்பைக் குறைக்கிறது. நைட்ரிக் ஆக்சைடு என்கிற வேதிப் பொருளை உற்பத்திசெய்து, ரத்த நாளங்களின் சிறுதசைகளை விரிவடையச் செய்வதுடன், ரத்த நாளங்களில் அடைப்பை ஏற்படுத்தும் ‘ஃபிரீ ரேடிக்கல்ஸ்’ எனப்படும் சிதைவுப் பொருட்களைக் கரைத்து, தமனிகளில் ஏற்படும் அழற்சியையும் அடைப்பையும் கட்டுப்படுத்துகிறது. மேலும் எலும்புகளில் கால்சியம் அளவை அதிகரித்து, எலும்புப்புரையை தடுக்கிறது.

லான்செட் விடுக்கும் எச்சரிக்கை

ஈஸ்ட்ரோஜன் இருப்பதால் பெண்களுக்கு எதுவுமே ஆகாதா? அவர்களுக்கு உடற்பயிற்சி கூடத் தேவையில்லையா என்பது போன்ற கேள்விகள் எழலாம். சில பெண்கள் அப்படி நினைத்திருக்கவும் கூடும். இத்தகைய கேள்விகளுக்குப் பதில் அளிக்கும் விதமாக லான்செட் மருத்துவ இதழின் சமீபத்திய ஆய்வின் முடிவுகள் உள்ளன.

மெனோபாஸ் எனும் மாதவிடாய் நிறுத்தம் பொதுவாக 45 -55 வயதில்தான் ஏற்படும் என்றாலும், அதற்கு ஐந்து அல்லது ஆறு ஆண்டுகளுக்கு முன்னரே சினைப்பையில் சுரக்கும் ஈஸ்ட்ரோஜன் படிப்படியாகக் குறைய ஆரம்பித்துவிடும். அதாவது, ஒரு பெண் 40 வயதை எட்டும்போதே, ஈஸ்ட்ரோஜன் உற்பத்தி குறைவதால், அவருக்கு ஆணுக்கு நிகராக இதய நோயும் ரத்தக்குழாய் பாதிப்புகளும் ஏற்படும் சாத்தியம் அதிகமாக உள்ளது என்று அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

‘பெண்களிடையே அதிகரிக்கும் உடல்பருமன், நீரிழிவு நோய், ரத்த அழுத்தம், மேற்கத்திய உணவுப் பழக்கங்கள், சமீபகாலமாக அதிகரித்துவரும் மது - புகைப்பழக்கம், உறக்கமின்மை, மன அழுத்தம், அனைத்திற்கும் மேலாக பணிச்சூழலால் ‘உட்கார்ந்திருக்கும் வாழ்க்கைமுறை’ போன்ற காரணங்களால் பெண்களுக்கும் இதய நோய் ஏற்படத் தொடங்கியிருக்கிறது. தற்போதைய சூழலில் பெண்களைக் கொல்லும் நோய்களில் மாரடைப்பு முதலாவதாக மாறிவருகிறது. இந்த 20 ஆண்டுகளில் இளவயது இறப்பு விகிதங்கள் 35% கூடியுள்ளன’ என அந்த ஆய்வு எச்சரிக்கை மணி அடிக்கிறது.

ஆண்கள் அளவிற்குப் பெண்களுக்கான விழிப்புணர்வும், பரிசோதனை முறைகளும் இல்லாத காரணத்தாலும் பெண்களில் இளவயது (35-45) இதய நோய் மரணங்கள் ஏற்பட்டு வருகின்றன என்று கூறும் இத்தகவல்கள், மேற்கத்திய நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் முடிவுகள். என்றாலும், இந்தப் புள்ளிவிவரங்களுக்குச் சிறிதும் குறைவின்றி நமது நாட்டிலும் வாழ்க்கை முறை நோய்களால் ஏற்படும் இளவயது பெண் மரணங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.

ஈஸ்ட்ரோஜன் மருந்தா?

பெண்களிடையே மாரடைப்பு அதிகரித்து வருவதற்கு ஈஸ்ட்ரோஜன் குறைபாடுதான் காரணம் என்றால், அந்த ஈஸ்ட்ரோஜன்னை மருந்தாகச் செலுத்தினால் இதய நோய்கள் எளிதாகக் குறைந்துவிடுமே என்கிற கேள்வி எழலாம். உண்மையில் தொடர்ச்சியாகச் செயற்கை யாகத் தரப்படும் ஈஸ்ட்ரோஜன் ஏற்படுத்தும் நன்மைகளைக் காட்டிலும், தீமைகளே அதிகம். மார்பகப் புற்றுநோய், கருப்பை புற்றுநோய், ரத்தக்குழாய்களில் எதிர்வினை நோய்கள் போன்ற பாதிப்புகளை அது ஏற்படுத்துவதால், இதுபோன்ற செயற்கை வழிமுறைகளைத் தவிர்த்து இயற்கை வழி வாழ்க்கைமுறைக்குப் பெண்கள் மாறிக்கொள்வதே நல்லது.

பாதுகாப்பான உடற்பயிற்சி

இன்றைய நவீன வாழ்க்கை முறையின் அனைத்துக் கூறுகளிலும் ஆண்கள் அளவுக்குப் பெண்களும் பங்கேற்க வேண்டியுள்ளதால், பெண்களுக்கு ஆரோக்கியமும் அதை உறுதி செய்யும் உடற்பயிற்சிகளும் அவசியம் தேவை. ஆண்களைப் போல உடலைக் கட்டமைக்க வேண்டிய தேவையோ, ஆண்கள் அளவிற்கு அபரிமித உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டிய தேவையோ பெண்களுக்கு இல்லை. அதனால் புனித் ராஜ்குமார் போன்ற திடீர் மாரடைப்பு மரணங்களுக்கான சாத்தியம் பெண்களுக்குக் குறைவு. எனவே, உடற்பயிற்சி செய்தால் மாரடைப்பு ஏற்பட்டுவிடுமோ என்கிற அச்ச உணர்வில் அதைத் தவிர்க்காமல், பாதுகாப்பாக உடற்பயிற்சி செய்வது எப்படி என்பதைத் தெரிந்துகொண்டு, அதைத் தொடர்வது பெண்களின் எதிர்கால நலனை உறுதிசெய்யும்.

கட்டுரையாளர், மகப்பேறு மருத்துவர்

தொடர்புக்கு: sasithra71@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x